Language Selection

பி.இரயாகரன் -2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"பொதுப்புத்தி" மட்டத்தில் வைத்து சமூகத்தை மோசடி செய்வதன் மூலம், "மே 18" காரர் திட்டமிட்டு ஏய்க்க முனைகின்றனர். முதலாளித்துவ நாடுகள் "பொதுப்புத்தி" யிலான பொது வரைமுறையைக் கொண்டு, ஜனநாயகப் புரட்சி நடைபெறாத நாடுகளின் குறிப்பான யுத்ததந்திரத்தை மறுப்பது முதல் 1917 வரை ருசியாவில் நீடித்த முடியரசைக் காட்டி 1905 இல் நடந்த முதலாவது ஜனநாயகப் புரட்சியை பொதுப்புத்தி மட்டத்தில் புதைக்க முனைகின்றனர். 1905 ஜனநாயகப் புரட்சிக்குப் பிற்பாடுதான் பாராளுமன்றத்தையே லெனின் பயன்படுத்தினார் என்பதை லெனின் சொல்ல, லெனினின் பெயரைச் சொல்லியே திரித்து மறுப்பது வரையான "மே 18"யின் அரசியல் பித்தலாட்டத்தை மேலே பார்த்தோம்.

இப்படி "மே 18" என்ன செய்கின்றது என்றால், "பொதுப்புத்தி" மட்டத்திலான அரசியல் திணிப்பையே செய்ய முனைகின்றது. அவர்கள் இப்படித்தான் தேசியத்தை, மீண்டும் எமக்கு காட்ட முற்படுகின்றனர். வலதுசாரிய பாசிச புலித் தேசியத்தையே ஒடுக்கப்பட்ட வர்க்கங்களினதும், ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் தேசியமாகவும் காட்டுகின்ற ஒரு "பொதுப்புத்தியிலான" அரசியல் பித்தலாட்டத்தை முன்தள்ளுகின்றனர். "பொதுப் புத்தித்" தளத்தில் இதுதான் தேசியம் என்கின்ற அரசியல் அடித்தளத்தில், "மே18" என்று தன்னைத்தான் அதன் தொடர்சியாக காட்டிக்கொண்டு அதற்கேற்ற அரசியல் புரட்டுகளை முன்தள்ளுகின்றது.    

இங்கு இதற்குள் மற்றொரு "அரசியலற்ற" "பொதுப்புத்தி" அரசியலைப் புகுத்துகின்ற குள்ளநரித்தனத்தைப் பார்ப்போம். "மே18" கூறுகின்றது "லெனின் தலைமையிலான போல்சேவிக் கட்சியானது 1908 இல் ரஸ்ய பாராளுமன்ற (டூமா) தேர்தலில் கலந்துகொண்டபோது ரஸ்யா முடியரசாகத்தனே இருந்தது. 1917 பெப்ருவரியில் தானே அந்த நாட்டில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடைபெற்றது." என்கின்றது. இங்கு இதன் மூலம் கூறுவது என்ன? "முடியரசு" இல்லாமல் போவதும் தான், ஜனநாயகப் புரட்சியைத் தீர்மானிக்கின்றது என்ற அரசியல் பித்தலாட்டத்தை இதன் மூலம் அரங்கேற்றுகின்றது.

இதனாலும் தான் இவர்கள் 1905 நடந்த முதலாவது ஜனநாயகப் புரட்சியை, லெனினின் பெயரால் மறுக்கின்றனர். 1917 வரை "முடியரசாகத்தானே இருந்தது 1917 பெப்ருவரியில்" ஜனநாயகப் புரட்சி நடந்தாக கூடி மூடிமறைக்கின்றனர். லெனினின் முதலாவது ஜனநாயகப் புரட்சி (1905) என்று கூறியது எதை? முடியாட்சி இருக்கக் கூடியதாகவே, அவர் 1905 ஜனநாயகப்புரட்சி என்று எதைக் கூறினார்? "மே18" காரர் 1917 இல் தான் முதலில் நடந்தது என்று திரித்துக் கூறுவதன் மூலம், லெனினின் எந்த அரசியல் வரையறையை மறுக்க முனைகின்றனர்?

