விஜிதரன் போராட்டமும் விமலேஸ்வரன் நினைவுகளும் : சோதிலிங்கம் நேர்காணல் என்ற இனியொருவின் நேர்காணல் கட்டுரையில் சோதிலிங்கம் மீண்டும் விமலேஸ்வரனைப் படுகொலை செய்துள்ளார். இந்தப் பேட்டியை வழங்கிய சோதிலிங்கம், விமலேஸ்வரன் கொல்லப்பட்டதற்கான காரணம் என்னவாக இருக்கலாம் என்ற கேள்விக்கு அளித்த பதில் விமலேஸ்வரனை புலிகள் கொன்றழித்ததை விட மிகவும் மோசமானது. அவர் கூறும் காரணம் விமலேஸ்வரனை மட்டுமல்ல விமலேஸ்வரன் வரித்துக் கொண்டிருந்த கருத்துக்களையும் சேர்த்துப் படுகொலை செய்துள்ளது. இதனை மறுத்து இனியொருவில் என்னால் பின்னூட்டமும் இடப்பட்டிருக்கின்றது.
அவர் புலிகளை இன்று பூஜிக்கட்டும். ஆனால் அன்று ஈ.பி.ஆர்.எல்.எவ் வினை சார்ந்திருந்த சோதிலிங்கத்தை புலிகள் இந்தச் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குறித்த பாத்திரம் வகித்ததனால் கொன்றழித்திருந்தால் இதே ”தேர்தலில் போட்டியிடலாம் என்ற பயத்தின் நிமித்தமே அவர்கள் கொன்றதாக பேச்சிருந்தது" என்று கருத்துரைப்பது அவர்களுக்கு ஏற்புடையதாக இருந்திருக்குமா?
சோதிலிங்கம் ஈ.பி.ஆர்.எல்.எவ் வினை அன்று சார்ந்திருந்ததால் சிலவேளை தான் தேர்தலில் பங்கு கொள்ள நினைத்திருந்தாரா? தனக்குரித்தான சூழலை விமலேஸ்வரனுக்கும் இழுத்துப் பொருத்தினாரா?
இன்று புலிகளுக்கு வக்காலத்து வாங்கும் நிலையில், விமலேஸ்வரனை மட்டுமல்ல ஏனைய புலிகளின் படுகொலைக்கான காரணத்தையும் அவர் மிகவும் இலாவகமாக புனைந்தே கூறுவார் என்பது தெரிந்தது தான்.
மேற்குறித்த படுகொலைக்கான காரணத்தை நேர்மையைத் தொலைத்துவிட்டு பின்வருமாறு அவர் கூறுகிறார்.
//சோதிலிங்கம்: அன்று மாகாண சபைக்கான தேர்தல்களை இந்திய இராணுவ அதிகாரம் திட்டமிட்டிருந்தது. அவ்வேளையில் விமலேஸ்வரன் போன்றோர் அத் தேர்தலில் போட்டி போடலாம் என்ற என்ற பயம் புலிகளுக்கு இருந்திருக்கலாம். இவ்வாறு ஒரு கருத்துத் தான் அப்போது நிலவியது.//
இதைப் போல ஒரு திட்டமிட்ட நாசூக்கான பொய்யை சோதிலிங்கம் ஏன் கூறுகிறார் என்பது புரியவில்லை.
விமலேஸ்வரனுக்கு தேர்தலில் போட்டியிடும் எந்த எண்ணமும் இருந்ததில்லை. அப்படி இருந்ததாக யாரும் கூறுவார்களாயின் அது விமலேஸ்வரன் தேர்தல்கள் பற்றியும் போராட்டம் பற்றியும் கொண்டிருந்த கருத்துக்களுக்கு முற்றும் எதிரான அப்பட்டமான அரசியல் திசைதிருப்பலாகத்தான் இருக்கமுடியம். இவ்வாறு விமலேஸ்வரன் என்ற போராளியை இப்படி யாரும் காலில் போட்டு மிதித்திருக்க முடியாது.
புலிகள் விமலேஸ்வரன் தேர்தலில் குதிக்கக்கூடும் என்ற பயத்திலேயே விமலேஸ்வரனை கொலை செய்ததாக அப்படிப் பேசப்பட்டதாக போகிற போக்கில் கூறுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். புலிகள் தங்கள் அரசியல் எதிரிகளை, தங்களை ஆட்டம் காண வைத்த ஒரு மாபெரும் போராட்டத்தை அரசியல் அராஜகங்களுக்கு எதிராக நடாத்த துணிவும் வைராக்கியமும் உடையவர்களை அழித்தார்கள் என்பது தான் ஒரேயொரு காரணமே ஒழிய தேர்தலில் விமலேஸ்வரன் குதிக்கக்கூடும் என்றதற்காக அழித்தார்கள் என்பது ஒரு கல்லில் இரு மாங்காய் வீழ்த்தும் தந்திரமான பிரச்சாரம். ஒன்று விமலேஸ்வரன் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் என்று ஒன்று இருந்தது என்று கூறுவதன் மூலம் விமலேஸ்வரன் கொண்டிருந்த அரசியல் வெறும் சுயநலம் கொண்ட தேர்தல் நோக்குகளே என்பதான பார்வையை பட்டும் படாமல் விதைப்பது. மற்றையது புலிகளின் கொலைக்கான பாசிசக் காரணங்களை புலிகளுக்கு தத்துவ விளக்கு பிடித்து சோதிலிங்கம் இன்றும் வக்காலத்து வாங்குவது.
புலிகளின் பட்டியலில் விமலேஸ்வரன் பெயர் சேரக் காரணம் தேர்தலில் விமலேஸ்வரன் குதிக்கலாம் எனப் புலிகள் சந்தேகித்ததே எனில் ஏனைய உண்ணாவிரதப் போராளிகளும் அமைப்புக்குழுவில் இருந்தவர்களும் புலிகளால் தேடப்படவும் கொலை செய்யப்படவும் அவர்களும் தேர்தலில் குதிப்பதற்கு இருந்தார்கள் என்ற காரணத்தாலா?
விமலேஸ்வரன் அனைத்துவித மக்கள் விரோதத்துக்கும் எதிராக அணிதிரண்ட மாணவர்களுக்கு ஒரு முன்னோடிப் போராளியாகவிருந்தான், அவர்களை தனது சக போராளிகளோடு இணைந்து அணிதிரட்டினான் என்ற அப்பட்டமான காரணத்தை முழுங்கிவிட்டு, தேர்தலில் போட்டி போடவிருந்ததே காரணமாயிருக்கலாம் என்று கூறி புலிகளின் குரோதத்தை இலாவகமாகவும் மிக நாசூக்காகவும் தந்திரமாகவும் மூடி மறைக்கும் வேலையை சோதிலிங்கம் இங்கு செய்கின்றார்.
இக் காரணத்தை நாவலனும் ஏற்றுக்கொண்டால் நாவலன் போன்றோர் விரட்டப்பட எது காரணம் என்பது புரியவில்லை.
சந்ததியாரை படுகொலை செய்த பின்னால் சந்ததியாருக்கு பெண்களோடு தகாத பாலியல் தொடர்புகள் இருந்ததாக புளட் இயக்கம் பிரச்சாரம் செய்ததற்கும் சோதிலிங்கம் விமலேஸ் கொலைக்கு கற்பிக்கும் காரணமும் வித்தியாசமின்றி ஒத்துப் போகின்றது.
கட்டுரையில் முன்னுரையில் //விமலேஸ்வரன் மட்டுமல்ல ஆயிரக்கணக்கான மக்கள் தவறாக வழிநடத்தப்பட்ட போராட்டத்தின் வன்மத்திற்குப் பலியாக்கப்பட்டுள்ளனர்.//
என்பது ஒரு வரியாக பதியப்பட்டுள்ளது. நாவலனின் கூற்றாயின் அது சரியானது.
சோதிலிங்கம் தன்னையும் இணைத்து தானும் முன்னின்று நடாத்திய போராட்டத்துக்கு தானே குழிபறிக்கும் வகையில் இன்று விமலேஸ்வரனை மீண்டும் படுகொலை செய்திருக்கின்றார் தற்போதைய அவரது எஜமானர்களுக்காக.