பணம் - பதவி - அதிகாரத்தையே தங்கள் கட்சிக் கொள்கையாகவும், அதையே குறிக்கோளாகவும் கொண்ட தனிநபர்களை அடிப்படையாகக் கொண்டதே, இன்றைய தேர்தல் கட்சிகள். நவதாராளவாதத்தை ஏற்றுக்கொள்ளக் கூடிய கட்சிகள், தனிநபர்களுக்கு இது விதிவிலக்கல்ல. தேர்தல் ஜனநாயகத்தின் உள்ளடக்கமானது, பணம் - பதவி - அதிகாரமாக சீரழிந்து விட்டது. எந்தப் புதிய கட்சியும், புதிய முகமும், அது பெண்ணாக இருந்தாலும் மக்களை ஏமாற்றும் முகமாற்றத்தை மட்டுமே தர முடியும்.
அரசியல் மாற்றத்தையோ, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் விடுதலையை முன்னெடுக்கும் மக்கள் திரள் பாதையையோ தரப் போவதில்லை. மக்களை ஏமாற்றும் - ஒடுக்கும் நபர்களை மாற்றுவதன் மூலம், அடுத்த தேர்தல் வரை மக்களைத் தொடர்ந்து ஏமாற்றுவதும், இலங்கையில் முதல் பெண் தலைமைத்துவக் கட்சி என்றும், இந்து சந்நியாசி வேடம் போட்ட வெள்ளாளிய சாமியாரின் தலைமையில் மீண்டும் தமிழ் மக்கள் கூட்டணி என்று எந்த வேசம் போட்டாலும், இவை அனைத்தும் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற - ஒடுக்குமுறையாளர்களின் தலைமைகள் தான்.
ஆட்சியின் கடைசி நாள் வரை பழைய கட்சியில் இருந்தவர்கள், ஆட்சிக்கு அடுத்த நாள் புதிய கட்சி. எப்படிப்பட்ட ஏமாற்றுப் பேர்வழிகள். மக்களை மொட்டை அடிக்க புதிய வேசங்கள். இப்படி திடீர் திடீரென அரசியலுக்கு கொண்டு வரப்படுவதும், திடீர் திடீரென புதிய கட்சிகள் தோற்றுவிக்கும் பின்னணியில், அந்நிய சக்திகள் இருக்கின்றனர் என்பதே உண்மை. கடந்தகாலம் முழுக்க அந்நிய சக்திகளின் காலில் வீழ்;ந்து கிடந்தார்களே ஒழிய, மக்களைக் கடுகளவு கூட கண்டு கொண்டது கிடையாது. தங்கள் அதிகாரத்தில் செய்யக்கூடிய கடமைகளைக் கூட செய்யாதவர்கள்.