1986 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மாணவர்கள், இயக்கங்களின் ஜனநாயக விரோதத்துக்கு எதிராகப் போராடிய போது, புலிப் பாசிட்டுகள் போராடுபவர்களை எல்லாம் கொன்று வந்தனர். விஜிதரன் புலிகளால் காணாமலாக்கப்பட்டதை எதிர்த்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராடியபோது, நடந்த சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் விமலேஸ்வரனுடன் கலந்து கொண்ட எங்கள் செல்வநாயகம் இன்று எம்முடன் இல்லை.
19.11.1986 அன்று உண்ணாவிரதம் தொடங்க முன் ஆற்றிய உரை. (நன்றி :- இலங்கை தமிழர் போராட்ட வரலாறு : அரசியல் அனாதைகள் - பக்கம் 191)
19.11.1986 : "எங்களுக்கு சிங்களத் துப்பாக்கி தமிழ் துப்பாக்கி என்ற வேறுபாடு கிடையாது" - செல்வநாயகம்
"என் உயிரினும் இனிய அன்புத் தோழர்களே! உங்களுக்கு என் அன்பான வணக்கம்."
![]()
![]()
![]()
'இந்த ஈழவிடுதலைப் போராட்டத்தின் வரலாற்றிலே 1970 களில் இந்த ஈழவிடுதலை போராட்டம் ஒரு ஆயுதம் தரித்த போராட்டமாக என்று ஆரம்பிக்கப்பட்டதோ அன்றிலிருந்து போராட்டத்தின் தொடர்ச்சியாக அராஜகத்தன்மைகளும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.
எத்தனையோ தியாகிகளின் எத்தனையோ போராளிகளினதும் தியாகத்தினால் கட்டியெழுப்பப்பட்ட இந்த ஈழவிடுதலைப் போராட்டத்திலிருந்து அராஜகவாதிகள் இன்னும் ஒழிந்தபாடாக இல்லை. இவர்களுக்கு ஒரு முடிவுகட்ட வேண்டும். ஏனெனில் பல்வேறு தங்களது இனிய வாழ்வை அர்ப்பணித்துப் போராடிய போராளிகள் எத்தனை பேர் இவர்களினால் கொலை செய்யப்பட்டார்கள். எத்தனை பொதுமக்கள் இவர்களினால் அடித்து விரட்டப்பட்டார்கள். எத்தனையோ பொதுமக்கள் எத்தனையோ கிராமங்கள் எத்தனையோ பொதுமக்களுக்கு இவர்கள் ஜனநாயக உரிமைகளை வழங்க மறுத்துள்ளார்கள். இதன் தொடர்ச்சியாகவே எங்கள் மாணவன் விஜிதரன் கடத்தப்பட்ட விடயத்தை நாம் பார்க்க வேண்டியுள்ளது.
ஏனெனில் விஜிதரன், யாழ் பல்கலைக்கழக மாணவன் விஜிதரன் கடத்தப்பட்டதோடு மட்டும் அராஜகத்தன்மை தோற்றம் பெற்றது அல்ல. ஈழவிடுதலைப் போராட்டம் என்று தோற்றம் பெற்றதோ அன்றிலிருந்து இந்த அராஜகத்தன்மைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. ஈழவிடுதலைப் போராட்டம் தொடர்ந்து என்றாவது ஒரு மக்கள் விடுதலைப் போராட்டம் வென்றெடுக்கப்பட வேண்டுமானால் இந்த அராஜகவாதிகள் அந்நியப்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களாகிய நாம் இந்த ஜீவமரணப் போராட்டத்தில் இறங்கியிருக்கும் உண்மையான நோக்கம் தனியொரு எங்கள் மாணவன் விஜிதரன் கடத்தப்பட்ட சம்பவத்திற்காக மட்டுமல்ல. ஏனெனில் அவன் கடத்தப்பட்ட சம்பவம் ஈழவிடுதலைப் போராட்டத்தில் தொடர்ந்து வந்த அராஜகத்தின் தொடர்ச்சித் தன்மையாகவே பார்க்க வேண்டியுள்ளது. அந்த வகையில் விடுதலைப் போராட்டத்திலிருந்து எவ்வளவு தூரத்துக்கு இந்த அராஜகவாதிகள் விரட்டியடிக்கப்படுகின்றார்களோ அது அப்போது தான் எமது விடுதலைப் போராட்டம் உண்மையான மக்கள் விடுதலையை வென்றெடுத்து மக்களுக்கு ஜனநாயக உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கவும் முடியும்.
