இப்போ சிலருக்கு
பொன் மாலைப் பொழுது.
சாய்மனைக்கதிரை
கட்டில் சுவர்
சுற்றுச் சூழ
சுதந்திரக் காற்று.
விட்டுவைக்காமல்
வேட்டுத் தீர்க்கும்
கரங்களை கொஞ்சிக்
காலடி போற்றிய
காலங்கள் மாற்றம்.
அன்று
மவுனத்தில் திளைத்து
மனச்சாட்சிகள் கொன்று
வேங்கையின் நிழலுக்குள்
சுகமாய் விருந்துகள் உண்டனர்.
இன்று சிங்கக் காட்டினுள்
இனியொரு வேட்டைக்கோ
இடைஞ்சல் இல்லையாம்.
ஆயினும்
சாமரம் வீச யாரும்
பாமரர்
இல்லையாம்.
வழிகளில் நெடுக
வார்த்தைத் தோரணம்
தேவையாம் தேவையாம்.
கற்களும் முட்களும்
பாதம் வலிக்குதாம்.
காது பொடிபடும்
ஓநாய்கள் ஊளை
உறக்கத்தைக் கெடுக்குதாம்.
புரட்சிக்கு சேதம்
விளைப்பவர் உருவம்
கனவில் வந்து
அச்சம் தருவதால்
விபீசண உறக்கம்
விழித்தவர் எழுந்தனர்.
சாய்மனைக்கதிரை
உருளு நாற்காலி
கட்டில் படுக்கை
கண்டன அறிக்கை
அதிகாரம் உரிமை
கடமை கொமிசார் என்று
தூக்கக் கலக்கமாய்
இருப்பதாய் நடித்து
வாயில் வந்த
வார்த்தைகள் கொண்டு
மருட்சியில் பிதற்றினர்.
புரட்சியின் பேரால்
வீணாய் மற்றவர்
வம்புகள் தேடி
கொமிசார் பட்டம்
கொள்வதில் குறியாய்
இருப்பவர் சிலரால்
உறவுகள் அறுந்து
பிளவுகள் பரந்து
விடுதலை நாட்டம்
விலகியே போச்சுதாம்.
அண்ணாந்து படுத்து
துப்பிய உமிழ்நீர்
வேறெவர்
முகத்தினில்
விழுந்து வழியும்?
தன்னைத் தானே
பொருத்திப் பார்த்து
வடித்த கவிதையில்
அவர் தான் நாயகன்.
தலைப்பைப் பாருங்கள்
புரட்சிக்கான மெய்நிகர் கொமிசார் : சி.சி
வசேகரம்