ஜே.வி.பி. எதைச் செய்யவிவில்லை என்ற பொதுக் கண்காணிப்பு மூலம், மாற்றத்தைக் கொண்டு வாருங்கள். செய்ததைக் கொண்டு மக்களைச் செயலற்றவர்களாக்காதீர்கள்.
இலஞ்சம், ஊழல், அதிகார துஸ்பிரயோகங்களுக்கு.. எதிரான மக்களின் கோபமானது, அரசியல் மாற்றத்துக்கான வாக்குகளாக மாறியது. இது ஜே.வி.பி.யின் வெற்றிக்கு அடித்தளமிட்டது. ஜனாதிபதியின் வெற்றியின் பின்பாக ஜே.வி.பி.யின் செயற்பாட்டு ரீதியான நடவடிக்கைகள், மக்களால் கொண்டாடப்படும் அளவுக்கு ஆதரவு அலையாக மாறிவருகின்றது. பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகவும், மூன்;றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கும் என்பது சாத்தியமானது என்ற அளவுக்கு அரசியற் சூழல் மாறி வருகின்றது. ஜே.வி.பி.யின் அடுத்தகட்டப் பிரச்சாரங்கள், கோசங்கள்.. இந்த வெற்றியை உறுதி செய்யும் நோக்கிலேயே அமையும்.
கடந்தகால ஊழல் என்பது பல பில்லியனைக் கொண்டது. ஒவ்வொரு ஆட்சியும், அதை சுற்றி அபிவிருத்தி என்ற பெயரில் உருவாக்கப்படும் திட்டங்கள் ஊழலுக்கானவையே ஒழிய மக்களுக்கானதல்ல. வாங்கிய கடன்கள் ஊழலுக்காக விரையமாக்கப்பட்டது. மக்களுக்கு பயன்படாத வகையில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களுக்கான பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில், அவை அன்னிய நாடுகளுக்கு தாரைவார்க்கப்பட்டதுடன், நாட்டில் சுயாதீனமாக சுதந்திரத்தை இழந்துள்ளது.
அரசியல்ரீதியாக புதிய ஊழல்கள் தடுத்து நிறுத்தப்படுவதன் மூலமும், பழைய ஊழல் பணத்தை மீளப்பெறுவதன் மூலமும், வரிப் பாக்கிகளை அறவிடுவதன் மூலமும் மக்களுக்கு உடனடி நிவாரணமளிக்க முடியும். இந்த வகையில் வழங்கப்படும் சம்பள உயர்வுகள், விவசாய-மீனவர் மானியங்கள், எரிபொருள்-மின்சாரக் கட்டணக் குறைப்புகள், அத்தியாவசியமான பொருள்களுக்கான மானியத்தை … வழங்க முடியும். பொருளாதாரரீதியான பொது நெருக்கடியை அதிகமாக்காது. இதுவே ஜ.எம்.எப். ஊழலுக்கு எதிரான கொள்கையும் கூட. இந்த அடிப்படையில் ஜே.வி.பி. பயணிக்கின்றது.
இந்த வகையில் ஜே.வி.பி. முன்னெடுக்கும் முதலாளித்துவ சீர்திருத்தம் அரசியல்ரீதியான புதிய அத்தியாயத்தை உருவாக்குவதுடன், அரசியல் விழிப்புணர்வையும் – மக்கள் சார்ந்த சமூக பண்பாட்டையும் மக்களிடையே தோற்றுவிக்கும்.
இனவாதத்தை, மதவாதத்தை, பிரதேசவாதத்தை, சாதியவாதத்தை, ஆணாதிக்கவாதத்தை.. முன்வைக்காத அரசியல், பொருளாதார தளத்தில் ஏற்படுத்தும் மாற்றம், கடந்த இலங்கை அரசியல் வரலாற்றுக்கு முரணானது. இதை உறுதி செய்யும் வண்ணம், ஜே.வி.பி.க்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். இது தான் புரட்சிகர அரசியல்.
இலஞ்சம், ஊழல், அதிகார துஸ்பிரயோகங்களுக்கு.. எதிரான ஜே.வி.பி.யின் வெற்றியை நோக்கி மக்கள் உணர்வும், அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றுமளவுக்கான வெற்றியை நோக்கி தெளிவான அரசியலும் அவசியமானது. அந்த வகையில் பழைய ஊழல்வாதிகள் தொடங்கி ஊழலுடன் பயணித்த அரசியல்வாதிகள் வரை, அனைவரும் தோற்கடிக்கப்பட வேண்டும்.
நடக்கும் மாற்றங்கள் முதலாளித்துவ சீர்திருத்தங்களாக இருந்தபோதும், அரசியல்ரீதியான புதிய அரசியல் விழிப்புணர்வு மக்கள் மத்தியின் ஏற்பட்டு வருகின்றது. இந்த வகையில் மனிதத்தை நேசிக்கும் மனிதப் பண்பாட்டை நோக்கி, மக்கள் ஒரு அடியை எடுத்து வைத்துள்ளனர். மக்களின் விருப்புக்கு முரணாக ஜே.வி.பி. பழைய ஊழல்வாதிகளின் பாதையில் தரித்து நிற்கவோ, பின்வாங்கவோ.. அனுமதிக்கக் கூடாது. முன்னோக்கி பயணிக்குமாறு கொடுக்கும் அரசியல் அழுத்தமும், அரசியல் விழிப்புணர்வும் தான், புரட்சிகர அரசியலுக்கான பாதையாக இருக்க முடியும்.
மக்களின் நலனை உயர்த்திச் செல்லுமாறு அரசியல் அழுத்தத்தை ஜே.வி.பி.க்கு கொடுப்பதன் மூலம், மக்களின் கனவுகளை நனவாக்குவது அவசியமாகும்.
இந்த வகையில் இலஞ்சம், ஊழல், அதிகார துஸ்பிரயோகங்களுக்கு.. எதிரான தெளிவான அரசியல் அமைப்புச் சட்டத்தை கோட்பாட்டு ரீதியாக முன்வைக்கக் கோருவது மட்டுமே, மக்களின் விருப்பத்தை நிரந்தரமாக்கி, அதை சட்ட உரிமையாக்கவும் முடியும்.
இன்று இலஞ்சம், ஊழல், அதிகார துஸ்பிரயோகங்களுக்கு.. எதிராக அரசு எடுக்கும் இன்றைய முடிவுகள், சம்பவங்கள் ரீதியானவை. இதன் மூலம் வாக்குகளை மட்டும் பெற முடியும், சுபிட்சமான நாட்டை, எதிர்காலத்தை உருவாக்க முடியாது.
இலஞ்சம், ஊழல், அதிகார துஸ்பிரயோகங்களுக்கு.. மூலமென்ன? இவை எப்படி உருவாகின்றது? இவை குறித்து முன்வைக்கப்படுவதில்லை.
மாறாக
1. சிலர்;, இளைஞர்;கள் - யுவதிகள் வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்கின்றனர்.
2. வேறு சிலர், படித்தவர்கள் வந்தால் சரியாகிவிடும் என்கின்றனர்.
3. மற்றொரு தரப்பினர் இலஞ்சம், ஊழல், அதிகார துஸ்பிரயோகங்களுக்கு.. காரணமானவர்களை அரசியலில் இருந்து நீக்கிவிட்டால், சிறையில் அடைத்து விட்டால், தோற்கடித்துவிட்டால் எல்லாம் சரியாகி விடும் என்கின்றனர்.
4. இப்படிப் பல வாதங்கள்
இப்படிக் கூறுகின்றவர்கள் இலஞ்சம், ஊழல், அதிகார துஸ்பிரயோகங்களுக்கான.. காரணத்தை, தனிநபர்கள் ஊடாகப் பார்க்கின்றனர். தனிநபர் அரசியல் நடத்தையாகப் பார்க்கின்றனர்.
இலஞ்சம், ஊழல், அதிகார துஸ்பிரயோகம் ... சமூகத்தின் கூறாக, சமூகத்தினுள்ளிருப்பதும், அது மீண்டும் மீண்டும் தோன்றும் என்பதைக் காண்பதில்லை. ஊழல் தனியுடமையின் அரசியல் கூறு. இதைக் கடந்து முதலாளித்துவ பாராளுமன்றத்தின் எல்லைக்குள் கோட்பாட்டு ரீதியாக, அரசியல் அமைப்புச் சட்டம் மூலம், மேற்கில் உள்ளது போல் ஓரளவுக்கு சில தீர்வுகளைக் காணமுடியும்.இலங்கையின் முதலாளித்துவ பாராளுமன்ற அரசும், (ஜே.வி.பி. இதைத் தாண்டாது), அதிகார வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள அரசியல் அமைப்புச் சட்டமும், முரணற்ற முதலாளித்துவ ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக நிலப்பிரபுத்துவ அதிகார – அடிமை முறையைக் கொண்ட, கூட்டுக் கலவையாகக் காணப்படுகின்றது. நிலப்பிரபுத்துவம் கடந்த மேற்கு முதலாளித்துவ அரசுகள் போன்றதல்ல.
நிலப்பிரபுத்துவ அடிமைமுறையை அடிப்படையாகக் கொண்ட பண்பாட்டு - கலாச்சாரத்தை பின்பற்றுகின்ற நாட்டில், இலஞ்சம், ஊழல், அதிகார துஸ்பிரயோகங்கள் .. என்பது இயல்பானதாக இருக்கின்றது. காலனியவாதிகள் அதிகாரத்தை தங்கள் அடிமைகளிடம் இலஞ்சமாக கொடுத்து – பெற்றுக் கொண்ட நாடுகளில் இலங்கையும் அடங்கும்;.
அடிமைத்தனம் நிலப்பிரபுத்துவத்தின் அரசியல் கூறு. அடிமைகள் அண்டிப் பிழைப்பதும் - பிழைக்க வைப்பதும் வாழ்வியலாக, இலஞ்சம், ஊழல், அதிகார துஸ்பிரயோகம்.. அதற்கான குறுக்கு வழியாக இருக்கின்றது.
இந்த அடிமைத்தனம் பண்பாட்டுத் தளத்தில், கலாச்சார தளத்தில் .. ஊட்டப்படுகின்றது. அரசியல் அமைப்புச் சட்டம் இந்த வகையில் தான் உருவாக்கப்பட்டிருக்கின்றது.
1. மதம் தனிப்பட்ட மனிதனின் நம்பிக்கை. நம்பிக்கையை மற்றவர் மேல் திணிக்கின்ற செயற்பாடு, அரசு செயற்பாடாக இன்று இருக்கின்றது.
மதம் தனிப்பட்ட மனிதனின் நம்பிக்கை என்பதை, அரசியல் அமைப்புச் சட்டம் மறுதளித்து, மதத்தை அரச மதமாக்கி இருக்கின்றது. தனிமனித நம்பிக்கையை, பெரும்பான்மை சார்ந்த நம்பிக்கையை.. அரசு சார்ந்த பொது இடங்களில் அனுமதிக்கின்றது. பல மதங்கள் உள்ள நாட்டில் அரசும், அரச கட்டமைப்பும், மதங்கள் மூலம் தங்களை பிரித்து விடுவதுடன், அரசு அலுவலகங்களில் மதத்தை முன்னிறுத்திய நிகழ்வுகள் மூலம் அதிகாரத்தை திணிப்பதும், பல மணி நேரங்கள் மக்கள் சேவைகளை வழங்காது மறுதளித்துவிடுகின்றனர்.
2. இலங்கை அரசியலமைப்புச் சட்டம் இனவாத அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இலங்கையின் பெயர், அதன் கொடி தொடங்கி, இன மத கண்ணோட்டத்தில் அரசியல் ஊழல் கொண்டதாக இருக்கின்றது. ஒரு இனத்தை, மதத்தை, பெண்ணை, பிரதேசத்தை, சாதியை .. ஒடுக்குவதன் மூலம், இலஞ்சம், ஊழல், அதிகார துஸ்பிரயோகத்தை இலகுவாக செய்ய முடிகின்றது.
3. பாடசாலைகளில் அறிவியலை கற்பிப்பதற்;குப் பதில் மூடநம்பிக்கையைப் பாடமாக மட்டுமின்றி, கோயில்களைக் கட்டி அதை வழிபாட்டிடங்களாக மாற்றி வருகின்றனர். இதை இந்த அரசியல் அமைப்புச் சட்டம் அனுமதிக்கின்றது. பாடசாலைகளில் கோயில்களைக் கட்டுவது தொடங்கி மதத்தின் பெயரில் பாடசாலைகள், இனவாத அரசியல் தலைவர்களின் பெயரில் பாடசாலைகள்… குறுக்கப்பட்டு இருக்கின்றது. பல்கலைக்கழகங்களும் இதற்குள் அடங்கும். மூடநம்பிக்கையை உருவாக்குவதன் மூலம், அடிமைத்தனத்தை (மனிதனை மனிதனின் காலில் விழவைக்கும் அடிமை முறை) வளர்த்து, மக்கள் இலஞ்சம், ஊழல், அதிகார துஸ்பிரயோகங்களுக்கு.. ஊடாகத்தான் வாழ முடியும் என்ற நிலையை இலங்கை அரசியல் அமைப்புச் சட்டம் மறைமுகமாக பாதுகாத்து அங்கீகரிக்;கினற்து.
4. பாடசாலைகளில் பொதுவான சீருடைக்குப் பதில், மத அடையாளங்களும், பிரிவினைகளும் .. ஊட்டப்படுகின்றது.
5. சமச்சீரான பாடசாலைகளையும் - கல்வியையும் அழித்துவரும் பாடசாலையில் மாணவர்களைச் சேர்க்கும் முறையானது, ஊழலின் தொடக்கப் புள்ளியாக இருக்கின்றது. இதில் இருந்து மாணவர்கள் ஊழலைக் கற்றுக் கொள்கின்றனர்.
6. பொது இடங்களில் ஒலி மாசு மூலமும், காட்சிப்படுத்தல்கள் மூலமும் மூடநம்பிக்கையைத் திணிக்கும் அடிமைமுறைமையும், அதற்கு அடக்கிங் போகக் கோரும் அடக்குமுறைகளும் .. விரவிப் பரவி வருகின்றது.
7. இப்படிப் பல
அரசியலமைப்பை மாற்றியமைப்பது தொடங்கி இருப்பதை சீர்திருத்தி புதிய மனித சமூகத்தை அமைக்குமாறு ஜே.வி.பி. நிரப்;பந்திப்பதன் மூலம், அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க முடியும். ஜே.வி.பி. நிர்ப்பந்திப்பதன் மூலம், புரட்சிகர அரசியலை முன்னெடுக்க அனைவரும் முனையவேண்டும்.
28.09.2024
இது தொடர்பான கட்டுரைகள்
1.
ஜே.வி.பியின் வெற்றியும் சமூகத்தின் தோல்வியும்
2.
பாராளுமன்ற ஜனநாயகத்தில் ஜே.வி.பி. குறித்த கற்பனைகளும் நிஜங்களும்
1.
ஜே.வி.பி. மீதான அரசியல் அழுத்தங்கள் மூலம் மாற்றத்தைக் கொண்டு வாருங்கள்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode