நுண் அரசியல் பேசும் வெள்ளாளியம் முதல் சாதி ஒழிந்துவிட்டதாக கூறும் பன்னாடைகள் வரை
நான் ஒரு "வெள்ளாடிச்சி" என்பதை தலித்தியமாக நிறுவ, "வெள்ளாளனின்" முயற்சி தான், "வெற்றிகொள்ள முடியாதா என்ன!" என்று கேட்க வைக்கின்றது. டானியலின் இலக்கிய மொழியில் இத்தகைய வெள்ளாளர்களை குறித்து எழுதிய போது, வெள்ளாளிய "மார்க்சியவாதிகள்" கொதித்துப் பொங்கிய அரசியல் விமர்சனங்களே - இன்று நுண் அரசியலில் வேசம் போடுகின்றது.
இந்த நுண் அரசியலின் உத்தி என்ன? தன்னை எல்லாமாக நிறுவிக் காட்டுவது. இது போன்று தான் தலித்தியத்தின் பெயரில், அரசியல் முதல் இலக்கியம் வரை அரங்கேறுகின்றது. ஒரே விதமான உத்தி. மொழிகளில் எல்லா ஒடுக்குமுறைகளை பேசுவதன் மூலம், தன்னை ஒடுக்கப்பட்டவனின் அணியாக காட்டிக் கொண்டு - ஒடுக்குபவனுடன் நடைமுறையற்றுக் கூடிக் குலாவுவது.
ஆனந்தசங்கரியின் மொழியில் சொன்னால், நான் ஒடுக்கப்பட்டவனின் வீட்டில் சாப்பிட்டவன் என்று கூறுகின்ற, அதே வெள்ளாளிய நரித்தனம்;. சாப்பிட்டால் என்ன, திருமணம் செய்தால் என்ன, நீ ஒடுக்கப்பட்டவனுடன் நடைமுறையில் இருக்கின்றாயா இல்லையா என்பது மட்டும் தான் ஒடுக்கப்பட்டவனின் அளவுகோல். இதைவிடுத்து ஒடுக்கப்பட்டவனுடன் நிற்பதாக எழுதுவது, பேசுவது, அறிக்கை விடுவது, நடிப்பது எல்லாம் சாதி சமூக அமைப்பில் வெள்ளாளியம். மொழிக் கோர்வைகள் - மொழிப் பூச்சாண்டிகளோ, ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையுடன் பயணிப்பவனுக்கு தேவையற்றது. நடைமுறையில் வாழாதவன் கையாளும் உத்திதான், நடிப்பு முதல் ஒடுக்குமுறை பற்றி நடைமுறைக்கு வெளியில் எழுதுவது.

