மெல்லெனக் கொல்லும் இரசாயனங்கள் "குளிர்பானக்" கலன்களுக்குள். இரத்தப் புற்றுநோயை உருவாக்கும் இரசாயனப் பதார்த்தத்தின் செறிவு எப்படி இந்த "அமிர்தபானங்" களுக்குள் அதிகரித்தன?
சாதாரண குடிநீரில் இருக்கக் கூடிய அனுமதிக்கக் கூடிய செறிவிலும் பார்க்க எட்டு மடங்கு செறிவில் பென்சீன் (டீநணெநநெ) எனப்படும் ஆபத்தான இரசாயனப் பதார்த்தம் 230 குளிர்பானங்களுக்குள் இது இருந்ததை, அதிக தரக்கட்டுப்பாடு கொண்ட பிரான்சிலும் பிரிட்டனிலும் இம்மாதம் நடத்தப்பட்ட பரிசோதனைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது
இரத்தப் புற்றுநோய்க்கும் மற்றைய வகை புற்றுநோய்களுக்கும் இந்த இரசாயனப் பதார்த்தத்துக்கும் தொடர்பிருப்பது ஏற்கனவே அறியப்பட்டதொன்று. புற்றுநோயைத் தூண்டுவன இப் பதார்த்தங்கள் என்பது எப்போதோ நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளால் அறியப்பட்ட தொன்றாகும்.
இருந்தபோதும் இந்தப் பதார்த்தத்தின் செறிவு ஏன் அதிகரித்தது என்ற காரணம் வேறொன்றுமில்லை. ஊரை அடித்து உலையில் போடும் பண முதலாளிகளின் விற்பனைத் தந்திரங்களின் விளைவே இது.
அட சும்மா கிடைக்கின்ற தண்ணீரை சுவையூட்டி வண்ணவண்ணமாய் நிறமூட்டி விளம்பரங்கள் செய்து சூப்பர் மாக்கெற்றுக்களிலும் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் தானியங்கு குளிர்பான விற்பனைப் பெட்டிகளுக்குள்ளும் மக்கள் கூடுமிடங்களில் எல்லாம் அழகாய் கவர்ச்சியாய் அடுக்கி வைத்து வாங்கி ஐமாய்கும்படியும் "தாகம்"; தணிக்கும்படியும் விளம்பரமும் செய்யும் இந்தப் பணமுதலைகள் குறியாய் இருப்பது நுகர்பவனின் ஆரோக்கியத்தை பேணுவதற்குத்தான் என்றால் சொல்பவனைச் செருப்பால் அடி.
உன்னுடைய நுகர்வு தான் என்னுடைய பணப்பை. இதுவே தான் இலாபத்தின் மூலமந்திரம். இதைவிட வேறு அக்கறை பண முதலைகளுக்கேது.
இந்தப் பரிசோதனைகளும் கட்டுப்பாடுகளும் மேற்குலகத்தின் நுகர்வு மற்றும் விற்பனை விதிகளுக்கு அடங்கிப் போகலாம். ஆனால் மூன்றாமுலக வறிய நாடுகளில் விற்பனைக்கு வரும் "சுவை" மிகு "ஐமாய்" கோலாக்களும் குளிர்பானங்களும் தரும் அழிவுகள் விச விளைவுகள் பற்றி கேட்டாலே, எதிர்ப்போரை கேட்போரை அடக்கி வைக்க அந்தந்த நாடுகளின் அரசுகளே துணையாயிருக்கும் போது இவர்களுக்கென்ன தங்குதடை.
குளிர்பானக் கம்பனிகள் குழந்தைகளின் பெற்றோரைக் குறிவைக்கும் வியாபாரத் தந்திரத்தில் இந்தக் குளிர்பானங்களுக்குள் அதிகளவு வைற்றமின் சி யைச் சேர்த்து வருகின்றார்கள். குளிர்பானத்தில் சேர்க்கப்படும் இந்த வைற்றமின் சி யானது தங்களது குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு சிறந்தது என்ற பிரச்சாரத்தால், அவற்றை பெற்றோர் குழந்தைகளின் ஆரோக்கியத்திலுள்ள அக்கறையின் பால் இக்குளிர்பானங்களை வாங்கும் நிலைக்கு ஊக்குவிக்கப்படுகின்றார்கள்.
விளைவு யாதெனில் இக்குளிர்பானங்களில் சேர்க்கப்பட்டிருக்கும் சோடியம் பென்சேற் என்ற பதனிடும் இரசாயனப்பதார்த்தம் அதிகரித்த அளவில் சேர்க்கப்படும் வைற்றமின் சி யோடு தாக்கம் அடைகின்றபோது உருவாகும் பதார்த்தம் பென்சீன் என்ற மேற்சொன்ன இரத்தப்புற்றுநோயைத் உருவாக்கவல்ல பதார்த்தமாகும்.
எனவே விற்பனையை குறியாகக் கொண்டு அதிகரிக்கப்படும் வைற்றமின் சி யானது பென்சீனின் செறிவை குளிர்பானத்தில் அதிகரிக்கின்றது.
விளைவு வாங்கி ஐமாய்ப்பவன் வாழ்வில் துன்பமாய் விளைகிறது. யார் கெட்டால் நமக்கென்ன இலாபம் ஒன்றே குறியென்ற இந்த குளிர்பானக் கம்பனிகளுக்கு எந்தளவுக்கு இலாபமோ அதுவே தான் குறி.
பதின்மூன்று வருடங்களுக்கு முன்னமேயே இந்தக்கலவைகளின் ஆபத்துப்பற்றிய ஆராய்சி முடிபுகள் அறிவுறுத்திய எச்சரிக்கை பற்றி "ஏதுமறியா" குளிர்பானக்கம்பனிகள் மூக்கால் சிணுங்கியபடி நுகர்வோர் மேலுள்ள அக்கறைபற்றி அறிக்கைகள் விடுவார்கள். வேறென்ன தண்ணீரைப் பணமாக்க மறுத்தாவிடப் போகின்றார்கள்?
ஆதாரம் (The Times 02.03.06 - ராஐPவ் சியால்)
சிறி
06.03.06