Language Selection

பி.இரயாகரன் -2021
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வெவ்வேறு காலகட்டங்களில் அரசாலும் மற்றும் புலிகளாலும் பெருமளவில் மனிதர்கள் காணாமலாகப்பட்டது போல், தமிழினவாதிகள் உருவாக்கிய தமிழ் பல்கலைக்கழகமும் காணாமல் போயிருக்கின்றது. காணாமல் போனவர்கள் குறித்து அரசிற்;கு எதிராக மட்டும் குரல் கொடுப்பவர்கள், தமிழினவாதிகளால் காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து அக்கறைப்படுவதில்லை. இது போலவே தமிழினவாதிகள் காணாமல் போன தங்கள் தமிழ் பல்கலைக்கழகம் குறித்து பேசுவதில்லை.

தமிழினவாதிகள் தமிழ் பல்கலைக்கழகத்தை தமிழனின் தலைநகரம் திருகோணமலையிலேயே அமைப்போம் என்று கூறியே, 1960 களில் நிலத்தை விலைக்கு வாங்கினர். கட்டிடங்கள் அமைக்க அடிக்கல்லை நாட்டினர். கட்டிடங்களை அமைத்தனர். தொடர்ந்து நிதி சேகரிப்புகளைச் செய்தனர்.

தமிழனின் சமஸ்டி ஆட்சியில் தமிழ் பல்;கலைக்கழகம் என்ற தமிழினவாத அரசியல் கோசங்கள் மூலம், வாக்குகள் பெறப்பட்டது. 1960 பங்குனி மாதம் நடந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் 19 தொகுதியில் போட்டியிட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சி 15 தொகுதிகளில் வெல்ல, இந்துப் பல்கலைக்கழகத்தை முன்வைத்த அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் 8 தொகுதியில் போட்டியிட்டு ஒன்றை வென்றது. 1960 ஆடியில் மீண்டும் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசுக்கட்சி 21 தொகுதியில் போட்டியிட்டு 16 தொகுதியில் வெற்றி பெற, தமிழ் காங்கிரஸ் 10 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. இந்த இரு தேர்தகளிலும் துரையப்பா யாழ்ப்பாணத் தொகுதியில் வெற்றி பெற்றதன் மூலம், தமிழினவாதிகளின் முதன்மையான "துரோகியானார்".

இப்படி தேர்தல் அரசியலுக்காக முன்வைக்கப்பட்ட தமிழினவாத சமஸ்டி அரசியல், இன ரீதியாக ஒடுக்குமுறைக்குள்ளான ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை முன்வைக்கவில்லை. ஒடுக்கப்பட்ட தமிழ் இனத்தின் மேல் அதிகாரம் செய்கின்ற ஒடுக்கும் தமிழ் தரப்பின் தேர்தல் வெற்றிக்காகவே, இனவொடுக்குமுறைகளை இனவுணர்ச்சியூட்டும் அரசியலாக திரித்து முன்வைக்கப்பட்டது. இதன் மூலம் சிங்கள இனவாதத்துக்கு நிகராக தமிழினவாதத்தை வளர்த்து, ஒன்றையொன்று சார்ந்து தேர்தல் அரசியலில் சுய வெற்றிக்காக தங்களை வளப்படுத்திக் கொண்டனர்.

இந்த இனவாதத் தேர்தல் அரசியல் பின்னணியில், தமிழ் பல்கலைக்கழகம் பேசும் பொருளானது. அரசுக்கு எதிரான இனவாதக் கோசமாக மாறியது. தமிழரசுக்கட்சி – தமிழ் காங்கிரஸ் கட்சிகளின் தேர்தலில் இனமத வாக்குகளைப் பெறுவதற்கான விவாதப் பொருளானது. இந்தவகையில் 04.09.1960 சுதந்திரனில் "தமிழ் பல்கலைக்கழகத்தையே தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும்" என்று தலைப்பிட்ட இனவாதச் செய்தியின், உபதலைப்பாக "மத அடிப்படையில் போனால் பிரிவினைகள் தாம் அதிகரிக்கும்" என்று, ஆரிய திராவிட பாசை விருத்திச் சங்க கூட்டத்தில் நடத்த தர்க்கம் குறித்து பேசுகின்றது. இந்து மதப் பல்கலைக்கழகம் என்ற மதவாதக் கோரிக்கை, இனத்தை பிரிக்கும், அதற்கு பதில் இனவாத தமிழ் பல்கலைக்கழகக் கோரிக்கையை முன்வைக்கின்றது. இந்த தமிழினவாதம் மூலம், தங்கள் வாக்கு வங்கிக் கணக்கை அரசியலாக முன்வைக்கின்றனர்.

