Language Selection

பி.இரயாகரன் -2021
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"குடும்ப வரையறைக்குள் தான் ஆண் பெண் உறவு இருக்க வேண்டும்" என்று நான் (இரயாகரன்)  சொன்னதாக, கற்பனையில் "பெண்ணியம்" பேசும் சில பெண்கள் கதையளக்கின்றனர். எனது விமர்சனம் இதற்கு எதிராக "நிலவும் ஆணாதிக்க குடும்ப அமைப்பையே கேள்விக்குள்ளாக்கும் போது", தன்னோடு பாலியல் உறவில் பெண்கள் இருந்ததாக மயூரனாலேயே ஒப்புக்கொள்ளப்பட்ட "பெண்ணிய" கண்ணோட்டத்தையும் கேள்விக்குள்ளாக்கி விமர்சிக்கின்றது. 

இப்படி இருக்க "குடும்ப வரையறைக்குள் தான் ஓர் ஆண் பெண் உறவு இருக்க வேண்டும் என்று நீங்கள் (இரயாகரன்) கூறுவதே மிகப்பெரிய தவறு" என்று நான் சொல்லாத ஒன்றைச் சொல்லி கருத்தை திரிப்பதன் மூலம், "பெண்ணியத்தின்" பெயரில் மயூரனும் - இதில் சம்மந்தமாக்கப்படும் பெண்களின் பாலியல் உறவு முறையை மறைமுகமாக ஆதரிக்க முற்படுகின்றார்.

இதற்கு "லைக்குகள்" போட்டு எழுதும் "பெண்ணியல்வாதிகள்", எதை வைத்து எதற்கு லைக்குகளை போடுகின்றனர்?!

எனது விமர்சனத்தில் "குடும்பம் என்ற ஆணாதிக்க அமைப்புமுறையில் பாலியல் எப்படி நோக்கப்படுகின்றதோ, அதேபோன்றதே. பெண் பாலியலுக்கு இணங்கிவிட்டால், ஆண் பெண் நடத்தையில் கேள்விக்கு இடமில்லை. அதை சமூக நோக்கில் கூட கேள்வி கேட்கக் கூடாது. இது தான் "முற்போக்கு பெண்ணியம்" என்று கூறுமளவுக்கு நடைமுறையற்ற அரசியலும் இலக்கியமும் சீரழிந்து இருக்கின்றது" என்று கூறி, நிலவும் ஆணாதிக்க குடும்ப அமைப்பையும் சேர்த்து விமர்சித்து இருக்கின்றேன்.

 இதைத்தான் இரயாகரனின் "ஆணாதிக்க சிந்தனை" என்கின்றனர்.

எங்கே "குடும்ப வரையறைக்குள் தான் ஆண் பெண் உறவு இருக்க வேண்டும்" என்று கூறியிருக்கின்றேன்.

இப்படி இருக்க, தங்களைச் சுற்றி நடந்ததை மூடிமறைக்க "பெண் சொல்கிறார் என்பதற்காக அவளை முற்று முழுதாக நம்பிவிட வேண்டும் என்பதும் நீதியுமில்லை, பெண்ணியமுமில்லை." என்று கூறுகின்றனர் "லைக்குகள்".

நீங்கள் தீர ஆராய்ந்து கண்டடைந்த கடந்தகால உண்மைகள் தான் என்ன?

புலம் பெயர் "பெண்ணியம்" கண்டடைந்து சொன்ன நீதி என்ன? அண்மைகாலத்தில் வெளிப்படையாக சோபாசக்தியைக் குற்றம் சாட்டிய தமிழச்சி, புலம் பெயர் பெண்கள் சந்திப்பு வரை கலந்து கொண்டவர்.

பாலியல் ரீதியாக தன்னை வன்முறைக்கு உட்படுத்த முனைந்தாக தமிழச்சி சோபாசக்தி மேல் குற்றஞ்சாட்டிய நிகழ்வும், அதற்கு சோபாசக்தி «இல்லை சேர்ந்து தான் நாங்கள் படுத்தோம்» என்று "பெண்ணிய" விளக்கம் கொடுத்த பின்னணியில், இதில் எதுவாக இருந்தாலும், இதையொட்டிய சம்பவம் உண்மை, வெளிப்படையானது.

இரண்டும் ஏதோவொரு வகையில் ஆணாதிக்கமே.

"பெண்ணியமும்" பெண்ணிய சந்திப்பும் இதைக் குறித்து எதை முன்வைத்திருக்கின்றது?. இப்படி வெளிப்படையான சம்பவத்துக்கு கண்ணை மூடிக்கொண்டவர்கள்

"இந்த ஆணாதிக்க பாலியல் சுரண்டலிற்கு நாம் உடந்தையாக இருந்தோம், எப்போது நாம் கண்டனத்தைத் தெரிவிக்கவில்லை, எந்த இலக்கியச் சந்திப்பில் பெண்ணின் 'நடத்தையை'ப் பற்றிப் பேசப்பட்டது என்று தயவு செய்து விளக்குங்கள்." என்று எம்மிடம் எதுவும் நடவாது போல் கேட்க முடிகின்றது. இப்படி இருக்கின்றபோது வெளிப்படையாக வெளியில் பேச முடியாத அரசியல் இலக்கிய ஈடுபாடு கொண்ட பெண்களின் நிலைமை என்னவாக இருக்கும்.