1905 இல் நடந்ததை மறுப்பது, அங்கு நடந்த புரட்சியின் சமூக பொருளாதர அரசியல் உட் கூறுகளைத்தான். இங்கு "மே18"காரருக்கு ருசிய புரட்சியின் அடிப்படைகளைக் கூட புரிந்து கொள்ளவில்லை என்பதும், இங்கு வெளிப்படையாகின்றது. 1905 நடந்த முதலாவது ஜனநாயகப் புரட்சியை மறுத்துக்கொண்டு, ருசியப் புரட்சியை சரியாக யாரும் பார்க்கவும் விளக்கவும்  முடியாது. 1905 நடந்த முதலாவது ஜனநாயகப் புரட்சி இன்றி, 1917 நடந்த வர்க்கப் புரட்சி என்ற கேள்விக்கு வரலாற்றில் இடமில்லை. திரித்துப் புரட்டுபவர்கள் தான், தம் சந்தர்பவாதத்துக்கு ஏற்ப இதை இட்டுக்கட்டுகின்றனர்.

இங்கு "மே18" காரர் "பொதுப்புத்தியாக" காட்ட முனைவது என்ன? முடியாட்சியை இழந்தால் தான், ஜனநாயகப் புரட்சியாகும். மறுபக்கத்தில் இதன் மூலம் முடியாட்சி இல்லாத நாடுகளில், ஜனநாயகப் புரட்சி முடிந்துவிட்டது என்று மறைமுகமாக கூற முனைகின்றனர். இதன் மூலம் அதை முதலாளித்துவ பாராளுமன்றமாக, காட்டி அதை முன்னிறுத்துகின்றனர். அதாவது புதியஜனநாயகப் புரட்சியை மறுத்து அதனுள்ளான ஜனநாயகப் புரட்சியை மறுக்கின்றனர். பாட்டாளி வர்க்கமல்லாத தங்களை தேசியவாத நிலைக்கு ஏற்ப, பாட்டாளி வர்க்க புரட்சியை சிதைக்க அரசியல் பித்தலாட்டம் செய்கின்றனர்.

முடியாட்சியைக் காட்டி செய்யும் அரசியல் பித்தலாட்டத்தின் விளைவு என்ன? நேபாளத்தில் மன்னர் ஆட்சியை இழந்ததால், அங்கு ஜனநாயகப் புரட்சி நடைபெற்றுவிட்டது என்ற கருதுகோள் முன்தள்ளப்படுகின்றது. மாவோயிஸ்ட்டுகள் தொடர்ந்து போராடுவது எதற்காக? "மே18"காரர் ஜனநாயகப் புரட்சி முடிந்துவிட்டது என்பார்கள். மாவோயிஸ்டுகள் அங்கு தொடர்ந்து போராடுவது ஜனநாயகப் புரட்சிக்காகத்தான்.

சரி இங்கிலாந்திலும், வேறு சில ஐரோப்பிய நாடுகளிலும் இன்னமும் முடியாட்சியின் வடிவங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன. அதனால் இங்கு ஜனநாயகப் புரட்சி நடைபெறவில்லை என்று அர்த்தமா? இல்லை. 1905 ருசியாவில் முதலாவது ஜனநாயகப் புரட்சி நடந்தது போல்தான், இந்த நாடுகளிலும் நடந்தது. தமக்கு எதிரான ஒரு புரட்சியை தடுக்க, முடியாட்சிகள் படிப்படியாக அதிகாரத்தை சமரசங்கள் மூலம் சலுகையைப் பெற்றுக்கொண்டு விட்டுக்கொடுத்தன. இது ஒவ்வொரு நாட்டிலும் ஏற்ற இறக்கம் கொண்டதாக இருந்தது. ருசியாவில் 1917 இல் இரண்டு புரட்சியும் நடக்காமல் போயிருந்தால், ஐரோப்பிய நாடுகளில் நடந்தது போல் அங்கும் நடந்து இருக்கும்.

