தலைவரின் பெயரில் புலிப் பாசிசத்திற்குக் காவடியெடுத்தாடும் கூத்தாடியான கோமாளியான அர்ச்சுனா கூறுகின்றார். இதற்காகவா தமிழ் மக்கள் அர்ச்சுனாவுக்கு வாக்களித்தனர்!?
தமிழர்களின் பெயரில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான தமிழினவாதத்தைப் பாசிட்டால் மட்டுமே இப்படி கக்க முடியும்.
மனித உயிர்களைக் காக்கும் டொக்டர் என்று கூறிக்கொள்ளும் யாழ்ப்பாணத்துப் பன்னாடை, தனது பாசிசக் கொலை வெறித்தனத்தைத் தனது தந்தையின் அரசியல் - நடைமுறை வழியில் முன்வைத்திருக்கின்றது. 1990 இல் அர்ச்சுனா புலித் தலைவர் இடத்திலிருந்திருந்தால், 1990 இல் ஒரு இலட்சம் முஸ்லீம் மக்களைக் கொன்று புதைத்திருப்பான். இந்த உண்மையைத் தான், இன்று தந்தை வழி கொலைகார அரசியலை தற்பெருமையுடன் கூறுகின்றான்.
1940 களில் ஹிட்லர் 60 இலட்சம் யூதர்களைக் கொன்று - எரித்துச் சாம்பலாக்கியது போன்று, அதே பாசிச வழியில் முஸ்லிம்களைக் கொன்று அழிக்கத் தவறியது, தனது தலைவரின் தவறு என்று கூறுகின்றான். அன்று ஹிட்லருக்குக் கோயம்பல்ஸ் என்ற பிரச்சார மந்திரி இருந்தது போல், இந்தக் கொலைவெறி கக்கும் அர்ச்சுனாவுக்காகப் பிரச்சாரம் செய்யும் தமிழ் அடியான் தொடங்கி வன்னி ஊழல் ஒழிப்பு அணி வரை அணிகட்டி நிற்கின்றது. அன்று தவைருக்குப் பாலசிங்கம் இருந்தது போல், இன்றும் புலிப் பாசிச அடிவருடிகள். இதன் பின்னால் புலத்தில் நிதி திரட்டும் மாபியாக்கள். இந்த மாபியாக்களின் பிழைப்புக்காக, பாசிச கோமாளி கூத்தாட நிதி வழங்குகின்றனர். இந்தக் கூத்தாடிக்கு பணம் பார்க்கும், யூ-ரியூப் வியாபாரிகள்.
![]()
தமிழ் மக்களை விடுதலைப் போராட்டத்தின் பெயரில் அழித்த அதே பாசிச அரிச்சுவடியில், அர்ச்சுனா என்ற தற்குறி, தமிழினவாதத்தைக் கக்குகின்றது. இத்தகைய பாசிச வன்மத்துக்கு எதிராகப் போராடாது - கண்டுகொள்ளாது விட்டுவிடுகின்றதன் மூலம், மனிதவிரோத நடத்தைகளை ஆதரிக்கின்ற கூட்டம் இன்று வேறுயாருமல்ல, தமிழனைத் தமிழன் ஒடுக்கிய, ஒடுக்கியாளுகின்ற வெள்ளாளிய அதிகார சக்திகளே.
16.10.1990 இல் சாவகச்சேரியில் 1500 முஸ்லிம்களை வெளியேற்றும் இனச் சுத்திகரிப்பை புலிப் பாசிட்டுகள் தொடங்கினர். அதையடுத்து மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு முஸ்லிம்களை வெளியேற்றினர். 30.10.1990 இல் யாழ்ப்பாண முஸ்லிம்களை வெறியேற்றினர். உடுத்த உடையும், 50 ரூபா பணம் தவிர, அவர்களிடமிருந்த மிகுதி அனைத்தையும் தமிழன் பெயரில் கொள்ளையடித்தனர். இப்படிக் கொள்ளையடித்து விரட்டியது போதாது என்று அவர்களை உயிருடன் விட்டது தவறு என்கின்றான். முஸ்லிம்களைப் புதைத்துச் சீமெந்திட்டிருக்க வேண்டும் என்று, அர்ச்சுனா தமிழ்மக்களின் சார்பில் கூறுகின்றான். துமிழினவாதக் கொலைவெறியாட்டத்தை முன்வைக்கும் பாசிச தற்குறிக்கு வாக்களித்த மக்களே! கூறுங்கள் இந்தக் கொலைவெறியாட்டத்தை தலைவரின் பெயரில் கொக்கரிக்கவா வாக்களித்தீர்கள்!?
