Language Selection

மே 18 குழு தன்னை மே 18 இன் தொடர்ச்சியாக பிரகடனம் செய்தபடி, மார்க்சியத்தை திரித்துப் புரட்டுகின்றது. அவர்களின் கடந்தகாலம் போல், மீண்டும் முன்தள்ளும் புலியிசம் இம்முறை அவியாது. இதனால் தம்மை தற்காத்துக் கொள்ள முனைகின்றனர். "எதிர் தரப்பார் மீது வசைபட" முனைவதாகவும், "பொதுப் புத்தி மட்டத்திலான வாதங்களினால் இட்டு நிரப்ப" முனைவதாகவும், தம்மீதான விமர்சனங்கள் மீது முத்திரை குத்துகின்றனர். இதன் மூலம் தங்கள் கடந்தகால அரசியல் நடத்தைகளை மற்றவர்கள் பேசாது இருக்கவும், அதன் மேல் விமர்சனம் சுயவிமர்சனம் செய்யாது மறுபடியும் சமூகத்தை தொடர்ந்து ஏமாற்றவும் முனைகின்றனர்.

 

 

சரி இந்த ஏகலைவன் உயிர்ப்பிலும், தமிழீழ புலிக் கட்சி மூலமும், தமிழ்மக்களின் உரிமைப் போராட்டத்தை, தங்கள் "பொதுப்புத்தி" மட்டமல்லாத வழியில் எப்படி கடந்தகாலத்தில் நடத்தினர்? ஆம் இடதுசாரியத்தின் பெயரில், வலதுசாரிய புலிக்கு பின்னால் வழிகாட்டி இடதுசாரியத்தை புலியிசமாக சிதைத்தவர்கள். இன்று "புதியதிசைகள்" உள்ளிட்ட கோஸ்டி கூட, தமிழீழக்கட்சியைத் தொடர்ந்து புலிக்கு பின்னால் நின்றவர்கள்தான். இவர்கள் இன்று உருவான புதுப் புலியல்ல. அன்று இப்படி இவர்கள் புலிக்கு பின்னால் போய், வரலாற்றில் காணாமல் போனவர்கள், மே 18 இன் பின் அதன் தொடர்ச்சியாக மே 18 ஆக தம்மை திடீரென அறிவித்துக் கொண்டவர்கள் தான், தேர்தலில் பங்குபற்றுவது, சர்வதேச மாநாட்டு பகிஸ்கரிப்பு பற்றி எல்லாம் பேசுகின்றனர்.

 

இந்த வகையில்

 

1. உயிர்ப்பு நடத்திய கடந்தகால தத்துவ விவாதம் மேல் நாம் விவாதம் செய்து, அந்த அழிவு அரசியலை அம்பலம் செய்துள்ளோம். அதற்கு அவர்கள் என்றும் பதிலளித்தது கிடையாது. அவர்கள் மாற்றுக் கருத்துக்கு பதிலளித்து விவாதம் செய்வதாக கூறுவது பொய்.

 

2. கடந்தகாலத்தில் மார்க்சியமல்லாத புலி அழிவு அரசியல் மூலம் இடதுசாரியத்தை அழித்த பின்னணியிலும், புலிக்கு ஆள்காட்டி வேலை செய்தது வரையான எதையும் இன்றுவரை விமர்சனம், சுயவிமர்சனம் செய்தது கிடையாது. இதைக் கோரும் போது அதை "வசைபாடல்" என்று முத்திரை குத்துகின்றனர்.

 

இப்படி கடந்தகால தமது புலி அழிவு அரசியலையும், திடீர் சந்தர்ப்பவாத அரசியலையும், மூடிமறைக்க இன்று, மீண்டும் திடீர் தத்துவ விவாதம் என்கின்றனர். அதேநேரம் அவர்கள் கூறுகின்றனர் "தமது எதிர்தரப்பாரும் மதிக்கத்தக்க திட்டத்தை வரைந்து முன்வைப்பதற்கான தைரியம் எம்மிடம் கிடையாது. மாற்று கருத்துள்ளவர்களை வென்றெடுப்பதற்காக கருத்து பலம் கிடையாது" என்கின்றனர். பாராளுமன்றத்தைப் பற்றி அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒன்றை, விவாதமின்றியே பாராளுமன்றத்தை பயன்படுத்த வெளிக்கிட்டவர்கள்தான், "தமிழ் சூழலில் ஒரு விவாதத்திற்கு ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையையே" இல்லை என்பது வேடிக்கையானது. ஏன் சர்வதேச மாநாட்டை பற்றி விவாதமின்றியே, புலிக்கு பின்னால் நின்று நிராகரிக்க கோரியவர்கள் தான் இவர்கள். தாங்கள் நினைப்பதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதை "..பொதுப் புத்தி மட்டத்திலான வாதங்களினால் இட்டு நிரப்ப முனைகின்றனர்" என்கின்றவர்கள் தான், இன்று மறுபடியும் கதையளக்க முனைகின்றனர். இங்கு அனைவரும் மதிக்கத்தக்க சந்தர்ப்பவாத திட்டம் என்பது, பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் திட்டமல்ல. உதாரணமாக புலிகள், அரசு, கூட்டணி என்று வலது முதல் இடதுகள் அனைவரும் மதிக்கும் திட்டத்தை கோருவது வலதுசாரி திட்டம் தான். அதுதான் மே 18 ஆல், "மே 18" ஆனது.