தேசிய முதலாளித்துவ உற்பத்தியும், உற்பத்தி உறவுகளும் உள்ளடங்கிய சமூக பொருளாதார அரசியல் மாற்றங்கள் தான், ஜனநாயகப் புரட்சியின் அரசியல் உள்ளடக்கமாகும். ஐரோப்பாவில் பல நாடுகளில் இருந்த முடியாட்சிகள் பல, சலுகை கொண்ட சமரசங்கள் மூலம் முதலாளித்துவ சமூக பொருளாதார அரசியல் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு, தங்கள் அரசியல் அதிகாரத்தை இழந்தவர்கள் சலுகை கொண்ட முடியாட்சி வடிவத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டனர்.

இதைப் போன்றுதான் முன்னாள் காலனிகளில் உற்பத்தியையும் உற்பத்தி உறவுகளையும் மாற்றாது, முதலாளித்துவ பாராளுமன்ற வடிவத்தைக் கொடுத்தனர். தேசிய முதலாளித்துவ உற்பத்தியையும் உற்பத்தி உறவுகளும் உள்ளடங்கிய சமூக பொருளாதார அரசியல் அதிகாரத்தையல்ல. இதைத் தடுக்கத்தான், ஆட்சி வடிவத்தை மட்டும் திணித்தனர். இப்படி ஜனநாயகப் புரட்சி நடைபெறாத வண்ணம், கீழ் இருந்து புரட்சி நடைபெறாத வண்ணம் மேல்மட்டத்தில் வடிவத்தைத் திணித்தனர். இதன் மூலம் இந்த நாடுகளின் சமூக பொருளாதார அரசியல் கடிவாளத்தை தங்கள் கையில் வைத்திருந்தனர். தேசிய முதலாளித்துவ உற்பத்தி மற்றும் உற்பத்தி உறவுகளிலான சமூக பொருளாதார அரசியல் அடிப்படையைக் கொண்ட, பாராளுமன்றத்தை இது மறுக்கின்றது. ஜனநாயகப் புரட்சிக்குரிய தேசிய முதலாளித்துவ அடிப்படைகளற்ற, பாராளுமன்ற வடிவத்தை மேல் இருந்து திணித்தனர்.

தேசிய முதலாளித்துவ உற்பத்தி மற்றும் உற்பத்தி உறவுகளுமற்ற முதலாளித்துவ பாராளுமன்றங்களை, முதலாளித்துவ ஜனநாயக பாராளுமன்றமாக காட்டுகின்ற திரிபு தான் இங்கு "மே 18"  முன்தள்ளும் "பொதுப்புத்தி" அரசியலாகும்;.

இங்கு "முடியாட்சியை" இழத்தல் தான், ஜனநாயகப் புரட்சிக்குரிய அடிப்படை வேறுபாடாக காட்டுகின்ற அரசியல் என்பது, உள்ளடக்க ரீதியாக முடியாட்சி அல்லாத நாடுகளில்  ஜனநாயகப் புரட்சி நடை பெற்றுவிட்டதாக காட்டுகின்ற அரசியல் பித்தலாட்டத்தை பின்பக்கத்தால் செய்கின்றது. இதனாலும் தான், 1905இல் நடந்த ருசியாவின் முதலாவது ஜனநாயகப் புரட்சியை திட்டமிட்டே மூடிமறைத்தும், திரித்துப் புரட்டியும் மறுக்கின்றனர்.  

தொடரும்

பி.இரயாகரன்
23.12.2010

1.பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 1

2.பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 2

3. பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 3

4. பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 4