வெஞ்சமரில் துஞ்சியவர் போனரென்று மிஞ்சியவர் நாமிருந்து,
நெஞ்சிருக்கும் பாரமெல்லாம் அஞ்சலிக்குள் அழுது வைத்து,
மயானத்தில் விறகிட்டுச் சிதை மூட்டிக் கொள்ளிவைத்து,
வாய்க்கரிசி போட்டு வழியனுப்ப, இடுகாட்டில் வாய்விட்டுக்
கதறிக் கண்ணீர்விட்டு, மனப்பாரம் இறக்கிவைத்து
வாழ்வதற்கு விடவில்லைத் துன்மதியர் துடிக்கவைத்தார்.
மரணப்பேய் தலைமேலே கொக்கரித்து,
பிஞ்சென்றோ முதியரென்றோ பேதமின்றி,
நெஞ்சுறைய நெக்குருக கோரக் கொடூர
கொத்தாக நம் வழிநெடுக
கொலைகொண்டு போன போது,
போரென்றால் பொதுமக்கள் இழப்பிருக்கும்
வீரம் தான் வெல்லும் விடிவு வரும் எனவுரைத்தார்.
போகாத இடத்துக்கு வழியும் சொன்னார்.
நாளாந்தம் நடைபெயர்ந்து நாவரண்டு பசி துடித்து,
முள்ளிவாய்க்காலில் முழுவதுமாய்க் காடாத்த
முடிவிருக்கும் என்றா கண்டோம்!
ஈட்டிகளை பட்டடையில் இந்தியம் வார்த்தளிக்க,
சுட்டிச் சகுனிகளோ சரணடைவைக் காட்டி நிற்க,
"வெட்டி பற்றைச் செடிகளையே அழித்தோம்
வெற்றி கொண்டோம்" என "கோத்தாவின் போர்"
கொக்கரிக்க நாம் வாய்த்தோமோ? வழியினி இலையோ?
அவலச் சாக்கண்டுகொள்ளாத சரித்திரம்
மீள்கொண்டு வருவோம் எழுக இலங்கையனே.