முஸ்லிம் மக்கள் உங்களை என்ன செய்தார்கள்? அமைதியாகவும், சமாதானமாகவும் உங்களைப் போல் உழைத்து வாழும் முஸ்லிம் மக்கள், உங்களுக்கு என்ன செய்தார்கள்? முஸ்லிம் மக்களைக் கொல்லாமல் விட்டது தவறு என்று, உங்களை முஸ்லிம் மக்களுக்கு எதிராக அழைப்பது ஏன்? வெளிநாட்டுப் புலி மாபியாக்களிடம் பணத்தைப் பெற்றபடி, தனது இனவெறி மாபியாதனத்தைத் தற்பெருமையாக உருட்டியும், வெருட்டியும் சுயபுராணத்தை அரசியலாக முன்வைக்கும் மனித விரோதி, தனது பாதுகாப்புக்கு துப்பாக்கி கேட்கின்றான், எதற்காக?
அர்ச்சுனா தலையில் வைத்தாடும் தலைவர் இறுதியாக 01.08.2006 இல் பேச்சுவார்த்தை முறித்து மூதூர் மக்களை இனச் சுத்திகரிப்பு செய்ய முஸ்லிம் மக்கள் மேல் தொடங்கிய வெறியாட்டம், தலைவரின் சரணடைவுடன், தான் கிண்டிய புதைகுழிக்குள் புதைந்து போனது வரலாறு. வரலாற்றை கற்றுக் கொண்டு, மக்களை ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமையில் அணிதிரட்ட வக்கற்ற கூட்டம், மீண்டும் தமிழ் மக்களைப் புதைக்க அர்ச்சுனா தலைவர் பெயரில் கூத்தாடுகின்றார்.
இதற்காக தமிழ் மக்களைக் கொன்ற முஸ்லிம்களைப் பற்றிய கதைகளைப் தமிழ் பாசிட்டுகள் கூறுகின்றனர். ஆயுதமின்றியிருந்த முஸ்லிம்களை கொன்று குவித்த இனச் சுத்திகரிப்புப் பாசிசம் தான், ஆயுதமேந்திய முஸ்லிம் ஊர்காவற் படைகளையும், மனிதவிரோத முஸ்லிம் அடிப்படைவாதக் குழுக்களையும் உருவாக்கியது. இது தான் வரலாறு.
புலிகளின் பாசிசமே இதற்கான அச்சாணி. அர்ச்சுனா இன்று கொக்கரிப்பது போல், இனச்சுத்திகரிப்புக் கொலை வெறியாட்டத்தை நடாத்தி 12.07.1990 அன்று குருக்கள்மடத்தில் 68 பேரை கொன்றது. 30.07.1990 அக்கரைப்பற்றில் 14 பேரைக் கொன்றது. 01.08.1990 அன்று அக்கரைப்பற்றில் 8 பேரைக் கொன்றது. 03.08.1990 அன்று காத்தான்குடி பள்ளிவாசலில் 147 பேரைக் கொன்றது. 05.08.1990 அன்று அம்பாறை முல்லியன்காட்டில் 17 முஸ்லிம் விவசாயிகளைக் கொன்றது. 06.08.1990 அனறு அம்பாறையில் 33 முஸ்லிம் விவசாயிகளைக் கொன்றது. 12.08.1990 அன்று சம்மாந்துறையில் 4 முஸ்லிம் விவசாயிகளைக் கொன்றது. 12.08.1990 ஏறாவூரில் 36 பெண்கள், 60 குழந்தைகள் உட்பட 129 பேரை கொன்றது. 13.08.1990 அன்று வவுனியாவில் 9 முஸ்லிம்களைக் கொன்றது. 15.08.1990 அன்று அம்பாறை அரந்தலாயில் 9 பேரைக் கொன்றது.இதன்பின் தான் வடக்கில் இருந்து முஸ்லிம்களை இனச் சுத்திகரிப்பு செய்தனர். முஸ்லிம் - தமிழ் இனக் கலவரங்களுக்கு இவைகளே காரணமானது. பலர் கொல்லப்பட்டனர். பலர் அகதிகளானர்கள். தொடர்ந்து பலர் கடத்தபட்டுக் கப்பம் வாங்கப்பட்டது.
