Language Selection

ஆம் முடியும். அனைத்து போராட்ட வடிவங்கள் போல்தான் இதுவும். எப்போது, எங்கு, எந்த நிலையில் பயன்படுத்துவது என்பது பொதுவானதில் குறிப்பானது. குறிப்பான சூழலை வர்க்கப் போராட்டத்தில் இருந்து பிரிக்கின்ற போதுதான், சந்தர்ப்பவாதமும் திரிபுவாதமும் அரசியலாகி விடுகின்றது. நடைமுறையில் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்கும் வர்க்கக் கட்சி ஒன்று தான், பாராளுமன்றத்தை தன் வர்க்கப் போராட்டத்துக்காக பயன்படுத்துவது பற்றிய ஒரு அரசியல் முடிவை எடுக்க முடியும். இதுவல்லாத அனைத்தும், வர்க்க விடுதலைக்கு குழிபறிக்கின்ற அரசியல் புரட்டுகளாகும்.

முதலாளித்துவ நாடுகளின் ஆயுதப் போராட்ட வடிவமும், முதலாளித்துவமல்லாத நாடுகளின் ஆயுதப் போராட்ட வடிவமும் வேறுபட்டது. ஓரே மாதிரியானதல்ல. இங்கும் குறிப்பானது என்பது சிறப்பானது. இது போல்தான் பாராளுமன்றத்தை பயன்படுத்துவது பற்றிய கருதுகோள்களும். ஜனநாயக (முதலாளித்துவ) புரட்சி நடந்த நாடுகளில் ஆயுதப்போராட்டம், அதன் சட்டபூர்வமான ஜனநாயக தன்மையினால் போராட்டத்தின் வளர்ச்சியின் இறுதியில் வருகின்றது. ஜனநாயக (முதலாளித்துவ) புரட்சி நடக்காத நாட்டில், ஆளும் வர்க்கம் அதற்கு முரணாக இருப்பதால், அதன் ஜனநாயகமற்ற சட்டவிரோத பாசிச தன்மையால், ஆயுதப் போராட்டம் ஆரம்பம் முதலே இருந்து வரும். இது பொதுவானது. இதில் விதிவிலக்கு என்பது, குறிப்பானது. அதாவது வர்க்கப் போராட்டத்தின், குறிப்பான வர்க்க நலன் சார்ந்தது. பாராளுமன்றத்தை புரட்சிக்கு பயன்படுத்துவது என்பது, ஆயுதப் போராட்டத்தைப் புரட்சிக்கு பயன்படுத்துவது போன்றதுதான். சட்டபூர்வமான ஜனநாயகத்தின் தன்மைதான், பாராளுமன்றத்தை வர்க்கப் போராட்டத்துக்கு பயன்படுத்துவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கின்றது.

உலகளவில் ஜனநாயகப் புரட்சி நடந்த நாடுகள், நடக்காத நாடுகள், வேறுபட்ட அரசியல் யுத்ததந்திரத்தை இயல்பிலேயே கொண்டிருக்கின்றது. இது அனைத்தையும் தளுவியது. இந்த வகையில் ஜனநாயக (முதலாளித்துவ) புரட்சி நடந்த நாடுகளின் பாராளுமன்றங்களை பாட்டாளி வர்க்கம் பயன்படுத்தும் போது, எப்போதும் விதிவிலக்காகத்தான் நிராகரிக்கப்படுகின்றது. ஜனநாயகப் (முதலாளித்துவ) புரட்சி நடைபெறாத நாடுகளில், பாராளுமன்றங்களை பாட்டாளி வர்க்கம் பயன்படுத்த முடியாத போது, எப்போதும் விதிவிலக்காகத்தான் அதைப் பயன்படுத்த முடியும். இதுதான் பாட்டாளி வர்க்கத்தின் பொதுவான அரசியல் யுத்ததந்திரம்.

ஜனநாயகப் புரட்சி தான், முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயக வடிவத்தைக் கொண்டு வந்தது. இந்த வகையில் ஜனநாயகத்தின் விரிவான தன்மைதான், அதனைப் பயன்படுத்துகின்ற அரசியல் எல்லையைத் தீர்மானிக்கின்றது. இங்கு ஜனநாயகத் தன்மை என்பது, உள்ளடக்க ரீதியாக பொருளாதார சமூக பண்பாட்டு அரசியல் கூறாலானது. ஜனநாயகப் புரட்சி என்பது தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் நலனை உள்ளடக்கிய வர்க்க புரட்சியாகும். ஜனநாயகப் புரட்சி நடைபெறாத நாடுகளில், ஜனநாயக புரட்சிக்குரிய தேசிய முதலாளித்துவ வர்க்கத்தினது அரசியல் பொருளாதார ஜனநாயகக் கூறு மறுப்புக்கு உள்ளாகின்றது. இங்கு நிலப்பிரபுத்துவ தரகுமுதலாளித்து வர்க்க ஆட்சி என்பது, தேசிய முதலாளித்துவ வர்க்க நலனுக்கும் அதன் ஜனநாயகத் தன்மைக்கும் எதிரானது. இதனால் இங்கு ஜனநாயகம் என்பது சமூக பொருளாதார பண்பாட்டுத் தளத்தில் இருப்பதில்லை, மாறாக கவர்ச்சி காட்டும் எல்லையில் அரசியல் பூச்சாக பயன்படுகின்றது.

