Language Selection

சிறி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

«புதியதோர் உலகம்» எழுதியிருக்கக் கூடாது. கேசவன் அல்லது (நோபர்ட்) டொமினிக் என்ற «புதியதோர் உலகம்» நாவலின் ஆசிரியர், புளட் இயக்கத்தின் தலைமைப் போராளிகளில் ஒருவர். தமிழர்களின் ஆயுதம் தாங்கிய தேசியப் போராட்ட இயக்கங்களில் ஒன்றான,  அரசுக்கு எதிராகப் போராடவெனப் புறப்பட்ட புளொட் இயக்கத்தினை இவ்வாறான நாவல் ஒன்றினை எழுதி காட்டிக் கொடுத்திருக்கக் கூடாது. தேவையில்லாத ஒரு வேலை. எனவே அவர் ஒரு துரோகி. புளட்டை அம்பலப்படுத்தியதின் மூலம் அரசைப் பலப்படுத்தியிருக்கக் கூடாது. எனவே அவர் ஒரு அரச ஒத்தோடி. ஆகையால் புளட் இவரைப் போட்டுத்தள்ளியிருக்க வேண்டும். தப்பிவிட்டார். அரச ஒடுக்குமுறையே எல்லாவற்றுக்கும முதற்காரணம. எனவே அதற்காகப் புளட்டையும் பொறுத்துப் போயிருக்க வேண்டும். புளட்டும் கொன்று புதைத்தது  தான். அதையெல்லாம் புறந்தள்ளிப் புளட்டினைத் அப்படியே தொடர விட்டிருக்க வேண்டும். அவர் தொடர்ந்து புளட்டோடு இயங்கியிருக்க வேண்டும். புளட் புதைத்த சுழிபுரம் ஆறு இளைஞர்களையெல்லாம் தோண்டி எடுத்து புளட்டின் முகத்தை அம்பலப்படுத்தியதெல்லாம் அரச ஒத்தோடிகளின் வேலை. ஒரத்தநாட்டில் உழன்றியில் ஏற்றி தலைகீழாக தொங்கவிட்டு நடாத்தப்பட்ட சித்திரவதைகள் மற்றும் கொலைகளை எல்லாம் புறந்தள்ளி இருக்க வேண்டும், தமிழ் தேசியம் என்ற குறிக்கோள் குழம்பாது இருப்பதற்காக.

ஆனால் புலிகள் புதியதோர் உலகம் என்ற நாவலை புளட்டின் மேலான எதிர்ப்பிரச்சாரத்துக்காக மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றனர். என்னே ஆச்சரியம்! அவற்றைப் பிரச்சார நோக்கத்துக்காக பயன்படுத்திய புலிகள் புளட் செய்தவைகளை விட மோசமாகவே சித்திரவதைக் கூடங்களையும் படுகொலைகளையும், மாற்று இயக்கத்தினரையும் சுட்டும் உயிரோடு எரித்தும் தாண்டவம் ஆடினர்.

எப்படி புளட் செய்தவைகளை அம்பலமாக்கியிருக்கக் கூடாதோ, அதேமாதிரி புலிகள் செய்தவற்றை யாழ் பல்கலைக்கழக மனிதவுரிமைகளுக்கான ஆசிரியர் சங்கம் முறிந்தபனை என்ற ஆவண நூலின் வாயிலாக எழுதுவதற்கு கனவிலும் நினைத்திருக்கக் கூடாது. தமிழ்த்தேசியத்தின் மேல் அரசு மேற்கொண்ட ஒடுக்குமுறையுடன் இவையெல்லாம் ஒப்பிட முடியாதவை. அவற்றைப் பேசுபவர்கள் அன்றாகிலும், இவ்வளவு அழிவுகளுக்குப் பின்னரும் இன்றாகிலும் அரச ஒத்தோடிகளே. துரோகிகளே.

எனவே முறிந்தபனையின் ஆசிரியர் ரஜனி திரணகமவை போட்டுத் தள்ளியது என்ன ஒரு பெரிய பிரச்சனையா? அவற்றையெல்லாம் ஏன் தூக்கித் தூசு தட்டுகிறீர்கள்? 

துணுக்காய் எல்லாம் ஒரு துரும்பு கூட கிடையாது, முள்ளிவாய்க்காலோடு ஒப்பிடும் போது. அவற்றைப் பேச இது சரியான நேரமில்லை.

இவைகளெல்லாம் அன்றும் பேசப்பட்டன. எதிரான போராட்டங்களாக எழுந்தன. ஆனால் அடக்கப்பட்டன படுகொலைகளாலும் சிறைவதைகளாலும் அச்சுறுத்தல்களாலும். 

சரி தானே அவ்வாறு குரல்கள் எழாதவாறு படுகொலைகள் மூலம் தடுக்கப்பட்டது? 
தமிழ் தேசியத்துக்கு முன்னால் என்ன ஜனநாயகக் குரல்கள். அதெல்லாம் தமிழ்தேசிய வெற்றிக்கு எதிரானவை. ஏதோ ஒரு வழியில் கூட்டிக் கழித்துப் பார்த்தால் அரசுக்கு சார்பானவை.

