அமெரிக்காவின் வரிக் கொள்கை என்பது, தனியுடமைவாத முதலாளித்துவம். சுதந்திரமான சந்தை என்ற முதலாளித்துவத்தின் முரணற்ற முதலாளித்துவத்தின் அடிப்படைக் கொள்கையாகும். சந்தை என்பது கட்டுப்பாடற்றதாக, சுதந்திரமானதாக, ஜனநாயகபூர்வமானதாக இருக்கவேண்டும் என்பதே, முதலாளித்துவமாகும். இதைத்தான் டிரம்ப் நேரடியாக – மறைமுகமாக முன்வைத்திருக்கின்றார். இதைப் புரட்சிகரமானது என்கின்றார். இப்படிப்பட்ட முரணற்ற முதலாளித்துவத்தை பிற ஏகாதிபத்தியங்களும், முதலாளித்துவ நாடுகளும், முதலாளித்துவவாதிகளும், தனியுடமைவாதிகளும்.. எதற்காக, ஏன் எதிர்த்துப் புலம்ப வேண்டும்?
தனித்தனி நாடுகளுக்குள் சுதந்திரமான சந்தைக் கோட்பாட்டை முன்வைத்துள்ள முதலாளித்துவவாதிகள், நாடுகளுக்கிடையில் இதை மறுப்பது ஏன்? தங்கள் சொந்த தேசிய – ஏகாதிபத்திய பொருளாதாரம் சிதைந்துவிடும் - மக்களின் வாழ்வாதாரங்கள் அழிந்துவிடும் என்ற ஒப்புக்கு ஒப்பாரி வைக்கும் முதலாளித்துவவாதிகள், தங்கள் சொந்த நாடுகளில் சிறுவுடமைகளையும் - அது சார்ந்து வாழ்ந்த மக்கள் கூட்டத்தை தங்கள் நாட்டு பெருவுடைமை சார்ந்து ஒழித்துக் கட்டியவர்களே. இன்று வேசம் போட்டுக்கொண்டு, உலக பெருமூலதனம் சார்ந்த தங்கள் திவாலை மூடிமறைக்க, ஒப்பாரி வைக்கின்றனர்.
![]()
1980 களில் ஏகாதிபத்தியங்கள் - பெரும் மூலதனங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து, உலகமயமாதல் என்ற திறந்த சந்தைப் பொருளாதாரத்தை திணித்தது அதே காலடிகளில் இருந்து தான், வரியற்ற சந்தை மூலம் சுதந்திரமாக்கக் கோருகின்றது. இது முதலாளித்துவத்தின் கட்டுபாடற்ற சுதந்திரத்துக்கான, அடிப்படைக் கோரிக்கையாகும்.
1980களில் அரசவுடமைகளையும், அரசு உற்பத்திகளையும் ஒழித்துக்கட்டிய உலகமயமாதல், திறந்த சந்தைக் கொள்கை மூலம், உள்நாட்டு உற்பத்திகளை ஒழித்துக் கட்டியது. படிப்படியாக நடந்தேறியதன் மூலம், ஏகாதிபத்தியங்களில் உள்ள சில நபர்கள் உலகின் பெரும் செல்வங்களையெல்லாம் தமதாக்கிக் கொண்டனர். இந்தச் சுதந்திரமான கொள்கைக்கும் - கொள்ளைக்கும் தடையாக இருந்த உழைக்கும் வர்க்கம் போராடிப்பெற்ற உரிமைகள் அனைத்தும் பறித்தெடுக்ப்பட்டது. இது வரலாறு.
செல்வம் சிலரிடம் குவிந்தது. நிதி மூலதனத்தின் குவிவு, நிதியைப் பெருக்குவதற்காக 1990 களில் கட்டாய கடன் கொள்கையைத் உலகெங்கும் திணித்தது. பணத்துக்கு வட்டி அறவிடும் கடன் கொள்கை, வளர்ச்சிக்கான கடனாகக் காட்டப்பட்டது. இதற்காக சமூக நோக்கற்ற அரசுகள், அரசியல் கட்சிகளும், தங்கள் தனிப்பட்ட செல்வத்தை பெருக்கும் ஆட்சியாளர்களையும் உருவாக்கியது.
பெற்ற கடனைக் கொண்டு, அரசு உற்பத்தி மூலதனத்தில் ஈடுவதற்கு தடையும் விதித்தது. தங்கள் உற்பத்தி மூலதனங்களுக்கு வசதிகளை செய்வதற்காகவே, கடனை பயன்படுத்தக் கூறியது. கடன் மூலம் ஏகாதிபத்தியங்களில் குவிந்த பணத்தை, வட்டிக்கு வட்டி விட்டுக் கொழுத்தது. வட்டியை மீண்டும் கடனாக மாற்றி, வட்டிக்கு வட்டி விட்டு கொழுத்தது. இந்த வட்டியை மக்கள் கட்டுமாறு நிர்ப்பந்தித்தது.
இன்று பல நாடுகளில் தேசிய வருமானத்தில் 50 சதவீதம் வரை, ஏகாதிபத்திய நிதி மூலதனத்துக்கு வட்டியாகவும் – முதலாகவும் அறவிடும் உலக ஒழுங்குக்குள்ளாகியுள்ளது.
இந்த வரலாற்றுப் போக்கில் செல்வம் மேலும் குவிவதற்கு தடையாக எல்லைகளும் - வரிகளும் இருப்பதை மூலதனம் விரும்பவில்லை. எல்லைகளைக் கடந்து மூலதனம் சுதந்திரமாக இயங்குவதற்கு தடையாக இருப்பது, மூலதனம் மேலும் குவிவதற்கான தடையாக இருக்கின்றது. அமெரிக்க மூலதனம் முற்றாக தனது உற்பத்திக்கு வரியை நீக்கு அல்லது சமமான வரி என்ற முதலாளித்துவப் பொல்லுடன் களத்தில் இறங்கி இருக்கின்றது. இதற்கு முன் சீனா மூலதனம் தனது மலிவான கூலி உழைப்பு மூலம் பெற்ற சந்தை மேலாதிக்கத்துடன் - தனது மூலதனத்தின் சுதந்திரமான சந்தை விதியுடன் இயங்கியபோது, அமெரிக்க வரிகளைப் போட்டுத் தடுத்தது. ஏகாதிபத்தியம் சார்ந்து இயங்கும் கெடுபிடியான, பொருளாதார யுத்தத்தில் உலகம் சிக்கியிருக்கின்றது.
இன்று எல்லையைத் தகர்க்கக் கோரும் டிராம்பின் வரிக் கொள்கையென்பது, முதலாளித்துவத்தை ஏற்றுக்கொள்ளும் உலகின் பொது விதியாக மாறும். சந்தைக்கு எல்லை இருக்கக் கூடாது என்பது முதலாளித்துவ விதி, இப்படியிருக்க எந்த முகத்தைக் கொண்டு முதலாளித்துவவாதிகள் எதிர்க்க முடியும்?
முதலாளித்துவத்தின் தனியுடமைவாதமானது, சமூகவுடமையை இல்லாதொழிப்பது தான். பொருளாதாரம் தொடங்கி தனிமனித வாழ்வியல் வரையான அனைத்து சமூகவுடமை மற்றும் சமூக வாழ்வியலைத் தகர்ப்பது தான்.
சமூக அறம் சார்ந்த மனிதத்தன்மை மனிதனிடம் இருக்கக் கூடாது என்பதே, முதலாளித்துவம் உருவாக்கும் பெரும் மூலதனங்களின் கொள்கை. இதை அடிப்படையாகக் கொண்டு தான் செல்வம் ஒரு சில நபர்களிடம் தொடர்ந்து குவிகின்றது. குவிக்கத் தடைகளை அகற்றக் கோருகின்றது.
இது முதலாளித்துவ விதி. முதலாளித்துவத்திடம் எந்த சமூக அறமுமிருப்பதில்லை. தனிமனித வக்கிரமே, அதன் இருப்பியலின் பொது அடித்தளம்.
இது பொதுவுடமை இருப்பதை மறுக்கின்றது. செல்வம் தனியுடமையாக இருப்பதை அங்கீகரிக்கின்றது. தனிமனிதர்களின் வாழ்வியல் வரை புகுத்தி இருக்கின்றது. செல்வம் அனைவருக்கும் பொதுவானதாக இருப்பதை மறுக்கின்றது. செல்வம் என்பது மனித உழைப்பில் இருந்து உருவாவது. மனித உழைப்பிலான செல்வத்தை பொதுவில் வைப்பதும், தேவையை பெற்றுக் கொள்ளும் நடைமுறைக்கு மனிதன் வராவிட்டால், அந்தச் செல்வத்தை சில தனிநபர்கள் தமதுடமையாக்கி விடுவது நடந்து விடுகின்றது. இதுவே அமெரிக்காவின் வரிக் கொள்கையின் சாரம்.
பொதுவுடமைவாதத்தை, அதாவது சமூகவுடமை வாதத்தை முன்வைக்கும் கம்யூனிஸ்டுகள் மட்டும் தான், இந்த வரிக்கொள்கையை மக்கள் நலனிலிருந்து உண்மையாக எதிர்க்க முடியும். இல்லாத எதிர்ப்பு மற்றொரு மூலதனத்தினதும், அது சார்ந்த ஏகாதிபத்தியங்களினதும் கொள்கை. இது யுத்தங்களுக்கு இட்டுச்செல்லும்.
06.04.2025
தொடரும்
அமெரிக்காவின் வரிக் கொள்கை முதலாளித்துவத்துக்கு எதிரானதா!?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode