Language Selection

சிறி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வினவு தளத்தில் ரதி என்பவர் தொடராய் எழுதும் ”ஈழத்தின் நினைவுகள்”  கட்டுரையின் அங்கம் ஈழம்: நீங்கள் அறியாத பெண்ணின் வலி !  இக் கட்டுரையில் வெளியானவற்றுக்கும் அங்கு விவாதமாய் வரும் கருத்துக்களுக்கும் பதில் தரும் வகையில் நானும் சில நினைவுகளை பதியும் முயற்சியாய் அவர்களது கூற்றுக்களுக்கு பதில் தரும் வகையில் அமைந்த இச்சிறு கட்டுரையின் ஊடாக எனது கருத்துக்களையும் பதிவு செய்து கொள்ளுகின்றேன்.

கூற்று (Keerthana) 1.

 

போர் மாணவர்களைப் பாதித்த இன்னொரு விடயம், மின்சாரம் இல்லாமை. 90 களின் பின் யாழ் மாவட்டத்தில் மின்சாரம் முற்றாக இல்லாமல் போனது. மண்ணெண்ணெய், தேங்காயெண்ணை விளக்குகள்தாம், இரவுகளில் எம்மை ஒளியை நோக்கி நடக்க உதவின. எண்ணெய்கள், கடைகளில் உயா;விலைக்கு விற்கப்பட்டதுடன் அரிதாகவே கிடைத்தும் வந்தது.
ஜாம் போத்தல்களில் தண்ணீரையும்; எண்ணெயையும் கலந்து மேலிருந்து திரியை பொருத்திய விளக்குகள் நீண்ட நேரம் படிக்க உதவின.
பல்கலைக்கழக மாணவா;களும் இதனையே பாவித்தனா;. இந்த நிலமையிலும் மருத்துவாகளும் பொறியியலாளாகளும் பட்டதாரிகளும் உருவாகிக் கொண்டுதான் இருந்தனா;
எந்தப் போர் நிலைமையிலும் யாழ் மாவட்ட மாணவா;களுக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் குறைக்கப்படவில்லை என்பதோடு, இலங்கையின் ஏனைய மாவட்டங்களை விட உயா; வெட்டுப்புள்ளிகள் இந்த மாவட்டத்திற்கே அறிவிக்கப்படுவதும் முக்கிய விடயங்கள்.
ஷெல் வீச்சுக்குள்ளும் விமான குண்டுகளுக்குள்ளும் தமிழ் மாணவாகள் படித்துக் கொண்டிருக்க, ஏனைய மாவட்ட மாணவாகள் சகல வசதிகளுடனும் எந்தவித உயிர்பயமுமற்ற சுகமான வாழ்வுக்குரியவாகளாகவும், போர் பற்றிய எந்தவித தகவல்களோ தாக்கமோ இல்லாதவர்களாக இருந்ததும் மிகவும் குறிப்பிடத்தக்க விடயம்.

 

மறுப்பு

90 களின் பின் மின்சாரம் இன்மையால் பாதிக்கப்பட்ட பின்னாலேயே மண்ணெண்ணெய் தேங்காயெண்ணை விளக்குகளுக்கு அறிமுகமான நீங்கள் எங்கிருந்து வருகின்றீர்கள் என்பது புரிகின்றது.

 

மண்ணெண்ணெய் தேங்காயெண்ணையே தான் எனக்கு அரிவரி வகுப்பிலிருந்து பல்கலைக்கழகம்(1985) வரை பாடப்புத்தகங்களுக்கு நீண்ட நீண்ட- மிக நீண்ட இரவுகளுக்கு ஒளி தந்த கலங்கரை விளக்கங்கள்.
மீன்பிடிப் படகுகளை கரைசேர்ப்பதற்கு கூட இவையே தான் கலங்கரை விளக்கங்கள்.

 

வன்னியின் காட்டுக்குள் இருண்ட குடிசைகளுக்குள் மின்சார வெளிச்சம் இருந்ததல்லவா , சிங்கள குக்கிராமங்களுக்குள் யானைக்காடுகளுக்குள் மின்சாரம் மட்டுமென்ன சொர்க்க வாழ்வே அவர்களுக்கிருந்ததல்லவா ?