புளட்டினை அம்பலப்படுத்தாமல், அதிலிருந்து போராடித் தோற்று நீங்கள் வெளியேறி இருக்கவே கூடாது. அப்படியான சூழலிலிருந்து வெளியேறியவர்கள் இன்று தங்களை அரசியல் தற்கொலை செய்கிறார்கள் எப்படியெனில் அரசு செய்தவை தப்பு, அரசுக்கெதிரான எழுச்சியில் உருவாகிய இயக்கங்கள் செய்தவைகள் வெறும் தவறுகள் என்று கூறுவதன் ஊடாக. 

இந்த விவாதத்தில் என்னதான் தப்பு கண்டீர்கள்? 

நீங்கள் எல்லாம் சிறைமுகாங்களையும் சித்திரவதைகளையும் பொறுப்பேற்று நடத்தியிருக்க வேண்டும். அதுவே அரசு ஒத்தோடிகளைக் களைந்தெறியும் தமிழ் தேசியக் கடமை. ஏன் வெளியேறினீர்கள்?.
 
அரச ஒடுக்குமுறைக்கு எதிராக மட்டுமே யாரும் வாய் திறக்கலாம். போராடலாம். இயக்கங்களின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடியது இயக்கங்களை அரசு முன்னிலையில் பலவீனப்படுத்தும். மறுபுறத்தில் அதன் விளைவாக அரசு பலம் பெறும். இதனைச் செய்ய மறுத்து வாய் திறந்தால் நீங்கள் அரச ஒத்தோடிகள். அரசு சிறையிலிடுவதும் சித்திரவதையும் செய்வது போலவே இயக்கங்களை நோக்கி கேள்வி எழுப்பினால் சிறைகளும் சித்திரவதைகளும் கொலைகளுமே நியாயம். 

என்ன இப்போதாவது புரிகிறதா? ஏனெனில் அது தமிழ் தேசியத்துக்கு குந்தகம்.

புளட் இயக்கத்தின் போக்குகளை அம்பலப்படுத்தி எழுதிய புதியதோர் உலகம் என்ற நாவலை புலிகளே பெருமளவில் விநியோகித்தார்கள். புளட்டினை அப்புறப்படுத்த புதியதோர் உலகம் நியாயம் வழங்கும் என்று அவ் முனைப்பாகவே அதனை விநியோகித்தார்கள். அது நியாயம் தானே?

இங்கெல்லாம் முரணைத் தேடாதீர்கள். புதியதோர் உலகம் நாவலின் படைப்பாளி கேசவன் புலிகளாலே கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டார். புளட்டை அழிக்க புதியதோர் உலகம் நாவல் தேவை. முரணாக அதன் படைப்பாளியே கொல்லப்பட்டார்.

விட்டு விடுங்கள். அவற்றையெல்லாம் விட்டுவிடுங்கள். சும்மா சும்மாவெல்லாம் பொருக்குகளைத் தூக்கிப்பிடிக்காதீர்கள். தமிழ்தேசியத்துக்கு முன்னால் எந்த இழப்பும் ஒரு பொருட்டல்ல. 

கேசவனும் புளட்டிலிருந்து பிரிந்து சென்ற ஏனையோரும் தீப்பொறிக் குழு என்றழைக்கப்பட்டனர். அவர்களைக் கண்ட இடத்திலேயே சுடுவதற்கென துப்பாக்கிதாரியாகச் சல்லடை போட்டுத் தேடியலைந்து போட்டுத்தள்ள புளட்டில் இயங்கிய புளட் மத்தியகுழுவின் செல்லப்பிள்ளை, பின்னாளில் தாரகி என அறியப்பட்ட ஊடகப் பிரமுகர் எஸ்.ஆர்.
.
கேசவன் குழுவினரை போட்டுத்தள்ள துப்பாக்கி சகிதம் திரிந்த, புளட்டின் மத்தியகுழு தூக்கி வளர்த்த பிள்ளை தாரகி, பின்னாட்களில் பிரபாகரனின் பிள்ளையானார். அரசியல் சுழல்கிறது. தமிழ் தேசியத்தைக் காப்பாற்ற குத்துக்கரணம் எப்படியடித்தாலும் அதிலென்ன தப்பு காண வந்துவிட்டீர்கள்?

«முறிந்தபனை» எழுதியிருக்க கூடாது

«வதைமுகாமில் பெண்கள்» எழுதியிருக்க கூடாது.

«ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்» எழுதியே இருக்கக் கூடாது.

ஏன் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவந்த «சரிநிகர்» பத்திரிகை பத்தி பத்தியாக எழுதித்தள்ளியிருக்கவே கூடாது? சரிநிகர் நடத்தியதெல்லாம் வீண் வேலை.

புளொட்டிலிருந்து தீப்பொறி வெளியேறி இருக்கக் கூடாது.

அரசை விட மனிதவுரிமைகளைக் கடைப்பிடிக்கும் கடப்பாடு மக்களுக்காக போராடவெனப் புறப்பட்ட அத்தனை இயகக்கங்களுக்கும் இருக்கவேண்டியது என்ன கட்டாயம்? தமிழ் தேசியம் என்ற புனிதத்தால் இயக்கங்களின் தவறுகள் கழுவப்பட்டுவிடும். தெரியாதா உங்களுக்கு?

புலியை விமர்சித்தால் அது அரசுக்கு சார்பு தெரியாதா உங்களுக்கு?

இயக்கங்களால் தமிழ்மக்கள் இழந்தது இறந்தது கொல்லப்பட்டது அதுவெல்லாம் தியாகங்களே. தமிழ் தேசியத்தை வெல்ல கொடுக்கப்பட்ட விலைகள். எங்கேயிருந்து வந்தீர்கள் தூக்கிப் பிடிக்க?

இயக்கங்களின் ஜனநாயக விரோத போக்குகளுக்கு எதிராக எழுந்த மக்கள் எழுச்சி புலிகளை "அரசியல் அனாதைகள்" ஆக்கியிருக்குமல்லவா? தமிழ் தேசியமே தவிடுபொடியாகப் போயிருக்குமல்லவா?

இலங்கையின் சிங்களப் பேரினவாத அரசுகள் தமிழ் மக்கள் மேல் கட்டவிழ்த்துவிட்ட அனைத்து ஒடுக்குமுறைகளையும், முப்படைகளையும் கொண்டு ஏவிவிடப்பட்ட படுகொலைகளையும், யுத்தகால கொடுமைகளையும் கொலைகளையும் தமிழரங்கம் இணையத்தளம் அரசியல் ஆக்கங்களினூடு வெளிக்கொணர்ந்து ஆவணப்படுத்தியிருக்கின்றது. இது தேவையா?

அதேபோலவே சிங்களப் பேரினவாத அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை மற்றும் தமிழ் மக்கள் மேலான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுந்து வந்த தமிழ் மக்களின் அரசியல் கொந்தளிப்பு ஈற்றில் ஆயுத வடிவம் எடுத்தபோது உருவாகிய ஆயுத இயக்கங்களில் பிரதானமான இயக்கங்கள், யாருக்காக தம்முயிர் ஈந்து போராடப் புறப்பட்டார்களோ அந்த தமிழ் மக்களையே ஒடுக்கும், எஜமானத்துவ அதிகார கொலைகார இயக்கங்களாகவும், அந்நியக் கைக்கூலிகளாகவும் மாறி தமிழ் மக்களை தத்தமது பாசிச ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கினார்கள். அந்த இயக்கங்கள் மக்கள் மேல் செய்த ஒடுக்குமுறைகளையும் தமிழரங்கம் வெளிக்கொணர்ந்தது. 

வேறு வேலையே இல்லையா உங்களுக்கு?

தமிழ் மக்களுக்காக போராடுவதாக புறப்பட்ட இவ்வாறான இயக்கங்கள் நடாத்திய பாசிசப் படுகொலைகள் தொடக்கம், மாற்று இயக்கங்களின் மேலான குரூரப் படுகொலைகளினூடான அழித்தொழிப்புகள், அனுராதபுரம் மற்றும் சிங்கள கிராமங்களில் அப்பாவிச் சிங்கள மக்கள் மேலான படுகொலைகள், விடுதலை இயக்கங்கள் என சொல்லப்படுவவை செய்யக்கூடாதவை. வேறும் கைங்கரியங்களான போதைவஸ்து வியாபாரம், கடத்தல் என்பவற்றை மக்களது சமுதாய அழிவின் மேல் நிறுவிக்கொண்டவர்கள் அதனை தத்தமது இயக்கத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், இன விடுதலைப் போராட்டத்தில் தவிர்க்கமுடியாதவை எனவும் நிறுவிக் கொண்டார்கள். 

ஏன் இவையெல்லாம் பாரதூரமானவையா?

சிங்கள அரசுகளால் அதன் இராணுவ பொலிஸ் படைகள் ஏவிவிடப்பட்டு தமிழர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள், இனவொடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று கொதித்தெழுந்த இயக்கங்களால் சிங்கள பேரினவாத இராணுவத்துக்கெதிராக ஏந்திய அதே துப்பாக்கிகள் தமிழ் மக்கள் மேலான அதிகாரத்தை நிறுவுவதற்கும் இறுதியில் பாசிச வடிவமெடுத்து சிறைக்கூடங்கள், சித்திரவதைகள், படுகொலைகள் மூலம் பாசிச அதிகார சிம்மாசனத்தை அடைவதற்காக எவ்வாறு தமிழ் மக்கள் நோக்கித் திருப்பப்பட்டது என்பதை “அரசியல் அனாதைகள்” எனும் நூல் திகதி வாரியான வரலாற்று ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு தொகுத்தளிக்கிறது. 

தூக்கி ஒரு மூலையில் போடுங்கள். என்ன தேவைக்கு இவையெல்லாம்? அரசுக்கு சார்பான தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்களின் துரோகத்தனம் இவை.

அரச படைகளால் ஒரு தமிழன் என்பதற்காக எவர்கள் மேலும் ஒரு சின்ன உரசல் வந்தால் கூட அதற்கெதிராய் துடித்தது மட்டுமல்லாமல், ஆயுதப்போர் நிகழ்த்தவென இயக்கங்களை உருவாக்கி வளர்த்த தமிழினம், ஆயுதம் ஏந்தி யுத்தத்துக்கு தயாரான தமிழினம், தமது விடுதலைக்காக போராடுவதாக கூறிக்கொண்ட தம்முள் இருந்து எழுந்த தமது சொந்த இயக்கங்களாலேயே பல ஆயிரம் பேர் படுகொலைக்காளானபோது அச்சத்தில் உறைந்து மவுனமாகிப் போனது எவ்வாறு? 

அரசுக்கு எதிராக அச்சமின்றி ஆயுதம் ஏந்த எழுந்த மக்கள் தமிழ் தேசியத்துக்காக மவுனித்தார்கள். இதிலென்ன தவறு?

யாரும் இந்தப் போக்குகளை மவுனமாக அங்கீகரித்துக் கொண்டிருந்தார்களா? விடுதலை இயக்கங்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களா? மக்கள், விடுதலை இயக்கங்களிடமே தமது கருத்து, எழுத்து மற்றும் பேச்சு சுதந்திரங்களை இழந்தால் அந்த இயக்கங்கள் விடுதலை இயக்கங்களா? அரச ஒடுக்குமுறைக்குள்ளான மக்கள், விடுதலை இயக்கங்களால் ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்பட்டால் அவ்வியக்கங்களுக்கும் அரச இராணுவ ஒடுக்குமுறைக்கும் வேறுபாடு இல்லையா? 

அரசுக்குத்தான் சட்டரீதியான வகையில் பொறுப்பு இருக்கின்றதே தவிர, அந்த அரசை எதிர்த்து மக்களுக்காக போராட வந்தவர்களுக்கு, மக்களைத் தமிழ் தேசியத்தின் பெயரால் ஒடுக்குவதற்கு அத்தனை உரிமையும் உண்டு. அன்றும் சரி இன்றும் சரி என்றும் இவற்றையெல்லாம் கிளறி கேள்வி கேட்கவே கூடாது.

இராணுவமும் கடத்தியது, சிறையிட்டது, சித்திரவதை செய்தது, படுகொலை செய்தது. இயக்கங்களும் கடத்தியது சித்திரவதை செய்தது படுகொலைகள் செய்தது. அப்படியானால் யாரிடமிருந்து விடுதலை? தமிழ் தேசியத்தின் வெற்றிக்கு பாசிசமும் ஒரு வழியானால் என்ன தவறு? 

ஹிட்லர் செய்யவில்லையா? யூதர்கள் இன்று விட்டுவைக்கப்பட்டதனால் பாலஸ்தீனத்தைப் பாருங்கள். ஹிட்லர் இழைத்தது தப்பா?

நிராயுதபாணியாய் வெலிக்கடைச் சிறையிலிருந்தவர்களை கூட்டுப் படுகொலை செய்தது இலங்கை அரசு.
«கந்தன் கருணை» என்ற தனது சித்திரவதைக்கூடத்தில் சிறைவைக்கப்பட்டவர்களை கூட்டுப்படுகொலை செய்தது விடுதலை இயக்கமா? துணுக்காய் சித்திரவதை முகாம் மற்றும் ஏனைய இடங்களில் இயங்கிய சித்திரவதை முகாம்கள், படுகொலை முகாம்களில் அழித்துப் புதைக்கப்பட்டவர்கள், எரியூட்டப்பட்டவர்கள் எல்லாம் அரச உளவாளிகளும் ஒத்தோடிகளும் என  பட்டம் கட்டப்பட்டார்கள். 

அரசு பயங்கரவாதிகளைக் கைது செய்கிறோம். அழிக்கிறோம் என்று ஒற்றைச் சொல்லில் கூறுவதைப் போலவே. இயக்கங்கள் செய்ததில் என்ன தவறு காண்கிறீர்கள்?

இலங்கை அரசினை நோக்கி கேள்விகள் எழுப்பியோர், போராடியோர், ஆயுதம் ஏந்தியோர் அரசுக்கு விரோதிகளானார்கள்.
கொள்கை, கோட்பாடு மற்றும் இயக்க நடவடிக்கைகள் குறித்து நியாயமான கேள்விகள் எழுப்பினாலே இயக்கங்களுக்கு மக்கள் துரோகிகள் ஆனார்கள். ஏன்? எவ்வாறு? அப்படியானால் அரசுக்கும் விடுதலை இயக்கங்களுக்கும் என்ன வேறுபாடு? 

இது தெரியவில்லையா? அரசு தமிழ் தேசியத்தின் எதிரி. இயக்கங்கள், மக்களுக்குள் ஜனநாயகப் போர்வையில் ஒழிந்துள்ள அரச ஒத்தோடிகளை மாற்று இயக்கத்தினரை பகிரங்க விசாரணைகள் ஏதுமின்றி கைது செய்யலாம், காணாமலாக்கலாம் மரணதண்டனையும் வழங்கலாம். அரசு செய்யும் போது இயக்கங்கள் ஏன் செய்யக்கூடாது?

தோன்றிய இயக்கங்களுக்கெல்லாம் வரலாறு உண்டு. ஆனால் அவை எல்லாமே ஒடுக்கப்பட்;ட மக்களின் போராட்டங்களை முடக்கின, அடக்கின, ஒடுக்கின. மக்கள் சார்ந்து எந்த இயக்கமும் முன்னின்றதில்லை. மக்கள் விரோதமே தலைவிரித்தாடியது. புளட் இயக்கத்திலிருந்து வெளியேறிய போராளிகள் பலர் மற்ற இயக்கப் போராளிகள் எவரையும் விட ஒப்பிடமுடியாதளவுக்கு, அவ்வியக்கத்தின் தோற்றத்திலிருந்தே அதன் மக்கள் விரோதக் கூறுகளையும், அராஜகப் போக்குகளையும், படுகொலைகளையும் உள்ளியக்க முரண்பாடுகளால் அது எவ்வாறு மக்கள் வழி போராட்டத்திலிருந்து தவறிப்போய் தன்னை மறுமுனையில் நிறுத்தியது என்பதனை வேறெந்த இயக்க முன்னாள் போராளிகளும் செய்யாதளவுக்கு நிறையவே தங்களது எழுத்துக்களாலும் பேச்சுக்களாலும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதன் அரசியல் கூறுகள் அனைத்தும் அம்பலப்படுத்தப்பட்டிருக்காவிட்டாலும்,  புதியதோர் உலகம் என்ற நூலிலிருந்தும் ரெசோ மாணவர் அமைப்பு தன்னை சுயாதீனப்படுத்திக் கொண்டதிலிருந்தும் இந்த புளட் இயக்கத்தின் மீதான விமர்சனப் போக்கு ஆரம்பமானது. இயக்கத்தினை விட்டு வெளியேறிய அதன் சொந்தப் போராளிகளாலேயே நிறைய வெளிப்படுத்தப்பட்டதாக முன்னிற்பது புளட் இயக்கத்தின் கடந்தகாலமே. வேறெந்த இயக்கத்திடமிருந்தும் இவ்வாறு விமர்சனங்கள் பதிவாகவில்லை. இதன் மூலம் புளட் இயக்கமல்ல, அவ்வியக்கத்திலிருந்து வெளியேறி இன்றும் பரந்துபட்ட வகையில் அவ்வியக்கத்தை அரசியல்ரீதியாக சிறிதளவேனும் அம்பலப்படுத்தும் அவ்வியக்கத்தின் முன்னாள் போராளிகள் எண்ணிக்கையில் முன்னின்று சிறப்புக் கவனம் பெறுகிறார்கள் அவ்வளவே. எள்ளளவும் அவ்வியக்கமல்ல. 

இவர்கள் எல்லாம் அரசியல் தந்திரோபாயம் தெரியாதவர்கள். மூடிக்கொண்டு இருந்திருக்க வேண்டும். முட்டாள்தனமாக அம்பலமாக்கும் தேவை என்ன இருந்தது இவர்களுக்கு? தமிழ் தேசிய விடுதலைக்கு பங்கமும் களங்கமும் செய்தார்களே ஒழிய வேறென்ன விளைந்தது இவர்களால்?

பின்வரும் கேள்விகளை எழுப்புவது தமிழ் தேசியக் குற்றம். தமிழ் தேசியத்துக்கு எதிரானது. தீங்கானது.

அரசு எப்போதும் ஒரு வர்க்கத்தின் பிரதிநிதி. தான் பிரதிநிதித்துவம் செய்யும் வர்க்கத்தின் நலன்களுக்காக மட்டுமே அது இயங்கும். மற்றவற்றை தனது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும். இது தெரியாத ஒன்றல்ல. ஒடுக்கப்படும் மக்களுக்கு உரிமையும் விடுதலையும் வேண்டி போராடும் எந்த விடுதலை இயக்கமும் அரசு மாதிரியே நடந்து கொண்டால் அங்கேயும் அதன் வர்க்கநிலை குறித்து கேள்வி எழும். ஒடுக்கப்படும் மக்களுக்கு உண்மையாக உரிமையும் விடுதலையும் வேண்டுபவர்களே மக்களுக்குப் பொறுப்புக்கூட வேண்டிய அதீதக் கடமையும் கடப்பாடும் உடையவர்கள். அரசு என்றும் எங்கும் அதிகாரத்தையும் அழித்தொழிப்பையும் பிரயோகிக்கும் ஒரு இயந்திரம். இராணுவ ஒடுக்குமுறை அதன் வழிமுறை. இது தெரிந்து தான், அதற்கு எதிராகத் தான் ஒரு இயக்கம் கிளர்ந்தெழும் மக்கள் மத்தியில்.

