இராமாயணத்தில் கும்பகர்ணன் பிரமதேவரிடம் நித்தியத்தவம் வேண்டும் என கேட்க எண்ணி, நா புரண்டு நித்ரத் தவம் கேட்டதால் வாழ்நாள் முழுவதும் உறங்கிக் கொண்டிருக்கும் தவத்தினை பெற்றான். ஆறு மாதத்திற்கு ஒருமுறை சாப்பாட்டிற்கு மட்டும் கண் விழிப்பான். இந்த கூட்டமைப்பு யாரிடம் வரம் பெற்றார்களோ தெரியவில்லை. வருடக் கணக்கில் தூங்கிவிட்டு தேர்தல் காலங்களில் மட்டும் எழுந்திருப்பார்கள். அப்பொழுது தான் அவர்களுக்கு மக்களைப் பற்றிய கருசனை வரும்.., தமிழ்மக்களின் அரசியற் தீர்வு ஒன்று தேவை பற்றிய சிந்தனை ஞாபகத்திற்கு வரும்.., மக்களோடு பேச விருப்பம் வரும்.

இப்போது இடைக்கால வரைபு பற்றி விவாதிக்கிறார்களாம், ஒற்றையாட்சி நாடு தவறு, ஒருமித்த நாட்டிற்குள் சமஷ்டி.., அதிகாரப்பகிர்வு பற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றார்களாம். இதைப் பற்றி மக்களோடு பேசவே இவர்களுக்கு பதவிக்கு வந்து மூன்று வருடங்கள் தேவைப்பட்டிருக்கு. இனி அடுத்த தேர்தல் வரை இது பற்றி விவாதிப்பார்கள். அடுத்த தேர்தல் நெருங்கியதும் கும்பகர்ணன் சாப்பிட எழுந்தது போல் திடீரென மக்கள் முன் தோன்றி சமஷ்டி வரைபின் இறுதிப் பக்கத்தினை முன்வைப்பார்கள். முதுகெலும்பு இல்லாத ஊடகங்களும் விவாதங்களை நிகழ்த்தி இன்றைய கேள்வியை அன்றைய நிலைக்கு தக்க மாதிரி மாற்றிக் கேட்டு மக்களை முட்டாளாக்கி தங்கள் பிழைப்பினை தக்கவைத்துக் கொள்வார்கள். மக்களுக்கும் ஏமாற்றம் பழக்கப்பட்டு போனதால் மக்கள் எதையும் அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்து விடுவார்கள். மக்களின் இந்த மௌன நிலை தான் அரசியல்வாதிகளுக்கும் ஊடகங்களிற்கும் கிடைத்திருக்கும் பெருங்கொடை.







