உன்னை உதைப்பதும்
என்னை வதைப்பதும்
என்னுயிர் குடித்ததும்
உன்னுயிர் பறித்ததும்
சிங்களனல்ல
தமிழனுமல்ல
உலகெலாம் நிறைந்து
இரத்தம் உறிஞ்சும்
மூலதனத்தின்
பிசாசுக்கரங்கள்.
மாய்ந்து போவது
நானும் நீயும்.
கைகளை இணைத்து
சேர்ந்தே எழுவோம்
கால்களைப் பிணைக்கும்
விலங்கினை உடைப்போம்.
சிங்களன் தமிழன்
பேதங்கள் விளைத்து
என்னையும் உன்னையும்
பிரிக்கிற சதிவலை
வஞ்சகம் ஒடிப்போம்.
உரிமை கேட்டு
உயிரீய்ந்த தோழனே
முள்ளிவாய்க்கால் வரை
முறுக்கேறிய கரங்கள்
உனது சந்ததியின்
குரல்வளைகளைக்
குறிவைக்கிறது.
மன்னம்பெரிகளைக்
குதறிய கொடுங்கோல்.
களனிகங்கையில்,
காடுகள் தெருக்களில்
உயிரினை உறிஞ்சி
உடல்களை வீசினோர்
உன்னவர் அல்ல.
என்னவர் அல்ல
தேசம் கடந்த
முதலைகள் காலடி
ஏவலாளிகள்.
அழித்தெமை அடிமையாய்
ஆக்குவோன்
என்னவன் அல்ல
உன்னவன் அல்ல
ஏகமாய் உலகைச்
சிதைக்கிறான் எழுவோம்.
அணிகளை வகுப்போம்
அடங்கிட மறுப்போம்
கொடிகளை உயர்த்திக்
கொடுமைகள் தகர்ப்போம்
உரிமைகள் தொலைத்தோர்
உணர்வினிற் கலப்போம்.
உழைப்பினைப் பிடுங்கும்
வலிமையை நசுக்கி
வாழ்வினை வெல்லும்
ஒளியினில் நடப்போம்.