Language Selection

பி.இரயாகரன் -2017
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தப் பின்னணியில் நாட்டில் இதை அமுல் செய்யும் வண்ணம் ஜனாதிபதி மாடு வெட்டுவதை "மிருகவதை"யாக கூறியதுடன், இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி கூறி இருக்கின்றார். தான் மாட்டு இறைச்சியை உண்பது இல்லை என்று கூறியவர், மாட்டு இறைச்சியை உண்ண விரும்புகின்றவர்கள் இறக்குமதி செய்து உண்ணும் படி கூறுகின்றார்.

ஒடுக்கப்பட்ட சாதிகள், உழைக்கும் மக்கள் மற்றும் சிறுபான்மை மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிராக, ஒடுக்கும் சாதிகளும், மத அடிப்படைவாதிகளும் அரசின் ஆதரவுடன் ஒன்றிணைந்து ஒருமுகத் தாக்குதலை தொடங்கி இருக்கின்றனர்.

தென்னாசிய சாதிய சமூக அமைப்பில் ஒன்றில் இருந்து இன்னொன்றைப் பிரிக்க முடியாத வகையில் மத அடிப்படைவாதமும் சாதியமும் இணைந்து இருப்பதும், அரசியல் களத்தில் மக்களை ஒடுக்கும் சக்திகளாகவும் இருக்கின்றது. இந்த பின்னணியில் மாட்டு இறைச்சி விவகாரம் அடங்கும்.

"மிருக வதை" குறித்த பித்தலாட்டம்

ஜனாதிபதி இந்து சாதி மத அடிப்படைவாதத்தை ஊக்குவிக்கும் வண்ணம் "மிருக வதையின்" பெயரில் இதற்கு கம்பளம் விரித்து இருக்கின்றார்.

"மிருக வதை" என்பது மோசடி. மாடுகள் இறைச்சிக்கு வெட்டப்படாவிட்டால் பொருளாதார ரீதியாக பயன்பாடற்ற மாடுகள் அநாதரவாக கைவிடப்படும். மாடுகள் பட்டினி கிடக்கவும், நோயுற்று வதைபட்டும் சாகும். உணவின்றி நோயுற்று வதைபட்டு இறக்கும் மிருகவதையை விட இறைச்சிக்காக வெட்டப்படுவது வதையல்ல.

மனிதனையே வதைத்து சாகடிக்கும் கொடிய தனியார் பொருளாதாரக் கொள்கையைக் கொண்ட சமூகத்தில் - பொருளாதார ரீதியாக பெறுமதியற்ற மாடுகள் - அரசின் மிருக வதைக் கொள்கைக்கு பலியாகும். இங்கு "புனிதமாக கருதும் மாடு - சாதி - மதம் - கருணை.." என்று எல்லாமே, பொருளாதார பெறுமதிக்கு வெளியில் இயங்குவதில்லை என்பதே உண்மை.

மிருகவதை குறித்து பேசும் போதும் பொருளாதார பெறுமானமற்ற மாடுகளின் கதியென்னவாகும் என்று சிந்திக்காது பேசுகின்றவர்கள், அது ஜனாதிபதியாக இருந்தாலும் முட்டாளாகவே இருக்க முடியும்.

மிருக வதை என்பது என்ன?

மிருக வதைக்கு எதிரான மனிதத் தன்மையானது, உயிர்கள் வாழும் சூழலைப் பாதுகாப்பதில் இருந்து தொடங்குகின்றது. சூழலை அழிக்கும் தனியார் உற்பத்தி முறை, பொருளாதார பெறுமதியற்றவற்றை அழிக்கும் கொள்கையை எதிர்த்து நிற்பதில் தொடங்குகின்றது மிருக வதைக்கு எதிரான போராட்டம். இந்த பின்னணியில் தனியார் இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு மிருகங்களை பராமரிக்கும் முறை குறித்தும், அதை உணவுக்காக இலாபகரமாக வதைத்துக் கொல்லுகின்ற முறை குறித்தும் பேச வேண்டும். இதற்கு வெளியில் உயிர் பலி குறித்து பேசுவது மோசடியாகும்.

உணவுச் சங்கிலித் தொடரில், உயிர் அழிப்பு இன்றி உணவு இருப்பதில்லை. உண்ணும் அனைத்தும் உயிர் அழிப்பாகும். உயிர் அழிப்பு என்பது அடிப்படையில் வதைதான். ஏன் தாவரம் கூட உயிர் என்பதும், அது உணவுக்கு உள்ளாகும் போது வதையை அனுபவிக்கின்றது. இங்கு உயிர் வதை குறித்து பேசுவது, குறுகிய அரசியல் சமூக நோக்கம் கொண்டதுக்கு அப்பால் அறிவியல் பூர்வமானதல்ல.

சமண மதம் வீதியில் நடக்கும் போது கூட உயிர் கொல்லாமையை முன்வைத்தது. தனது புலனுக்கு தெரிந்ததை மட்டும் உயிராகக் கண்டது. இன்று அறிவியல் புலன் கடந்த உணவு தொகுதி எங்கும் உயிர் இருப்பதையும் நோய்க்கு மருந்து செய்யும் போது கூட நோய்க்குரிய உயிரை அழிக்க தான் மருந்து என்பதை நிறுவுகின்றது.

இப்படி உண்மைகள் இருக்க, மிருகவதை என்பது குறித்து பேசுவது அறிவு குறித்த விவாதமும் கூட. இதைத் தாண்டி உண்மை எம்முன்னால் இருக்கின்றது. இன்று இயற்கையை அழித்து பணம் பண்ணும் தனியார் உற்பத்திக் கொள்கை உயிர்வாழ முடியாத வண்ணம் உயிரினங்களை வதைப்பதுடன், உயிர்கள் இயற்கை சூழல் இழந்து நோயுற்று மரணிப்பதும், உணவைப் பெற முடியாதால் உயிரினங்கள் வதைந்து மடிகின்றதும் எங்கும் நடந்து வருகின்றது. பல உயிரினங்கள் முற்றாக அழிந்து போகின்றது. "மிருகவதை" பேசுகின்றவர்கள் இதைக் கண்டு கொள்ளாது, மிருகவதை குறித்துப் பேசுகின்றனர்.

மிருக வதை வரம்புக்கு உட்பட்டதா?

மிருகவதை குறித்துப் பேசுகின்றவர்கள், இயற்கையின் சூழலில் இருந்து மிருகங்களைப் பிரித்து வளர்ப்பதைக் கூட வதையாக ஏன் பார்ப்பதில்லை?

மாடு வெட்டுவது மட்டும் தான் உயிர் வதையெனக் கருதுவதும், மற்றைய உயிர்களை அப்படிக் கருதாது இருக்கின்றதன் பின் இருப்பது, மானிட விரோதக் கருத்துகள் அல்லவா!.

உயிர் வதை குறித்துப் பேசுகிறவர்கள் இலங்கையில் ஆயிரக்கணக்கில் மனிதர்களை சித்திரவதை செய்து கொன்று குவித்தது குறித்தோ, மனிதனை பொலிஸ் நிலையங்களில் வைத்து சித்திரவதை செய்து கொல்லுகின்ற இன்றைய நிலை குறித்தோ, பொலிஸ்சுக்கு தலைமை தாங்குகின்ற ஜனாதிபதி "மிருகவதை" குறித்து பேசுகின்ற அருகதை குறித்து, பேசாத "மிருக வதை" கோட்பாடு தான் என்ன?

இந்த "நல்லாட்சியில்" ஏழை எளிய மக்கள் ஒரு நேர உணவின்றி அதற்காக அவர்கள் வாழ்க்கையில் அனுபவிக்கின்ற சித்திரவதைகள் (தற்கொலைகள், பாலியலை பண்டமாக உடலை விற்றல், பிச்சை எடுத்தல், அடிமை உழைப்பு, மற்றவர்களால் இழிவுபடுத்தப்பட்டு வாழ்தல், சாதிய ஒடுக்குமுறைக்குள்ளாகுதல்) என்று இதை மிஞ்சிய, மிருகவதை எதுவும் நாட்டில் இருக்கின்றதா!

உணவுக்கு உயிர்கள் இழத்தல் இயற்கையின் விதி. அதை ஒரு உணவு மீது தடுக்க முனைவது அதை மானிடனுக்கு எதிராக முன்னிறுத்தல், சமூக விரோதத் தன்மை கொண்ட செயல்.

