ஒரு நொடி முன்பு
உயிரசைவிருக்கையில்
குப்பைத்தொட்டி.
அசைவெலாம் அடங்கி
ஆத்மா போன
மறுநொடிப்பொழுதில்
மின்னும் கலசக்
கோபுரமாக
பரிணாம மாற்றம்.
ஜோர்ஜ் புஸ்சுக்கு
நேற்றுச் செருப்படி
மரணமடைந்தால்
மலர் வளையமோ?
ஈராக் குழந்தைகள்
புதைகுழி மேலே
மேடையமைத்து
புஸ்சின்
மரணத்துக்கு
அஞ்சலி கீதமோ?
முள்ளிவாய்க்காலில்
கிள்ளி எறிந்த
பச்சிளம் குழந்தையை
பறிகொடுத்த தாய்
மகிந்தவின் மரணத்துக்கு
மாரடிப்பாளோ?
தெருத்தெருவாக
ரயர்களிட்டு
அரைகுறை உயிராய்
கருக்கி வதைத்தவர்
கருத்துக்கள் பரப்பி
காலடி தொழுதவர்
இறந்த பொழுதில்
சிறப்புக்கள் பேசினால்
ஈன்றபொழுதில் பெரிதுவந்த
அன்னை இதயம் வெடிக்காதோ?
மனிதர்கள் உண்டு
மாமனிதர் யாருமிலர்.