தங்கள் "பெண்ணிய" நிலைக்கு ஏற்ப "மயூரனுக்கு எதிராக எழுதி வந்து, அவருக்கு எதிராகவும் அந்தப் பெண்களுக்கு சார்பாகவும் குரல் கொடுக்கும் பெண்களை தேடி அடிப்பது என்பதும் ஆணாதிக்கத்தின் ஒரு வடிவமே." என்று கூறும் நீங்கள், சரி இதையொத்த சோபாசக்தி நடத்தையை எங்கே எப்போது முன்வைத்து விமர்ச்சித்து இருக்கின்றீர்கள்?

இது போன்று 1990 முதல் புலம்பெயர் இலக்கியத்தைச் சுற்றி நடந்தவைக்கு பஞ்சமில்லை. பெண்களாகிய தங்களை "பெண்ணியத்தின்" பெயரில் இந்த பாலியல் நடத்தைக்கு இணங்க வைத்ததையும், தாங்கள் இந்த ஆணாதிக்க பாலியல் வேட்டைக்கு பலியானதை உணர்ந்த போதும், இதை பொது வெளியில் வெளிப்படையாக முன்வைக்க முடியாதளவுக்கு ஆணாதிக்க சமூகத்தைக் கண்டு அஞ்சுமளவுக்கு, அதை தனிப்பட்ட ரீதியில் மட்டும் அவர்களால் பேச முடிகின்றது.

இவை பற்றி "பெண்ணியம்" பேசுவோருக்கு நன்கு தெரிந்தும், எங்கே என்று சாட்சியைத் கேட்கின்றனர். "பெண் சொல்கிறார் என்பதற்காக அவளை முற்றுமுழுதாக நம்பிவிட வேண்டும் என்பதும் நீதியுமில்லை, பெண்ணியமுமில்லை." என்று கூறக் கூடிய "பெண்ணிய" கண்ணோட்டத்தில், எப்படி தாங்கள் "பெண்ணியத்தின்" பெயரில் இணங்க வைக்கப்பட்டோம் என்று கூற முடியும்? இந்த நிலை தான் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை.

மயூரன் விடையத்தில் "மயூரனுக்கு எதிராக எழுதி வந்து அவருக்கு எதிராக அந்தப் பெண்களுக்கு சார்பாக குரல் கொடுக்கும் பெண்கள்» என கூறுகிறபோது பாதிக்கப்பட்ட பெண்களாயிருப்பவர்கள் மத்தியிலிருந்து உங்களிடம் சாட்சியம் அல்லது முறைப்பாடு இருக்கின்றதா? அப்படி எதையும் கட்சியும் முன்வைக்கவில்லை

நீங்கள் எதை அடிப்படையாகக் கொண்டு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சார்பாக குரல் கொடுக்கின்றீர்கள் ? (அப்படி கொடுத்தது எங்கே என்ற கேள்வி தொங்கி நிற்கின்றது) அப்படி கொடுக்கின்றீர்கள் என்றால் அதை ஏன் புலம்பெயர் இலக்கிய பின்னணியில் செய்யவில்லை?. மயூரன் பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்ததாக கட்சி குற்றம் சாட்டவில்லை. மாறாக கட்சிக் கொள்கைக்கு முரணானது என்று தான் குற்றம் சாட்டுகின்றது.

மயூரனுடன் சம்பந்தப்பட்ட பெண்களும், தங்களது "பெண்ணிய கொள்கைக்கு" அமைவாகவே இத்தகைய பாலியல் நடத்தையில் இணங்கித்தான் ஈடுபட்டனர். இதை எப்படி, எந்த அடிப்படையில் குற்றம் சாட்ட முடியும் என்பது அவர்கள் தரப்பு வாதம்.

மயூரன் மட்டும் வெளிப்படையாக அதை முன்வைத்திருக்கின்றார். "திருமணம் செய்வதாக எவருக்கும் நான் வாக்களித்ததில்லை" என்று விளக்கம் கொடுக்கின்றார். இதையே தமிழச்சிக்கு எதிராக சோபாசக்தியும் கூற முற்பட்டது.

சம்மந்தமாக்கப்படும் பெண்கள் ஆணாதிக்க அமைப்புக்கு அஞ்சி தங்கள் "பெண்ணிய" ஆணாதிக்க நடத்தையை நியாயப்படுத்த முன்வரவில்லை. ஆனால் "பெண்ணியல்"வாதிகளாக உலவுகின்றனர். ஆனால் நீங்கள் மயூரனை கண்டிக்கும் "பெண்ணியல்வாதிகளை" இலக்கு வைப்பதாக கூறும் அதேநேரம், சம்மந்தமாக்கப்படும் பெண்களின் "பெண்ணிய" கண்ணோட்டத்தை விமர்சிக்க தயாராகவில்லை.

"பெண்ணியம்" பேசும் நீங்கள் இதை எப்படி அணுகுகின்றீர்கள். புலம்பெயர் இலக்கிய சந்திப்பில் "பெண்ணியம்" பேசிய ஆண்கள், பெண்களை இணங்க வைக்க முனையவில்லையா? அதற்கு பெண்கள் பலியாகவில்லையா? அப்படி எதுவும் நடக்கவில்லை, எங்களுக்கு எதுவும் தெரியாது என்றால், மிகத் தெளிவாக ஆணாதிக்கத்தின் பக்கம் இருக்கின்றீர்கள் என்பது தான் அர்த்தம். இது போன்ற விடையங்களை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தி வந்திருந்தால், மயூரனோ சம்மந்தமாக்கப்படும் பெண்களோ இதற்கு பலியாகி இருக்கமாட்டார்கள்.

அரசியல் இலக்கிய பின்னணியில் விரும்பிய பாலுறவுக்கு பெண்ணை தயார் செய்து இணங்க வைப்பது ஆணாதிக்கமல்ல என்றால், மயூரன் போன்றவர்களை உருவாக்கியது பெண்ணியத்தின் பெயரிலான ஆணாதிக்க நிலைப்பாடுதான்.

உங்களின் ஆண் பெண் உறவு கண்ணோட்டத்துக்கு முரணாக நான் கூறியதும், மீளக் கூற வருவதும் ஆண் - பெண் உறவு என்பது, சமூகத் தன்மைக்கு உட்பட்டது. ஆண் - பெண் உறவு சமூகத் தன்மையற்ற சந்தைப் பண்டமல்ல. நுகர்வுக்குட்பட்ட பொருளல்ல.

இப்படி எனது நிலைப்பாட்டை திரித்து அணுகும் நீங்கள் "குடும்ப வரையறைக்குள் தான் ஆண் பெண் உறவு இருக்கத்" தேவையில்லை என்று நீங்கள் கூறும் போது, குடும்ப வரைமுறைக்கு வெளியிலான அந்த ஆண் பெண் உறவு எத்தகையது? மயூரன் வகையானதா? உங்கள் வரைமுறை தான் என்ன? உங்கள் பெண்ணிய கண்ணோட்டத்தை முன்வையுங்கள். அதாவது "ஆணாதிக்கக் குடும்ப வரைமுறைறைக்கு" வெளியிலான ஆண் பெண் உறவு, எந்த வரைமுறையில் இயங்குகின்றது?

உதாரணமாக குடித்தல் என்பது மேற்கத்தைய சமூகத்தில் சமூக உறவாக்கத்தின் கூறாக வாழ்வியல் அங்கமாக இருக்க, தமிழ் சமூகத்தில் குடித்தல் என்பது சமூகத்துக்கு வெளியிலான லும்பன் சீரழிவே. இது போன்று பாலியலை "பெண்ணியத்தின்" பெயரில் நுகருகின்ற, நுகரவைக்கின்ற வக்கிரம். "பெண்ணின் தெரிவு சுதந்திரத்தின்" பெயரில் பெண்ணையும் நுகரவைக்கின்ற ஆணாதிக்க கலையையே, தமிழ் "பெண்ணியமாக" பூர்சுவா பெண்ணியத்தால் பூசிக்கப்படுகின்றது.

இலங்கைத் தமிழ் சூழலில் "பெண்ணியம்" பேசுபவர்கள் இதைப் பற்றி நேர்மையாக தங்கள் சமூக அரசியல் நிலைபாட்டை முன்வைத்து செயல்பட்டு இருக்கின்றீர்களா? கடந்த 30 வருடங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் கோட்பாடுகளுடன், கோரிக்கைகளுடன், நடைமுறைகளுடன் எங்கே எப்போது செயல்பட்டார்கள், செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். பிரதேசவாதங்களும் பிரதேசவாத ஒடுக்குமுறைகளும், இனவாதமும் இனவாத ஒடுக்குமுறைகளும், சாதியவாதங்களும் சாதிய ஒடுக்குமுறைகளும், ஆணாதிக்கமும் ஆணாதிக்க ஒடுக்குமுறைகளும், மதவாதங்களும் மதவாத ஒடுக்குமுறைகள், வர்க்க வாதங்களும் வர்க்க ஒடுக்குமுறைகளும்.. ஒருங்கிணைந்த வகையில் - முரணற்ற வகையில், கருத்தியல் தொடங்கி நடைமுறை வரை போராடாத சிந்திக்காத எந்தச் சூழலிலும், முன்வைக்கும் "பெண்ணியம்" எத்தகையது? இந்த பின்னணியிலான "பெண்ணியம்" ஒடுக்கப்பட்ட பெண்ணியமாக இருப்பதில்லை. இந்த ஆணாதிக்கம் தான், இன்று "பெண்ணியமாக" சலங்கை கட்டி ஆடுகின்றது.

 போலிப் பெண்ணியல் வாதிகளும் "பெண்ணியம்" பேசும் மயூரனும்