Language Selection

பி.இரயாகரன் -2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"மே18" ஒரு பாட்டாளி வர்க்க கட்சியல்ல. அது மே18 இன் தொடர்ச்சியே தாங்கள் என்று கூறிக்கொண்டு, அதன் பெயரில் தேசியம் பேசும் வலதுசாரிய குழு. ஒரு கட்சியே இலங்கையில் இல்லை. பாட்டாளி வர்க்கம் தன் வர்க்கப் போராட்டத்துக்கு பயன்படுத்த வேண்டிய மார்க்சிய வழிமுறைகளை, மே 18 கூட்டம் சம்பந்தமில்லாத இடத்தில், சம்பந்தமில்லாத நேரத்தில் முன்தள்ளுகின்றது என்றால், எவ்வளவு பெரிய அரசியல் மோசடிக்காரர்கள் என்பது நாங்கள் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இவர்களின் அரசியல் யாருக்கானது என்ற கேள்வி இங்கு எழுகின்றது. அதேநேரம் இது மக்களுக்கு விரோதமானது என்பது வெளிப்படையானது. மார்க்சிய லெனினிய மாவோயிச (பாட்டாளி வர்க்க) கட்சிகள் கடைப்பிடிக்க வேண்டிய போர்த்தந்திர வழிமுறையாகும். இதை தமது பாட்டாளி வர்க்கமல்லாத நிலையில் நின்று, தங்கள் சந்தர்ப்பவாதத்துக்கு ஏற்ப அதைத் திரித்துப் புரட்டுகின்ற இவர்களின் நோக்கமோ, மிகத்தெளிவாக பாட்டாளி வர்க்கத்துக்கு எதிரானது.

 

 

 

இப்படித் திரித்துப் புரட்டி பாட்டாளி வர்க்கத்துக்கு விரோதமாக தேசியம் பேசுகின்ற "மே 18" காரர்கள், லெனினையும் திரிக்காமல் தங்கள் சந்தர்ப்பவாதத்தை முன்வைக்க முடியவில்லை. முதலில் "மே 18" லெனினின் பெயரில் என்ன கூறுகின்றது என்று பார்ப்போம். "லெனின் தலைமையிலான போல்சேவிக் கட்சியானது 1908 இல் ரஸ்ய பாராளுமன்ற (டூமா) தேர்தலில் கலந்துகொண்டபோது ரஸ்யா முடியரசாகத்தானே இருந்தது. 1917 பெப்ருவரியில் தானே அந்த நாட்டில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடைபெற்றது. உண்மைகள் இப்படியிருக்க இந்த ஜனநாயகப்புரட்சி நடைபெறாத நாட்டில் பாராளுமன்ற தேர்தலில் கலந்து கொள்ள முடியாது என்ற வாதம் எங்கிருந்து வருகின்றது?" என்று எம்மை நோக்கி தர்க்கம் செய்கின்றது. இதன் மூலம் இங்கு "ஜனநாயகப்புரட்சி நடைபெறாத நாட்டில்" பாராளுமன்றத்தை பயன்படுத்த முடியும் என்கின்றனர். இங்கு "ஜனநாயகம்" பற்றிய அரசியல் அரிச்சுவடியையே இது மறுக்கின்றது. இதை பின்னால் பார்ப்போம்.

 

முதலில் இவர்கள் கூறியது தங்கள் சந்தர்ப்பவாதத்துக்கு ஏற்ப லெனினையே புரட்டி திரிக்கின்ற ஒரு திரிபு. லெனினின் பாட்டாளி வர்க்க அரசியல் நிலை மீதான அப்பட்டமான அரசியல் புரட்டு இது. ஜனநாயகப்புரட்சி நடைபெறாத நாடுகளில் தான், லெனின் பாராளுமன்றத்தை பயன்படுத்தியதாக கூற முனைகின்றனர். இவர்கள் தங்கள் திரிப்புக்காக பயன்படுத்திய லெனின் (அதே நூலில் "இடதுசாரிய" கம்யூனிசம் - இளம் பருவக் கோளாறு") என்ற நூலில், லெனின் இதைத் மிகத் தெளிவாக மறுக்கின்றார்.

 

லெனின் என்ன கூறுகின்றார். "போல்ஷிவிக்குகளான நாங்கள் படுமோசமான எதிர்ப்புரட்சிப் பாராளுமன்றங்களில் பங்கெடுத்துக் கொண்டோம். இவ்வாறு பங்குகொண்டதானது ருசியாவில் முதலாவது முதலாளித்துவப் புரட்சிக்கு (1905) பிறகு, இரண்டாவது முதலாளித்துவ புரட்சிக்கும் (பிப்ரவரி 1917) பிற்பாடும்" தான் என்பதை, அழுத்தம் திருத்தமாக மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். முதலாவது முதலாளித்துவப் புரட்சி 1905 யில் நடந்ததன் பிற்பாடு தான், இந்த நாடாளுமன்றத்தைப் பாட்டாளி வர்க்கம் பயன்படுத்தியது. அதற்கு முன்னமல்ல. "பொதுப் புத்தி மட்டத்திலான வாதங்களினால் இட்டு நிரப்ப" முனைவதாக, தமக்கு எதிரான வாதங்களைக் முத்திரை குத்திக் கொண்டு, தங்கள் அறிவுபூர்வமாக விவாதிப்பதாக காட்டிக்கொண்ட, இட்டுக்கட்டுகின்ற புரட்டுகள் மூலம் அரசியல் திருகுதாளங்களை முன்தள்ளுகின்றனர்.

 

உண்மையில் "மே 18" காரர் பொதுப்புத்தி மட்டத்தில் சமூகம் சிந்திக்கும் வண்ணம், அரசியலை திரித்து புரட்டியே சிதைக்கின்றனர். லெனின் 1905 க்கு பிறகு என்று குறிப்பிட்டதை நீக்கி, வாசகர்களை பொதுப்புத்தி அரசியல் தளத்தில் நிறுத்திவைத்து தங்களது இட்டுக் கட்டுகளை செருகுகின்றனர். இது அவர்கள் தம்மை நியாயப்படுத்த, வெட்டி நீக்கி எழுதிய லெனினின் நீண்ட மேற்கோளுக்குரிய அதே கட்டுரையில் இக் குறிப்பு மிகத் தெளிவாக உள்ளது. இதை அவர்கள் நீக்கி எழுதியதும், அதை காட்டாது விட்டதும். திரித்து எழுதியதன் நோக்கம் என்பதும், வாசகர்களை ஏமாற்றி தங்கள் புரட்டுகள் மூலம் இருட்டில் வழிநடத்தத்தான். இது மாபெரும் அரசியல் மோசடி. வாசகரை "பொதுப் புத்தி" மட்டத்தில் நிறுத்தி, தங்கள் சந்தர்ப்பவாதத்தை பின்பக்கத்தால் திணித்தலாகும். இப்படி நாங்கள் அம்பலப்படுத்துவதைத்தான் இவர்கள் "எதிர் தரப்பார் மீது வசைபாட"ல் என்கின்றனர்.

 

இதன் மூலம் தாங்கள் திரித்துப் புரட்டுவதைத் தான், இவர்கள் ஆரோக்கியமான விவாதம் என்கின்றனர். இதை அம்பலப்படுத்தும் போது "தம்மை கோட்பாட்டு ரீதியாக கேள்விக்கு உள்ளாக்கும் மாற்று கருத்துடையவர்களை திட்டித் தீர்ப்பதன் மூலமாக உண்மையில் தமிழ் சூழலில் ஒரு விவாதத்திற்கு ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையையே இல்லாமற் செய்துள்ளார்கள்." என்று முத்திரை குத்தி அவதூறு பரப்புகின்றனர். இதன் மூலம் தான், தாம் திரித்துப் புரட்டுவதை மூடிமறைக்க விரும்புகின்றனர். லெனினின் பெயரால் கூட உண்மைகளைப் புரட்டுகின்றனர்.

 

"1917 பெப்ருவரியில் தானே அந்த நாட்டில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடைபெற்றது" என்று மே 18 கூறுவது, தங்கள் கருத்துக்கு ஏற்ற விவாதமற்ற, ஒரு விவாதத்தை விரும்பாத அரசியல் புரட்டும் திரிபுமாகும். இப்படி லெனினையே திரித்துக் காட்டாமலும், நடந்த ஒரு புரட்சியை (முதலாவது முதலாளித்துவப் புரட்சிக்கு -1905) அதன் வரலாற்றில் இருந்தும் புதைக்காமல், "மே 18" தங்கள் சந்தர்ப்பவாத நிலையை நியாயப்படுத்த முடியவில்லை. அன்று லெனின் தலைமையிலான கட்சி, 1905 முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியில் பாட்டாளி வர்க்கம் பங்கு கொள்வதன் அவசியத்தையும், அதற்கு எதிரான அராஜகவாத இடதுசாரிய போக்குகளை அம்பலப்படுத்தி எழுதியது தான் "ஜனநாயகப் புரட்சியின் சமூக-ஜனநாயகவாதத்தின் இரண்டு போர்த்தந்திரங்கள்" என்ற குறிப்பிடத்தக்க அரசியல் நூல். இந்த அரசியல் உள்ளடக்கத்தில் தான், ஜனநாயகப் புரட்சி நடைபெறாத நாடுகளுக்கான புதிய ஜனநாயகப் புரட்சி என்ற புரட்சிகரமான யுத்ததந்திர வடிவத்தை மாவோ முன்வைத்தார். இந்த அடிப்படையில்தான் நேபாளம் மாவோயிஸ்டுகள், பாராளுமன்ற வடிவத்தை இன்று கையாளுகின்றனர்.

 

அன்று லெனின் தலைமையிலான கட்சி ஒரு ஜனநாயகப் (முதலாளித்துவ) புரட்சியில் கலந்து கொண்டதுடன், அந்தப் புரட்சி உருவாக்கிய நாடாளுமன்றத்தையும் பயன்படுத்துகின்றனர். இங்கு ஜனநாயகப் புரட்சி நடைபெறாத ஒரு நாட்டில் அல்ல. உங்களைப் போன்றவர்கள் புரட்டுவார்கள் என்பதால் தான்;, லெனின் இதை அழுத்தம் திருத்;தமாக "முதலாளித்துவப் புரட்சிக்கு (1905) பிறகு" என்று குறிப்பிடுகின்றார். நீங்கள் என்ன செய்கின்றீர்கள் "முதலாளித்துவப் புரட்சிக்கு (1905) பிறகு" என்பதை, "தமிழ் சூழலில் ஒரு விவாதத்திற்கு ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையையே" இல்லை என்று கூறிக்கொண்டு அதை நீக்கிவிடுகின்றீர்கள். "கேட்பவன் கேனப் பயல்" என்ற அறிவு சார்ந்த மேன்மையான புரட்டுடன் கூடிய சுயநினைப்பு கொண்ட, அழிவு அரசியலாகும். மக்களை ஏமாற்றி வழிநடத்த முனைகின்ற மோசடியாகும்;. கடந்தகாலம் போல், மீண்டும் சமூகத்தை முட்டாளாக தக்க வைக்க முனைகின்ற புரட்டுத்தனமாகும்;. பாராளுமன்றத்;தை பயன்படுத்தல் என்ற அடிப்படையான அனைத்தும், இங்கு இவர்களின் திரிபு சார்ந்து தகர்ந்து போகின்றது. இப்படி லெனின் எந்த விதத்திலும் கைகொடுக்கவில்லை.

 

"மே 18" எதை திரித்து, எதைப் புகுத்த முனைந்தது என்பதை இங்கு அப்பட்டமாகவே பார்க்கின்றீர்கள். "மே 18" மேற்கோளாக காட்டிய லெனின் முதல் சர்வதேச இயக்கம் வரையான அனைத்தும் மிகச்சரியானவை. ஆனால் அதைத் திரித்துக் காட்ட முடியாது. மேற்கோள்களோ "மே 18" இன் நிலைக்கு எதிரானவை. அவர்கள் அதை தங்கள் நிலைக்கு ஏற்ப திரிக்கின்றனர்.

 

தொடரும்

 

பி.இரயாகரன்

20.12.2010

 

1.பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 1

2.பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 2

3. பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 3