Language Selection

சிறி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இளைய தலைமுறையே  இதோ வாங்கிக்கொள்
உன் வாழ்வுக்கான வாளும் கவசமும்.


வாழ்வின் மீதான நம்பிக்கைதானே
மானுடம் கொள்ளும் உயிர் மூச்சாகும்.

நாளைய காலம் நமக்கெனவாக
உன்னுள் எழுமதை உயிரினிலேற்று !
மனிதத்தை அழிப்பார் மடியினில் தீயிடு.

 

போரே இல்லாப் பொழுது வரும்வரை
 இறப்பு என்பது இல்லாதொழிந்திட  
அமைதியே மனித நியதியாகிட
நல்ல போர் தொடு நீயே பொருதிடு
பொல்லாப் போரிடும் மனித எதிரிகள் ஒழியவே.
இப் போரினில் மடியினும் பொசுக்கிடு தீமையை.

 

குறைவிலா வளங்கள் குவிந்ததிப்பூமி
சூரியன் தரும் ஒளி சுழன்றாடும் காற்று
உலகத்தின் பசி மடிய பூமித்தாய் தரும் உணவு
இவை எல்லாம் தனித்தெவரதும் சொத்தாமெனில்
தகர்த்திடு அந்நீசரை.
அனைத்தும் நம் பொதுவுடமை.

 

போரில் செந்நீரும் பசியின் கண்ணீரும்
பூமியை நனைத்திடின் அது மக்களுக்கெதிரான
மாக்களின் சூழ்ச்சி.

 
பொதுச்சொத்தினைக் கொள்ளை கொள் பொல்லாதார் வல்லமை.
மனிதம் வாழ மாய்த்திடு இக்கொடுமையை.

 

தனித்துரிமை கொள்வோர் சாம்ராஜ்யம் சாய்ந்தழியும் வரை
நீதிக்கான போரே நியதியன்றோ.
உன்னுயிரிலும் உடலிலும் வலிமையை உருவாயேற்றி
சாவினைச் சாக வைக்கும் இச்சமரினில்  வெற்றி கொள்வோம்.


வென்றதன் பொழுதில் ஆயுதம் என்பதோர்  வெறும் அகராதிச் சொல்.
அமைதி எங்கள்  ஆயுள் உரிமையாகும்.
மானுடம் என்பதன் மகத்துவம் மலர்ந்து மணம் கமழும்.

 

ஒவ்வோரு சகோதரனுக்கும் இது பிரமாணமாகட்டும்.
அழகினைக் காவல் காப்போம் . மனிதநேசத்தில் சுவாசம் கொள்வோம்.

 
நோர்வேஜிய மொழிக் கவிதை ஒன்றின் தழுவல்.