யார் செழுமையடைய போகின்றார்கள்? மக்களா!? - யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி - 5
தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கை யாருக்கானது என்பதை, அனுரவின் கூற்று அம்பலமாக்குகின்றது. "செழுமையுடையவர் மேலும் செழுமையடைவதில் எமக்குப் பிரச்சனையில்லை, ஆனால் ஏழ்மையாக இருப்பவர் மேலும் ஏழ்மையாவதை விரும்பவில்லை" என்கின்றார். அனுரவின் தேசிய மக்கள் சக்தியின் இந்த அரசியலானது, முதலாளித்துவ பொருளாதாரத்தின் பொது விதியாகும்.
முதலாளித்துவத்தில் நுகர்வோரில்லாமல் சுரண்டலென்பது கற்பனை. நுகர்வோர் ஏழ்மையாவதென்பது, சுரண்டல் நின்று போவதற்கான பொது விதியாகும்.
முதலாளித்துவத்தில் சந்தையென்பது நுகர்வோரை அடிப்படையாகக் கொண்டது. நுகர்வோர் ஏழ்மையானால், அதாவது வாங்கும் சக்தியை இழந்தால் சந்தை தேங்கிவிடும். அதாவது இலாபத்துக்கான முதலாளித்துவ உற்பத்திமுறை தேங்கிவிடும்.
முதலாளித்துவப் பொருளாதாரத்தில் "செழுமையுடையவர்கள் தொடர்ந்து செழுமையடைய", ஏழைகள் வாங்கும் சக்தியைத் தொடர்ந்து தக்கவைக்க வேண்டும். இந்த விடயத்தில் அரசும், அரசின் பொருளாதாரக் கொள்கைகள் முன்வைக்கப்படுகின்றது. முதலாளித்துவத்தில் அரசென்பது, பொருள் உற்பத்தில் ஈடுபடும் அமைப்பல்ல. முதலாளித்துவத்தில் சுரண்டல் மூலம் "செழுமையடைபவர்கள் தொடர்ந்து செழுமையடையும்" கொள்கையைப் பாதுகாக்கும் இடத்தில் அரசு இருப்பதுடன், சுரண்டலைத் தொடர்வதற்கு ஏற்ப "ஏழ்மையாக இருப்பவர் மேலும் ஏழ்மையாவதைத்" தடுக்கின்றனர். இதையே அனுரவின் தேசிய மக்கள் சக்தி, மக்களைச் சார்ந்த கொள்கையாக முன்மொழிகின்றது.
