Language Selection

பி.இரயாகரன் -2020
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஒடுக்கும் சாதிய சிந்தனையிலான சமூகத்திலிருந்தபடி, சாதி சமூக அமைப்பை எதிர்த்து போராடாது, எதை எப்படி புரட்டிப்போட்டு சிந்தித்தாலும் அது சாதியக் கண்ணோட்டம் கொண்டதே. யாழ் நூலகம் மீள திறப்பதை புலிகள் தடுத்த விடையத்தை ஓட்டிய கண்ணோட்டம், சாதி கடந்து புனிதமாகிவிடுவதில்லை.

ஓடுக்கும் வெள்ளாளிய சிந்தனையிலான ஓட்டுமொத்த சமூகப் பின்புலத்தை எதிர்த்துப் போராடாத எவருடைய சிந்தனையும் - கருத்தும் சாதிய சிந்தனைமுறைதான்;. இந்த சாதிய சிந்தனைமுறைக்கு ஓடுக்கும் சாதியில் பிறக்க வேண்டும் என்பதல்ல, ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த ஒருவனின் சிந்தனைமுறையும் சாதிய சிந்தனைமுறை தான். இது இருக்கும் வரை தான் - சாதிய சமூக அமைப்பு நீடிக்கும்.

யாழ் நூலகம் குறித்த அண்மைய சர்ச்சையின் போது சிவா சின்னப்பொடி "விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் உயர்மட்ட தளபதிகள் நிலையில் 12 பேரும், இடைநிலைத் தளபதிகளாக 56 பேரும், அதற்கு அடுத்த மட்டத்தில் 164 பேரும் ஒடுக்கப்பட்ட சாதியினைச் சார்ந்தவர்களாக" இருந்த புலிகள் இயக்கத்;தை, எப்படி சாதி இயக்கம் என்று கூற முடியும் என்ற தர்க்கமே – புலிக்கு பின் சாதியை பாதுகாக்கும் நவீன சிந்தனைமுறை. இந்தியா காவி காப்பரேட் பார்ப்பனியப் பாசிசம், நாட்டின் ஜனாதிபதியாக ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவரை முன்னிறுத்தியே, இன்றைய சாதிய ஒடுக்குமுறை சமூகத்தை பாதுகாக்கின்றது. முன்பு ஒடுக்கப்பட்ட மதத்தைச் சேர்ந்தவரை ஜனாதிபதியாக்கி, முஸ்லிம்களை ஒடுக்குகின்ற இந்துத்துவ அமைப்பை பாதுகாத்தது. இங்கு அடிப்படையில் பாசிச சிந்தனைமுறை இருக்கின்றது. புலிகளின் பாசிச சிந்தனைமுறை இதைக் கடந்ததல்ல.

புனைபெயரில் இனம் காணப்பட்ட இயக்க உறுப்பினர்களைக் கொண்ட புலிகள் இயக்கத்தில் இருந்தவர்களின் சொந்தப் பெயரைக் கண்டுபிடித்து, அவர்களின் சாதி என்னவென்று கண்டுபிடிக்க முடிகின்றது என்றால் - புலிகள் ஓடுக்கும் சாதி இயக்கமாக இருந்தால் தான் அது சாத்தியமானது. புலியெதிர்ப்பில் உள்ள வலதுசாரிய பிரிவானது ஒடுக்கப்பட்டவர்களாலேயே இயக்கம் தோற்றது என்றும், இயக்கம் செய்த மக்கள் விரோதமானவற்றுக்கு இயக்கத்தில் இருந்த ஒடுக்கப்பட்டவர்களே காரணமென்றும், புலித்தலைமைக்கு தெரியாதவையே புலிகளின் விமர்சனத்துக்குரிய விடையங்கள் - என்று பல வடிவங்களில் புலம்புவதை காணமுடியும். இப்படி சாதியை அடிப்படையாக கொண்டு 2000 ஆண்டுகளில் வெளியான 'மறைவில் ஜந்து முகங்கள்" மீதான எனது விமர்சனமான "அரசியல் படுகொலைகளை சாதியமாக திரிக்கும் வலதுசாரிய மனுதர்மம்" இதற்கு பொருந்தும்.


பிரான்சில் புலித்தலைமை சிவா சின்னப்பொடியை ஓடுக்கும் சாதி அடிப்படையில் தனிமைப்படுத்தி ஒடுக்கியதற்கு எதிராக குமுறுகின்ற உங்கள் நியாயங்கள், வன்னிக்கும்  அங்கும் பொருந்தும். வெளிநாட்டு புலித்தலைமை வேறு, களத்தில் இருந்த தலைமை வேறு என்று கூறுவது, இன்றைய உங்கள் தனிப்பட்ட இருப்புடன் தொடர்புடையது.  வெளிநாட்டு புலித்தலைமையிலும் ஓடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பலர் இருந்திருப்பார்கள் என்பது வெள்ளிடைமலை.

 

 

புலிகளை சாதியற்ற இயக்கமாக நிறுவ முனைகின்ற முறையே, வெள்ளாளியச் சாதிய சிந்தனைமுறைதான். ஒடுக்கப்பட்ட சாதியில் இருந்தபடி சொல்லுகின்றதைத் தாண்டி, சாதிக்கு எதிரான ஒடுக்கபட்டவனின் சிந்தனைமுறையல்ல.

சாதிய சிந்தனையிலான இந்த வெள்ளாளிய சிந்தனையிலான "டயலக்" புலிகளின் பெண்விடுதலை குறித்து புலம்பும் ஆணாதிக்கத்துக்கு நிகரானது. புலிகள் இயக்கம்  ஆணாதிக்கத்தைக் கொண்டதல்ல என்று கூறுகின்ற பித்தலாட்டத்துக்கு, இயக்கத்தில் இருந்த பெண்களையும் பெண் தலைமைத்துவத்தையும் காட்டுவது கடைந்தெடுத்த ஆணாதிக்க பொறுக்கித்தனம்;. ஆணாதிக்க சமூகத்தில் வாழ்ந்தபடி செய்கின்ற கேடுகெட்ட ஆணாதிக்கத்தனம், சாதி சமூகத்தில் வாழ்ந்தபடி செய்கின்ற சாதிய மோசடியாகும்.

ஒடுக்கும் யாழ்; மையவாத சாதிய சமூக அமைப்பை பாதுகாக்கும் சமூகப் பின்னணியைக் கொண்ட புலிகள், 2003 இல் நூலகத்தை மீள திறந்ததை ஒடுக்கும் சாதி அடிப்படையில் தடுக்கவில்லை என்கின்ற புலி வில்லுப்பாட்டு, சாதியைப் பாதுகாத்த புலியை கறைபடியாத புனித பிம்பமாக்கி சாதியை தொடர்ந்து பாதுகாக்க முனைகின்றனர்.

ஒடுக்கும் சாதி அடிப்படையில் யாழ் நூலகம் திறப்பதை புலிகள் 2003 இல் தடுக்கவில்லை என்று கூறும் நீங்கள், வெள்ளாளிய சிந்தனையிலான சாதிய சமூக அமைப்பில் இருந்தபடி உளறுகின்ற தர்க்கங்கள் வாதங்களும், தொடர்ந்தும் ஒடுக்கும் சாதியக் கண்ணோட்டம் தான்.

 

அன்று புலிகள் துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்திய உண்மை, அதை நியாயப்பபடுத்த  எந்தக் காரணத்தை எப்படிச் சொன்னாலும் - அது வெள்ளாளிய புலியிசம் தான். சாராம்சத்தில்  புலிப் பாசிசமே. புலிப் பாசிசம் என்பது ஜனநாயக மறுப்பு கொண்டதும், சாதிய சமூக அமைப்பினை பாதுகாக்கும் - அதாவது தமிழனைத் தமிழன் ஒடுக்கும் சாதிய சமூக அமைப்பை பாதுகாக்கும் அரசியல் அடிப்படையைக் கொண்டது.  ஒடுக்கப்பட்ட சாதியைப் பிறப்பாக கொண்டவர்களும் - நிலவும் சாதிய சமூக அமைப்புக்கு தலைமை தாங்கி ஒடுக்குகின்ற அமைப்பு முறைதான் - வெள்ளாளிய சாதிய சமூக அமைப்பு முறை. புலிகளின் தலைமையில் ஒடுக்கப்பட்டவர்கள் இருப்பதால், புலிகள் சாதி சமூக அமைப்பை பிரதிபலிக்கவில்லை என்று கூறுகின்ற சிந்தனைமுறை - சாதிய சிந்தனைமுறைதான்.

அன்றைய மீள் திறப்பில் அரசியல் இருப்பது போல் - அதை திறக்கவிடாமல் தடுத்த பின்னணியிலும் அரசியல் இருக்கின்றது. இரண்டுமே மக்களை ஒடுக்குகின்ற அரசியல். ஒடுக்கும் இனவாத அரசியலுக்கு நிகராக தமிழனைத் தமிழன் ஒடுக்கியாளும் வெள்ளாளிய சிந்தனையிலான தேசியவாத அரசியலாக இருந்தது.

ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த செல்லன் கந்தையா மீதான புலிகளின் மிரட்டல்கள், திறப்பதை தடுத்து நிறுத்த வெளியிட்ட அறிக்கைகள், சாதியை ஓழிக்கும் போராட்டத்தை முன்னெடுக்கும் பின்னணியில் இருந்து வெளிவரவில்லை. சாதி சமூக அமைப்பைப் பாதுகாக்கும் - புலிப் பாசிசத்தை தூக்கி கொண்டாடிய சாதிய சமூக அமைப்பின் கூச்சல்களே. அந்த கூச்சல்கள் இன்னமும் ஓயவில்லை.