 

அனைத்தும் இன்று விவாதத்துக்குரியதாக கூறுபவர்கள் தான், தேர்தல் பற்றி தாங்கள் எடுத்த சந்தர்ப்பவாத முடிவை நியாயப்படுத்த, பாராளுமன்றத்தை பயன்படுத்தும் போலி விவாதத்தை முன்தள்ளுகின்றனர். ஏற்கனவே தாங்கள் முன்கூட்டியே எடுத்த முடிவைப் பற்றி, ஒரு குதர்க்கமான விவாதம். முடிவை எடுப்பது பற்றி ஒரு விவாதமல்ல. எதைப் புரட்டி எதை திரித்து தாங்கள் முன்பு எடுத்த முடிவை முன்வைக்கின்றனர் என்பதைப் பார்ப்போம்.

 

முதலில் நாங்கள் பாராளுமன்றத்தை பயன்படுத்த முடியாது என்று எங்கும் கூறவில்லை. நீங்களும், புதிய ஜனநாயகக் கட்சியும் பாட்டாளி வர்க்கத்தின் நலன் அல்லாத தளத்தில் பாராளுமன்றத்தை பயன்படுத்துவதாக கூறிய அரசியல் புரட்டைத்தான் மறுத்து எழுதி இருக்கின்றோம். பாராளுமன்றத்தை பயன்படுத்துவது பற்றி நாம் முன்பு எழுதியிருக்கின்றோம். உதாரணமாக நேபாளத்தில் மாவோயிஸ்ட்டுகள் பாராளுமன்றத்தை பயன்படுத்தியதை, நாங்கள் சரியானது என்று ஆதரித்து எழுதியுள்ளோம். நீங்கள் விமர்சித்த ம.க.இ.க வும் கூட அதை ஆதரித்து எழுதியுள்ளது. ஆகவே பாராளுமன்றத்தை பாட்டாளி வர்க்கம் பயன்படுத்த முடியாது என்று நாங்கள் கூறுவதாக நீங்கள் கூறுவது, உங்கள் பாட்டாளி வர்க்கமல்லாத நிலையை மூடிமறைக்கும் அரசியல் தந்திரம்.

 

இப்படி மூடிமறைக்கும் மே 18 இன் சந்தர்ப்பவாத அரசியலை நியாயப்படுத்த, ம.க.இ.க பற்றி எழுதுகின்றதை முதலில் பார்ப்போம். "..பொதுப் புத்தி மட்டத்திலான வாதங்களினால் இட்டு நிரப்ப முனைகின்றனர். உதாரணமாக ம.க.இ.க வின் "தேர்தலை புறக்கணி, புரட்சி செய்" என்ற பிரசுரத்தை எடுத்துக் கொள்வோம். இது முழுக்க முழுக்க முதலாளித்துவ அரசியல் வாதிகளது ஊழல்கள் மோசடிகள் பற்றிய விபரணைகளினால் நிறைந்து இருக்கின்றது" என்று விமர்சிக்கின்றனர். இது உலகெங்கும் உள்ளது, எனவே நாங்களும் தேர்தலில் பங்கு கொள்ள முடியும் என்கின்றனர். ஒரு தேர்தல் மீதான பகிஸ்கரிப்பு சார்ந்த குறித்த பிரசுரத்தை (இதுவும் கூட தேர்தலை பயன்படுத்தும் அரசியல் நடைமுறைதான்), தங்கள் குறுகிய நிலைக்குள் வைத்து திரித்துப் புரட்டி தங்கள் "பொதுப் புத்தி"க்குள் காட்டுவதாகும். ம.க.இ.க கூட தேர்தலை பாட்டாளிவர்க்கம் பயன்படுத்த முடியும் என்பது தான், அவர்கள் அரசியல் நிலை.

