ஜனநாயகப் புரட்சி நடைபெறாத நாடுகளின் சமூகப் பொருளாதார அரசியல் கூறு, சாராம்சத்தில் தேசியக் கூறுகளை மறுப்பதாகும். இந்த நாடுகள் ஏகாதிபத்திய நுகத்தடியில் சிக்கி நவகாலனியாக அடிமைப்பட்டுக் கிடக்கின்றது. நவகாலனிகளின் சமூகப் பொருளாதாரம் என்பது, தரகு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ மற்றும் தேசம் கடந்த பன்நாட்டு உற்பத்தி முறைக்குள் அடிமைப்பட்டுக் கிடக்கின்றது. இதற்கெதிரான ஜனநாயகப் புரட்சியின் அரசியல் உள்ளடக்கம் என்பது, தேசியக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டது. இது குறைந்தபட்சம் தேசிய முதலாளித்துவத்தின் நலனை அடிப்படையாகக் கொண்டது. இதைத் தடுக்கத்தான் காலனித்துவவாதிகளால் கொண்டு வரப்பட்ட முதலாளித்துவ பாராளுமன்றங்கள் என்பது வெறும் கோது. அவர்கள் வழங்கிய சுதந்திரம் போன்றது அது. இது மேற்கில் சலுகை பெற்ற அதிகாரமற்று தொடர்ந்து நீடிக்கும் முடியாட்சி போன்றது. ஆனால் இதனில் இருந்து விதிவிலக்கு என்பது, இது அதிகாரம் கொண்ட ஏகாதிபத்திய நலனை பாதுகாக்கும் ஒரு (கறுப்பு) பொலிஸ் ஆட்சியமைப்பாகும். காலனிக்கு பிந்தைய (கறுப்பு) பொம்மை ஆட்சிகள். ஒடுக்கும் நாடுகளின் கீழ் உள்ள ஒடுக்கப்;படும் நாடுகளுக்கு அமைவாக சுதந்திரம் முதல், பாராளுமன்ற ஆட்சி அமைப்பு முறைகள் ஈறாக ஒடுக்கும் நாடுகளால் வழங்கியவைதான் இவை.
முதலாளித்துவ பாராளுமன்றங்களில் இருந்து வேறுபட்டது ஜனநாயகப்புரட்சி நடைபெறாத நாடுகளின் பாராளுமன்றங்கள்
இங்கு வடிவத்தில் உள்ள ஒற்றுமை உள்ளடக்கத்தில் இல்லை. சமூக பொருளாதார அரசியல் உள்ளடக்கம் மட்டுமின்றி, அதை ஆளும் வர்க்கம் கூட ஒன்றேயல்ல.
இதை "மே18" காரர் பாராளுமன்றங்கள் என்ற பொதுப்புத்தி மட்டத்தில் முன்நிறுத்தி, வேறுபாட்டை கோட்பாட்டுத் தளத்தில் வைத்து மறுக்கின்றனர். பாராளுமன்ற வடிவத்தைக் காட்டி ஏமாற்றுகின்றனர். ஏகாதிபத்தியங்கள் இந்த வடிவத்தை எந்த அரசியல் நோக்கில் ஒடுக்கும் நாடுகளில் புகுத்தினரோ, அந்த நோக்கில் நின்று "மே18" காரர் இதை அரசியலாக்கி மீள முன்தள்ளுகின்றனர். இதை புகுத்தியவன் நோக்கமும், இதை முன்னிறுத்திக் குரைக்கும் கூட்டத்தின் அரசியல் பார்வையும் இதில் வேறுபடவில்லை. இதன் வடிவத்தைச் சார்ந்து நின்று, அதைக் காட்டி ஜனநாயகம் என்கின்றனர்.
முதலாளித்துவ பாராளுமன்ற வடிவங்கள் என்பது, ஜனநாயகப் (தேசிய முதாலளித்துவ) புரட்சியின் அரசியல் நலன்கள் சார்ந்து தோற்றம் பெற்றது. அது முரணற்ற ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டது. இங்கு முரணற்ற ஜனநாயகத்தை உயர்த்திதான், பாராளுமன்றத்தை பாட்டாளி வாக்கம் தன் வர்க்க நலனுக்கு பயன்படுத்துகின்றது. இதனால்தான் லெனின் "1905 பிறகு" பாராளுமன்ற வடிவத்தை புரட்சிக்கு பயன்படுத்துகின்றார்.
ஜனநாயகப் புரட்சி என்பது (தேசிய) முதலாளித்துவ வர்க்கம், நிலப்பிரபுத்துவ வர்க்கத்தை ஒடுக்கியதன் மூலம் தோற்றம் பெற்றது. இந்த முதலாளி வர்க்கத்துக்கு வௌ;வேறு நாடுகளின் நிலப்பிரபுத்துவ வர்க்கம் அடிபணிந்த போக்கு வேறுபட்டதாக இருந்த போதும், முதலாளித்துவ வர்க்கத்தின் நலனுக்கும் அதன் அதிகாரத்துக்கும் உட்பட்டு அழிந்தது. இப்படித்தான் முதலாளித்துவவ பாராளுமன்றங்கள் உருவானது. முரணற்ற ஜனநாயகத்தின் வடிவமாக தன்னை முன்னிறுத்திதான், முதலாளித்துவ பாராளுமன்ற வடிவம் நீடிக்கின்றது. அது சட்டத்தின் ஆட்சியை, முரணற்ற வகையில் தான் கடைப்பிடிப்பதாக பறைசாற்றுகின்றது.
இப்படி தேசிய மூலதனம் தன் சொந்த மக்களை ஒன்றிணைத்து, சுரண்டும் தன் சுதந்திரத்தினை முன்வைத்து உருவான வடிவம்தான் பாராளுமன்றங்கள். வேறு அர்த்தத்தில் அல்ல. இதுவல்லாத அனைத்தும் திரிபாகும்;. (தேசிய) முதலாளித்துவம் உருவாக்கிய தன் சுரண்டும் உரிமை சார்ந்த அரசியல் வடிவம், முரணற்ற ஜனநாயகத்தை உயர்த்திப் பிடித்தபடி, முரணுள்ள தான் மட்டும் சுரண்டும் ஜனநாயகத்தை சமூகத்திற்கு வழங்கியது.
இதன் ஆழமும் அகலமும், முதலாளித்துவ வர்க்கத்தின் சுரண்டும் குறுகிய நலனுக்கு கீழ்ப்பட்டது. அதனால் தனது முரணற்ற ஜனநாயகம் மூலம், மக்களை சுரண்ட முடியாது. இது ஊழல், லஞ்சம்.. என்ற எல்லாவிதமான கழிசடைத்தனத்துடன் தான் நீடிக்க முடிகின்றது.
இந்த வகையான தன்மைகளுடன் தான், ஜனநாயகப் புரட்சி நடைபெறாத நாடுகளில் பாராளுமன்ற வடிவங்கள் புகுத்தப்பட்டது. வடிவத்தைப் புகுத்தியதன் மூலம், அங்கு தமக்கு எதிரான ஜனநாயகப் புரட்சி நடைபெறுவதை அது இல்லாதாக்கியது. இப்படி ஜனநாயகப் புரட்சி நடைபெறாத நாட்டின் தேசிய முதலாளித்துவ நலன்களை நலமடித்துவிட்டு, பாராளுமன்ற வடிவத்தை மட்டும் கொண்டு வந்தனர். இப்படி ஜனநாயகக் புரட்சி நடைபெறாத நாடுகளின் புரட்சியைத் தடுக்க உள்ளடக்கமற்ற வடிவம் புகுத்தப்பட்டது.
சரி, யாரால்? ஏன்? எதற்காக?
யாரால் என்றால் காலனித்துவவாதிகளால் தான், அதாவது ஏகாதிபத்தியத்தால். ஏன் என்றால், தங்கள் காலனிகளை தக்கவைக்கும் மாற்று வழியாக, (கறுப்பு) சுதேசிய தலைவர்களை உருவாக்கியது. எதற்காக என்றால், தொடர்ந்து தாங்கள் சுரண்டத்தான். இந்த நோக்கில்தான் உள்ளடக்கமற்ற பாராளுமன்ற வடிவங்கள் புகுத்தப்பட்டது.
இதை நாம் நுட்பமாக அனுபவத்துடன் புரிந்து கொள்ள, சுதேசிய இந்தியா (கறுப்பு) ஆளும் வர்க்கம்; ஜனாதிபதியாக ஒரு தலித்தை, ஒரு பெண்ணை, ஒரு முஸ்லீமை கொண்டு வந்ததன் மூலம், இவர்கள் மேல் ஒடுக்குமுறை கிடையாது என்று பிரச்சாரம் செய்தது போன்றது தான் இதுவும். தமிழர் விடுதலை கூட்டணி குறுதிய தமிழ்தேசியத்தை விதைத்த போது, உடுப்பிட்டித் தொகுதியில் தாழ்த்தப்பட்ட ஒருவரை நிறுத்தி தாழ்ந்த சாதிய மக்களை குறுகிய தமிழ்தேசியத்தின் பின் ஏமாற்றியது போன்றது. அமெரிக்காவில் கறுப்பு ஓபாமா, கறுப்பர்கள் சார்பில் ஆட்சி ஏறி கறுப்பு இன மக்களை ஏமாற்றியது போன்றது.
இப்படித்தான் சுதந்திரம் முதல் பாராளுமன்ற வடிவங்கள் வரை மக்களை ஏமாற்ற புகுத்தப்பட்டது. ஏகாதிபத்தியம் காலனிகளை வைத்திருந்த காலத்தில், தன்னை தற்காத்துக் கொள்ள உள்ளடகத்தை மறுத்து கறுப்பு சுதேசிகளைப் கொண்ட பாராளுமன்ற வடிவத்தைக் கொண்டு வந்தது. இப்படி வெள்ளை நிறத்து ஓநாய்க்கு பதில் கறுப்பு ஓநாய்கள். இப்படி தங்கள் காலனித்துவ காலத்திலேயே, இந்த பாராளுமன்ற வடிவத்தை காலனிகளுக்குள் புகுத்தினர். இந்த பாராளுமன்ற வடிவத்தை இவர்கள் கொடுத்தது, தங்கள் தங்க தட்டில் வைத்து வழங்கிய போலிச் சுதந்திரத்தின் போதல்ல, அதற்கு முன்பே தங்கள் காலனிய ஆட்சிக் காலத்திலேயே அதை புகுத்திவிட்டனர். ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தேசியப் போராட்டங்கள் கூர்மையாகிய காலத்தில், அதை திசைதிருப்ப இந்த பாராளுமன்ற வடிவங்கள் உதவின. இதன் மூலம் கறுப்பு ஓநாய்களிடம் அதிகாரம் படிப்படியாக கைமாற்றப்பட்டது. உண்மையில் நடந்த போராட்டத்தை சிதைக்கவும், பிளவை உருவாக்கவும், கறுப்பு ஓநாய்களை கொண்டு போராட்டத்தை ஒடுக்கவும், இந்த வடிவங்கள் எலும்புத் துண்டாக மாறி உதவியது. இன்று ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பாளன் பாராளுமன்றங்களை முன்னிறுத்தி, அதை ஜனநாயகமாக காட்டுவது போன்றது தான் இது. இந்தப் பாராளுமன்ற வடிவங்கள் தான் ஈராக், ஆப்கானிஸ்தான் என்று எங்கும், தங்கள் ஆக்கிரமிப்பை மூடிமறைக்க ஆக்கிரமிப்பாளன் முன்னிறுத்துகின்ற மற்றொரு ஆயுதமாகும்.
ஒடுக்கும் நாடுகள் ஒடுக்கப்பட்ட நாடுகள் மேலான தங்கள் ஒடுக்குமுறையை மூடிமறைக்க பாராளுமன்றங்கள் பயன்படுத்துகின்றது. இப்படி காலனிய காலம் முதல் ஏகாதிபத்தியதுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை நசுக்க, போராடியவர்களின் ஒரு பகுதியைக் கொண்டும், தங்கள் கைக் கூலிகளைக் கொண்டும் முன் கூட்டியே உருவான வடிவங்கள் தான் இந்த ஒடுக்கப்பட்ட நாடுகளின் நாடாளுமன்றங்கள். இங்கு காலனித்துவத்துக்கு எதிரான போராட்டம் நடந்த காலத்தில், புகுத்தப்பட்ட பாராளுமன்றத்தை பாட்டாளி வர்க்கம் பயன்படுத்தியிருக்க முடியுமா!? ஆக்கிரமிப்பாளன் உருவாக்கிய (உதாரணமாக ஈராக், ஆப்கானிஸ்தான்..) பாராளுமன்றத்தை பாட்டாளி வர்க்கம் பயன்படுத்த முடியுமா? இல்லை. அது காலனித்துவவாதிகளின் நோக்கத்துக்கு துணை போவதுதான். இதுதான் இன்றைய நிலையும் கூட. இன்று காலனிக்குப் பதில் நவகாலனிகள். இந்தப் பாராளுமன்றங்கள் காலனித்துவவாதிகள் வெளியேறிய பின், திடீரென உருவானதல்ல. காலனிய காலத்தில் இருந்து வந்த ஒரு நீட்சிதான்.
தொடரும்
பி.இரயாகரன்
27.12.2010
1.பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 1
2.பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 2
3. பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 3
4. பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 4
5. பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 5