இந்த நிலையில் மே 18காரர் அண்மையில் இலங்கைத் தேர்தலில் பங்கு கொள்ளக் கோரி கூத்தாடினர். இதன் போது, வர்க்கப் போராட்டத்தை நிராகரிக்கின்ற, அதன் மார்க்சியமல்லாத புலித் தேசியத்தை முன்னிறுத்தினர். அவர்களின் இந்த அரசியல் கூத்தை நாம் அம்பலப்படுத்தினோம். இதை மூடிமறைத்து திரிக்க, பாராளுமன்றங்களை பாட்டாளி வர்க்கம் பயன்படுத்த முடியாது என்று நாங்கள் கூறுவதாக கூறி, ஒரு அரசியல் புரட்டை முன்வைத்து ஒரு விவாதத்தை நடத்தியிருக்கின்றனர். இதே அரசியல் அடிப்படையில் நின்று, ம.க.இ.க.வின் தேர்தல் பற்றிய அரசியல் நிலைப்பாட்டையும், மற்றும் இந்திய நக்சல்பாரி இயக்கங்களின் பொது நிலைப்பாட்டையும் சாடுகின்றனர்.

முதலில் மே 18காரர் "மார்க்சியவாதிகளா" அல்லது "மே 18" தொடர்ச்சியாக தம்மை அறிவித்தவாறான புலித்தேசியவாதிகளா? இதை நாம் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். இவர்கள் மார்க்சியவாதிகளல்ல. தங்கள் மே 18 இல் தொடர்ச்சியாக அறிவித்துக்கொண்ட புலி நிலைக்கு ஏற்ப, மார்க்சிய மேற்கோள்களைப் பயன்படுத்துகின்றனர். உண்மையில் மார்க்சியமல்லாத தங்கள் நிலைக்கு ஏற்ப, மார்க்சிய மேற்கோள்களை திரித்தும் புரட்டியும் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் தங்கள் புலமை சார்ந்த அரசியல் மோசடியையே இங்கு முன்தள்ளுகின்றனர். இதைத்தான் 1980 களில் பெரும்பாலான தமிழ்தேசியம் பேசிய இயக்கங்கள், மக்களை ஏய்த்து போராட்டத்தை சிதைக்க மார்க்சியம் பேசின.

மே 18 தொடர்சியாக தம்மை முன்னிறுத்தி மே 18 கோஸ்டி "பாராளுமன்றமும் புரட்சியாளரும்" என்ற தலைப்பில் 75 பக்கம் கொண்ட விவாதம் ஒன்றை, வியூகம் 2 இல் செய்துள்ளது. இது நாங்கள் பாராளுமன்றத்தை பயன்படுத்த முடியாது என்று கூறுவதாகக் கூறித்தான், தங்கள் விவாதத்தை பின்பக்கமாக நடத்தியுள்ளனர்.

உண்மையில் விடையத்தை திசைதிருப்பி, லெனின் மேற்கோள்கள் மூலம் அள்ளித்தெளிக்க முனைகின்றனர். மே 18 காரர்கள் 2010 இல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பங்கு கொள்வது சரி என்று கூறி, தேர்தலில் சந்தர்ப்பவாதிகளாக நிலையெடுத்தபோது அதை நாம் அம்பலப்படுத்தினோம். அதை மூடிமறைக்கவே, நாம் பாராளுமன்றத்தை பயன்படுத்த முடியாது என்று கூறுவதாக கூறி, இட்டுக்கட்டுகின்றனர். இக்காலத்தில் நாம் புதிய ஜனநாயகக் கட்சிக்காரரின் தேர்தல் பற்றிய சந்தர்ப்பவாத நிலைப்பாட்டையும் அம்பலப்படுத்தினோம். 40 வருடமாக வர்க்கப் போராட்டத்தை முன்வைத்துப் போராடாத, அதன் பாராளுமன்றதனத்தை அம்பலப்படுத்தினோம். பாட்டாளி வர்க்க நலனுக்கு உதவாததும், வர்க்க கட்சியல்லாத கூட்டமும், பாராளுமன்ற சாக்கடை அரசியலில் ஈடுபடுவதை அம்பலப்படுத்திய போது, அதை பித்தலாட்டங்கள் மூலம் நியாயப்படுத்த முனைகின்றனர். பொது உண்மைகளைத் திரித்துப் புரட்டிய, ஒரு நீண்ட விவாதத்தை முன்தள்ளிவிடுகின்றனர்.

இதை மூடிமறைக்க இதை எதிர்ப்பவர்களின் "தத்துவ வறுமை" தான் காரணம் என்கின்றனர். இதற்கு காரணம் விவாதமல்லாத அனைத்தும் என்று கூறிக்கொண்டு, எமது தத்துவ நிலைப்பாடு மீது விவாதம் நடத்துகின்றனர். "தமிழ் சூழலில் ஒரு விவாதத்திற்கு ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையையே இல்லாமற் செய்துள்ளனர்" என்று கூறுவது, இங்கு நகைப்புக்குரியதாகின்றது. எம் தத்துவம் மீது விவாதம் நடத்திக்கொண்டு தான், இதையும் முரண்பாடாக சொல்லுகின்றனர். இந்த மோசடியை முன்தள்ளும் ஏகலைவன் வேறு யாருமல்ல. இவர் உயிர்ப்பில் இதே போன்று விவாதத்தை முன்வைத்த போது, அதை நாங்கள் மட்டும் வரிவரியாக எடுத்து விமர்சித்தோம். என்றும் இதற்கு பதிலளித்தது கிடையாது. மூடிமறைத்த விவாதமற்ற விவாதம் மூலம், புலியாக புலிக்கு வக்காலத்து வாங்கும் புலிக் கூட்டமாக சிதைவுக்கு வழிகாட்டினர். இப்படி அது புலியின் ஆள்காட்டி அமைப்பாகியது. அன்று எமது விமர்சனத்துக்கு பதில் தரமுடியாத இந்தக் கூட்டம் தான், "தமிழ் சூழலில் ஒரு விவாதத்திற்கு ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையே" இல்லை என்று, இன்று கூறுகின்றது. இவை எல்லாம் ஊர் உலகத்தை ஏமாற்றுவதுதான். இதே ஏகலைவன் கடந்தகாலத்தில் தங்கள் கருத்து சார்ந்து உருவான அழிவு அரசியல் விளைவுக்கு, இன்று வரை அரசியல் ரீதியாக பொறுப்பு ஏற்றது கிடையாது. எந்த சுயவிமர்சனமும் செய்ததும் கிடையாது. புனைபெயரில் இருந்து கொண்டு, சமூகத்துக்கு பொறுப்பு சொல்லவேண்டிய எந்த பொறுப்புணர்வுமின்றி, அழிவு அரசியலை முன்தள்ளியவர்கள். புலிக்கு பின் செல்லுமாறு இடதுசாரிய அரசியலை திரித்து வழிகாட்டி, இடதுசாரியத்தை தம்பங்குக்கு உள்ளிருந்து அழித்தவர்கள். இது தான் இந்த மே 18 ஏகலைவனின் கடந்தகாலம். மே 18 தொடர்ச்சியாக, மீண்டும் தம்மை திடீரென அறிவித்துக்கொண்டு வருகின்றனர். இவர்களின் அரசியல் நோக்கம் என்ன? யாருக்காக வேலை செய்கின்றனர் என்ற கேள்வி இங்கு இயல்பாக எழுகின்றது.

இந்த ஏகலைவன் உள்ளடங்கிய உயிர்ப்பு மற்றும் தமிழீழக் கட்சி மூலம், புலிக்கு குடைபிடித்து இடதுசாரியத்தை தம் அரசியல் பித்தலாட்டம் மூலம் புதைகுழிக்கு அனுப்பியவர்கள். இன்று திடீரென மே 18 ஜ தொடர்சியாக காட்டிக்கொண்டு மே 18 இன் பின் மீண்டும் மிதக்கின்றனர். கடந்தகால நிகழ்வுக்கு பொறுப்பு ஏற்க மறுத்து, மறுபடியும் தங்கள் சீரழிவு அரசியலை முன்தள்ள விவாதம் என்கின்றனர். மீண்டும் தங்கள் சந்தர்ப்பவாத அழிவு அரசியலைத் தான், இதன் மூலம் திணிக்கின்றனர்.

தொடரும்

பி.இரயாகரன்

15.12.2010