துள்ளித் திரியும் பருவமதில் என்
துடுக்கடக்கிப் பள்ளிக்கனுப்பி வைத்த
நீ பாதகன் தான் என் ஜயாவே
பள்ளிவேலிக்குள்ளும் பாதகரைத்
பேராசான் பதவியிலே தூக்கிவைத்து
கல்விக்கு என்னைக் காணிக்கையாய்
மேய்ந்தெடுக்கும் கோவணங்கள்
என் அன்னைக்கும் ஓர்நாள் அழைப்பு வைக்கும் - அப்போ நீ
வெள்ளைக் கொடியோடு இழுத்துப் போ அவளை !
வேறென்ன செய்தாய் நீ
மார்தட்டி நின்றாயா? மனுநீதி கேட்டாயா?
என் கூந்தல் அள்ளிக் கொஞ்சி விளையாட
காலுக்கு கொலுசோடு வாவென்று
அழைப்பு வைத்தான் கோவேந்தன்
நீ வஞ்சித்து விட்டாயே என் அப்பனே
நெஞ்சம் உனக்கில்லையா?
இறுகப் பூட்டிய சமுதாய இதயத்தில்
எம்மை மட்டுமே நிந்திக்க நியாயங்கள்- அதனால்
தூக்குக்கயிற்றில் துயரங்கள் தொலைக்கும்
என் சோதரிகள் என்றைக்கு விழிப்பர்
குருவுக்கு முந்தானை விலத்தினாற்றான்
பெறுபேறு கல்வியிலே - ஆனால் நீ
என் அப்பனே உன் சந்நிதியில் என்
கல்விக்கு விலை கருத்தரிப்பேயானாலும்
உன்னைப் போல் தந்தையர்கள்
"மானம்" காக்க, மரித்தார்கள் என் சோதரிகள்.
உறங்கு உறங்கு உனக்கென்ன இழவு
துள்ளித் திரியும் பருவமதில் என்
துடுக்கடக்கிப் பள்ளிக்கனுப்பி வைத்த
நீ பாதகன் தான் என் ஜயாவே