மத அரசியல் எப்படி மக்களைப் பிரிக்குமோ, அது மாதிரி மொழி - இன அரசியலும் மக்களைப் பிரிக்கும். இங்கு மதம் குறுகிய தளத்தில் மக்களைப் பிளப்பது போல், மொழி -இனம் சற்று பெரிய தளத்தில் மக்களைப் பிளக்கும்;. இனவொடுக்குமுறையும், மதவொடுக்குமுறையும் உள்ள சமூகத்தில், எதை முதன்மைப்படுத்துவது என்பதல்ல, மனிதனாக தன்னை முன்னிறுத்தி, ஒடுக்குமுறைக்கு எதிராக அனைவரையும் ஒன்றிணைக்கின்ற ஜக்கியத்திற்கான போராட்டத்தில் இருந்தே, சரியானதும் - உண்மையானதும் - தீர்வைத் தரக்கூடியதுமான, தேர்தல் வழிமுறைக்கு மாறான மக்கள்திரள் பாதையை கண்டடைய முடியும்.

இனவொடுக்குமுறைக்கு எதிரான தமிழினவாத போராட்ட வரலாறு ஜக்கியத்தை நோக்கியோ, தேர்தல் வழிமுறையல்லாத மக்கள்திரள் பாதையைக் கொண்டதாகவோ இருந்ததுமில்லை - இருக்கவுமில்லை. மக்களிடையே பிரிவினையை வளர்க்கும் இனவாதமாகவே, தேர்தலில் வாக்கு பெறும் அரசியலாகவே வளர்ச்சியுற்றது. இதற்காகவே தமிழ் பல்கலைக்கழகக் கோசம் முன்வைக்கப்பட்டு, இனரீதியாக பணம் திரட்டப்பட்டது. 2.10.1960 சுதந்திரனில் வெளிவந்த கட்டுரைத் தலையங்கம் "திருமலை பல்கலைக்கழகத்தில் வன்னியசிங்கம் மண்டபம்" அமைக்க "காப்பு நிதியாக 525 ரூபா வழங்கப்பட்டது" என செய்தி வெளிவருகின்றது. இப்படி தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த தமிழினவாதியான வன்னியசிங்கத்திற்கு, தங்கள் இனவாத பல்கலைக்கழகத்தில் மண்டபம் அமைக்கவே நிதி சேகரிக்கப்பட்டது. ஒட்டுமொத்த தமிழ் மக்களை முன்னிறுத்திய தமிழ் பல்கலைக்கழகமல்ல, இலங்கை தமிழரசுக்கட்சியை முன்னிறுத்தி தமிழினவாத பல்கலைக்கழகம் என்பது, குறுகிய தேர்தல் அரசியலுடன் தமிழர்களை உணர்ச்சிவசப்படுத்தவே முன்னிறுத்தப்பட்டது.