அரசு மட்டுமே பொறுப்புக்கூறலுக்கு உட்பட்டது. ஆனால் நடைமுறையில் அதே அரசபாணி ஒடுக்குமுறையினை மக்கள் மேல் கையாண்ட இயக்கங்கள் பொறுப்புக்கூறலுக்கு அப்பாற்பட்டது என்கின்றபோது அந்த இயக்கங்கள் மக்களுக்கானதல்ல. அதுவே உண்மையில் அரசுக்கு சார்பாகவும் அரசுக்கு பலமும் சேர்க்கின்றது. அரசு, இயக்கங்களின் மக்கள் மீதான ஒடுக்குமுறையிலிருந்து மக்களை மீட்கும் மீட்பாளனாக தன்னைக் காட்டிக்கொண்டு மேலும் தனது சொந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்த வழிவகுக்கின்றது. அரசானது மக்கள் மேலான தனது சொந்த ஒடுக்குமுறைக்கு பொறுப்புக்கூறல் என்பது சிலவேளைகளில் நடந்தால் அது ஆற்றுப்படுத்துமே ஒழிய மக்களைப் பலப்படுத்தாது. ஆனால் விடுதலை இயக்கமொன்றின் பொறுப்புக் கூறல் என்பது மக்களை ஆற்றுப்படுத்துவதோடு மேலும் மக்களைப் பலப்படுத்தும். அதன் வழியில் போராட்டத்தினை நெறிப்படுத்தும். இங்கே முக்கியமானது எது? அரசின் பொறுப்புக்கூறலா அல்லது விடுதலை இயக்கமொன்றின் பொறுப்புக்கூறலா?

விடுதலை இயக்கமொன்று இல்லாமல் அதன் தலைமையும் போராளிகளும் அழித்தொழிக்கப்பட்டு இன்று பொறுப்புக்கூறலுக்கு யார் உள்ளனர் என்ற கேள்வி எதைச் சொல்கின்றது என்றால் அந்தந்த விடுதலை இயக்கங்களால் செய்யப்பட்ட காரியங்கள் பரப்பப்பட்ட கருத்துநிலைகள் கூட இன்று செத்துப் போய்விட்டது என்கின்றது. இல்லை, அந்தக் காரியங்களால் ஏற்பட்ட விளைவுகள் மற்றும் கருத்துநிலைகள் உயிரோடு இருப்பதற்கு எதிராகவே இன்று துணுக்காய்களும் சுழிபுரங்களும், திருக்கோவில்களும், வாகரையும், காத்தான்குடியும், இந்தியாவின் வழிநடத்தலில் நடாத்தப்பட்ட அனுராதபுரப் படுகொலைகளும், எல்லைப்புற அப்பாவிச் சிங்கள மக்கள் படுகொலைகளும், தாஸ் குழவினரின் படுகொலைகளும், ஈரோஸ் இயக்கம் மேற்கொண்ட படுகொலைகள், மண்டையன் குழு, இந்திய இராணுவத்துடன் சேர்ந்தியங்கிய நாபாவின் ஈ.பி.ஆர்.எல்.எவ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளும் என எல்லாம் தூக்கிப்பிடிக்கப்படுகின்றன. இந்தக் கருத்துநிலைகள் தவறானவை. அந்தக் கருத்துநிலையைக் காவியும் ஏற்றுக்கொண்டும் தமிழ் தேசியத்தின் பின்னால் ஒழிந்து நிற்பவர்களால் தமிழ் தேசியம் அழிக்கப்படுமே தவிர நியாயம் பெறாது. 

இந்த மக்கள்விரோத அரசியலும் கருத்துநிலையும் ஒடுக்கப்படும் மக்களுக்கானதல்ல. தொடர்ந்து அக்கருத்துநிலைகளும் மக்கள் விரோத அரசியலும் களையப்படாதவரை, மீண்டும் இயக்கங்கள் எவ்வாறு தாமும் அழிந்து மக்களையும் அரசின் அழிப்புக்கு உட்படுத்தியதல்லாமல், சிறைகளையும் சித்திரவதைகளையும் இயக்கினார்களோ அதே வழிக்கே மீணடும் கொண்டு செல்லும்.

வரலாற்றின் தவறுகளைக் களைந்து தமிழ் தேசியக் கள்ளர்களின் வழிப்படாமல் இணைந்து எழுவதே ஒரே வழி. 

கடந்தகால வரலாறு எழுப்பிய ஆழமான முக்கியமான தர்க்கங்களில் சில கீழே குறிப்பிட்டுள்ளேன். அத்தனை தர்க்கங்களையும் ஆயுதங்களால் எதிர்கொண்டதன் பயனாக விளைந்ததே 30 வருட மனித அவலங்களும் 2009 ம் ஆண்டு இறுதியுத்தத்தின் கசப்பான முடிவுகளும் என்பதை மறுக்க முடியாது என்பதை வரலாறு உணர்த்துகிறது.

இன்றல்ல, காலம் கடந்தல்ல, அன்றே ஆரம்பத்திலேயே ஒலித்த மக்கள் சார்ந்த குரல்களைக் கேளுங்கள்.

«இன்று மரண பயம் அச்சுறுத்துகின்றது. நாம் ஒரு சித்தாந்தத்தின் அடிப்படையில் போராட முனையும் போது புதியவற்றை அறிய முற்படும் போதுஇ ஏன் ஒரு துண்டுப்பிரசுரம் தானும் வாசிக்க முற்படும் போதுஇ எமக்குள்ளே பேசிக் கொள்ள முற்படும் போது கூட சிறீலங்கா இராணுவத்திற்காகவா பயப்பட வேண்டியுள்ளது. இல்லைஇ இதுவா எங்கள் சுதந்திரம்? இது தானா நாங்கள் விரும்பிய விடுதலை? எமது கைகளில் இருந்த இரும்பு விலங்கிற்கு பொன் முலாம் பூசப்படுகிறதா என அஞ்சுகின்றோம். எமக்குத் தேவை பொன்முலாமல்லஇ விலங்குகள் உடைக்கப்படவேண்டும்.»

«ஆயுதங்களையும்இ வெடி மருந்துகளையும் அதிகமாக வைத்திருக்கும்இ பயிற்சி பெற்றவர்கள் ஏனைய சித்தாந்தங்;களை முன்வைத்து வேலை செய்பவர்களை தடைசெய்வது எவ்வாறு சரியாகும்? அப்படியானால் இனவாத சித்தாந்தத்தை வைத்து ஆயுத முனையில் எம்மை அடக்கும் சிறீலங்கா அரசையும் சரியென்று சொல்லப்போகின்றோமா!»

«நமது தேசத்து மக்கள் வாழும் பிரதேசங்கள் எங்கும் எதிரியின் காலடிப் பதிவுகள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கஇ கிழக்கிலே மக்கள் உயிருக்காக ஓடிக்கொண்டிருக்கையில் நமது தேசத்தின் எல்லைக்குள்ளேயே இன்னும் ஓர் நிகழ்வு! பலர் கைது செய்யப்படுகின்றனர். சித்திரவதை செய்யப்படுகின்றனர். இன்னும் சிலர் கொல்லப்படுகின்றனர். இவர்கள் எல்லாம் யார்? நமது மண்ணை நேசித்துஇ மக்களை நேசித்து போராடவெனப் புறப்பட்டவர்கள். மரணத்தின் நிழல்கள் போராளிகளைப் பின் தொடர்கின்றன.»

«ஆம் விடுதலை இயக்கங்களுக்கு அச்சுறுத்தல்இ தடை விதிப்பு. மாணவர் அமைப்புகள் இருந்த இடம் தெரியாமல் தொலைக்கப்படுகின்றன.»

«பேச்சுச் சுதந்திரம்இ எழுத்துச் சுதந்திரம்இ கருத்துச் சுதந்திரம் போன்ற ஜனநாயக உரிமைகள் எந்த வடிவத்தில் பாதிக்கப்பட்டாலும் அதற்கெதிராகப் போராட வேண்டியது எமது வரலாற்றுக் கடமை.»

«ஆரம்பத்தில் சிறிலங்கா அரசுக்கெதிராக எவற்றுக்காக போராடினோமோ அதே விடயங்களுக்காக இன்றைக்கு இயக்கங்களிடம் போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.»

«சிறிலங்கா அரசுக்கெதிராக நாம் போராடியபோதும் எம்மை நோக்கி ஆயுதங்களே அடக்குமுறைக் கருவிகளாக வந்தன. அதே ஆயுதங்கள் இன்றைக்கும் நமது உரிமைப் போராட்டங்களுக்கு எதிராகப் பாவிக்கப்படுகின்றன.»

«ஆயுதங்களைக் கண்டு நாம் பயப்பட வேண்டியிருந்தால் ஆயுதம் கொண்டு இப் போராட்டத்தை அழிக்க முடிந்திருந்தால் சிறிலங்கா இராணுவத்துக்கு எதிராக நாம் ஒரு அடி கூட எடுத்து வைத்திருக்க முடியாது. நமது தியாகிகள் போராட்டத்தைப் பற்றி சிந்தித்தே இருந்திருக்க மாட்டார்கள். இது தவிர ஆயுதங்களை வைத்து அடக்குவது நியாயமென இயக்கங்கள் கருதினால் இதே ஆயுதங்களை வைத்து அடக்கும் சிறிலங்கா அரசையல்லவா நாம் நியாயமென சொல்லியிருக்க வேண்டும். நாங்கள் எதிர்ப்பது அடக்கும் ஆயுதங்களைத் தான். இந்த அடக்குமுறை சிங்களம்இ தமிழ் எந்த வடிவத்தில் இருந்தாலும் நாம் அதற்கு எதிரானவர்கள் தான்.»

«எமது விடுதலைப் போராட்டத்திலே அப்படி அராஜகத்துக்குப் பலியானவர்கள் எத்தனை பேர்?. புதைகுழிகளுக்குள் மூடப்பட்டவர்கள் எத்தனை பேர்? கண்காணாத இடத்தில் வைத்துக் கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர்?. தெருவோரங்களிலும்இ வயல்வெளிகளிலும்இ மயானங்களிலும் கொன்று குவிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?. யாருமே கேட்க நாதியற்றவர்களாக ஒரு அற்ப விலங்கை விட கேவலமான நிலையில் அராஜகத்துக்குப் பலியாகிப் போனார்கள்.»

«அராஜகவாதிகளே! இப்பொழுதாவது சிந்தியுங்கள்! உங்கள் அழிவைத் தவிர்த்துக் கொள்ள வேண்டுமாயின் விஜிதரனின் விடுதலையுடனாவது அராஜக நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். இல்லையேல் நீங்கள் மக்களால் அழிக்கப்படுவது நிச்சயமே.»

“மக்கள் என்றும் தோற்பதில்லை! அராஜகம் என்றும் வென்றதில்லை!»

“எங்களுக்கு சிங்கள இராணுவம் அல்லது சிங்களத் துப்பாக்கி தமிழ் துப்பாக்கி என்ற வேறுபாடு கிடையாது. இரண்டும் உரிமையை மறுக்கும் போது இரண்டும் எங்களுக்கு ஒன்றே.»

“வெறும் முயற்சியும் தியாகமும் மட்டுமே ஒருவனைப் போராளியாக்கி விட முடியாது. நியாயவாதியாக்கிவிட முடியாது. நீதியானவன் ஆக்கிவிட முடியாது. அப்படியானவர்களையே நாம் நியாயவாதிகளாக ஆக்கினால் ஹிட்லர்இ முசோலினி போன்ற சர்வாதிகாரிகளையும் கூட நாம் நியாயவாதிகளாக்க வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்படும். ஒருவனுடைய பேச்சுக்களை விட அவனுடைய செய்கைகளே அவனை நியாயவாதியாக்குகின்றது. உண்மையானவன் ஆக்குகின்றது.”

“நாம் தேசவிடுதலைப் போராட்டத்துக்கு எதிரானவர்களாம். தமிழீழப் போராட்டத்துக்கு எதிரானவர்களாம். எவ்வளவு அற்பத்தனமான விசயம் இது. இன்றைக்கு மக்களுக்கு உரிமையில்லாமல் மக்களுக்கு ஜனநாயகம் இல்லாமல்இ மக்கள் விரக்திநிலைக்குத் தள்ளப்படும் அபாயநிலை ஏற்பட்டு விடுவோமென அஞ்சுகின்றோம். மக்களுடைய இந்த வெறுப்பு நிலைக்கு வடிகால் அமைத்து போரிடும் தேசத்துள் சமாதானம் நிலவவும் மக்களுக்கு ஜனநாயகம் வழங்கவும் அராஜகவாதத்தை எதிர்க்கவும் தேசவிடுதலை இயக்கங்கள் முன்வரவேண்டும். நம் மக்களுக்கு எழுத்துரிமை பேச்சுரிமை பத்திரிகை உரிமை போன்ற ஜனநாயக உரிமைகள் வழங்கப்பட்டு இயக்கங்களுக்கும் மக்களுக்கும் இடையே ஓர் இணைப்பு ஏற்படும் பொழுது தான் விடுதலைப் போராட்டத்தில் முழுமக்களும் உணர்வுபூர்வமாக பங்கேற்க முடியும். அப்பொழுது தான் எந்த விடுதலைப் போராட்டமும் செழுமை பெறும்.»

ஓவ்வொரு இயக்கங்களும் மற்றைய இயக்கங்களை மட்டும் விழித்து நீங்கள் என்ன திறமா எனக் கேள்விகளை மடைமாற்றி திசைதிருப்புகிறார்கள். மக்கள் சார்ந்து பொதுமைப்பாட்டுடன், அவர்களின் வழியிலும் விழியிலும் வரலாற்றில் ஏற்பட்ட பாரிய குற்றங்களை கண்டுகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் மறுக்கிறார்கள்.

இப்படியெல்லாம் எழுதுவதும் பேசுவதும் அரசுக்கு முண்டுகொடுக்கும் அரச ஒத்தோடிகளின், தமிழினத் துரோகிகளின் வேலை என்று கறுவும் சத்தம் கேட்கிறதா?