நவதாராளமயம் தான் மாட்டுக்கு மட்டும் "மிருக வதை" குறித்து பேச வைக்கின்றது

இங்கு ஜனாதிபதியின் "மிருக வதை" கோட்பாடு நவதாராளமயத்தை அடிப்படையாகக் கொண்டது.

இலங்கை சிறு விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நாடு. நிலம் பகிரப்பட்டுள்ளதால் நவதாராளமயம் கோரும் பெரும் பண்ணைமுறைக்கு நிலத்தை விவசாயிகளிடம் இருந்து பறித்தெடுப்பதற்கு மாடுகள் தடையாக இருக்கின்றது

விவசாயி தொடர்ந்து விவசாயத்தில் தன்னை நிலைநிறுத்தும் வண்ணம் மாடுகள் பொருளாதார ரீதியாக விவசாயிக்கு கைகொடுக்கின்றது. விவசாயியின் தேவைகள் (பால் - எரு - உழவு..) முடிந்தபின் அது இறைச்சிக்காக செல்லுகின்றது. இந்த வகையில் மாடு விவசாயிக்கு செலவு இன்றி (தீவனம் நிலத்தில் கிடைக்கின்றது) மேலதிக வருமானம் தரக்கூடியது என்பதால் நவதாராளமய தாக்குதலுக்கு எதிராக விவசாயியால் நின்று நீடிக்கமுடிகின்றது. மாட்டை இறைச்சிக்காக வெட்டுவதை தடுத்து விடுவதன் மூலம் மாடுகளை வளர்ப்பவர்கள் இயற்கையாக இறக்குவரை பராமரிக்க கோருவது, மாடு வளர்ப்பை கைவிடக் கோருவது இதன் பின்னான சூக்குமம். நவதாராளமயத்தின் கொள்கை "மிருக வதைக்குள்" தன்னை போர்த்திக் கொண்டு வெளிவருகின்றது.

இதற்கு பௌத்த - இந்து மத அடிப்படைவாதிகளை சார்ந்து நிற்பதும், ஒடுக்கும் சாதிய வக்கிரங்களை கொண்டு தேசிய விவசாயத்தை அழித்து விவசாயத்தை நவதாராளமயமாக்குவதுமாகும்.

நவதாராளமயம் கோரும் பண்பாட்டு அழிப்பு

மாட்டு இறைச்சி உண்ணக் கூடாது என்று இலங்கையில் சாதிய-மத-வர்க்க பின்னணியில் இருந்து கூறுகின்ற அடிப்படையை இங்கு பொருத்திப் பார்க்க முடியும்.

வர்க்க ரீதியான சமூக அமைப்பில் ஆதிக்க சாதிய, மத பண்பாட்டு கூறுக்கு எதிரான மக்களின் பண்பாட்டுக் கூறாக மாட்டு இறைச்சி உணவைப் ஆதிக்க சக்திகள் பார்க்கின்றனர்.

மறுபக்கத்தில் நவதாராளமயம் பல்வேறு உணவு பண்பாடுகளை அழித்து அதனிடத்தில் ஒற்றைப் உணவுப் பண்பாட்டைக் கோருகின்றது. இதை தங்களிடம் இருந்து இறக்குமதி செய்து உண்ணவும் கோருகின்றது. மாட்டு இறைச்சியை உண்ண விரும்புகின்றவர்கள் இறக்குமதி செய்து உண்ணுமாறு ஜனாதிபதி கூறுகின்ற பின்னணியும் இது தான்.

நவதாராளமயமும் ஒடுக்கும் சாதிய மதவாதிகள் மக்களுக்கு எதிராக ஒன்றிணைந்து நிற்கும் புள்ளியில், "மாடு வெட்டுவதற்கு" எதிரான மானிட விரோத செயல்கள் முன்னுக்கு வருகின்றது. இன்று பல முனையிலும் மக்களைக் குதறுவதை தடுத்து நிறுத்தும் போராட்டங்கள் கட்டிமைக்கப்படுவதன் அவசியத்தை மானிடம் முன்னிறுத்துகின்றது.