எங்கள் ஈரற்குலைகளை
அறுத்தவர் இரத்தம் தருவார்.
அதையுன் பேனாவுள் நிரப்பு.
உனக்கென்ன தமிழுக்கா பஞ்சம்
நெஞ்சை உலுக்கும்
வார்த்தைகள் பொறுக்கு
கவிதைகள் தொகுக்க
கைவிரல் சொடுக்கி
இரக்கம் அவர்க்கு வரும்வரை
சிவப்பாய்
எழுது! எழுது!!
இந்திய எஜமான்
கால்களை நனைக்க
இன்னுமா வேண்டும்
இரத்தம் உனக்கு
கூட்டிக் கொடுக்கும்
கூட்டமைப்புக்கு
இருக்குதாம் இன்னும்
தமிழ் தேச
விடுதலை நெருப்பு!!
விழித்தெழு தமிழா
இழப்புகள் எல்லாம்
விதைப்புக்கள் தானே
உனக்கு விடுதலை இருக்கு இருக்கு
சூரியத்தேவன்
சொன்னான் இல்லையா?
வீறு கொண்டெழு
அணிதிரள்
இன்னொரு படையேன்
கூட்டமைப்பே தான்
நம் கொடுவாள் படையணி.
இந்தியா தன்
தவறுகள் களைந்தெமை
இறகுக்குள் காக்கும்.
உற்று நோக்கின்
மகிந்த கூட
இந்திய வழியில்
இயங்கியபடியால்
எதிரியுமல்ல.
எழுது எழுது
கவிதைகள் எழுது
மேற்படி எழுது!!
எங்கள் செந்நீர்
தந்தோம்
நெக்குருக்கும்
வரிகளை அதில்
தோய்த்தெடு!
தொகுத்து வளைத்து
எங்கள் உயிர்வலி
கொண்டு கவிதை
இழைத்து
கூட்டமைப்பின்
கழுத்தில்
சூரியத்தேவனின்
மாலையாய்
செபித்து
விழுத்து!
இந்திய
பிராந்திய
அமெரிக்க
கால்களில்
வழியும்
தேனும்
பாலும்
நக்கு நக்கு
கவிதைகள்
இன்னும் நீ
செப்பு செப்பு!!
எங்கள்
உயிர்த்தீபங்கள்
நாளைய
உங்கள்
காலடிச்
செல்வங்கள்.
தீபச் செல்வன்கள்.
சோபாசக்தியில் வெளிவந்த தீபச்செல்வனுடனான நேர்காணல் தொடர்பானது இக்கவிதை.
நேர்காணலைப் பார்க்க