கிரேக்க நாட்டிற் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அதனால் அந் நாட்டு அரசு செலவினங்களை குறைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. செலவினங்களைக் குறைத்தால் மட்டுமே ஐரோப்பிய ஒன்றியம் கிரேக்கத்துக்கு இரண்டாங் கட்டக் கடன் வழங்க முடிவு செய்துள்ளது. எனவே, 2800 கோடி யூரோக்களுக்கான செலவின ரத்து, வரி உயர்வு, நிதி சீரமைப்பு, தனியார் மய திட்டங்கள் போன்றவற்றுக்கு கிரேக்கப் பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. 1200 கோடி யூரோ கடன் உதவி பெற மேற்படி சட்டத் திருத்தம் தேவை என ஐரோப்பிய நிதி அமைச்சர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் அளிக்கும் கடன் உதவியானது கிரேக்கம் பழைய கடன்களை அடைப்பதற்காகவே வழங்கப்படுகிறது. இக்கடன்களைப் பெறுவதற்காக சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு கிரேக்கம் தள்ளப்பட்டுள்ளது. கிரேக்கம் தனது கடன்களைச் செலுத்தத் தவறுமாயின், ஸ்பெயின் போர்த்துக்கல் போன்ற நாடுகளும் வெகுவாகப் பாதிக்கப்படும்.
பிற நாடுகளுக்கு கிரேக்கம் திருப்பிக்கொடுக்க வேண்டிய கடன் நிலுவைக்கான காலக்கெடு அடுத்த மாதமாகும். அதைத் திருப்பி அளிப்பதற்குத் தேவையான கடன் உதவியை உடனடியாக அளிக்குமாறு கிரேக்கம் வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் ஐரோப்பிய நாடுகள் சுட்டிக்காட்டும் நிபந்தனைகளை கிரேக்கம் நிறைவு செய்யாவிடின், அதற்குக் கடன் வழங்கப்பட மாட்டாது. எனவே கிரேக்க அரசு கடன் பெறுவதற்காகச் சாதாரண மக்கள் பல்வேறு இன்னல்களைத் தினமும் அனுபவித்து வருகின்றனர். அதனால், நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் இடம் பெறுகிறது. நாளாந்தக் கதவடைப்பு, வன்முறை ஆகியன இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கின்றன.
அதே வேளை, ஜேர்மனி யூரோ நாணயத்தை கைவிட்டு பழைய நாணயமான டொய்ற்ச் மார்க்கிற்கு மாற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. யூரோவைப் பெற்றிருக்கும் கிரேக்கம் பொருளாதார நெருக்கடியில் திண்டாடுகிறது. இந் நிலையில் யூரோ நாணயத்தின் மதிப்பைச் சர்வதேச அளவில் நிலை நிறுத்த வேண்டுமானால், கிரேக்கம் வங்கரோத்தூகாமல் காப்பாற்றியாக வேண்டும் என்ற நிலைக்கு ஐரோப்பிய நாடுகள் தள்ளப்பட்டுள்ளன. அதனால் யூரோ நாணயத்தின் மதிப்பு எதிர்காலத்தில் கேள்விக்குறியாகி உள்ளது. இப் பின்னணியில் மிகப் பெரிய யூரோ நாணயப் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள ஜேர்மனி எதையாவது செய்தாக வேண்டிய நிலையில் இருக்கிறது. ஒன்றில் கிரேக்க நாட்டை யூரோ நாணய முறையிலிருந்து வெளியேற்ற வேண்டும் அல்லது ஜேர்மனி வெளியேற வேண்டும். இவை எல்லாம், உலகப் பொருளாதார நெருக்கடி எவ்வாறு உலக நாடுகளைப் பாதித்து வருகிறது என்பதை எடுத்துக்காட்டுகின்றன. பொருளாதார வல்லுனர்களோ எல்லாம் நன்றாக இருப்பதாகவே சொல்லிவருகிறார்கள்.
உலகப் பொருளாதார நெருக்கடி அதிகரித்திருப்பதாக ஒப்புக் கொள்ளும் சர்வதேச நாணய நிதியம், கிரேக்கத்தின் கடன் நெருக்கடிகளையும் அமெரிக்க நிதிப் பற்றாக்குறைத் திட்டங்களையும் ஆசிய பொருளாதார வளர்ச்சியையும் முடக்கல் அத்தியாவசியமானது என்றும் கூறியிருக்கிறது. ஆனால், அண்மைய புள்ளிவிபரங்களின்படி ஐரோப்பாவிலும் பார்க்க கோடீஸ்வரர்களின் தொகை ஆசியாவில் அதிகரித்து வருகிறது. முதல்தடவையாகக் கடந்த வருடம் ஆசியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது.
நியூஸிலாந்தும் இந்த நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. வரலாற்றில் இதுவரை பார்த்திராத கடன் சுமையும் நிதி நெருக்கடியும் அந் நாட்டை வாட்டத் தொடங்கியுள்ளன. கடந்த 12 மாதங்களுக்கான நிதிப் பற்றாக்குறையின் அளவு 17 பில்லியன் நியூஸிலாந்து டொலர்கள் (13.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள்). இது கடந்த ஆண்டினதை விட இரண்டு மடங்கு அதிகமாகும். 4.4 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட நியூஸிலாந்து, வாரம் 300 மில்லியன் டொலர் அளவுக்குச் சர்வதேச நாணய நிதியத்திலிருந்து கடன் பெறுகிறது. அதனால் அதன் நிதிச் சுமை எக்கச்சக்கமாகியுள்ளது. இப்போது ஐரோப்பிய ஒன்றியப் பிணையெடுப்புக்காக வங்கிகள், முதலீட்டு நிறுவனங்கள், தனியார் காப்பீட்டு நிறுவனம் உள்ளிட்டவை பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் நிதி மூலதனம் யாருக்காக எவ்வாறு இயங்குகிறது என்பதை தெளிவாகக் காட்டும் அடையாளங்களாகும்.
அமெரிக்காவின் வேலையற்றோர் தொகை 13 மில்லியனாக அதிகரித்துள்ளது. அமரிக்கப் பாராளுமன்றினால் அனுமதிக்கப்பட்ட கடன் தொகை எல்லையான 14.29 ற்ரில்லியன் டொலர்களையும் தாண்டி அமெரிக்கா கடனில் இருக்கிறது. இந்த வரிசையில் இப்போது போர்ச்சுகல்லும் ஸ்பெயினும் சேர்ந்துள்ளன. இவை எல்லாவற்றையும் கருத்தில் எடுத்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் பங்குச் சந்தையினதும் நிதிச் சந்தையினதும் ஊடாக வணிகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் எல்லா அங்கத்துவ நாடுகளும் செயற்பட வேண்டும் எனக் கோரியுள்ளது.
நாட்டின் மொத்த உற்பத்தியைவிட அதிகமான கடனைக் கொண்டிருக்கும் நாடு என்றவகையில் கிரேக்கம் கடனைச் செலுத்த முடியவில்லை. எனவே கடனை இரத்துச் செய்கிறோம் என்று சொல்லியிருக்க வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பு, சர்வதேச நாணய நிதியத்திலிருந்து பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதபோதே அதைச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அவ்வப்போது கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நெருக்கடி ஏற்படும்போதெல்லாம், சர்வதேச நாணய நிதியமும், உலக வங்கியும் ஐரோப்பிய நாடுகளும் சேர்ந்து கைகொடுத்து மேலும் கடன்களை வழங்கின. இப்போதும் கூட கிரேக்கம் தனது கடன்களைச் செலுத்தாமல் இருப்பதுதான் சிறந்த வழி. ஆனால் அதை செய்யப் பிற ஜரோப்பிய நாடுகள் அனுமதியா. 2002இல் தனது சொந்த நாணயத்தை விட்டுவிட்டு யூரோவைப் பயன்படுத்தத் தொடங்கியதன் விளைவாக கிரேக்கம் தனது பொருளாதார அலுவல்களில் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாமல் போயிருக்கிறது. வங்கிக் கடனைச் செலுத்த முடியாமல் கிரேக்கம் வங்கரோத்து அறிவிப்பு வெளியிட்டால், அது யூரோ நாணய நாடுகளின்; வங்கிகளின் பொருளாதார நிலைமையை நேரடியாகப் பாதிக்கும். அதனால் அரசுகளுக்கும் நெருக்கடி ஏற்படும். அதைச் சமாளிக்க மற்ற யூரோ நாணய நாடுகள், வரியேற்றமும் செலவுக் குறைப்பும் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி வரும். ஒட்டுமொத்தமாக யூரோ நாணயத்தைப் பயன்படுத்தும் நாடுகள் முழுவதிலும் பொருளாதார நெருக்கடி ஏற்படும். எனவே வங்கிகளைக் காப்பாற்ற வேண்டியதுதான் தேவையே அன்றி மக்களையல்ல. முதலாளித்துவம் பெருத்து வீங்கும் போது இவ்வாறான நெருக்கடிகள் தவிர்க்கவியலாதவை.
இவை எல்லாவற்றையும் எதிர்த்து கிரேக்க மக்கள் எந்தவிதமான வரியேற்றத்தையோ செலவுக் குறைப்பு நடவடிக்கைகளையோ மேற்கொள்ளக்கூடாது எனப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இப் போராட்டங்களில் எல்லாம் ‘திருடர்கள், திருடர்கள்” என்கிற கோஷம் எழுப்பப்படுகிறது. இப்போது ஜரோப்பாவெங்கும் போராட்டங்கள் வெடிக்கின்றன. இது ஒரு சுழல். முதலாளித்துவமும் ஏகாதிபத்தியமும் பலத்த நெருக்கடிக்கு உள்ளாயிருக்கின்றன. மக்கள் இயக்கங்களைக் கட்டியெழுப்ப இது நல்ல தருணமாகும்.
அஸ்வத்தாமா
