Language Selection

பி.இரயாகரன் -2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மே 18 பிந்தைய அதன் தொடர்ச்சியாக திடீரென அறிவித்துக் கொண்ட "மே 18" காரர், இலங்கை தேர்தலில் பங்குகொள்வது என்று தாங்கள் எடுத்த முடிவை நியாயப்படுத்த எடுத்துக்காட்டிய மற்றொரு புரட்டைப் பார்ப்போம். 1960 களில் முதலாளித்துவ மீட்சியை நடத்திய ருசியாவுக்கும், கம்யூனிச சீனாவுக்கும் இடையிலான விவாதத்தில் (மாபெரும் விவாதம்) பரிமாறப்பட்ட கருத்துகளை தமக்கு ஏற்ப புரட்டுகின்றனர். 1964 மார்ச் 31ம் திகதியிட்ட அறிக்கையில் உள்ள உள்ளடக்கத்தில் மிகத்தெளிவாக (ஆம் அதே 608 பக்கத்தில் தான்) "முதலாளித்துவப் பாராளுமன்றங்களின் பால் கடைப்பிடிக்க வேண்டிய சரியான அணுகுமுறை குறித்த மார்க்சிய-லெனியவாதிகளுக்கும், பிற சந்தர்ப்பவாதிகள் மற்றும் திருத்தல்வாதிகளுக்கும் இடையில் ஒரு அடிப்படை வேறுபாடு எப்போதும் இருந்து வருகின்றது." என்று தொடங்கித்தான் அந்த விவாதம் இதை விவாதிக்கின்றது.

 

 

இப்படி அந்த ஆவணம் கூற, மே 18காரர் இதை தவிர்த்து இதன் அடுத்தவரியில் இருந்து தமக்கு ஏற்ப எடுத்துக் காட்டித் திரிக்கின்றனர். "முதலாளிகளின் பிற்போக்கு தன்மையை அம்பலப்படுத்தவும், மக்களுக்கு கற்றுக் கொடுக்கவும், புரட்சிகர வலிமையை சேகரித்துக் கொள்ள உதவவும், குறிப்பான சூழ்நிலைமைகளில் பாட்டாளி வர்க்கக் கட்சி பாராளுமன்றப் போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்றும், பாராளுமன்ற மேடையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மார்க்சிய-லெனினியவாதிகள் எப்போதும் கூறி வருகிறார்கள். தேவைப்படும்போது இந்த சட்டபூர்வமான போராட்ட வடிவத்தை பயன்படுத்திக் கொள்ள மறுப்பது தவறாகும். ஆனால் பாராளுமன்றமும் புரட்சியாளரும் பாட்டாளி வர்க்க கட்சி ஒருபோதும் பாட்டாளி வர்க்க புரட்சிக்கு மாற்றாக பாராளுமன்ற போராட்டத்தைக் கருதக்கூடாது அல்லது சோசலிசத்துக்கான மாற்றத்தை பாராளுமன்ற பாதையின் மூலம் சாதித்துவிடலாம் என்ற மாயையில் ஆழ்ந்துவிடக்கூடாது. அது எல்லா சமயங்களிலும் வெகுஜனப் போராட்டங்களிலேயே கவனம் செலுத்தவேண்டும்;" என்கின்றது.

 

இங்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சரியான அரசியல் நிலையை, தமது சந்தர்ப்பவாதத்துக்கு ஏற்ப இங்கு திரிக்கின்றனர். இங்கு "முதலாளித்துவப் பராளுமன்றங்கள்" பற்றிய அடிப்படையான அரசியல் விளக்கத்தை, முதலாளித்துவமல்லாத நாடுகளின் பாராளுமன்றங்களுக்கு "மே 18" பொருத்திக காட்டி விடுகின்றனர். இவர்கள் இப்படி திரிப்பார்கள் என்பதால் தான்

 

1. "முதலாளித்துவப் பாராளுமன்றங்களின் பால் கடைப்பிடிக்க வேண்டிய சரியான அணுகுமுறை" என்ற குறிப்பை தெளிவாக முன்வைக்கின்றது.

 

2. "பிற சந்தர்ப்பவாதிகள் மற்றும் திருத்தல்வாதிகள்" பற்றிய விளக்கத்தையும் இது முன்வைக்கின்றது.

 

"மே18"காரர் இந்த இரு பகுதியையும் நீக்கி விட்டு, பாராளுமன்ற வடிவங்கள் மேல் பொதுமைப்படுத்திக் காட்டித் திரிப்பதன் மூலம்தான், தங்கள் சந்தர்ப்பவாதத்தை மூடிமறைக்கின்றனர்.

 

இங்கு அந்தக் குறிப்பு மிகத் தெளிவாக

 

1. பாட்டாளி வர்க்கம் ("மார்க்சிய-லெனினியவாதிகள") கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறை குறித்தும்

 

2. வர்க்கப் போராட்டத்துக்கு உதவும் என்றால் தான் ("தேவைப்படும்போது") பயன்படுத்துவது பற்றிப் பேசுகின்றது.

 

இங்கு "மே18" சந்தர்ப்பவாதிகள் இதற்கு முரணாகத் தான், தங்கள் சந்தர்ப்பவாதத்துக்கு ஏற்ப பயன்படுத்துகின்றனர். "மே 18" காரர் 1. பாட்டாளி வர்க்க கட்சியல்ல 2. வர்க்கப் போராட்டத்துக்கு பயன்படும் ("தேவைப்படும்போது") வர்க்க கட்சி எதுவும் இலங்கையில் இருக்கவில்லை.

 

இப்படிப்பட்ட நிலையில் இவர்கள் மார்க்சியத்தை பயன்படுத்துவது என்பது மோசடித்தனமானது. தம் நோக்கத்துக்கு ஏற்ப அதைத் திரித்து புரட்டுவது தான். சரி இவர்கள் யார்? மே 18 இன் பின் அதன் தொடர்ச்சியாக மே 18 ஆக திடீரென அறிவித்துக்கொண்டவர்கள். இதை எழுதும் ஏகலைவன், கடந்தகாலத்தில் மார்க்சியத்தை பயன்படுத்தித்தான் புலிக்குப் பின் வழிகாட்டியவர். இன்று "மே 18"யாக புலியின் தொடர்ச்சியாக தம்மைப் பிரகடனப்படுத்திக் கொண்டவர்கள், மார்க்சிய-லெனியவாதிகளுக்கு வழிகாட்டிய ஒரு தத்துவத்ததை தமது நோக்குக்கு ஏற்பத் திரிக்கின்றனர். தேசியத்துக்கு ஏற்ப மார்க்சியத்தை பயன்படுத்தி மக்களை ஏமாற்றவும், மார்க்சியத்தை தம் சந்தர்ப்பவாதத்துக்கு ஏற்பவும் திரிக்;கின்றனர்.

 

இங்கு "முதலாளித்துவப் பாராளுமன்றங்கள்" என்று சீனக் கம்யூனிஸ்கட்சி குறிப்பாக்கி குறிப்பிடுவது, அவை அல்லாத பாராளுமன்ற வடிவங்களும் நிலவின என்ற சரியான அரசியல் எடுகோளில் இருந்துதான். ஜனநாயகப் (முதலாளித்துவ) புரட்சி நடைபெறாத நாடுகளின் பாராளுமன்றங்கள், முதலாளித்துவப் பாராளுமன்றங்கள் அல்ல. இப்படி உண்மையிருக்க, ஒரு குறித்த சமூகப் பொருளாதார நிலையை அனைத்துக்குமானதாக பொதுமைப்படுத்தி, இதில் ஒரு "பொதுப்புத்தி" மட்டத்தை உருவாக்கத்தான், "மே 18" மார்க்சியத்தைத் திரிக்கின்றனர். பாராளுமன்றங்கள் அனைத்தும் ஒன்று என்ற "பொதுப்புத்தி" மட்டம் தான், "மே 18" முன்தள்ளும் அரசியல் புரட்டாகும். புலித் தேசியம் முதல் எல்லாத் தேசியமும் ஒன்று என்ற அதே "பொதுப்புத்தி" மட்டம் தான், இங்கும் மீளக் கையாளப்படுகின்றது. இதன் மூலம் தான், அரசியல் சர்ந்தர்ப்பவாதம் புகுத்தப்படுகின்றது.

 

தொடரும்

 

பி.இரயாகரன்

18.12.2010

1.பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 1