 

இந்த வகையில்

 

1. தேர்தலை புறக்கணி என்று கூறி கிளர்ச்சி, பிரச்சாரம் செய்வதும் கூட தேர்தலை பாட்டாளி வர்க்கம் தன் வர்க்க நலனுக்கு பயன்படுத்துவது தான்.

 

2.தேர்தலில் பங்கு கொண்டு அம்பலப்படுத்துவது சரியானது என்பதையும் கூட அவர்கள் ஏற்று இருக்கின்றார்கள். இதன் மூலம் பாட்டாளி வர்க்கத்தின் குறைந்தபட்ச நலன்களை அடைய முடியும் என்றால், பங்கு கொள்வதை சரி என்கின்றார்கள். அவர்களின் கட்சி ஆவணமான "இந்தியப் புரட்சியின் அரசியல் பாதையும் இராணுவப் பாதையும்" (இங்கு நாம் பயன்படுத்தும் ஒரு சில நூல்களை இதை அழுத்திப் பார்க்க முடியும்) என்ற நூலில் ம.க.இ.க ".. பல ஸ்தாபன வடிவங்களையும் பல போராட்ட வடிவங்களையும் பொதுவுடமைக் கட்சி வடிக்கும். ஆயதப் பேரெழுச்சி என்ற யுத்ததந்திரத்தின் கீழ் மட்டுமே புரட்சிக்குத் தயாரிப்பதற்கான ஒரு போராட்ட வடிவம், போராட்ட முறைதான் நாடாளுமன்றத்தில் பங்கேற்பது, அதாவது குறிப்பிட்ட போர்தந்திரத்தை நிறைவேற்ற தேர்தலில் கலந்துகொள்வதும் நாடாளுமன்றத்தில் பங்கேற்பதும் யுத்ததந்திர நலன்களுக்கு உதவுமாயின் அந்தப் போராட்ட முறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம், அவ்வளவுதான் பயன்படாது என்று தெரியும் பட்சத்தில் அதை நிராகரித்து விட வேண்டும்…." பக்கம் 91. இதுதான் ம.க.இ.க.வின் அரசியல் நிலை. இதை திரித்துக் காட்ட முடியாது.

 

ம.க.இ.க தேர்தலை பங்கு கொள்ளாது நிராகரிப்பது, இந்த அரசியல் அடிப்படையில்தான். மாறாக "மே 18"யின் மார்க்சியமல்லாத நிலைக்கு ஏற்ப, பாராளுமன்ற வடிவத்தை திரித்து புரட்டிய சந்தர்ப்பவாதத்தின் பின் வால் பிடிக்கும் நிலையில் ம.க.இ.க இல்லை. இதனால் ம.க.இ.க.வின் குறிப்பானதை எடுத்துக் காட்டி திரிக்கின்றனர். ம.க.இ.க தேர்தலை பயன்படுத்துவதை நிராகரிக்கவில்லை. அது மார்க்சிய லெனினிய மாவோசிய சிந்தனையின் அடிப்படையில், தேர்தல் பற்றிய தெளிவுடன் அதை அணுகுகின்;றது. இது தான் எங்கள் நிலையும் கூட. நேபாளத்தில் பாட்டாளி வர்க்கத்தின் நிலை சரியானது என்பதை, நாங்கள் தெளிவுபடுத்தியவர்கள். பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்கு அவை உதவுகின்றது என்ற அடிப்படையில்.

 

இங்கு மே 18 ம.க.இ.க பற்றிய தன் கூற்றில், அடிப்படையான அரசியல் கோட்பாட்டுத் திரிபை புகுத்துகின்றது. "முதலாளித்துவ அரசியல் வாதிகளது" என்ற கூற்று தான் அது. முதலாளித்துவமல்லாத நாடுகளையும் அதன் பாராளுமன்ற வடிவங்களையும், முதலாளித்துவ நாடுகளையும் அதன் பாராளுமன்ற வடிவங்களையும் ஒன்றாக காட்டுவது. வேறுபட்ட நுட்பமான கூறுகளையும், வேறுபட்ட ஆளும் வர்க்கங்கள் மற்றும் வர்க்கப் போராட்டங்களை மறுத்து, அதை பொதுவான முதலாளித்துவமாக திரித்துக் காட்டுவதாகும். முதலாளித்துவ நாடுகளையும், முதலாளித்துவமல்லாத நாடுகளின் வேறுபாட்டையும் மறுத்ததலாகும். இது யுத்த தந்திரத்திலான வேறுபாட்டையே இது மறுக்கின்றது.

 

தொடரும்

 

பி.இரயாகரன்

16.12.2010

1.பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 1