யாழ்ப்பாணத்தில் கூட பட்டி தொட்டிகளெல்லாம் மின்சாரம் 90 களுக்கு  முன்னர் இருந்தது. குடிசைகளுக்கு கூட மின்விளக்குகள் இருந்தன. கடலோரக்கிராமங்கள் விவசாயமக்கள் குடிசைகள் தாழ்த்தப்பட்ட மக்கள் எல்லோரும் சகல சௌகரியங்களுடனும் வாழ்ந்தார்கள் அல்லவா?


யாழ் குடாவிலே மின்சாரம் எந்தெந்த கிராமங்களுக்கு வழங்கப்பட வேண்டும் வழங்கப்படக் கூடாது என்ற தீர்மானங்கள் கூட யாழ்  அதிகாரத்தின் கைகளிலிருந்த போது தாழ்த்தப்பட்ட மக்கள் கிராமங்கள் இருளிலேயே மூழ்கியிருந்த வேளை “தழிழுணர்வு” தூக்கத்திலிருந்தது.

 

திருகோணமலை கந்தளாயிலே , பாலையூற்றிலே , முல்லைத்தீவு பாண்டியன்குளத்திலே அம்பாறை அக்கரைப்பற்று பொத்துவில் விவசாயக் கிராமங்களிலே வரண்ட மன்னார் மாவட்டத்திலே எல்லாம் மின்சாரம் தந்த ஒளியில் வைத்தியர்களும் மருத்துவர்களும் புற்றீசலாய் உருவாகிக் கொண்டிருந்தார்கள் என்று சொல்ல வருகின்றீர்கள். யாழ்ப்பாணத்தில் மேல்தட்டு மக்களுக்கு வாய்க்கப்பட்ட வசதிகளின் நிமித்தம்   கிடைத்த உயர் கல்வி வாய்ப்பு தரப்படுத்தலால்  தாழ்ந்த போது மட்டும் அசைந்து போனீர்கள். ஆடிப்போனீர்கள். தமிழுணர்வு அப்போது தான் உங்களைக் பற்றிக் கொண்டது. தமிழா விழித்தெழு கொதித்தெழு என்றவாறாய்  “ ஆண்ட பரம்பரை மீண்டுமொருமுறை ஆள நினைப்பதில் என்ன குறை என்று உணர்ச்சி கவிதைகள் உங்கள் உள்ளங்களை கொள்ளை கொண்டன.

மலையக மக்கள் மத்தியில் வாழ்க்கையோ பூத்துக் குலுங்கியது. அவர்களின் கூடாரங்களிலே மின்விளக்கு ஒளியில் வாழ்க்கையோ இனிமையிலும் இனிமை. கல்வியிலும் சகல வித வசதிகளுடன் அவர்கள் திழைத்திருந்தார்கள். அப்படித்தானே?

 

முழு இலங்கையிலுமே ஒட்டச் சுரண்டப்பட்டு ஒடுக்கப்பட்டு எவ்வித அடிப்படை வசதிகளும் மறுக்கப்பட்டு உரிமைகள் இன்றி வாழ்ந்த மக்களான மலையக  மக்களின் நிலைமையோ பேரினவாதத்தின் கொடுமை. ஆனால் அவையெல்லாம் யாழ்ப்பாண தழிழர்களுக்கு சிறுபான்மை மேலான பேரினவாத ஒடுக்குமுறையாக கண்ணில் விழுந்த தூசியாக கூடப் படவில்லை. அப்போது அவர்கள் “வடக்கத்தையார்” யாரோ வந்தேறு குடிகள் “தோட்டக்காட்டார்”.
ஆனால் யாழ் அதிகாரவர்க்கம் தரப்படுத்தலுக்கு ஆளானபோது இந்த “வடக்கத்தையாரும்”  “தோட்டக்காட்டாரும்” மிகவும் வசதியாக யாழ்ப்பாணத்தாரின் கோரிக்கைகளுக்கு இசைவாக தமிழினம் ஆக்கப்பட்டார்கள் போராட்டத்துக்கு ஆள்பிடிக்க.


பிரஜாவுரிமையின்றி மிகக் கேவலமாக உழைத்து ஓடாய் போன அவர்கள் சந்ததியின் கல்வியைக் கூட சிதைத்தலிலே யாழ்ப்பாண ஆசிரியர்களின் கைவண்ணம் உண்டு.

 

கூற்று (Keerthana) 2

 

ஷெல் வீச்சுக்குள்ளும் விமான குண்டுகளுக்குள்ளும் தமிழ் மாணவாகள் படித்துக் கொண்டிருக்க, ஏனைய மாவட்ட மாணவாகள் சகல வசதிகளுடனும் எந்தவித உயிர்பயமுமற்ற சுகமான வாழ்வுக்குரியவாகளாகவும், போர் பற்றிய எந்தவித தகவல்களோ தாக்கமோ இல்லாதவர்களாக இருந்ததும் மிகவும் குறிப்பிடத்தக்க விடயம்.

 

மறுப்பு

யாழ்ப்பாணத்தில் ஷெல் வீச்சு நடந்தது. ஆனால் தமிழ் மாணவர்கள் தவிர்ந்த ஏனைய மற்றைய மாவட்ட மாணவர்கள் " சகல வசதிகளுடனும் எவ்வித உயிர்ப்பயமுமின்றி சுகமான வாழ்வுக்குரியவர்களாக… " இருந்தார்கள் என்பது யாழ் மாவட்டத்திற்குள் மட்டும் தனது கண்களைப் புதைத்து வைத்திருந்த ஒரு கிணற்றுத் தவளையின் பார்வையாகத்தான் இருக்க முடியும்.

 

தரப்படுத்தலின் ஆரம்ப கால வீச்சுக்குள் அகப்பட்ட மாணவர் சமூகத்தின் அங்கத்தவன் என்ற முறையில் தமிழ் மக்கள் பிரச்சனைகள் யாவும் உயர்கல்வி பிரச்சனை மின்சாரப் பிரச்சனை என்ற சொகுசுக் குஞ்சுகளின் கூற்றை மறுதலிக்கின்றேன்.

 

ஒரு கல்லூரியில் எனக்கு கல்வி மறுக்கப்பட்டது. இது இனரீதியான தரப்படுத்தல் அறிமுகமாவதற்கு முன்பாகவே இருந்த சாதி என்னும் தரப்படுத்தலாகும் என்பதையும் குறித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

 

வகுப்பிலேயே அவமானப்படுத்தப்பட்டு கல்லூரிக்கு செல்வதை நிறுத்தி பிறந்து வளர்ந்த இடத்திலிருந்து குடும்பத்தையே பிடுங்கிக் கொண்டு வேறிடம் செல்லும் மன உளைச்சலை எனது பெற்றோருக்கு இது கொடுத்தது.

 

யாழ்ப்பாணத்தில் காரைநகர் தோப்புக்காடு எனது கிராமம். ஆரம்பப்பள்ளியில் முதலாம் வகுப்பிலிருந்து 7 ம் வகுப்பு வரை கிராமத்து பள்ளியில் சொந்த சாதியைச் சேர்ந்த ஆசிரியர்களால் எந்த புறக்கணிப்புமின்றி எனக்கு கல்வி தித்தித்தது.

 

8 ம் வகுப்பு காரைநகர் இந்துக் கல்லூரியில் ஆரம்பித்த வேளை சாதீயப் பாகுபாடுகள் இழிவான விழித்தல்கள் சக மாணவர்களிடமிருந்து வந்ததில் ஆச்சரியமில்லைத் தான். எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள் என்பதை நாசூக்காகவோ மமதையுடனுமோ கேட்டறிவதன் மூலம் ஒருவருடைய சாதியை அறிந்துகொள்ளும் “நாகரீகம்” யாழ்ப்பாணத்திற்கு சிறப்பானதொன்று. 8 ம் வகுப்பு இறுதியில் வடமாகாண ஆசிரியர் சங்கம் நடாத்தும் மாகாண ரீதியான போட்டிப்பரீட்சையில் கணிதபாடத்தில்  100 க்கு 98 புள்ளிகள் கிடைத்ததனால் எனது பெயரும் ஊரும் பேசப்படும் பொருளான போது உண்மையாகவே ஊக்கம் தந்தவர்களிடையே உதாசீனம் செய்தவர்களும் இருந்தார்கள்.

 

9 ம் வகுப்பில் தாவரவியல் பாடம் நடத்திய முத்துக்குமாரசாமி(வேளாளர்) ஆசிரியர் அன்றைய பாடத்துக்கான ஒற்றுத்தாள் பரிசோதனைக்கு ஒற்றுத்தாளுடன் நான் வராததால் ( காரணம் உண்டு) தன்னுடைய சாதிவெறியை என்னிடம் தீர்த்துக் கொண்டார்.

 

“ நீ  தோப்புக்காடு துறைமுகத்திலே மூட்டை தூக்குகிற சாதி உன்னுடைய சாதித் தொழிலுக்கு போவதை விட்டுவிட்டு ஏன் பள்ளிக்கூடத்துக்கு வருகின்றாய் “ என விளிக்கப்பட்டு பின்வாங்கு(பெஞ்சு)க்கு அனுப்பி வைக்கப்பட்டேன்.

 

அன்றிலிருந்து அப் பாடசாலை எனக்கு வெறுத்தது. பாடங்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் எல்லோருமே அந்நியமானார்கள். என்னுடைய சின்னச்சிறிய ஆரம்பப் பாடசாலை எனக்கு கோபுரமானது. ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள் கோபுரக்கலசம் ஆனார்கள்.

 

கல்வி மீதிருந்த பற்றால் எனது பெற்றோரின் இடம் மாறிச் செல்லும் முடிவால் நான் காப்பாற்றப்பட்டேன்.

 

இந்தக் கிராமத்தில் குடிநீர் கிணறுகள் கிடையாது. கடற்கரையை அண்டிய கிராமம் ஆதலால் உவர்நீர் மட்டுமல்லாது கிணறு தோண்டுவதற்குதந்ததல்லாத மணற்பாங்கான நிலமானதாலும் வெறுமனே குளிப்பதற்கும் அழுக்கான உடுபுடவைகள் தோய்ப்பதற்குமென ஊருக்கு ஒதுக்குப்புறமாய் வயற்காணிகளுக்கிடையில் சாதிகளுக்கு ஒவ்வொன்றாய்  உவர்நீர் கிணறுகள் தொலைவில் இருந்தன. வெட்ட வெளியில் பெண்களுக்கு ஒரு கிணறும் (பூதன் கிணறு- காரைநகர் கடற்கோட்டையை தனது சிறைத்தண்டனை காலத்தில் கூலியாய் இருந்து கட்டிய பூதத்தம்பியின் பெயர்) ஆண்களுக்கு ஒரு கிணறுமாய் இருந்தன.

 

நன்னீர்(குடிநீர்) கிணறுகள் உயர்சாதிகளுக்கு சொந்தமான காணிகளில் தான் அதிகமாகவிருந்தன. தாகத்திற்கு அல்லது உவர்சுவையின்றிய தண்ணீருக்கு தேவையேற்பட்டால் அவற்றை கிணறுகளில் அள்ளுவதற்கு தாழ்ந்த சாதியினர் அநுமதிக்கப்படுவதில்லை.


தாகத்துக்கு தண்ணீர் கேட்டால் கைமுண்டில் ஏந்தித்தான் அருந்த வேண்டும். இப்படி இறுக்கமாக வெறுப்பான சூழல்கள் நிறைந்திருந்ததே தமிழர் யாழ் பிரதேசம்.

 

வரண்ட காலம் வந்தால் பல மைல்களுக்கு அப்பாலுள்ள இச்சிறுதீவை தாண்டி வெளியேயுள்ள சுன்னாகம் என்னுமிடத்திலிருந்து இக்கிராமத்துக்கும் வேறும் சில கிராமங்களுக்கும் நீர்வழங்கலை இன்றும் நன்றியுடன் நினைவு கூரும் வண்ணம் தாங்களாக முன்வந்து யார் தந்தார்கள்?