தொடர்ந்து 29.04.1992 அன்று அழிஞ்சிப்பொத்தானையில் 56 முஸ்லிம்களைப் புலிகள் கொன்றனர். 15.07.1992 அன்று கிரான்குளத்தில் பஸ்ஸிலிருந்து இறக்கி 22 முஸ்லிம்களைக் கொன்றனர் 15.10.1992 அன்று பள்ளியகொடள்ள- அக்பர்புரம், - அஹமட்புரம் கிராமங்களில் சுமார் 187 பேரைக் கொன்றனர்.
இப்படி அர்ச்சுனாவின் இன்றைய விருப்பத்தை, அன்று புலிகள் பூர்த்தி செய்த நீண்ட பட்டியல் உண்டு. இதில் யாழ்ப்பாணத்து முஸ்லிம் மக்களைக் கொன்று குவிக்கத் தவறிய குற்றத்தை தலைவர் செய்தார் என்று, தமிழினத்தின் பெயரில் குற்றம் சுமத்தி தமிழ்மக்களைத் தன்பின் அணிதிரளக் கோருகின்றான் ஒடுக்கப்பட்ட தமிழனிடம் எஞ்சிய கோவணத்தையும் உருவிவிட, ஒடுக்கும் தமிழனின் தற்பெருமை வாதங்கள்.
புலிகள் தம் இருப்புக்காகத் தாமல்லாதவர் ஜனநாயகத்தையும் - வாழ்வையும் துப்பாக்கி முனையில் பறித்து - குழிதோண்டி புதைத்ததன் மூலம் உருவானது பாசிச மயமாக்கமே. இந்தப் பாசிசமாதல் தமிழர் மத்தியிலும் - முஸ்லிம்கள் மத்தியிலும் ஒட்டுக் குழுக்களையும் - கூலிக் குழுக்களையும் உருவாக்கியது. அரசு, புலிகள் பாசிசமாதலை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது. புலிகள் பாணியில் அரசும், அரசு பாணியில் புலிகளும், நூற்றுக்கணக்கான கிராமங்களைச் சூறையாடி – ஆயிரக்கணக்கான மக்களையும் படுகொலை செய்தனர்.
புலிகள் ஜனநாயக அமைப்பாக இருந்திருந்தால், அரசுடன் இயங்கக் கூடிய கூலிக் குழுக்கள் உருவாகியிருக்க முடியாது. முஸ்லிம் ஊர்காவல் படையும், அடிப்படைவாத இஸ்லாமிய குழுக்களும் உருவாகியிருக்காது. இன்று பல ஆயிரம் மக்கள் எங்களுடன் வாழ்ந்திருப்பார்கள். இது நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.
இதற்கு மாறாக அர்ச்சுனா போன்ற தற்குறிகள் தாமல்லாத மக்களைத் தமிழர்களின் எதிரியாகக் காட்டுவதும், எதிரியாக்குவதும், இதன் மூலம் தமிழ் மக்களைத் தன்பின் அணிதிரளக் கோருவதன் மூலம், தமிழ் மக்களுக்கு எதுவும் கிடையாது. மாறாக இருப்பதை இழப்போம். இது கடந்த வரலாறு. மக்களுக்கு எதுவும் கிடைக்காது. புலத்துப் புலி மாபியாக்களும், புலி வியாபாரிகளும் மக்களின் தியாகத்தை தின்று கொழுக்கவே உதவியது. இதுதான் கடந்த வரலாறு. தமிழனைத் தமிழன் ஒடுக்கியாளுகின்ற கூட்டத்தின் இன்றைய சுய பிழைப்புக்கும், தமிழ் மக்களின் பெயரில் வளர்ந்துவிட்ட புலம்பெயர் மாபியாக்களினதும் தொடர் அரசியல் தான், அர்சுசுனா என்ற கோமாளியின் பாசிசக் கூத்துக்களாக அரங்கேறுகின்றது.
27.01.2025
இதையொட்டிய பிற கட்டுரைகள்:
சீமான் முதல் அருச்சுனா வரையான அரசியலின் பின்புலம்
கவுசல்யாவையும் பாலியல் அவதூறு செய்யும் அருச்சுனாவின் ஆணாதிக்கம்
முகமூடி போட்ட சமூகவிரோதிகளும் - அதற்கு உசுப்பேற்றும் தற்குறிகளும்
ஊழல் ஒழிப்பு முகமூடி போட்ட புலிப் பாசிட்டுகளின் இரு வேறு முகங்கள்
யாழ் முஸ்லிம்கள் மேல் சீமெந்திட்டிருக்க வேண்டுமாம்!?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode