Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உலக மூலதனத்துடன் சுதந்திரமாகப் போட்டி போடமுடியாத அமெரிக்க ஏகாதிபத்திய மூலதனமானது, அனைத்துவிதமான மனிதவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது.   

1.    உலக நாடுகள் மீது யுத்தங்களை நடத்துகின்றது. 
2.    புதிய வரிகளைத் திணிக்கின்றது. 
3.    நாடுகள் மீதான பொருளாதாரத் தடைகளைப் போடுகின்றது  
4.    ஆட்சிகளை மிரட்டி அடிபணிய வைக்கின்றது. 
5.    சதிகள் மூலம் ஆட்சிகளைக் கவிழ்க்கின்றது,  
6.    சுதந்திரமான நாடுகளைத் தன்னுடன் இணைக்குமாறு மிரட்டுகின்றது. 
7.    தேர்தல்களில் தலையிடுவதன் மூலம், பொம்மை ஆட்சிகளைத் தேர்ந்தெடுக்கின்றது.
8.    தலைவர்களைக் கொல்லுகின்றது. 
9.    உள்நாட்டு கலவரங்களைத் தூண்டி விடுகின்றது.
10.    அமெரிக்காவுக்குச் சார்பான கருத்தை உருவாக்க நிதிகளை வாரி இறைக்கின்றது.
11.    தேர்தல் ஜனநாயகத்தைப் போலியாக்கி விடுகின்றது.
12.    ஊடகச் சுதந்திரத்தை விபச்சாரமாக்கி விடுகின்றது.         
13.    இன, மத, நிற.. மோதல்களைத் தூண்டி விடுகின்றது. 

இப்படி எண்ணற்ற சதிகளை, அவதூறுகளை, குற்றங்களை.. செய்வதே அமெரிக்காவின் போலி ஜனநாயகம். உலகநாடுகளின் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும், சுயாதீனத்தையும்.. மறுதளிக்கும் அமெரிக்கா, அரசியல் சமூகப் பொருளாதாரத்தை தன் காலடியில் மண்டியிட வைக்கின்றது. மனித உழைப்பைச் சுரண்டுவது எப்படி ஜனநாயகமானதோ, அப்படி அமெரிக்காவுக்கு மந்தைகளாக இருப்பதையும், சுதந்திரமாக மேய்வதையும், மனிதனின் சுதந்திரம்  - ஜனநாயகம் என்கின்றனர்.  

உலகளாவிய முதலாளித்துவ மூலதனத்துடன் சுதந்திரமாகப் போட்டி போடமுடியாத அமெரிக்க மூலதனமானது, உலகிலேயே அதிக கடனைக் கொண்டதாக மாறியிருக்கின்றது.  அமெரிக்கா தனது திவாலைத் தடுக்கவும், தன் உலக மேலாதிக்கத்தைத் தக்கவைக்கவும் நாடும் வன்முறைகள்,  உலகெங்கும் பொருளாதார நெருக்கடியாக மாறியிருக்கின்றது. இதனால் மக்களின் வாழ்க்கைத்தரமானது, பொது வீழ்ச்சியை நோக்கி நகர்கின்றது.
   
அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்குச் சவாலாக இருக்கக்கூடிய பிற ஏகாதிபத்தியங்களான சீன, ஜரோப்பிய, ருசிய, இந்திய .. மூலதனங்களும், இதைச் சார்ந்திருக்கக்கூடிய சிறிய நாடுகள் அனைத்தும் அமெரிக்காவின் கெடுபிடியான அரசியல் - இராணுவ - பொருளாதார மிரட்டலுக்கு உள்ளாகி வருகின்றது.   

உலகில் எந்த சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்படாத வன்முறைகளை, மிரட்டல்களை, படுகொலைகளை அமெரிக்கா சர்வசாதாரணமாகச் செய்கின்றது. இவற்றை ஜனநாயகம் என்ற போலியான போர்வைக்குள்  தன்னை போர்த்திக் கொண்டு அரங்கேற்றுகின்றது.

சுதந்திரமான நாடுகளின் பொது இறையாண்மையை மதிக்காத, ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் யுத்தமே சட்டவிரோதமானது. ஈரான் நாட்டின் தலைவர்களைக் கொல்வது முதல் வெனிசுலா தலைவரைக் கடத்தியது வரை, அனைத்தும் குற்றமாகும். கியூபா மீதான பொருளாதாரத் தடை சட்டவிரோதமானது மட்டும் இன்றி, நாடுகளை மிரட்டி அடிபணிய வைக்கும் ரவுடித்தனத்தில் அமெரிக்கா ஈடுபடுகின்றது. 

இப்படி உலகெங்கும் நடந்தேறும் அமெரிக்காவின் ஒற்றைத்துருவ உலக மேலாதிக்கத்துக்கான செயற்பாடுகள், உலகை தாம் மட்டும் சுரண்டுவதற்கான முதலாளித்துவ உலக ஒழுங்கைக் கோருகின்றது. தனக்குப் போட்டியாளர் யாரும் உலகில் இருக்க கூடாது என்கின்றது.

இதற்காக உலகளவில் உற்பத்திக்கான மூலப்பொருட்களைக் கட்டுப்படுத்தவும், முதலாளித்துவ உற்பத்திக்குத் தேவையான அனைத்தையும் தனது அதிகார வரம்புக்குள் கொண்டுவர முனைகின்றது. ஒட்டுமொத்த உலக எரிபொருளை முற்றாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முனைகின்றது. 

உலகளவிலுள்ள எண்ணையைக் கட்டுப்படுத்தும் அமெரிக்க பொருளாதாரத் திட்டம், உலகளவில் மாற்றுச்சக்தி தோன்றுவதைத் தடுக்க முனைகின்றது. சூரிய மின்சாரம், காற்றாடி மின்சாரம், போக்குவரத்து மின்சாரமாதல்.. மூலம், எண்ணைப் பயன்பாட்டை குறைக்கும் சீனாவின் திட்டம் அமெரிக்கப் பொருளாதாரத்தை நிலைகுலைய வைக்கின்றது. ஐரோப்பா 2030க்குள் முற்றாகப் போக்குவரத்தில் மின்சாரமாகும் திட்டம், அமெரிக்கப் பொருளாதாரத்தைத் தடுமாற வைக்கின்றது. இந்திய மாற்றுச்சக்திக்கு மாறுதல், சுயசார்பை நோக்கியதாக மாறுகின்றது. இது அமெரிக்காவின் பொருளாதாரத்தைத் தவிடுபொடியாக்குகின்றது. 

நிதிமூலதனம் மூலமான கடன்கள் மூலம் கட்டுப்படுத்திய அமெரிக்க உலக ஒழுங்கை, சீன மூலதனம் சவாலுக்கு உள்ளாக்கியுள்ளது. ஏற்றுமதி இறக்குமதிக்குள் உள்ள இடைவெளி மூலம், சீன நிதிமூலதனமானது, பல நாடுகளில் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு வளர்ந்துள்ளது. சீனப்பொருட்கள் உலகச் சந்தைக்கு வருவது நின்று போனால், மக்கள் வாங்குதிறனையும், நுகர்வையும் இழந்து போவார்கள். உற்பத்தித்திறன், உற்பத்திக் கருவிகள், உற்பத்திக்கான மூலப்பொருட்கள் நின்று போகும். இது அமெரிக்காவையும் விட்டு வைக்காது.

அமெரிக்க மூலதனத்தின் பொது நெருக்கடி போட்டிச் சந்தையை ஒழித்துக்கட்ட விரும்புகின்றது. தனது மூலதனத்துக்குச் சவாலான சீனாவை ஒழித்துக்கட்ட, சீனாவுக்கு எரிபொருள் வழங்கும் ருசியா, ஈரான், வெனிசூலா.. நாடுகளின் எண்ணையைத் தனது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முனைகின்றது.            
    
இந்த வகையில் ஈரான் மீதான அமெரிக்க யுத்தம் ஈரானின் ஜனநாயகத்துக்கான யுத்தமல்ல. டிரம்பின், நெதன்யாகுவின் தனிப்பட்ட யுத்தமல்ல. யூத மேலாதிக்கத்துக்கான யுத்தமல்ல. அணுக்குண்டை உருவாக்குவதைத் தடுக்கும் யத்தமல்ல. இவை அனைத்தும் தங்கள் யுத்த நோக்கத்தை மூடிமறைக்கப் பயன்படுத்தும் காரணங்கள்.    

உலகை மிரட்டி ஒடுக்கியாள முனையும், அமெரிக்க ஏகாதிபத்திய யுத்தமே ஈரான் மீதான யுத்தமாகும்;. உலகில் எந்த நாடும் அரசியல் ரீதியாக, சமூகப் பொருளாதாரரீதியாக சுயாதீனமாக முடிவெடுக்கக் கூடாது என்பதை, ஈரான் யுத்தம் மூலம் உலகுக்கு அமெரிக்கா உணர்த்த விரும்புகின்றது. அனைத்து நாடுகளும் அமெரிக்காவின் சமூகப் பொருளாதார நலன்களுக்குக் கைகட்டி நிற்கக் கோரும் உலக ஒழுங்கையும் - அதிகாரத்தையும் அமெரிக்கா கோருகின்றது. ஒற்றை உலகப் பொருளாதாரக் கோட்பாட்டை முன்வைக்கின்றது.

உக்ரைன் ருசியா யுத்தமும் அமெரிக்க யுத்தமே 

உக்ரைன் ருசியா யுத்தம், அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட யுத்தமே. சோவியத் சிதைந்தபோது உருவான சர்வதேச ஒப்பந்தங்களை அமெரிக்கா-ஐரோப்பா திட்டமிட்டு மீறியபோது, ருசியா தன் மீதான  மேலாதிக்கத்தை முறியடிக்கவே யுத்தம் ஆரம்பமானது.

ருசியா ஏகாதிபத்தியத்தைத் தனிமைப்படுத்தவும், ருசியப் பொருளாதாரத்தை ஆட்டம் காண வைக்கவும், அமெரிக்கா – ஐரோப்பாவுக்கு ருசியாவுடனான யுத்தம் அவசியமாக இருந்தது. ருசியா மீதான பொருளாதாரத் தடைகள் மூலமும், இராணுவரீதியான தங்கள் பொம்மைகள் மூலம் நடத்திய யுத்தமே, உக்ரைன் - ருசியாவின் நீடித்த யுத்தமாக மாறியது.  

இப்படி அமெரிக்காவும் - மேற்குநாடுகளும் சம பங்காளிகளாக இணைந்து உலகப் பொருளாதாரத்தை மிரட்டிப் பங்கிட்டு வந்த உலக ஒழுங்கை, அண்மைக்காலமாக அமெரிக்கா முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. மேற்குநாடுகளை விலத்திவிட்டு, தான் மட்டும் உலகைச் சூறையாடும் திட்டமானது, படிப்படியாக மேற்குநாடுகளைத் தனிமைப்படுத்தி வருகின்றது. அமெரிக்காவின் கால்களையே நக்கிக் கிடந்த மேற்குநாடுகளின் உலக மேலாதிக்கக் கனவுகள், திடீரெனக் கலைந்து போயுள்ளது.   

ஈரான் யுத்தம் இதை மேலும் தீவிரமாக்கியுள்ளது. ஈரான் யுத்தத்தில் அமெரிக்கா வெற்றி பெற்றால், மேற்குநாடுகளின் எதிர்காலம் மேலும் கேள்விகுள்ளாகும்;. அதாவது மேற்குநாடுகளை அமெரிக்காவின் ஒற்றை உலக மேலாதிக்கத்துக்குக் கீழ் அடிமையாக மாறக் கோரும் உலக ஒழுங்கு புதிய முரண்பாடாகியுள்ளது. இது முந்தைய கூட்டுப் பங்காளிகளுக்கு இடையில் புதிய ஏகாதிபத்திய முரண்பாட்டையும், இராணுவரீதியான புதிய எதிர் முகாமை வேகமாக உருவாக்கி வருகின்றது. 