 

காரைநகரிலிலுள்ள சிங்கள கடற்படை முகாம் தனது தண்ணீர் பவுசர்கள் மூலம் தான் இக்கிராம மக்களின் அடிப்படைத் தேவையான (நீரின்றியமையா யாக்கைகெல்லாம்) தண்ணீர் வழங்கலை பொறுப்பேற்றிருந்தார்கள்.

 

தென்னங்கள்ளு அருந்த வந்த கடற்படையினர் ஊரிலுள்ள பெண்களுடன் சேஷ்டை செய்ய முற்பட்ட போது கிராமத்தவர்களால் பல மைல் தூரம் முகாம் வாசல் வரை மூச்சிரைக்க துரத்திசெல்லப்பட்டார்கள். அடுத்த நாள் கிராமத்தவர்களிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்கள். 

 

ஆனால் அதே கடற்படை அந்த முகாம் மீதான தாக்குதலுக்கு பின்னால் அதே கிராமத்துக்குள் புகுந்து அவ்விடத்தை விட்டு செல்லாமலிருந்த என்னைத் தாலாட்டிய எனது மாமனார்கள் மூவர்களை சுட்டு வீழ்த்தியது. வெறி கொண்ட இனவெறி இராணுவமாக மாறிப் போயிருந்தது.


காரைநகர் ஜெற்றி கடைகளையும் அதை அண்டியிருந்த வீடுகளையும் எரித்துச் சாம்பலாக்கியது. குமுதினிப்(நெடுந்தீவு) படகில் பயணம் செய்தவர்களை குரூரமாக வெட்டியும் கொத்தியும் (நயினாதீவு கடற்படை) படுகொலை செய்தது. அதனை வீடியோ பதிவு செய்தவர் “மலைநாடன் “.

 

1977 இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டு தகுந்த பாதுகாப்பின்றி தவித்த மலையக மக்கள் யாழ் பிரதேசம் நோக்கி வரவுமில்லை. அழைக்கப்படவுமில்லை. வீடுகளில் வேலைக்காரர்களாக “ தோட்டக்காட்டாரை” வைத்திருந்த யாழ் சமூகம் அவர்களை தரக்குறைவானவர்களாவே கணித்திருந்தது. இனக்கலவரத்தினால் ஏதிலிகளாக அகதிகளாக இருந்த அவர்களை “காந்தீயம்“ நிறுவனத்தில் இருந்த இளைஞர்கள் வன்னிக் காடுகளை வெட்டி குடிசைகள் அமைத்து எல்லைக் கிராமங்களில் குடியேற்றும் ஒரு பாரிய திட்டத்தை செய்தார்கள். இந்தக் கிராமங்களுக்கு காடுகள் வெட்டி வசதிகள் செய்து கொடுக்கும் வேலைகளுக்கு சிரமதான முறை கைக்கொள்ளப்பட்டது. டேவிட் , வெலிக்கடையில் படுகொலை செய்யப்பட்டவர்களில் ஒருவரான வைத்திய கலாநிதி இராஜசுந்தரம் போன்றவர்களுடன் சில ஆயுத அமைப்புகளைச் சார்ந்த இளைஞர்களும் நடைமுறை வேலைகளில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள். இந்த வேலைகளுக்காய் 79 ம் ஆண்டு காலப்பகுதியில் அரசியல் விழிப்புணர்வும் சமூக நோக்கும் கொண்ட யாழ் மாவட்ட இளைஞர்கள் சிரமதான அடிப்படையில் தங்கள் பங்களிப்பை வழங்க வன்னிக்காடுகளை தரிசித்தார்கள்.

 

இவற்றுக்கெல்லாம் உந்துசக்தியாய் திகழ்ந்தவர்களில் டேவிட் ஜயா, கொல்லப்பட்ட வைத்திய கலாநிதி இராஜசுந்தரம், தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் அரசியல் செயலராய் இருந்து உமாமகேஸ்வரன் குழுவால் பின்னாட்களில் இந்தியாவில் படுகொலை செய்யப்பட்ட தோழர் சந்ததியார் என்போரே தமது உழைப்பை தந்தவர்களாவர்கள்.

 

தழிழரசுக் கட்சியின் இளைஞர் பேரவையில் இடதுசாரிகள் கொண்ட அரசியல் பிளவை உருவாக்கியவர் என்று கூட்டணியினரால் வெறுக்கப்பட்ட இவரை புலிகளும் குறிவைத்திருந்தனர்.

 

கடமையில் மிகவும் கண்டிப்பான, அர்ப்பணிப்பான மிகவும் வறிய குடும்பத்திலிருந்து ஒரு திண்ணையும் ஒரு ஓலைக் குசினியும் கொண்ட இல்லத்திலிருந்து இவர் படித்ததும் வாழ்ந்ததும் மண்ணெண்ணெய் விளக்குகளில் தான். இவரோடு நான் ஒரு முறை அவரது வீட்டில் விருந்துண்டபோது (1978 இல்) தனக்கு கிடைத்த ஒருவேளைக் கஞ்சியையே அவர் என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

 

திருவாளர் கிட்டுவைப் போல் விதம் விதமான ஆடைகளோ வெளிநாட்டு வாசனைத் திரவியங்களோ வார்த்தைக்கு வார்த்தை தூசண மொழிகளோ வேளாவேளைக்கு தரமான உணவுவிடுதி சாப்பாடுகளோ தகாத பாலியல் உறவுகளோ இன்றி மக்களுடன் மக்களைப் போலவே வாழ்ந்த இவர்கள் எல்லாம் இன்று ஈழவரலாறு என்று இருட்டடிப்பு செய்யப்படுகின்றார்கள். இங்கு குடியேற்றப்பட்ட மலையக மக்களுக்கு நெருக்கடிகள் ஆரம்பங்களில் அவர்களது குடிசைகளுக்கு தீவைத்த சம்பவங்கள் அவர்களது காணி உரிமைகளை தட்டிப்பறித்தது அவர்களை தங்களது கூலித்தொழிலாளர்களாய் மாற்றி சுரண்டியது எல்லாம் பதிவுசெய்யப்பட வேண்டிய நிகழ்வகளாய் இருக்கின்றன.. இந்தக் குடியேற்றங்களுக்கு இடைஞசல் தந்த பல்வேறு ஆயுதக்குழுக்களின் நடவடிக்கைகள் அம்பலமானது ஒன்று தான். நிச்சயமாய் பேரினவாதம் இதில் சம்பந்தப்படவில்லை.

 

இந்த பேரினவாதத்திற்கு எதிரான மக்களின் எழுச்சியை யாழ் மேலாதிக்க வாதமானது தனக்குரிய கோரிக்கைகளுக்குள் தாழிட்டுக்கொள்ள முயன்றபோது
இயக்கங்கள் பல மக்கள் மேல் பாசிச நடைமுறைகளை ஏவத் தொடங்கிய காலம் 1984 க்கு பிற்பட்ட காலப்பகுதியாகும். அதற்கு முன்னரான காலப்பகுதிலேயே தமது கல்வியைத்துறந்தவர்கள் பலர். ஷெல் வீச்சுக்கு முன்னமேயே தமது கல்விக்கு இடைஞ்சல் பாதிப்பேற்பட்டதற்கு பின்னாலன்றி உண்மையாகவே மக்களுக்காகவே தமது கல்வியைத்துறந்தவர்கள் போராளிக்குழுக்களில் பலர் இருந்தனர்.
கல்வி வராததால் அவர்கள் கல்வியைத் துறக்கவில்லை. ஷெல் வீச்சின் தொந்தரவால் அவர்கள் கல்வியைத் துறக்கவில்லை. அடக்குமுறையையும் சமூக அநீதிகளையும் துடைத்தெறிய வேண்டுமென்று தோழமை பூண்டார்கள். சிலர் கல்வியைத் தொடர்ந்தவாறே போராளிகளானார்கள்.

 

அதனால் தான் தாங்கள் சார்ந்திருந்த இயக்கங்களுக்கு எதிராகவும் இம்மாணவர்கள் போராட வேண்டியவர்களானார்கள். 1985 காலகட்டத்தில் யாழ் குடாவில் இராணுவ அடக்குமுறைகளுக்கு மட்டும் மாணவர்கள் முகம் கொடுக்கவில்லை. இயக்கங்களினது அடக்குமுறைகள் அவர்களது தோலைப் பதம் பார்த்தது. அவர்களது உயிர்களை பலி கேட்டது.

 

பலர் மாயமாய் மறைந்து போனார்கள். வீதிகளில் அவர்கள் இறங்கினார்கள். போராட்டம் மக்களிடம் பரவியது. முன்னணியில் நின்ற தோழர்கள் வீதிகளில் உயிரற்ற உடலமாய் வீழ்த்தப்பட்டார்கள். மரணம் தெருக்களில் துப்பாக்கிகளுடன் உலாவியது. அவர்களது தோளுக்கருகே செவிகளுக்கருகே துப்பாக்கி நிழலாய்த் துரத்தியது. பேரினவாத இராணுவமோ முகாம்களுக்குள் முடங்கி வெளிவரமுடியாத காலகட்டம் அது.

 

கூற்று (Rathi) 1.

அண்மையில் கூட வன்னி களமுனையில் இறந்துவிட்ட ஈழப்பெண்போராளிகளின் பிணங்களை சிங்கள ராணுவம் புணர்ந்த மானிடப்பண்பிற்கு புறம்பான செயலை சில தனியார் தமிழ் இணையத்தளங்கள் வெளியிட்டிருந்தன. பிறகு அதை வேறு தளங்களுக்கு சென்று அதற்கு இணைப்பு வேறு….. பார்க்க நேரிட்டது. எனக்கு வேதனையாகவும் எரிச்சலாகவும் இருந்தது. அந்த படங்களை வெளியிட்டவர்களிடம் நான் கேட்பது, பாதிக்கப்பட்ட பெண்கள் உங்கள் வீட்டுப்பெண்களாக இருந்தால் அந்த படங்களை தளங்களில் இணைத்திருப்பீர்களா?  இதையெல்லாம் பார்க்கும் ஓர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எப்படி தனக்கு நடந்த கொடுமைகளை வெளியில் சொல்ல தோன்றும்? தனது சமூக அங்கீகாரம் பற்றிய பயம் பாதிக்கப்படுகிற பெண்ணுக்கு வராதா? இப்படி புகைப்படங்களை போட்டு எங்களின் நெஞ்சங்களில் நெருப்பை அள்ளி கொட்டாதீர்கள். அறிவார்ந்த தமிழ் இணையத்தளங்களின் உரிமையாளர்களிடம் நான் இந்த சந்தர்ப்பத்தில் வேண்டிக்கொள்வது இதுதான்.

மறுப்பு

 

நீலப்படங்களுடனும் தூஷண வார்த்தைகளுடனும் வலம் வரும் கட்டளைத்தளபதிகளை தட்டிக் கேட்க வக்கற்றிருந்தவர்கள் அதே வக்கிரத்தை இராணுவம் செய்த வேளை பெண்களை நிர்வாணப்படுத்திய அக்கிரமத்தை அத்தாட்சிகளாக வெளியிட்ட இணையத்தை தூய்மை புனிதம் என்ற சமூகக் கண்ணாடியிட்டு இவ்வக்கிரமத்தை அதன் குரூரத்தை அதன் பின்னாலுள்ள ஆணாதிக்க கருத்தைச் சாடாது,  வெளியிட்ட இணையத்தை அதன் நோக்கத்தைச் சாடுவது இன்னொரு வகையில் இக் கொடுமைகளை வெளிவராமல் செய்வதற்கு சமமானது. அல்லது அவர்களது நோக்கம் இவ்விணையத்தை சாடுவதற்காக கூட இருக்கலாம்.

 

வினவின் தளத்தின் தோழமை கொண்ட புதிய கலாச்சாரம்,  அபு கிரைப் சித்திரவதைகள், பாலியல் வன்புணர்வுகள் அமெரிக்க ஏகாதிபத்திய இராணுவத்தால் நடாத்தப்பட்டதற்கு  சாட்சியங்களை புகைப்படங்களுடன் வெயியிட்டது.


இது தொடர்பாக அவர்களது கட்டுரையை நான் ரதிக்கு வாசிப்புக்கு பரிந்துரைக்கின்றேன்.

ஆடைகள் களையும் ஆணாதிக்க அதிகாரங்களின் நிர்வாண பாலியல் சித்திரவதைகள்