தங்கள் கட்சி அரசியலுக்கும், தமிழினவாதத்துக்குமான தமிழ் பல்கலைக்கழகம், தேர்தல் அரசியலில் பேசும் தர்க்கப் பொருளாகியது. என்.எம்.பெரேரா யாழ்ப்பாணத்தில் நடத்திய அரசியல் கூட்டத்துக்கு எதிராக, 21.02.1960 அன்றைய சுதந்திரனில் "தமிழ் பல்கலைக்கழகம் உருப்பெறுவதை எதிர்த்தார் என்.எம்" என்று தலைப்பில் செய்தியை வெளியிடுகின்றது. அதில் "மூன்றரை ஆண்டுக்கு முன் தமிழ் பல்கலைக்கழகம் வேண்டும் என்று ஆரம்பித்த இயக்கத்தை என்.எம் பெரேரா" ஆதரித்தது கிடையாது என்று, உணர்ச்சியூட்டப்பட்ட தமிழினவாதத்தை தேர்தலின் போது முன்வைத்து, வாக்குகளாக அதை மாற்றுகின்றனர். 1960 முதலாவது தேர்தலின் போது, தமிழினவாத வாக்குப் பிரச்சாரத்தின் போது இவை அரங்கேறுகின்றது.

இனவாதம் என்பது சந்தர்ப்பவாத போலி இடதுசாரியத்தின் அரசியல் கூறான போது, அது எதிர்மறையில் தமிழினவாதம் சார்ந்த போலி இடதுசாரியக் கூறாகவும் மாறுகின்றது. இனவாதம் என்பது ஒடுக்கும் - ஒடுக்கப்பட்ட இனம் சார்ந்து சந்தர்ப்பவாத அரசியலாக வளரும் போது, போலி இடதுசாரியம் இதற்குள் சங்கமமாகிவிடுகின்றது. இந்த வகையில் இனவாத தமிழ் பல்கலைக்கழகத்தை ஆதரித்த போலி தமிழ் இடதுசாரியமும் தனது பங்கை வழங்கியது. இதை தமிழினவாதம் பெருமையாகவே, கம்யூனிசத்தின் பெயரில் முன்வைக்கின்றது.

20.11.1960 இல் சுதந்திரனில் இது குறித்து பெருமையாகவே "கொம்யூனிஸ்டு கந்தையா – தமிழ்ப் பல்கலைக்கழக இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு பணியாற்றினார்" என்கின்றது. இதை தமிழ் பல்கலைக்கழக இயக்கத் தலைவரான பேராசிரியர் அ.சின்னத்தம்பி "கந்தையா பற்றிய நினைவுக் குறிப்பில் முன்வைக்கின்றார். "கொம்யூனிஸ்டு" கந்தையா தயாரித்து, அவரே முதல் கையெழுத்திட்ட மனுவில்தான், முஸ்லிம் எம்பிகள் உட்பட, தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்; கையெழுத்திட்ட" குறிப்பை இனப் பெருமையாக முன்வைக்கின்றார்.

"தமிழ்ப் பல்கலைக் கழகத்தைத் திருமலையில் ஸ்தாபிக்க விரும்புவதையும் அதைத் தமிழ் பேசும் பிரதிநிதிகள் ஆதரிப்பதையும் பிரதமருக்கு அறிவித்து அரசாங்கத்தின் ஆதரவைக் கோருவதாக" கொம்யூனிஸ்டு கந்தையா எழுதிய கடிதம் இது தான்.

"pleasure in informing you that we are in support of the demands of the Tamil speaking peoples for a full fledged University at Trincomalee, which will eventually teach in the Tamil medium and request you to be so good as to make the necessary provision for the establishment of the said University.”

இப்படி அரசின் இனவாத ஒடுக்குமுறைக்கு எதிராக போலி தேர்தல் அரசியலையே, இனவொடுக்குமுறைக்கு எதிராக போராடுவதற்கான அரசியலாக போலி கொம்யூனிஸ்டுகள் முன்வைக்கின்றனர். இப்படி தேர்தல் அரசியலை தமிழினவாதம் மூலம் நம்பவைத்து, ஒடுக்கப்பட்ட இனத்தின் கழுத்தை அறுத்து வந்தனர். தமிழினவாதத் தேர்தல் வெற்றியை தமிழினத்தின் மேலான ஒடுக்குமுறைக்கு எதிரான வெற்றியாகவும் - வாக்குப் போடுவதை ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமாக காட்டக் கூடிய, போலி இடதுசாரியத்தையும் தமிழினவாதமானது தன் பங்குக்கு அரசியலில் வளர்த்துவிட்டது. இது தேசியத்தில் இருந்து சர்வதேசியத்தை திரிக்கும் இனவாதமாகும். எல்லாவகையான இனவாதத்துக்கும் எதிராக போராட வேண்டிய "இடதுசாரிகள்", ஒரு இனவாதத்தை எதிர்த்து - இன்னுமொரு இனவாதத்தை வளர்த்துவிட்டனர்.

27.11.1960 இல் சுதந்திரனில் "இந்துப் பல்கலைக்கழகம்" என்ற தலைப்பில், அரசாங்கம் இந்து பல்கலைக்கழகத்தை உருவாக்கவுள்ளதான செய்தியையும் கொண்டுள்ளது. அதில் "யாழ்ப்பாணத்தில் இந்துப் பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் ஒப்புதல் தெரிவித்து விட்டதாக கூறி .. அது யாழப்;பாணம் பரமேஸ்வராக் கல்லூரியையும் சுண்ணாகம் இராமநாதன் மகளிர் கல்லூரியையும் இணைத்து.." உருவாக்கவுள்ளதாக செய்தி வெளியிட்டு இருக்கின்றது. இந்த இந்துப் பல்கலைக்கழகம் தனிப்பட்ட ஒருவரின் முயற்சியாக குற்றஞ்சாட்டும் அதேநேரம் இது ".. முன்னைநாள் தபால் அமைச்சராக இருந்த நடேசபிள்ளை அவர்களின் முயற்சி என்றும், உருவாக்கப்படும் இந்துப் பல்கலைக்கழகம் அவர் தாயாகாமல் சூல் கொண்டு நோகாமல் பெற்றெடுத்த இந்துப் பல்கலைக்கழகம்" என்கின்றது. அதேநேரம் திருகோணமலை தமிழ் பல்கலைக்கழகத்தை முறியடிக்கவும், மதரீதியாக தமிழ் மக்களை பிரிக்கும் அரசின் சதி என்கின்றது. "இது தமிழ் பல்கலைக்கழகத்திற்கு ஒரு போதும் ஈடாகாது. இது சமய முறையிலும் கலாச்சாரத் துறையிலும் பங்காற்றும் .. எஞ்ஜினியர், டாக்டரை .. உருவாக்காது. .. இந்த உண்மையை தமிழ் பொது மக்கள் உணர வேண்டும்;" என்கின்றது. இந்தக் கட்டுரையை மீளவும் 22.07.1962 இல் சுதந்திரன் “ஆசிரியர் தலையங்கமாக” வெளியிடுகின்றது. இப்படி இனவாதத்தையும் மதவாதத்தையும் இரட்டைக் குழாய் துப்பாக்கியாக பயன்படுத்தியே, தமிழினவாத வெள்ளாளிய சமூக அமைப்பாக தன்னை பலப்படுத்திக் கொள்கின்றது. எஞ்ஜினியர், டாக்டர் என்ற யாழ்ப்பாணிய வெள்ளாளிய மேட்டுக்குடிகளின் கனவை முன்வைத்து, அனைத்தையும் தமிழினவாத அரசியலாக மடைமாற்றினர். தமிழரசுக்கட்சியின் தமிழ் பல்கலைக்கழகம் எஞ்ஜினியர், டாக்டர்களை உருவாக்க வேண்டும், அதற்காக சமஸ்டிக்கு வாக்களிக்குமாறும் கோரினர்.

இப்படி உருவான தமிழினவாத கோசமும் - சொந்த தமிழினவாத பல்கலைக்கழகத்தை உருவாக்கிவிட்டதான செய்திகள் மூலம், தமிழினவாத அரசியல் நீட்சியை முன்வைத்து – அனைத்தையும் தமிழினவாதமாக சிந்திக்கக் கோருகின்றனர். 10.06.1962 இல் சுதந்திரனில் "தமிழ் பல்கலைக் கழகம்" என்ற தலைப்பில் "திருமலைப் பிரதேசத்தில் உப்புவெளியில் 70 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு, கட்டிட அலுவல்கள் தொடக்க ஆயத்தங்கள் நடைபெற்று வருகின்றது. திருமலைப் பட்டின எல்லைக்குள் 5.5 ஏக்கர் நிலமும் வாங்கப்பட்டுள்ளது. விவசாய கல்லூரியின் ஒரு பகுதிக்கான கட்டிடம் முடிவடைந்த நிலையில் உள்ளது. சிறந்த குறிக்கோளை இலட்சியமாகக் கொண்டுள்ள தமிழ்ப் பல்கலைக்கழக இயக்கத்திற்கு அரசாங்கம் எந்தவிதமான உதவியும் அளிக்கப்போவதில்லை என்பது யாவரும் அறிந்த விடயமே. தமிழ் பேசும் மக்களின் நல்லெண்ணத்தில் தான் கழகத்தின் எண்ணக் கோட்டை நிஜக் கோட்டையாக உருவெடுக்க முடியும்" என்று கூறி, தமிழினத்தின் வாக்கை மடடும் கோரவில்லை, நிதியையும் கோருகின்றனர்.

இது தமிழனின் கனவல்ல, தமிழனின் நிஜக் கோட்டையாக என மாறியுள்ளதெனவும், சமஸ்டிக்கான அத்திவாரத்தின் அடித்தளமாகவும் காட்டி - அதை அரசியலாக முன்வைக்கின்றது. இந்த நிஜக் கோட்டையை மக்களுக்கு முன்வைத்து வாக்குகளைப் பெற, தொடர்ந்து நிலம் வாங்கப்பட்டதுடன், கட்டிடங்களும்; அமைக்கப்பட்டன.

தமிழினவாத பல்கலைக்கழத்திற்காக நிதி சேகரிப்பினை தொடர்ந்தனர். இதன் ஒரு அங்கமாக இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட பிரபல நடன கலைஞர்களைக் கொண்டு நடன நிகழ்வுகள் நடத்தப்படுகின்றது. 03.06.1962 இல் சுதந்திரனில் "தமிழ் பல்கலைக்கழக நிதிக்கு குமாரி அம்பிகையின் நடனவிருந்து" என்ற தலைப்பில் நாடு முழுக்க நடன நிகழ்ச்சியும், நிதி சேகரிப்புகள் நடைபெறுகின்ற செய்தி முன்வைக்கப்பட்டு, நிதி ஆதரவு கோரப்படுகின்றது. இந்த வகையில் "02.06.1962 இல் கொழும்பு மகளிர் கல்லூரி மண்டபத்தில் நிகழ்வு நடைபெறும்" நிகழ்வுக் குறிப்புகளில் சுதந்திரன் " ..ஆட்சியாளர்;களின் உதவி எதுவுமின்றி ஒரு பல்கலைக்கழகத்தை நடத்துவது மிகவும் கடினமானது. தமிழ் பேசும் மக்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பேணிக்காத்து, செயல்முறை தொழில்முறைக் கல்வி அபிவிருத்திக்கான வழி வகைகளை ஆராய்ந்து தொண்டாற்ற 1956ம் ஆண்டு தமிழ் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. அரசினர் உதவி கோரிப் பலன் எதுவும் கிடைக்கவில்லை. தமிழ் பேசும் மக்களின் எதிர்காலச் சந்ததியின் சிறப்புற வாழ்வைச் செம்மைப்படுத்தும் ஓர் கற்பக விருட்சமாக வளரும் பல்கலைக்கழகத்திற்கு பொருளென்னும் நீரூற்றி வளர்க்க வேண்டியது நமது தலையாய கடமையன்றோ". என்று கூறியே, நிதி இனரீதியாக கோரப்படுகின்றது. இந்த தமிழ் பல்கலைகழகம் 1956 முதல் இருப்பதாக கூறுகின்ற அரசியல் பின்னணியில், வரலாற்றில் இருந்து தமிழ் பல்கலைக்கழகம் காணாமல் போய் இருக்கின்றது

இப்படி வரலாற்றில் காணாமல் போன பல்கலைக்கழகம் குறித்து 05.08.1962 இல் சுதந்திரன் "தமிழ் பல்கலைக்கழக வேலைகள் துரிதமடைகின்றன" என்ற தலைப்பில் "திருமலைப் பகுதியை சேர்ந்த உப்புவெளியில் உருவாகி வரும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இளைப்பாறும் விடுதி வேலைகள், தண்ணீர் வசதியும் உட்பட சகல வேலையும் முடிவடைந்துவிட்டது. .. விரைவில் விவசாயப் பாடசாலை வேலைத்திட்டத்தை தொடங்கி .. 1963 இல் சித்திரையில் அதன் எல்லாக் கட்டிட வேலையம் முடிவடையும்.. " என்ற செய்தி தமிழினவாத கண்ணோட்டத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் பல்கலைக்;கழகம் என்ற இனவாதக் கோசமும், நீண்டகால நோக்கில் இயங்கும் ஒரு நடைமுறை சமூக இயக்கமாகவே காட்டிக் கொள்கின்றது. ஆனால் அனைத்தும் வாக்குப்பெறும் தேர்தலை அரசியலை இலக்காகக் கொண்டது. தங்கள் தமிழினவாத தேர்தல் நோக்கில் விளம்பரமாக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம் வெறும் கற்பனையானதல்ல. 28.07.1963 சுதந்திரனில் "தமிழ் பல்கலைக்கழக ஆதரவில் விவசாய பயிற்சி நிலையம்" என்ற தலையங்கத்தில் "தமிழ்ப் பல்கலைக்கழக இயக்க ஆதரவில் திருகோணமலைக்கு அயலில் உள்ள உப்புவெளியில், செயல்முறை, விவசாய, கால்நடை வளர்ப்புப் பயிற்சி நிலையம் நிறுவப்படுகின்றது. ஏற்கனவே 80 ஏக்கர், மேட்டுத்தரைப் பயிர் செய்கைக்குரிய நிலம் இதற்கெனக் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டும் இப்பகுதியில் நீர்ப்பாசன வசதியுடன் நெல் விளைவிக்கக் கூடிய 75 ஏக்கர் அளவு நிலத்தைக் குத்தகைக்குப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சியை எடுத்துள்ளது" இதை முன்னின்று செய்ய "இலங்கை கமத்தொழில் திணைக்களத்தில் கால்நடை வைத்திய ஆராய்ச்சி அதிகாரியாக இருந்து இளைப்பாறிய பொ.ஜெகநாதன் அவர்கள் மேற்கூறிய பயிற்சி நிலையத்தின் அதிபராக நியமிக்கப்பட்டுத் தமிழ்ப் பல்கலைக்கழகம் மூலம் பதவியேற்றுக் குடிபோயிருக்கிறார். சில ஆசிரியர்களுக்குரிய விடுதிகள் நிர்மாணித்து முடிக்கப்பட்டுள்ளன. போதனாகூடங்களாகவும், ஆய்வுகூடங்களாகவும் பாவிக்கப்படவிருக்கும் கூடங்கள் திட்டமிடட்பட்டு நிர்மாண வேலைகள் ஆரம்பமாகவிருக்கின்றன. மாணவர்கள் வதியும் மண்டபம் கட்டி முடியும் வரை, தற்காலிகமாக மாணவர்கள் திருகோணமலை நகரத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீடொன்றில் விடுதி வசதியளிக்கப்படுவர்" இப்படி தமது தமிழினவாத தமிழ் பல்கலைக்கழகம் இயங்குவதான செய்தியை, மக்கள் மத்தியில் அரசியலாக்கி இருக்கின்றது.

28.07.1963 சுதந்திரனில் "முன் மாதிரி" என்று சிறிய தலைப்பிட்டு "தமிழ்ப் பல்கலைக்கழகக்கட்டிட நிதிக்கு ரூபா 6 ஆயிரம் கொடுத்துதவிய கரவெட்டி ஞானவாசாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தமிழாசிரியர் திரு. ஆர்,எம்,சின்னத்தம்பி அவர்களை பாராட்டி தமிழ் பல்கலைக்கழக இயக்க ஆட்சிக்குழு நன்றி தெரிவிக்கின்றது, அதில் தமிழ் பேசும் இளைஞர்கள் சுதந்திரமான கமக்காரராகவும் தொழில் செய்வோராகவும் வாழ்க்கை நடாத்துவதற்குத் தாய்மொழி மூலம் விவசாயப் பொறியியல், பிரயோக அறிவியல் முதலியவற்றைப் பயிற்றுவிப்பதற்கு இப்படியான ஒரு ஸ்தாபனம் மிக அவசியம் என்பதே தமது நெடுநாளைய ஆவல் என்று கூறியே சின்னத்தம்பி அவர்கள் இந் நன்கொடையைக் கொடுத்துதவினார்."

இப்படி தங்கள் தமிழினவாத வாக்குகளை பெறுவதற்காக, மக்களை தமிழினவாதம் மூலம் அனைத்ததையும் சிந்திக்க வைக்கவென உருவான தமிழ் பல்கலைக்கழகமே காணாமல் போய் இருக்கின்றது. 1968 இல் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய போது, மீளவும் தமிழ் பல்கலைக்கழகத்தை அமைக்கக் கோரும் அரசியல் மோசடிகள் மீள அரங்கேறுகின்றது. 1968 இல் தாங்கள் அமைத்த அரசாங்கத்தில் இருந்து வெறியேறுவதை தமிழினவாத அரசியலாக்க, தமிழ் பல்கலைக்கழகத்தை திருகோணமலையில் அமைக்க வேண்டும் என்று இனவாத கூச்சலை போட்டனர்;. அப்போது தாங்கள் அமைத்த தமிழ் பல்கலைக்கழகத்திற்கு என்ன நடந்தது என்பதை குறித்து எதையும் பேசாது, அரங்கேற்றிய தமிழினவாத கூச்சல், 1974 யாழ் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் தொடங்கிய போது மீண்டும் எழுந்தது. ஆனால் தாங்கள் தமிழ் மக்களின் நிதியில் உருவாக்கிய பல்கலைக்கழகம் குறித்து எதையும் முன்வைக்காது, அதை வரலாற்றில் இருந்தே இருட்டடிப்பு செய்தனர்.

உண்மையில் தமிழினவாதிகள் தமிழ் மொழி பேசும் மாணவர்களின் கல்வி மற்றும் கல்வியுரிமை மீது அக்கறை கொண்டவர்களா எனின் இல்லை. தமிழினவாத வாக்கைப் பெறும் கோசத்துக்காகவே, கல்வியைப் பயன்படுத்தினர். ஒடுக்கப்பட்ட மாணவர்களின் கல்வியை மறுதளிக்கும் அரசியலையே எப்போதும் கொண்டு இருந்ததையே, அவர்களின் வரலாறு காட்டுகின்றது.

தொடரும்


 மாணவர்களின் இயல்பும், சமூக முரண்பாடுகளும் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 01

தமிழ் "மார்க்சிய" சிந்தனைமுறைக்கான கரு - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 02

1985 யாழ் பல்கலைக்கழக மாணவர் போராட்டத்துக்கு வித்திட்ட சூழல் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 03

பல்கலைக்கழக போராட்டத்துக்கு விதையாக இருந்தவர்கள் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 04

ஒடுக்கப்பட்டவர்களுக்கான இயக்கத்திலிருந்து விதையானவர்கள் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 05

1986 இல் ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்திய போராட்டம் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 06

சர்வதேசியத்தின் கருவாக இருந்த என்.எல்.எப்.ரி. - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 07

தேசியமும் - சர்வதேசியமும் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 08

இன-மத பல்கலைக்கழகத்தைக் கோரியவர்கள் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 09

இனவாத காலனியத்தின் நீட்சியாக கோரியதே, தமிழ்ப் பல்கலைக்கழகம் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 10

தமிழினவாத வாக்குக் கோரி "தமிழ் பல்கலைக்கழகம்" - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 11