கிறீன்லாந்தை அமெரிக்கா தன்னிடம் இணைக்கக் கோருவதும், கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க முனைவதும், புதிய எதிர் முகாமான ஒரு ஏகாதிபத்திய முரண்பாடடையும், எதிர் அணிகளையும் தோற்றுவித்திருக்கின்றது. ஐரோப்பிய ஏகாதிபத்தியம் தனி முகாமாக அமெரிக்காவுக்கு எதிராகத் தன்னை முன்னிறுத்தத் தொடங்கியிருக்கின்றது.

ஒற்றை உலக அமெரிக்க ஏகாதிபத்தியக் கனவு, தனிப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி ட்ராம்பின் முடிவல்ல. அமெரிக்க ஏகாதிபத்திய மூலதனத்தின் முடிவாகும். ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா .. உள்ளடங்கிய மேற்குநாடுகள், தங்கள் முந்தைய உலக மேலாதிக்கத்தை அமெரிக்காவுக்கு எதிராகத் தக்கவைக்கும்,  புதிய ஏகாதிபத்திய முரண்பாடுகளுடன் புதிதாகக் களத்தில் இறங்கியிருக்கின்றனர். 

இப்படித் தோன்றி வரும் புதிய ஏகாதிபத்தியக் கூட்டைத் தகர்க்க, அமெரிக்கா இவர்களுடன் முன்பு முரண்பட்டுப் பலவீனமடைந்துள்ள ருசியாவைத் தன்பக்கத்துக்கு இழுக்கின்றது. அமெரிக்கா ஐரோப்பாவுக்கு எதிராக ருசியாவை, தன்னுடைய புதிய கூட்டாளியாக்க முனைகின்றது.

ருசிய - உக்ரைன் யுத்தம் தொடர்வதன் மூலம், ஐரோப்பா தொடர்ந்து பொருளாதாரரீதியாகப்  பலவீனமடைந்து வருகின்றது. ருசியாவை ஜரோப்பாவிலிருந்து தனிமைப்படுத்தி, உலகளவில் எண்ணை வளத்தை அமெரிக்கா கட்டுப்படுத்துகின்றது. இதன் மூலம் ஐரோப்பியப் பொருளாதாரம் சரிந்து வருகின்றது. ருசியாவிடம் எரிபொருளை வாங்க முடியாது, மறுபக்கம் எரிபொருளுக்காக அமெரிக்காவிடம் தங்கியிருக்கும் நெருக்கடி தோன்றியுள்ளது. ஈரான் யுத்தம் இதை மேலும் ஆழமாக்குகின்றது. 

மறுபக்கம் ருசிய – உக்ரைன் யுத்தத்தைத் தொடர்வதன் மூலமே, மேற்கு ஐரோப்பா அமெரிக்காவுக்கு எதிராக இராணுவமயமாக முடியும். யுத்ததைத் தொடர்வது என்பது, மேற்கு ஐரோப்பாவின் உள்நாட்டு அரசியலாக, போர்க் கோசங்களாக மாறியிருக்கின்றது.            

நேட்டோ இராணுவக் கட்டமைப்பின் எதிர்காலம் 

உலகைக் கூட்டாக ஒடுக்கியாள உருவான நேட்டோ, அமெரிக்காவின் ஒற்றை உலக மேலாதிக்க நோக்குடன் சிதையத் தொடங்கியிருக்கின்றது. கூட்டு மேலாதிக்கத்தை மறுக்கும் ஐரோப்பிய - அமெரிக்க முரண்பாடு, நேட்டோ என்ற இராணுவக் கட்டமைப்பை தள்ளாட வைக்கின்றது.  ஈரான் யுத்தத்தையடுத்து, நேட்டோவின்; எதிர்காலத்தை மேலும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

நேட்டோவினுள் பிளவுகளை உருவாக்குமளவுக்கு அமெரிக்கச் செயற்பாடுகள் மாறியிருக்கின்றது. ஐரோப்பியக் கூட்டமைப்பில் வெடிப்புகள் தோன்றுமளவுக்கு அமெரிக்கத் தலையீடுகள் நடந்தேறுகின்றது.  

ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் இராணுவ ஒருங்கிணைவு என்பது, தவிர்க்க முடியாததாக மாறி இருக்கின்றது. இது அமெரிக்காவுக்கு எதிராகவே தோன்றி வளருகின்றது. இதை மூடிமறைக்க, ருசியாவைக் கைகாட்டுகின்றது. ஐரோப்பாவின் பொருளாதாரம் இராணுவப் பொருளாதாரமாக மாறி வருகின்றது. உக்ரனை; யுத்தத்தைத் தொடர்வதன் மூலம் நீடித்த இராணுவ உற்பத்திக்குள், இராணுவச் சமூகப் பொருளாதார விரிவாக்கத்துடன், உலகில் சவால் மிக்க புதிய ஏகாதிபத்திய முரண்பாட்டை தோற்றுவிக்கின்றது. 

சீனா, அமெரிக்கா, ருசியா என்று நீடித்த உலக ஒழுங்குக்குள், ஐரோப்பா என்ற புதிய நான்காவது முகாமுக்கு இடையிலான மோதலாக மாறவுள்ளது. இந்தியா இதில் ஐந்தாவதாக இணையும் வாய்ப்புள்ளது.            

அரபு இராணுவக் கூட்டமைப்பு, ஆபிரகாம்…   
 
அரபு நாடுகளை மையப்படுத்தி அரபு இராணுவக் கூட்டமைப்பு அல்லது ஆபிரகாம், அல்லது  அரபு நேட்டோ அல்லது இஸ்லாமிய நேட்டோ என்று, நேட்டோவுக்கு நிகரான இராணுவக் கட்டமைப்பை உருவாக்க முனைந்த அமெரிக்காவின் முயற்சியை ஈரான் யுத்தம் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. 

எதிர்பாராத ஈரானின் பலமான எதிர்தாக்குதல், அமெரிக்காவை நிலைகுலைய வைத்துள்ளது. நேட்டோவை உதவிக்குக் கோருமளவுக்கு அமெரிக்கா தடுமாறுகின்றது. யூத மேலாதிக்கத்தை அரபுலகில் நிலைநிறுத்த இஸ்ரேல், அமெரிக்காவின் ஒற்றைத் துருவ ஏகாதிபத்தியக் கனவுடன் தனது மேலாதிக்கக் கனவுகளுக்காக யுத்தங்களைத் தூண்டிவிடுகின்றது.

அமெரிக்க ஆளும் வர்க்கங்களிலுள்ள யூதர்களைக் கொண்டு, இஸ்ரேல் தனது யுத்தத்தை நியாயப்படுத்துகின்றது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற அரசியல் வேறுபாடின்றி, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு யுத்தங்களுக்காகவும், மனிதவிரோத செய்பாட்டுக்காக ஒன்றுபட்டு நிற்கின்றனர்.        
இதன் விளைவாக ஈரான் என்ற நாடும், அரபு நாடுகளிலும் அமெரிக்காவுக்கு எதிரான கொரிலா யுத்தப் பிரதேசமாக மாறியுள்ளது. ஈரான் உலகப் பொருளாதாரத்துக்கு எதிரான கொரிலா பிரதேசமாக மாறிவிடுமாயின், உலகளவில் புதிய பரிணாமத்துக்கு இது புதிய தூண்டுகோலாக மாறிவிடும்;. 

ஈரானின் எதிர்வினையானது அரபுலகின் மீதான அமெரிக்காவின் மேலாதிக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கி வருகின்றது. நடந்து கொண்டிருக்கும் யுத்தத்தில் ஏற்கனவே தோற்றுவிட்ட அமெரிக்கா, ஈரான் ஆக்கிரமிப்பில் வெற்றி பெற்றாலும், அரபு உலகம் மீதான அமெரிக்காவின் எதிர்காலம் முன்பைப் போல் இருக்கப் போவதில்லை.

இஸ்ரேலுடன் இணைந்த ஆபிரகாம் இராணுவத்திட்டம் சாத்தியமற்றாகியுள்ளது. யூத - இஸ்லாமிய முரண்பாடுகள், பாலஸ்தீன நாட்டை மையப்படுத்திய முரண்பாடு, தொடர் உள்நாட்டு யுத்தங்களுக்குக் களமாக இருக்கின்றது. அமெரிக்கா -  இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிரான ஈரானின் எதிர்வினையானது, அரபு மக்களால் கொண்டாடப்படும் நிகழ்வாக மாறியிருக்கின்றது. இஸ்ரேல் மக்களின் ஒரு பகுதியினர் இந்த யுத்தத்துக்கு எதிராகவும், பாலஸ்தீன நாட்டை அமைக்கக் கோரும் போராட்டங்களை இஸ்ரேலுக்குள் நடத்துகின்றனர்.

மக்கள் யுத்ததுக்கு எதிராக இருப்பதும், அமெரிக்கா தோற்க வேண்டும் என்றும் உலகில் பெரும்பான்மையான மக்கள் விரும்புகின்றனர். மறுபக்கம் மக்கள் ஏ.ஐ (யுஐ) மூலம் யுத்தத்தை நடந்துகின்றனர். அமெரிக்கா - இஸ்ரேல் தங்கள் இழப்புகளை மூடிமறைக்க, மக்கள் போலியான இழப்புகளைக் கொண்ட யுத்தத்தை ஏ.ஐ மூலம் காட்சிப்படுத்துகின்றனர்;. எது உண்மை, எது பொய் என்பதைப் பிரித்தறிய முடியாத சமூக வலைத்தள யுத்தம்,  அமெரிக்க - இஸ்ரேல் தோல்வியை பறைசாற்றும் பொதுச் சமூகக் கருத்தியலை உருவாக்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பற்றிய பிரமையை நொருக்கி வருகின்றது.                

ஈரானிய மத ஆட்சியாளர்கள் 

ஜனநாயக விழுமியங்களற்ற ஆணாதிக்க மத ஆட்சி, ஈரானிய மக்களை ஒடுக்கியாளுகின்றது. மதத்தின் போர்வையில் ஆண்களின் அதிகாரத்தைக் கொண்ட ஈரானிய ஆட்சி, அமெரிக்கா - இஸ்ரேலின் கொடுமையான ஏகாதிபத்தியத்தனத்தை தனக்கு எதிரான எதிரியாக காட்டி தன்னை தக்கவைத்திருக்கின்றது.

அமெரிக்கா - இஸ்ரேல் அரபுலகில் உருவாக்கியுள்ள அடிமைத்தனத்தையும், துரோகத்தையும், ஆக்கிரமிப்பையம் காட்டி, ஈரானிய மக்களை விழிபு;புற முடியாத வண்ணம் ஈரானின் மத ஆட்சியாளர்கள் தங்களைத் தக்கவைத்துள்ளனர்.

அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல் ஈரானிய மத ஆட்சியைப் பலப்படுத்தியிருக்கின்றது. அமெரிக்கா - இஸ்ரேல் உருவாக்க முனைந்த பொம்மையாட்சியும், அடிமைதனத்தையும், துரோகத்தையுமே.. கோரி நிற்கின்றது. அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிரான மக்கள் போராட்டம், பொம்மையாட்சி விசுவாசிகளைத் தனிமைப்படுத்துகின்றது.

மக்கள் சுயமாக தமது ஜனநாயக உரிமைக்காகப் போராட முடியாத வண்ணம், அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலும், ஈரானின் எதிர்தாக்குதலும் அணிவகுத்து நிற்கின்றது.

அமெரிக்காவின் பொம்மை ஆட்சியை மக்கள் கோருவதாகக் கூறும் பித்தலாட்டத்துக்கு எதிராக, மக்கள் அணிவகுத்து நிற்க, அதை மத ஆட்சிக்காக நிற்பதாக ஜனநாயக விரோத மதவாதிகளும், ஈரானிய ஆட்சியாளர்களும் கூறிவருதற்கு எதிராகவே மக்கள் அணிதிரளுகின்றனர்.    

மக்கள் சுயமாக அணிதிரள்வதன் மூலம், மக்கள் தமது விடுதலையைப் பெறமுடியும். அமெரிக்கா - இஸ்ரேல் பொம்மையாகவோ, ஈரானிய ஆட்சியாளர்களின் மத நம்பிக்கைக்கு விசுவாசமாகவோ இருப்பதோ, அடிமைத்தனத்தைக் கோருவதே.   

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி 
20.03.2026