இன்று எங்களுடைய விடுவிக்கப்பட்ட பிரதேசம் என்று சொல்லப்படுகின்ற இந்த யாழ் குடாநாட்டிலே பேச்சுச் சுதந்திரத்துக்கு இடமில்லை. பத்திரிகைச் சுதந்திரத்துக்கு இடமில்லை. ஒருவர் தனது சிந்தனையின்படி ஒரு அரசியல் இயக்கம் நடத்த முடியாது. ஈழவிடுதலைப் போராட்டம் மாணவர் போராட்டம் என்று இன்று கட்டியெழுப்பப்பட்டது. அதை இந்த அராஜகவாதிகள் உணர்வதாயில்லை. பல்வேறு மாணவர் இயக்கங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. பல்வேறு அரசியல் இயக்கங்கள் தமது சுயசிந்தனையின் அடிப்படையில் அரசியலில் ஈடுபட ஒரு தனிமனிதனுக்கு உரிமையுண்டு. ஆனால் அந்த உரிமை இன்று ஈழத் தேசத்தில் இல்லை. இதைத் தொடர்ந்தும் அனுமதிக்கப் போகின்றீர்களா என் இனிய நண்பர்களே. இன்றைய ஜீவமரணப் போராட்டத்தில் நாம் தோற்றுப் போகலாம். அல்லது நாம் இறந்து போகலாம். ஆனால் நீங்கள் அப் போராட்டத்தை மீண்டும் முன்னெடுத்துச் செல்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கின்றேன்.
ஈழதேச விடுதலைப் போராட்டத்தின் அடிப்படை ஜனநாயகமே. ஜனநாயகத்தை வழங்க போராடாதுவிட்டால் அங்கு உண்மையான தேசிய விடுதலை பெற்றெடுக்க முடியாது. இந்த சிறிலங்கா அரசு எந்த உரிமைகளை வழங்க மறுத்ததோ அதற்கெதிராக போராட வெளிக்கிட்டது தான் எமது விடுதலைப் போராட்டம். ஆனால் இன்று அதே அராஜகத்தன்மைகளால் இன்று எம் மக்களுக்கும் மறுக்கப்படுகின்றன.
எங்களுக்கு சிங்கள இராணுவம் அல்லது சிங்களத் துப்பாக்கி தமிழ் துப்பாக்கி என்ற வேறுபாடு கிடையாது. இரண்டும் உரிமையை மறுக்கும் போது இரண்டும் எங்களுக்கு ஒன்றே. அந்த வகையில் அராஜக சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும். அந்த அடிப்படையிலே தான் நாங்கள் இன்று இப் போராட்டத்திலே ஈடுபட்டிருக்கின்றோம். ஈழ தேச விடுதலைப் போராட்டத்தை நேசிப்பவன் என்ற வகையில் உங்களுக்கு ஓர் இறுதி வேண்டுகோளை விடுக்கலாம் என்று நினைக்கின்றேன். இவ் ஜீவ மரணப் போராட்டத்தில் நாங்கள் இறந்து போகலாம். ஆனால் எங்களுடைய கருத்துக்களை நீங்கள் எங்களுடைய கிராமம் கிராமமாக பட்டி தொட்டியாக கொண்டு செல்ல வேண்டும். இன்று நாங்கள் அந்தக் கொட்டிலுக்குள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கலாம். ஆனால் உங்களுடைய பணி தான் மேலானது. கிராமம் கிராமமாக நீங்கள் எங்களுடைய கருத்துக்களை கொண்டு செல்ல வேண்டும். அப்பொழுது தான் கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் அது சக்தியாக உருவெடுக்கும். உண்மையான புரட்சி அப்போது தான் வெடிக்கும். ஜனநாயகத்தை மீட்பதற்காக போராடும் இறுதி ஜீவன்கள் இந்த ஏழு பேராகவே இருக்கட்டும். நன்றி வணக்கம்." என்று அவரது உரை நிறைவு பெறுகிறது."
செல்வநாயகம் ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கத்தின் மாணவர் அமைப்பின் கெஸ் உறுப்பினராக இருந்தவர். ஈ.பி.ஆர்.எல்.எவ். ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியலை முன்வைக்காது - இந்திய கூலிப்படையாக இயங்கியதற்கு எதிராக, தனது கருத்தை முன்வைத்து அதில் இருந்து விலகி - ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தும் அரசியலை முன்வைத்தவர்.
பல்கலைக்கழகத்தில் என்.எல்.எவ்.ரி.யின் புதிய ஜனநாயக மாணவர் அமைப்புடன் தொடர்பில் இருந்ததுடன், ராக்கிங் எதிர்ப்பு போராட்டத்தில் தன்னை முன்னிறுத்திக் கொண்டவர். இந்த அரசியல் நோக்கில் இருந்தே, சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் தன்னை முன்னிறுத்தியவர்.
சமூகத்தில் உயிர் மூச்சை பாதுகாக்க, வீதிவீதியாக அலைந்த கொலைகார புலிகளின் துப்பாக்கி (மரணத்தைக்) கண்டும் அஞ்சாது போராடிய மனிதன் இன்று எம்முடன் இல்லை.
கொலைகார புலிகளின் பாசிச வெறியாட்டத்தை அடுத்து போராட்டம் வன்முறை கொலைகள் மூலம் ஒடுக்கப்பட்டது. இதன் பின்னான செல்வநாயகம் வடமாகாண ஆளுநரின் முன்னாள் உதவிச் செயலாளராக, முன்னாள் பிரதித்திட்டப் பணிப்பாளராக, திட்டமிடல் செயலகம் வடக்கு மாகாணம், ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு முன்னாள் உதவி அரசாங்க அதிபராக இருந்தவர்.
![]()
![]()
பாசிசத்துக்கு எதிராகப் போராடிய செல்வநாயகத்தின் மரணச் செய்தி
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode