Language Selection

பி.இரயாகரன் -2024
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தேசிய மக்கள் சக்தி தமிழருக்கு சமஸ்டியைத் தர மறுக்கின்றார்கள், அதைப் பேச மறுக்கின்றார்கள் .. என்று கூறி முன்வைக்கும் தமிழினவாத அரசியல் எத்தகையது?. இவர்கள் கோரும் சமஸ்டி அதிகாரம் யாருக்கெதிரானது? யாருக்கு ஆதரவானது? இதன் அதிகாரம் எப்படிப்பட்டதாக இருக்கும்?

75 வருட சமஸ்டிக்காரர்களின் வரலாறு, இதற்கு மிகத் தெளிவாக பதிலளிக்கின்றது. கடந்த இந்த வரலாறு  கற்பனையல்ல.

1.சமஸ்டிக் கோசத்தை முன்வைத்த தமிழரசுக்கட்சி, என்றைக்கும் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் விடுதலையை முன்வைத்ததில்லை. மாறாக ஒடுக்கப்பட்ட தமிழனை ஒடுக்கும் தமிழனின் அதிகாரத்தையே கோரியது, கோரி வருகின்றது.

தமிழரசுக் கட்சியின் வரலாற்றில், என்றைக்கும் ஒடுக்கப்பட்ட சாதிகள் பொதுவிடங்களைப் பயன்படுத்தும் சுதந்திரத்தைக் கோரியதில்லை. 1965 இல் சமஸ்டிக்காரருக்கு எதிரான இடதுசாரிகளின் போராட்டத்தின் போதே, பொது இடங்களைப் பயன்படுத்தும் உரிமைகளை ஒடுக்கப்பட்ட சாதிகள் பெற்றனர். இது வரலாறு.

சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்கும் உரிமையை, இவர்கள் முன்வைக்கவில்லை. சமஸ்டிக்காரர்கள் தங்கள் வெள்ளாளிய பாடசாலைகளை அனைவருக்கும் திறக்குமாறு கோரியதுமில்லை, போராடியதுமில்லை. 1960 களில் யாழ்ப்பாணத்து வெள்ளாளியப் பாடசாலைகளை அரசு தேசியமயமாக்கியதன் பின்பு தொடரச்;சியாகச் சமஸ்டிக்காரருக்கு எதிரான தொடர் போராட்டங்களின் மூலமே, சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள், தமிழ் பாடசாலைகளில் கல்வி கற்க முடிந்தது. 

இன்னும் பல இருந்த போதும், சமஸ்டிக்காரர்களைப் புரிந்துகொள்ள இந்த உண்மைகள் போதுமானது.

2.1970 களில் சமஸ்டிக்காரர்கள் தங்களை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிட்டவர்களை துரோகியென்று கூறி, அவர்களைச் சுட்டுக் கொல்லும் அதிகாரமே சமஸ்டி என்று  வழிகாட்டினார்கள். இந்தக் கொலைகாரத் தனிநபர் பயங்கரவாத அரசியலே, ஆயுதப் போராட்டமாகியது. சமஸ்டி அரசியல் வழியிலான இந்தத் தனிநாட்டைக் கோரிய ஆயுதப் போராட்டமானது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை சமஸ்டி அரசியல் வழியில் வேட்டு வைக்கத் தொடங்கியது. சமஸ்டி வழியில் தனிமனித சர்வாதிகாரத்தை நிறுவியவர்கள், அதற்காக ஆயிரக்கணக்கில் தமிழ் மக்களையே படுகொலை செய்தனர். இது வரலாறு.

3.2009க்குப் பின் சமஸ்டிக்காரர்கள் பார்பெமிற், கார் பெமிற், தொடங்கி பாராளுமன்ற சொகுசுகளைப் பெற்றுக் கொண்டு வாழ்வதற்காக, சமஸ்டியை மீளக் கோரினர். 

இதன் மூலம் ஒடுக்கும் தமிழனின் ஊழல்களையும், இலஞ்சங்களையும், அடாவடித்தனங்களையும் முட்டுக் கொடுத்தனர். 

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை அனாதரவற்றவர்களாக மாற்றி, கையேந்தி வாழும் வங்குரோத்தையே சமஸ்டியாக முன்னிறுத்தினர்.

மாகாணசபை அதிகாரத்தைப் பெற்ற சமஸ்டிக்கார்கள், மக்களுக்கு அதன் மூலம் எதையும் செய்யவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதையும் செய்யாமலிருக்க, ஒடுக்கும் தமிழன் அதிகாரத்தைக் கைப்பற்றி வைத்துக்கொண்டு சுகபோகங்களிலும், ஊழல்களிலும் புளுத்தனர். 

அதேநேரம் சாதியவொடுக்குமுறை அடிப்படையிலான வெள்ளாளிய சமூக பிரதிநிதிகளாக தம்மை முன்னிறுத்திக் கொண்டு, தாங்கள் பெற்ற அதிகாரத்தை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக பயன்படுத்தினர். 

இப்படிப் பலவற்றை சமஸ்டி வரலாறுகளில் காணமுடியும். இந்த வகையில் சமஸ்டிக்கார்கள் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் நலனில் இருந்து, சமஸ்டியை முன்வைக்கவில்லை. மாறாக ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கும் தமிழனின் புலம்பலாகவே தொடர்கின்றனர். ஒடுக்கும் தமிழனின் இந்த வெள்ளாளிய சமஸ்டியை எதிர்த்துப் போராட வேண்டியது அவசியமாகின்றது.  

இந்த வகையில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை முன்னிறுத்தி, தேசிய மக்கள் சக்தி சமஸ்டியை எதிர்க்கின்றதாவென்றால் இல்லை. தேசிய மக்கள் சக்தி சந்தர்ப்பவாத அரசியலான சிங்கள இனவாத சக்திகளின் வாக்குகளை இலக்காகக் கொண்டு, கள்ளமௌனம் சாதிக்கின்றது.

சமஸ்டியானது ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஒடுக்குகின்ற, ஒடுக்கும் தமிழனின் அரசியலைக் கொண்டிருப்பதால் அதை எதிர்க்கின்றோம் என்ற அரசியல் அடிப்படையில் இருந்து, தேசிய மக்கள் சக்தி சமஸ்டியை மறுதளிக்கவில்லை. இந்த உண்மையானது, தேசிய மக்கள் சக்தி ஒடுக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த அரசியலை நிராகரிப்பதை அடிப்படையாகக் கொண்டது.   

வெள்ளாளிய சமஸ்டியானது ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஒடுக்கும் அதிகாரத்தைக் கோருவதை எதிர்த்துப் போராடுவது அவசியமானது. அதேநேரம் தேசிய இனங்களின் சுயாட்சியை முன்வைத்துப் போராட வேண்டும். இது தமிழ் மக்களை மட்டும் மய்யப்படுத்துவது இனவாதமாகும். மாறாக முஸ்லிம், மலையக மக்களை உள்ளடக்கிய வண்ணம், சிங்கள மக்களை முன்னிறுத்தியதாக அமைய வேண்டும்.

அதவாது இலங்கையில் நான்கு தேசிய இனங்களை மய்யப்படுத்திய சுயாட்சியை முன்வைக்க வேண்டும்;. இதன் மூலம் இலங்கையில் நான்கு தேசிய இனங்கள் இருப்பதை அங்கீகரிக்கும் அதேநேரம், நான்கு தேசிய இனங்களும் தங்களைத் தாங்களே ஆளுகின்ற சுயாட்சி அதிகாரம் கொண்ட ஓரு தேசத்தை, முன்வைத்துப் போராட வேண்டும்;. 

இந்த அடிப்படையில் தேசிய இன முரண்பாடுகளை இனம்கண்டு போராடாத குறுகிய கோரிக்கைகளும், இதை மறுக்கின்ற சந்தர்ப்பவாதங்கள் அனைத்தும் அடிப்படையில் இனவாதமாகும். இந்த இனவாதத்தை எதிர்த்துப் போராடுவதன் மூலம் தான், இன முரண்பாட்டுக்கு உண்மையான தீர்வைக் காண முடியும். இந்த வகையிலேயே, மக்கள் போராட்ட முன்னணி சுயாட்சியை முன்வைத்துப் போராடுகின்றது. 

இதனால் சமஸ்டிக்காரர்களும், சமஸ்டியை எதிர்க்கும் பாராளுமன்றத்தைத் தூய்மையாக்கக் கோரும் தேசிய மக்கள் சக்தியும் ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தும் மக்கள் போராட்ட முன்னணியை எதிர்க்கின்றது. இதனால் நாம் மக்கள் போராட்ட முன்னணியை ஆதரிக்கவேண்டும்.  

12.11.2024

  1. திசைகாட்டியின் திசை குறித்து - யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி 10
  2. தமிழ் தேசியமும் கூட்டுக் களவாணிகளும் - யாருக்கு வாக்களிக்க வேண்டும்.? - பகுதி 09
  3. டொக்டர் அர்ச்சுனாவும் யாழ்ப்பாண மாபியாக்களும் - யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி – 08
  4. உதய கம்மன்பில தொடங்கி டொக்டர் அருச்சுனா வரை, மீண்டும் இனவாதம் - யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி - 7
  5. தேசிய மக்கள் சக்தியின் அரசு மதச்சார்பற்றதா!? - யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி -6
  6. .யார் செழுமையடைய போகின்றார்கள்? மக்களா!?-யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி - 5
  7. .டொலர் பொருளாதாரமா? தேசியப்  பொருளாதாரமா?-யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி - 4
  8. .சமூக மாற்றத்தை மறுதலிக்கும் தேசிய மக்கள் சக்தி-யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி - 3
  9. .கள்ளரை வெளியேற்ற அனுரவுக்கு ஆதரவு" தெரிவிக்க வேண்டுமா!? - யாருக்கு வாக்களிக்க வேண்டும்-பகுதி - 2
  10. .மக்களின் குரலாக யார் இருக்கின்றனர்? யாருக்கு வாக்களிக்க வேண்டும் பகுதி - 1
  11. .ஜே.வி.பியின் வெற்றியும் சமூகத்தின் தோல்வியும்
  12. .பாராளுமன்ற ஜனநாயகத்தில் ஜே.வி.பி. குறித்த கற்பனைகளும் நிஜங்களும்.
  13. .ஜே.வி.பி. மீதான அரசியல் அழுத்தங்கள் மூலம் மாற்றத்தைக் கொண்டு வாருங்கள்
  14. .தமிழ் தேசியமும் - சாராயக் கடையும் - பொலிஸ் அதிகாரமும்
  15. .யாருக்கு வாக்களிக்க வேண்டும்!? ஏன்!? எதற்காக!?