Language Selection

பி.இரயாகரன் -2020
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தீப்பொறியின் பிளவுக்கு முன்பே புளட்டின் மாணவ அமைப்பான ரெசோ, புளட்டின் வலதுசாரிய அரசியலை ஆட்டி அசைத்தது. புளட்டின் வலதுசாரிய அரசியலை வெளிப்படையாகவே எதிர்த்தது. உதாரணமாக சுழிபுரத்தில் புலி ஆதரவாளர்கள் ஆறு பேரை படுகொலை செய்ததை புளட்டின் போலி இடதுசாரிய அணி மறுத்து அறிக்கை விட்ட போது, புளட்டே கொலை செய்தது என்று புளட்டில் தமிழ் இடதுசாரியக் கூறுகள் வெளிப்படையாக கூறத்தொடங்கின. முரண்பாடுகளும், ஒதுங்குவதும் கூர்மையாகி, அவர்கள் சமூகத்தில் விதையாகினர்.

1980 களில் தமிழினவாதம் முன்வைத்த போலி இடதுசாரியம், போலி சாதி ஒழிப்பு, போலி சோசலிசம்… சார்ந்த பொதுப் புரிதலுக்குள், மானிட விடுதலையை அடையும் கனவுகளுடனேயே இளம் தலைமுறை இயக்கங்களில் இணைந்தனர். மனித உழைப்பில் ஈடுபடாத சமூக அறியாமை தொடங்கி, எந்த இயக்கம் - என்ன கொள்கை என்ற எந்த அடிப்படைப் புரிதல் கூட இன்றி - இயக்கங்கள் அனைத்தையும் பொதுமைப்படுத்திய பொது புரிதலிலேயே இயக்கங்களில் இணைந்தனர். வஞ்சகமும் சூதுமற்ற மனிதத் தன்மையே மேலோங்கி இருந்தது. தனது போராட்டம் தன் சமூகத்துக்கும், தன் குடும்பத்துக்கும் விடிவையும் - வாழ்வையும் கொடுக்கும் என்று நம்பினர். அதற்காக தன் உயிரைக் கொடுக்கும் உளப்பூர்வமான மனவுணர்வுடன் - சுய தியாகத்தை முன்னிறுத்திய, ஒரு தலைமுறையின் போராட்டக் கனவுகள் பொய்யானவையல்ல.

அவர்களின் உண்மையான மனித உணர்வு ஏமாற்றப்பட்டதும், அதற்கு எதிரான போராட்டத்தின் நடைமுறை வெளிப்பாடே, 1985–1989 வரையான யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டங்கள்.

தனது சமூகத்தின் ஒட்டுமொத்த விடுதலையை நம்பிச் சென்றவர்களை, முன்னின்று வழிநடத்திச் சென்றவர்கள் ஒடுக்கியதே வரலாறாக மாறியிருக்கின்றது. மக்கள் மேலான வெள்ளாளிய சமூக அதிகாரம், மக்களை ஒடுக்குவதற்கான அரசியலாக மாறியது. இந்த ஒடுக்குமுறையென்பது இயக்கங்கள் முன்வைத்த போலி இடதுசாரியத்தை, போலி சாதி ஒழிப்பை, போலி சோசலிசத்தை அரசியல் ரீதியாக கேள்விக்குள்ளாகியது. இதுவே அரசியல்ரீதியான இயக்க அக முரண்பாடுகளாக வளர்ச்சியுற்றது. இந்த அரசியல் முரண்பாடானது சாதி ஒழிப்பை, தேசியவாத தமிழ் இடதுசாரியத்தை, சோசலிசத்தை நடைமுறையில் முன்வைக்கவும், அதற்காக போராடும் ஜனநாயகத்தை, இயக்கத்திற்குள்ளும் - சமூகத்திற்குள்ளும் கோரியது. இதையே யாழ் பல்கலைக்கழகம் 1986 போராட்டத்தின் போது முன்வைத்தது. மக்களுக்கு 'கருத்து, எழுத்;து, பேச்சு" சுதந்திரத்தை அங்கீகரிக்குமாறும் - அதை வழங்குமாறு இயக்கங்களிடம் கோரியது.

தேர்தல் ஜனநாயகத்தை மறுதலிக்கும் வன்முறை வழிவந்த வலதுசாரிய இயக்கங்கள், இயக்கத்திற்குள் ஜனநாயக ரீதியாக போராடும் ஜனநாயகத்தை – ஜனநாயக மத்தியத்துவத்தை மறுதலிக்கத் தொடங்கியது. இந்த வலதுசாரிய இயக்க அரசியலானது, இயக்க பிளவுகளை சந்திக்கத் தொடங்கியது. இயக்க உடைவும், பிளவுகளும் வலதுக்கு எதிரான, இடது தன்மை கொண்டதாகவே (விதிவிலக்காக தமிழீழ தேசிய விடுதலை முன்னணி (என்.எல்.எவ்.ரி யின் உடைவு தவிர) இருந்துள்ளது.

1980 களில் ஆரம்பித்த இயக்கப் பிளவுகளையொட்டி - ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து சிந்திக்கும் அரசியலும், அதற்கான அரசியல் நடைமுறையுடன் கூடிய சுயாதீனமான அரசியல் வளர்ச்சிக்கான ஒரு காலகட்டமாக இருந்தது. இதே காலத்தில் இந்தியத் தலையீடு அதிகரித்தது. இந்தியாவின் இராணுவப் பயிற்சியும், ஆயுதங்களின் வரவும், இடதுசாரியத்தின் சுயாதீனமான அரசியல் வளர்ச்சியை தடுத்து நிறுத்தத் தொடங்கின. அதேநேரம் இடதுசாரிகளை களையெடுக்கும் போக்கு உருவானது.

இயக்க அக முரண்பாடுகள், இயக்கங்களுக்கிடையிலான முரண்பாடுகள், இயக்கங்களுக்கும் மக்களுக்குமான முரண்பாடுகள்.. செயல்பூர்வமான நடைமுறை கொண்ட தமிழ் தேசியவாத இடதுசாரியமாக பரிணமித்தது. இங்கு இந்த தமிழ் தேசிய இடதுசாரியம் என்பது சர்வதேசிய கண்ணோட்டத்தில் இருந்து அணுகப்பட்டதல்ல, மாறாக தமிழ் தேசியத்தில் இருந்து அணுகிய இடது கண்ணோட்டமாகும்.

தேசியத்தில் இருந்து அணுகிய இந்த தமிழ் தேசியவாத இடது கண்ணோட்டத்துக்கும் - தேசியத்தில் இருந்து அணுகிய வலது கண்ணோட்டத்துக்கும் இடையிலான அரசியல் முரண், எல்லா இயக்கத்திலும் பிரதிபலித்தது. அதேநேரம் இதன் வரலாற்றுப் போக்கில் என்.எல்.எவ்.ரியே, இவர்களுக்கு உந்துசக்தியாக இருந்தது. இயக்கத்தின் அக முரண்பாட்டிற்கான ஆரம்ப வேர் 1970 களில் இனவாத தமிழ் தேர்தல் அரசியலில் முன்வைத்த போலி இடதுசாரியம், போலி சாதி ஒழிப்பு, போலி சோசலிசம் .. அடிப்படையாக இருந்ததுள்ளது.

இந்த அரசியல் பின்னணியில் இருந்து உருவான தமிழீழ விடுதலைப் புலிகளில் 1980 க்கு முன்பாக ஏற்பட்ட வலது இடது முரண்பாடும் - பிளவும், புளட் என்ற புதிய அமைப்பை உருவாக்கியது. இந்தப் பிளவின் போது உதிரியாக சென்ற தனிநபர்களே, பின்னால் தமிழீழ விடுதலை இராணுவம் (ரெலா) மற்றும் தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவையை உருவாக்கினர். அதேநேரம் உதிரியாக சென்ற சிலர் ரெலோ மற்றும் என்.எல்.எவ்.ரி யுடன் இணைந்ததுடன், அவ் இயக்கங்களில் கணிசமான இடதுசாரிய தாக்கத்தை ஏற்படுத்தினர்.

புலியில் இருந்து பிரிந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளட்) தன்னை இடதுசாரியாக முன்னிறுத்தியே வளர்ச்சியுற்றது. இப்படி உருவான புளட் புலிகளிடம் இல்லாத ஜனநாயகத்தையும், அமைப்பு வடிவில் ஜனநாயக மத்தியத்துவத்தையும் முன்வைத்தது. தனக்கான ஒரு மத்தியகுழுவையும்; கொண்டிருந்தது.

புளட்டில் இருந்த வலதுசாரியப் பிரிவோ மத்தியகுழுவுக்கு கட்டுப்படாது தன்னிச்சையாக, புலிப் பாணியில் பழைய நடைமுறைகளை மீளச் செய்யத் தொடங்கியது. இதனால் இடதுசாரிய கண்ணோட்டத்தில் புளட்டை உருவாக்க முன்னணியில் இருந்து போராடியவர்கள், பலர் முற்றாக ஒதுங்கினர். வலது பிரிவு புலியிலிருந்து முன்கூட்டியே வெளியேற்றப்பட்டிருந்த உமாமகேஸ்வரனை தம்முடன் இணைத்துக் கொண்டு, புலிப் பாணியில் மீள இயங்கத் தொடங்கியது. 27.07.1981 அன்று ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையத் தாக்குதலையும், 21.10.1981 கிளிநொச்சி வங்கிக் கொள்ளையையும் நடத்தியது. இதில் முன்னின்று செயற்பட்ட சுந்தரத்தை 02.01.1982 அன்று புதியபாதை பத்திரிகையை அச்சிட்டுப் பெறுவதற்காக வந்திருந்தபோது யாழ்ப்பாணம் சித்திரா அச்சகத்தில் வைத்து புலிகள் சுட்டுக் கொன்றனர். அதேநேரம் புளட் 26.05.1982 அன்று இறைகுமாரன் மற்றும் உமைகுமாரனைக் அளவெட்டியில் வைத்துக் கொன்றது. உமைகுமாரனின் தலையில் 100 மேற்பட்ட குண்டுகள் காணப்பட்டது. இதன் பின் 20.06.1982 அன்று சென்னையில் பாண்டிபஜாரில் பிரபாகரன் - உமாமகேஸ்வரன் ஒருவரை ஒருவர் கொன்றுவிட துப்பாக்கியால் சுட்டனர். இப்படி புலிக்கு நிகரான மற்றொரு புலியாகவே, புளட் தன்னை முன்னிறுத்திக் கொண்டது.

இருந்தபோதும், புளட் தன்னை புலிக்கு எதிரான ஒரு "இடதுசாரிய ஜனநாயக" இயக்கமாக காட்டிக் கொள்வதில் வெற்றியும் பெற்றது. புளட்டை உருவாக்கியவர் விலகிவிட, சந்ததியாரின் தலைமையில் ஒரு போலி இடதுசாரிய அணி புளட்டுக்குள் எஞ்சி இருந்தது. சுந்தரம் இருந்த காலத்தில் இருந்தே புதியபாதை என்ற "இடதுசாரி" பத்திரிகையைக் கொண்டுவந்தது. நடைமுறையற்ற போலி இடதுசாரியத்தை முன்வைத்ததன் மூலம், சமூகத்தை பெரியளவில் ஏமாற்ற பயன்படுத்தப்பட்டது. புதிதாக "இடதுசாரியத்தின்" பெயரில் பலரை இணைத்துக் கொண்டது. அதேநேரம் தங்கள் "இடதுசாரிய" அடையாளத்தைக் காட்டி பிழைக்கத் தெரிந்த லும்பன்கள், புளட்டில் பெருமளவில் தஞ்சமடையத் தொடங்கினர். உதாரணமாக தங்களைத் தமிழ் இனவாதிகளாகக் காட்டி, புலியில் தஞ்சமடைந்து புலியை அழித்த வியாபாரிகள் போல்.

சந்ததியார் முன்வைத்த போலி இடதுசாரியமானது, புளட்டின் வலதுகளுக்கு எதிரான சந்ததியாரின் தனிப்பட்ட அதிகாரமாக மாறியது. அவர் முன்வைத்த போலி இடதுசாரியம், தனது தனிப்பட்ட அதிகாரத்தையே இலக்காகக் கொண்டிருந்தது. புளட்டின் வலதுசாரிகள் சந்ததியாரின் இந்த போலி இடது அதிகாரத்தை தோற்கடிக்க, புளட்டில் தஞ்சமடைந்த போலி இடதுசாரிய லும்பன்களை - அவருக்கு எதிராக பயன்படுத்தத் தொடங்கியது. இந்த அதிகார மோதலின் பின்னணியிலேயே, எது இடதுசாரியம் என்பது குறித்த கேள்விகளை உருவாக்கியதுடன் - புளட்டில் இடதுக்குள்ளான அக முரண்பாடாக மாறியது. உண்மையில் அது வலது சார்ந்த இடது அணிக்கும், தமிழ் இடது தேசிய அணிக்குமானதாக மாறியது.

புளட்டின் வலதுசாரிகள் இடதுசாரிகளைக் கொண்டு உருவாக்கிய அக முரண்பாடு என்பது, புளட்டின் அடித்தளத்தையே தகர்க்கத் தொடங்கியது. தமிழ் தேசியவாத இடதுசாரியம் நோக்கிய பயணம் ஆரம்பம் முதலே, சந்ததியாருக்கும் – தீப்பொறிக்கும் வெளியில் நடந்தது. தீப்பொறி முரண்பாடு அதிகார மட்டத்தில் இருந்து நடந்தது. இவர்கள் வழிகாட்டலின்றி, தமிழ் தேசியவாத இடதுசாரியம் சார்ந்து நூற்றுக்கணக்கானவர்கள் உதிரியாகவும் - சிறு குழுக்களாகவும் போராட்டங்களை நடத்தினர். வேறு எந்த இயக்கத்திலும் இப்படி நடக்கவில்லை. இப்படி உருவான போராட்டத்தில், புளட்டில் இருந்து ஒதுங்கிய பலர் சமூகத்தில் உதிரியாகி – தமிழ் தேசியவாத இடதுசாரியத்தின் விதையாக மாறினார்கள். இதில் சிலர் என்.எல்.எவ்.ரி தொடர்புகள் மற்றும் அரசியல் தாக்கங்களுக்கு உட்பட்டிருந்தனர். 1985-1989 யாழ் பல்கலைக்கழக போராட்டத்தின் உந்துசக்தியாக, முன்னணியில் இயங்கியவர்கள் புளட்டில் இருந்து விலகி சமூகத்தில் விதையானவர்களே. வேறு எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் தம் இயக்கத்தை விமர்சித்து, மக்களை முன்னிறுத்தி தமிழ் தேசியவாத இடதுசாரியத்தை முன்வைத்து வெளிவந்ததை (ஒரு சில நபர்கள், இதற்கு விதிவிலக்கு) காண முடியாது.

தீப்பொறியின் பிளவுக்கு முன்பே புளட்டின் மாணவ அமைப்பான ரெசோ, புளட்டின் வலதுசாரிய அரசியலை ஆட்டி அசைத்தது. புளட்டின் வலதுசாரிய அரசியலை வெளிப்படையாகவே எதிர்த்தது. உதாரணமாக சுழிபுரத்தில் புலி ஆதரவாளர்கள் ஆறு பேரை படுகொலை செய்ததை புளட்டின் போலி இடதுசாரிய அணி மறுத்து அறிக்கை விட்ட போது, புளட்டே கொலை செய்தது என்று புளட்டில் தமிழ் இடதுசாரியக் கூறுகள் வெளிப்படையாக கூறத்தொடங்கின. முரண்பாடுகளும், ஒதுங்குவதும் கூர்மையாகி, அவர்கள் சமூகத்தில் விதையாகினர்.

இப்படி யாழ் பல்கலைக்கழகத்திலும் பலர் விதையானார்கள். இந்த வகையில் விமேலேஸ்வரன், தர்மலிங்கம், மகிழ்ச்சிகரன் (ஹப்பி), சாந்தி, சத்தியமூர்த்தி, பாலா (பாலகுமார்), திருலிங்கம், வவுனியா சிறி, சிறி (சுகந்தன்), தர்மா, செல்வி, ஜவாகர், கலா, ரவி, கேதீஸ் (திருகோணமலை), ஜெகநாதன், செல்வநாயகம்.. மருத்துவபீடம் கேசவன் முதல் பலரைக் கூற முடியும். சமூகத்தில் பலரைக் காணமுடியும்;.

இதேநேரம் இந்தியாவில் பயிற்சி முகாம்களில் தமிழ் தேசியவாத இடதுசாரியத்தைக் கோரியவர்கள் மீதான வன்முறையும், ஒடுக்குமுறையும், கண்காணிப்பும்.. புளட்டின் அரசியல் நடைமுறையாக மாறியது. இதற்கு சமாந்தரமாக தலைமை மட்டத்தில் இருந்த "இடதுசாரிய" கருத்தோட்டங்களும், சந்ததியார் மீதான கண்காணிப்பு .. படிப்படியாக முழு அணிகள் மத்தியிலும் - புளட் அரசியலைக் கேள்;விக்குள்ளாகியது. சந்ததியாரின் இடதுசாரியத்துக்கும், தமிழ் தேசியவாத இடதுசாரி அணிகளுக்கும் இடையிலான முரண்பாடுகளும் - வேறுபாடுகளும் மறையத் தொடங்கியது.

புளட் சந்தித்த நெருக்கடிகளில் இருந்து தப்பிப்பிழைக்க, புளட்டில் தமிழ் தேசியவாத இடதுசாரியத்தை களையெடுக்கும் வலதுசாரியம் மேலெழுந்தது. இந்தியப் பயிற்சி பெற்றவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதுடன், இதில் கணிசமானவர்கள் கொல்லப்பட்டனர். தமிழ் தேசியவாத இடதுசாரிய களையெடுப்பை நியாயப்படுத்துக் கூடிய போலி வலதுசாரிய இடதுசாரியமும் - அதற்கு எதிரான தமிழ் தேசியவாத இடதுசாரியமும், புளட்டை சிதைக்கத் தொடங்கியது.

வன்முறை மூலமாக தேசியவாத தமிழ் இடதுசாரியத்தை களையெடுக்கும் வலதுசாரியத்தில் இருந்து தப்பிப்பிழைக்க, இந்தியப் பயிற்சி முகாம்களில் இருந்து பலர் தப்பியோடினர். மத்தியகுழுவை சேர்ந்த பெரும்பான்மை தப்பி ஓடியதுடன், அவர்கள் தீப்பொறி என்ற குழுவாக தம்மை வெளிப்படுத்தினர். அதேநேரம் தீப்பொறியுடன் தன்னை முன்னிறுத்தி இருந்த சந்ததியாரை 1985 செப்ரம்பர் மாதம் கடத்திச் சென்று புளட் சித்திரவதை செய்து கொன்றது.

புளட்டில் இருந்து ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எவ்) என்ற குழு இந்திய உளவுப்பிரிவின் ஆதரவுடனும், போலி இடதுசாரியத்தின் துணையுடனும் உருவானது. போலி இடதுசாரியத்தின் முன்முனைப்புடன் உமாகேஸ்வரனை கொல்ல முயன்று, அதில் தோற்றது. ஈ.என்.டி.எல்.எவ் இலங்கையில் இந்திய ஆக்கிரமிப்பு காலத்தில் பாரிய மனிதப் படுகொலைகளில் ஈடுபட்டது. கருணா - புலி பிளவின் பின், கிழக்கில் புலிகளுக்கு எதிரான இலங்கை-இந்திய கூலிப்படையாகவும் செயற்பட்டது.

இதேநேரம் தீப்பொறிக்குள்ளும் தமிழ் இடது – தமிழ் வலது பிரிவு உருவானதுடன், 1987 இல் கிட்டுவுக்கு குண்டு எறிந்தது. தேசியவாத இடது பிரிவைச் சேர்ந்த கேசவன் (புதியதோர் உலகம் நாவல் ஆசிரியர்)(நோபர்ட், டொமினிக்) புலிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பின், முற்றாக தீப்பொறி தமிழ் வலதுசாரியமாக மாறி, புலியை ஆதரிக்கும் தமிழீழக் கட்சியாக சீரழிந்தது.

தீப்பொறி உருவான அதேகாலதில் புளட்டில் இருந்து சிறிய குழுவாக தமிழ் தேசியவாத இடதுசாரியத்தை முன்வைத்து உருவான புரட்சிகரப் பொதுவுடமைக் கட்சி - தமிழீழ புதிய சனநாயகக் கட்சி (என்.டி.பி.ரி) இந்தியாவில் உருவானது. இந்தியாவில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டு - பிடிபட்ட பின், அது படிப்படியாக சிதைந்தது. இக்காலத்தில் மக்கள் யுத்தக் குழுவுக்கு (நக்சல்பாரிகளுக்கு) இராணுவ பயிற்சி வழங்கியது. இறுதியில் அரசியல்ரீதியாக காணாமல் போனது.

புலியில் இருந்து உருவான புளட் வரலாறு முழுக்க தமிழ் தேசியவாத இடதுசாரியத்துடானான முரண்பாடும் - போராட்டமும் முனைப்புடன் காணப்பட்டது. இப்படிப்பட்ட வரலாற்றுச் சூழலில் நூற்றுக்கணக்கான புளட் உறுப்பினர்கள் 1984 முதலே உதிரியாக விலகியதுடன், தேசியவாத தமிழ் இடதுசாரியம் குறித்த பொது விவாதங்களில் ஈடுபட்டனர். தமிழ் தேசியவாத இடதுசாரிய இயக்கமான தமிழீழ தேசிய விடுதலை முன்னணி (என்.எல்.எவ்.ரி)யுடன் அரசியல் உறவும், அதன் சுயாதீனமான இயக்கமே - இவர்களுக்கான அரசியல் அடித்தளம்;. இந்த அரசியல் பின்னணியில் அங்குமிங்குமாக இயக்கங்களுக்கு எதிரான தன்னெழுச்சியான மக்களின் போராட்டங்களின் பின் இருந்தனர் அல்லது அதை வழிகாட்டினர். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்கள் 1985யில் தொடங்கிய போது, புளட்டில் இருந்து ஒதுங்கி பல்கலைக்கழகத்தில் இருந்தவர்களும் - சமூகங்களில் அங்குமிங்குமாக விதையாக இருந்தவர்களே, போராட்டத்தின் உந்துசக்தியாக மாறினர். இதே காலத்தில் பிற இயக்கங்களில் என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

தொடரும்

 மாணவர்களின் இயல்பும், சமூக முரண்பாடுகளும் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 01

தமிழ் "மார்க்சிய" சிந்தனைமுறைக்கான கரு - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 02

1985 யாழ் பல்கலைக்கழக மாணவர் போராட்டத்துக்கு வித்திட்ட சூழல் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 03