ஒரேயொரு கணம்
கனவில் கூட
வாழ முடியாது உன்னால்
வாழ்வின் கடைநிலை மாந்தராய்.
செக்கிழுப்பாயா
கல்லுடைப்பாயா
மண் சுமப்பாயா
நீரிறைப்பாயா
படகிழுப்பாயா
கனி பறிப்பாயா
மூட்டையாய்பாரம்
முதுகில் சுமந்து
வீடுகள் வனைய
வீதிகள் சமைக்க
வெய்யில் நின்று
வெந்திடுவாயா
உன் கொழுத்துப் பருத்த
தேகம் அசைத்து
சேற்றில் இறங்கி
களை நடுவாயா
ஏர் பிடிப்பாயா
அருவி வெட்டி
சூடடிப்பாயா
ஆக்கி வைச்சதை
அள்ளிப் பரிமாற
இரவல் கைகளில்
அகப்பையைச் செருக
ஆள் பிடிக்கிற நீ
ஆடி மகிழ்ந்திடும்
விண்ணுயர்அடுக்கு
மாடிகள் மனைகள்
கொள்ளை இலாபம்
அள்ளும் ஆலைகள்
எங்கள் நரம்பில்
ஏறிய முறுக்கில்
உயிர் பெற்றனவே.
ஊட்டும் அன்னையின் மார்பினில்
மேயும் உன் பார்வையில்
புசிக்கும் குழந்தையின்
பசியின் அவலம்
தெரியாதுனக்கு
முதுகு வளையாதுனக்கு
உழைப்பு வேர்வையின்
உப்பும் சுவைக்கும்
நமக்கதுனக்கோ
நாற்ற வெடுக்கு!
உழைக்கும் கரங்களோ
உலகைச் செதுக்கும்.
உன்னையும் சுமக்கும.
இருளினுள் ஏங்கும்
இடிமை நிலைக்கு
இடிவிழும் ஒருநாள்
அறிவு அகம்பாவம்
உச்சத்தில் இருப்பதால்
மெச்சுவோர் தேடி
எழுதும் உன்
பேனா முனைகளை
ஈட்டியாய் தீட்டி
நாம் கொட்டிய
இரத்தச் சிகப்பில்
தொட்டு எழுந்து வா
நீயல்ல நீ அப்போது
வஞ்சிக்கப்பட்டவர்களின் வாழ்வு
எழுதுகோல் ஈட்டியாய்
உன் கரம் தரிக்கும்.
உன் சொற்களில் சீறும்
சினத்தால்
அநாகரீகம், அறிவிலி
மூர்க்கன் கிறுக்கன்
விபச்சாரி மகன்
பொய்யன் பைத்தியம்
மூளை கழன்றவன்
புரட்டுகள் சொல்பவன்
ஆத்திரக்காரன்
அடிமட்டப் புத்தி
கள்ளன் நாஸ்திகன்
என எல்லா கீர்த்தியும்
உனை வந்து சேரும்.
சிறி
14/11/2011