Language Selection

சிறி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஒபாமா அமெரிக்காவின் ஆரம்பம் களைகட்டத் தொடங்கியுள்ளது காசாவில்.  கசாப்புக்கடையாய் விரிகிறது காசா நகரம். குழந்தைகள், கர்ப்பிணிகள் வெற்றுடலாய் வீழ தெருவெங்கும் மரண ஓலம்.  இஸ்ரேலின் காசா மீதான ஆக்கிரமிப்புக்கு பின்னாலும் இத்தனை கொடுமையான படுகொலைகளுக்குப் பின்னாலும் அமெரிக்க ஆசீர்வாதம் இஸ்ரேலிய பயங்கரவாதத்துக்கு கொடுக்கு கட்டி விடுகிறது.

 

கிளர்ந்தெழும் மக்களின் ஊர்வலங்கள் எதிர்ப்பு பேரணிகள் எல்லாவற்றையும் துச்சமாக மதித்து காசாவை துவம்சம் செய்யும் இஸ்ரேலுக்கு முன்னால் எதுவும் செய்ய திராணியற்று கறுப்பின அமெரிக்க அதிபர் ஒபாமா கைகட்டி மவுனம் சாதிக்கிறார் என்று நம்புபவர்களும், உலகமே இனி அமைதிப் பூங்கா தான் அமெரிக்க கறுப்பின அதிபரின் வருகை நன்மைகளாக விளையப் போகின்றது என்பவர்களும் இதோ காசாவுக்கு செல்லுங்கள். இஸ்ரேல் செய்யும் அறுவடைகளில் உங்களுக்கும் பங்குண்டல்லவா?

 

 பாலஸ்தீன மக்களை அவர்களின் பாரம்பரிய பிரதேசத்திலிருந்து விரட்டியடிக்க முனையும் இஸ்ரேல் அமெரிக்க கூட்டு சதிக்கு இன்று தலைமை தருவது வேறு யார் ? நிறமல்ல ஏகாதிபத்திய குணாம்சமே அமெரிக்காவை ஆளும் பீடமாகும் என்பதற்கு விவாதங்கள் எதுவும் தேவையில்லை.

 

அமெரிக்க ஏகாதிபத்திய முகத்தை அப்பழுக்கில்லாத ஒன்றாகக் காட்டிக்கொள்ள விளைவோரின் வாதம் என்னவெனில் ஈராக் மீதான யுத்தத்தின் பொறுப்புகள் முழுவதையும் ஒரு தனி மனிதன் புஷ்சின் தோளில் சுமத்துவது தான். சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்துக்கு புஷ்சை இழுத்து தண்டிப்பதன் மூலம் அதாவது ஒரு புஷ் தண்டிக்கப்படுவது மூலம் அமெரிக்கா பாடம் கற்றுக் கொள்ளும் என்பதும் ஒரு தனி மனிதனாலேயே அமெரிக்கா தலைதெறித்து ஆடியது, புஷ் அமெரிக்காவுக்கு கிடைத்த ஒரு துரதிஷ்டம் எனவே புஷ்சை தண்டித்தால் சரி மற்றும்படி அமெரிக்கா வழி நல்வழி என்பதாய் வெட்டிக் குறுக்கும் வாதங்களோடு ஏகாதிபத்திய நலன்களைக் காணமறுக்கும் விவாதங்கள் ஏராளம்.

 

அழிவுகளுக்கும் ஆக்கிரமிப்புகளுக்கும் காரணங்களை ஒரு தனிமனிதன் மீது போட்டு விட்டு புஷ்சை தண்டிப்பதால் மட்டும் அத்தனையும் தீர்ந்துவிடும் என மற்றெல்லா ஏகாதிபத்திய நலன்களையும் நியாயப்படுத்தும் கூட்டம் தான் ஒபாமாவையும் ஒளிவிளக்கென வருணித்தது.

 

இவர்கள் இருவரும் அளவில் தன்மையில் நிறத்தில் வேறுபாடு கொண்டிருந்தாலும் ஏகாதிபத்திய நலன் என்றாகும் போதோ ஒரே நாணயத்தின் இருபக்கங்களாவே தான் இருப்பார்கள், இருந்தாக வேண்டும். அதுவே தான் அவர்களது ஏகாதிபத்திய நலன் காக்கும் கடமையாகும். இதிலிருந்து தவறிச் செல்ல இவர்கள் நினைத்தாலும் முடியாது.

 

எனவே அசைக்கப்பட வேண்டியது அப்புறப்படுத்தப்பட வேண்டியது தண்டிக்கப்பட வேண்டியது தகர்க்கப்பட வேண்டியது ஏகாதிபத்திய நலன்களே தவிர இத் தனிநபர்கள் மட்டுமேயல்ல.

 

புஷ்சுக்கு எறியப்பட்ட செருப்பு தனியே புஷ்சுக்கு வீசப்பட்டதானதாக யாரும் கருத முடியாது. இது ஏகாதிபத்தியத்திற்கு விழுந்த செருப்படி. ஈராக் மக்களின் அநியாயத்திற்கெதிரான குமுறல், ஆவேசம் கொடுத்த கசையடி.

 

கடும் குளிரையும் பொருட்படுத்தாது வீதிகளில் இறங்கி இஸ்ரேலின் படுகொலைகளுக்கு எதிராய் அணிவகுக்கும் மக்கள் போராட்டங்கள் தொடரட்டும் பெருகட்டும்.

 

பொழியும் குண்டு மழையிலும் காசாவில் மருத்துவராக தனது உயிரையும் பணயம் வைத்து மக்களின் அவலங்களைத் தனது வைத்திய உதவி மூலம் தணிக்கும் ஒரு நோர்வேஜிய மருத்துவர் காசாவிலிருந்து கொண்டு அனுப்பிய SMS மூலமாக அறைகூவல் பின்வருமாறு

 

De bombet det sentrale grønnsakmarkedet i Gaza by for to timer siden . 80 skadde, 20 drept alt kom hit til Shifa. Hades! Vi vasser i død, blod og amputater.  Masse barn, Gravid kvinne. Jeg har aldri opplevd noe så fryktelig. Nå hører vi tanks. Fortell videre, send videre,  rop det videre, Alt. GJØR NOE, GJØR MER, vi lever i historieboka nå , alle!

 

 

Mads Gilbert  03.01.09 13 50,

Gaza, Palestina

"இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னர் காசா நகரத்தின் மக்கள் கூடும் மத்திய காய்கறிச் சந்தை மீது வீசப்பட்ட இஸ்ரேலிய குண்டுகள் 20 உயிர்களைப் பலி கொண்டு 80 பேர்களை காயப்படுத்தி நாசம் விளைவித்துள்ளது. மரணம் இங்கு
கொலுவோச்சுகிறது.  நாங்கள் உடலங்களோடும், இரத்தத்தோடும், காயப்பட்ட உடலுறுப்புகளை நீக்குவதோடும் தோய்ந்தெழுகிறோம் மல்லாடுகிறோம்.

- Vi vasser i blod og død

இறந்தவர்களில், காயப்பட்டவர்களில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் அடங்கலாய். ஏராளமானோர் குழந்தைகள்,  இது போன்ற கோரத்தை நான் என்றும் கண்டிருந்ததில்லை. தற்போது இராணுவ கவச வாகனங்களின் ஒலி காதைப் பிளக்கின்றது.

 

இந் நிகழ்வுகளை மேலும் பலரிடம் கூறுங்கள் இச் செய்தியை மேற்கொண்டு அனுப்புங்கள், குரல் எழுப்புங்கள், மாற்றீடாக முடிந்தது எதையாவது செய்யுங்கள், இன்னும் ஆக்ரோசமாக ஏதாவது செய்யுங்கள்.

 

நாங்கள் எல்லோரும் ஒரு வரலாற்று கட்டத்தில் வாழ்கிறோம். "

 

Anestesioverlege Mads Gilbert (f.v) sammen med leder i NORWAC og kirurg Erik Fosse jobber under forferdelige forhold i Gaza.

 

நன்றி படங்கள் VG  www.vg.no