Language Selection

பி.இரயாகரன் -2024
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நடிகை ரம்பாவின் கோடீஸ்வரக் கணவர், தமன்னாவை முன்னிறுத்தி நடத்திய கூத்து யாழ்ப்பாண சமூகத்தின் பொது வெட்டுமுகத்தைத் தோலுரித்திருக்கின்றது. இந்திய தமிழ் சினிமா உற்பத்தி செய்யும் ஆபாசங்களையும் - இசைகளையும், மேடை போட்டுக் காட்ட முற்பட்டபோது, அதைத் தரிசிக்க - ரசிக்க சென்ற கூட்டமானது, தனது லும்பன்தனத்தை தத்துரூபமாக வெட்டவெளிச்சம் போட்டுக் காட்டியது.

யாழ்ப்பாண தமிழ் - இந்துத்துவ கிடுகுவேலி ஆணாதிக்க கலாச்சாரத்தை வாய்கிழியப் போற்றிப் புகழ்கின்ற   சமூகமானது, வன்முறை கொண்ட லும்பன் சமூகமாக முன்னிறுத்திய நிகழ்வு தான் இந்த யாழ் நிகழ்வு. 


இந்தச் சம்பவத்தை அரசியல் - பொருளாதாரக் கண்ணோட்டத்தில் இனம் காணமுடியும். யாழ் மாவட்டத்தில் ஒழுங்கமைந்த உழைப்பானது, யாழ் அல்லாத பிற மாவட்டத்தில் இருந்து வரும் மக்களின் உழைப்பிலேயே தங்கியிருக்கின்றது. யாழ் மக்களின் உழைப்பானது ஒழுங்கற்ற லும்பன்தனத்தில் - தனக்கான பொதுச் சமூகத்தன்மை இழந்துவிட்டது. யாழ் உழைப்பானது சமூக வரைமுறைக்கு அப்பால், லும்பன்தனமான உதிரி வர்க்கத்தின் நுகர்வுக்குள் குறுகிக் கிடக்கின்றது.      

லும்பன்தனமான இந்த யாழ் உழைப்பானது, இலங்கையில் அதிக குடி கொண்டதாகவும், அதிகம் பெற்றோலை கரியாக்குகின்றதுமான செலவில் கரைகின்றது. சொந்தக் குடும்பத்துக்கு கூடப் பயன்படுவதில்லை. உழைப்பு மதிக்கப்படாமையும், தன் சமூக - குடும்ப இருப்புக் குறித்து எந்த அக்கறையும் இருப்பதில்லை. இலங்கையில் பொருளாதார நெருக்கடிகள் - விலையேற்றங்கள் எதுவும், இந்த லும்பன் சமூகத்துக்கு பிரச்சனையாக இருப்பதில்லை.
 
தனிமனிதத் தனத்துடன் வரைமுறையின்றிக் குடித்துக் கும்மாளம் போடும் நுகர்வானது, குடும்பத்தை சமூக உணர்வுடன் பராமரிக்கும் சமூகத்தன்மை இழந்து கிடக்கின்றது. குழந்தைகள் இவற்றைப் பார்த்து வளர்வதுடன், குடும்பங்கள் ஒழுங்கமைந்த உழைப்பு சார்ந்து வாழும் பண்பட்ட சமூகத் தன்மையைக் காண்பது கடினமாகி இருக்கின்றது. மனித உழைப்பு என்பது தன் தேவைக்கான அடிப்படை என்பது, யாழ் சமூகத்தில் இல்லாதாக்கப்பட்டிருக்கின்றது. இந்தச் சமூகம் தான், யாழ் நிகழ்வை தனது தளத்துக்குள் தடம்புரள வைத்தது.  

இதற்கேற்ப கல்வியையும் களியாட்டத்தையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக முன்னிறுத்திய ரம்பாவின் கோடீஸ்வரக் கணவர், அது எப்படிப்பட்டது என்பதை தனது பணத்தால் யாழ்மண்ணில் நிறுவிக் காட்டியுள்ளார்.

மலட்டுக் கல்வியை இலவசத்தின் பெயரிலும் - உதவியின் பெயரிலும் சந்தைப்படுத்தி, லும்பன் சமூகத்தை உருவாக்கும் புலம்பெயர் நிதிகள், பண்பாடற்ற சமூகத்தை உற்பத்தி செய்கின்றது. இதற்கு சினிமா ஆபாசங்கள் முதல் இசை வரை, "இலவசங்கள்" மூலம் தீனி போடுபவர்களின் நோக்கமானது சுயநலமானது.

சமூகக் கண்ணோட்டத்தில் பகுத்தறிவுடன் எதையும் சீர்தூக்கிப் பார்க்க முடியாத சமூகத்தைக் கொண்டு, தங்களைத் தாங்களே முன்னிறுத்திக் கொள்வதுதான் இங்கு நடைபெறுகிறது. 

மேடையேறும் ஆபாசங்கள் முதல் இசை வரை, காணவும் - ரசிக்கவும் வந்த முன்வரிசைக்காரர்களின் பணத்தைக் கொண்டு கல்விச் சேவை என்பது, எப்படிப்பட்ட சமூகத்தை உருவாக்கும் என்பதை யாழ் சம்பவம் மறுபடியும் உறுதி செய்திருக்கின்றது. 

சொந்த மக்களை ஒடுக்கிய தமிழினவாத யுத்தத்தின் மூலம், சிந்திக்கவும் - செயற்படவும்  முடியாத மந்தைகளாக உருவாக்கப்பட்ட சமூகம், தொடர்ந்து லும்பன்களாகவே வழிநடத்தப்படுகின்றனர். ஒழுங்கமைந்த உழைப்பிலான சமூகப் பண்பாட்டைக் கற்றுக்கொள்ள முடியாதவாறு வழிநடத்தப்படும் சமூகமானது, ஒழுங்கான கட்டுப்பாடான ஒரு நிகழ்வை தாமாகவும் - தன்னியல்பாகவும் செய்ய திரணற்றதாக சீரழிந்து கிடக்கின்றது. இதற்கு யார் பொறுப்பு? தமிழினவாத அரசியல்வாதிகள் முதல் சமூகத்தன்மையற்ற புலம்பெயர் நிதியாதாரங்கள் வரை லும்பன் சமூகத்தை வழிநடத்துகின்றது.  

இதற்கு யாழ்ப்பாண இசைநிகழ்வு மிக சிறந்த உதாரணம். கும்பல் வன்முறைக்கு புகழ்பெற்ற யாழ்ப்பாண சமூகத்திடம், பொது அறம் கிடையாது. சிந்தித்து செயற்படும் பகுத்தறிவும் கிடையாது. 

குறுகிய உணர்ச்சி மூலம் கும்பல் சேரும் சமூகத்தில், அறிவுக்கும் - அறத்திற்கும் இடம் இருப்பதில்லை. யாழ் கற்றல் முறையானது கூடி வாழும் சமூகப் பழக்க வழக்கங்களையோ, ஜனநாயகப் பண்புகளையோ கற்றுக் கொடுப்பதில்லை. குடும்பங்களிலும், குடும்ப உறவுகளிலும் ஜனநாயகம் இருப்பதில்லை. ஒருவர் கருத்தைக் கேட்டு கருத்தைச் சொல்லும் கூட்டு ஜனநாயகப் பண்பு இருப்பதில்லை. சுயநலமும் - இதன் அடிப்படையிலான தனிமனித நலன்களும், சமூக உணர்விழந்த குறுகிய நுகர்வு பண்பாட்டுக்குள் குழந்தைகள் வளர்க்கப்படுகின்றனர். இந்த நுகர்வுப் பண்பாடு லும்பன்தனமான சுயநலன்களை மையப்படுத்தி, சமூகப் பண்பாட்டுத்தனத்தை இழந்து விடுகின்றது.   

புலம்பெயர் கல்வி சார்ந்த பெரும் நிதியாதாரங்கள் லும்பன்தனத்துக்கே பெருமளவில் செலவு செய்யப்படுகின்றதே ஒழிய, சமூகப் பண்பாட்டுக் கல்விக்கு எதிராகவே இருக்கின்றது. மலட்டுக்கல்விக்கு அப்பால், கூடி வாழும் சமூக வாழ்வியற் கல்வி கற்பிக்கப்படுவதில்லை.

தமிழினவாத தேசியம் பேசும் அரசியல் சமூக அறமற்ற, ஜனநாயகமற்ற, இனவாத மதவாத சாக்கடையில் புளுத்து - சமூகத்தை அதற்குள் தள்ளிவிடுவதுடன் கிணற்றுத் தவளைகளாக கத்துமாறு பார்த்துக் கொள்கின்றது. சர்வதேச பின்னணியில் கட்டமைக்கப்படும் மதவாதமானது, இந்துத்துவா, கிறிஸ்துவம்.. என்று மக்களைப் பிரிக்கின்ற குறுகிய அடையாளங்களுக்குள்ளும், சாதிகளுக்குள்ளும் தள்ளி, மக்களைப் பிரித்து விடுகின்றது. இதன் மூலம் வன்முறையை முன்னிறுத்தி, தனிமனித குறுகிய சிந்தனைமுறையையும் - கட்டற்ற லும்பன்களையும் சமூகத்துள் விதைத்துவிடுகின்றது.       

பகுத்தறிவுடன் சிந்தித்துச் செயற்படும் சமூக உளவியல் - வாழ்வியல் கிடையாது. சடங்குகள் -  சம்பிரதாயங்கள் என்று வட்டம் போட்டுக்கொண்டு, கிணற்றுத் தவளைகளாக வாழுவதுடன் -  மற்றவர்களைக் கண்காணிக்கின்றது.

தான் அல்லாத அனைவரையும் எதிரியாக கருதும் லும்பன் குணாம்சமும், ஜனநாயகப் பண்பற்ற வன்முறையை வாழ்வியல் வழிமுறையாக வழிபடும் சமூகத்தில் இருந்துதான், யாழ் நிகழ்வை காணவேண்டும். தீர்வு என்பது தன் உழைப்பை மதிக்கின்ற, தன் சமூகத்தை - குடும்பத்தை நேசிக்கின்ற, மற்றவர் கருத்தை மதிக்கின்ற ஜனநாயகப் பண்பாட்டை நோக்கியே சமூகத்தைக் கீழ் இருந்து உருவாக்குவது அவசியமானது. இதைத்தான் யாழ் சம்பவம் முகத்தில் அறைந்து கூறுகின்றது. 

11.02.2024