சமூகம் குறித்த அக்கறையோ, மனிதாபிமானம் குறித்த சிந்தனைமுறையோ அரசுகளிடம் கிடையாது. சுயநலமாகச் சிந்தி, கொள்ளையிடு, இதைத்தான் மனித நடத்தையாக – மனிதப் பண்பாக அரசு முன்வைக்கின்றது. இதற்கு எதிராக தான் மருத்துவமனைகளில் மருத்துவத்துறைச் சேர்ந்தவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடுகின்றனர்.
இப்படி உண்மைகள் இருக்க, பதுக்கல் வியாபாரிகளையும், விலையைக் கூட்டி விற்கும் முதலாளிகளையும் இனம் கண்டு கொதிக்கும் மனம், அரசுகளும் பன்னாட்டு முதலாளிகளும் கூட்டாக தொடங்கியுள்ள பகல் கொள்ளையைக் கண்டுகொள்ள முடிவதில்லை.
வைரஸ்சை அடுத்து மதவாதிகள் தங்கள் முகமூடிக்கே செயற்கை முகமூடியை அணிந்தபடி, மூலதனத்தைப் பாதுகாக்கும் தங்கள் மதப் பணியை மீளத் தொடங்கியிருப்பது போல், அரசுகள் மற்றும் பன்நாட்டு முதலாளிகளை பாதுகாக்க துடியாத் துடித்து களத்தில் இறங்கியுள்ளனர்.
அமெரிக்கா ஒரு டிரிலியன் (100000 கோடி) டொலரை முதலாளிகளுக்கு வாரி வழங்கவுள்ள அறிவித்தலை விடுத்துள்ளது. இது பிரிட்டன் வருடாந்த வரவு செலவு தொகைக்குச் சமமானது. பிரான்ஸ் அரை டிரிலியன் (50000 கோடி) டாலரை முதலாளிகளுக்கு கொடுக்கவுள்ள அறிவித்தலை விடுத்துள்ளது. வைரஸ்சைக் காட்டி எல்லா அரசுகளும் பெரும் பன்னாட்டு முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து, மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் திட்டத்தை தொடங்கி இருக்கின்றது.
மக்களுக்கு மருத்துவம் செய்வதை குறித்து பேசுவதை விட, மூலதனத்தை கொழுக்க வைக்கும் செயல்திட்டங்களே முதன்மை பெறத் தொடங்கி இருக்கின்றது.
இதை மூடிமறைக்க மக்களுக்கு சிறு நிவாரணங்களை (முழுமையாக அல்ல) கொடுத்து ஏமாற்றும் தந்திரத்தையும் வழமை போல் முன்வைத்து வருகின்றது. உண்மையில் நிவாரணம் யாருக்கு தேவை? அன்றாட உழைப்பையே நம்பி வாழும் மக்களுக்கும், பன்நாட்டு முதலாளித்துவத்தால் நலிவுற்று வரும் சிறு முதலாளிகளுக்கு மட்டுமே அவசியமானது. இதற்கு எதிர்மறையாக மூலதனத்தைக் கொழுக்க வைக்கும் திட்டங்களை, அரசு மீட்பாக முன்வைக்கப்படுகின்றது.
உலகின் முழு செல்வத்தையும் தங்கள் சொத்தாக குவித்து வைத்துள்ள முதலாளித்துவ நிறுவனங்கள், தங்களை தாங்கள் காப்பாற்ற வக்கற்றுக் கிடந்தால் அதை திவாலான நிறுவனங்களாக மாற்றி அரசுடமையாக்குவது சரியானது. மாறாக கூட்டாகக் கூடி மக்கள் பணத்தை கொள்ளையிடுவதல்ல. உலகின் முழு செல்வத்தையும் குவித்து வைத்துள்ள பன்நாட்டு மூலதனங்கள், தங்களை தாங்களே மீட்டுக் கொள்ளவும், தமக்காக உழைத்த மக்களுக்கு நிவாரணத்தை வழங்கவும் வக்கற்றது என்றால் - இந்த நவதாராளவாத தனியார் சொத்துடமை முறையை எதற்காக மக்கள் கட்டியாள வேண்டும்.
வைரஸ் தொற்று பரவலாக்கிக் கொண்டு இருந்தபோது, மூலதன நலனை முன்னிறுத்தி மவுனமாக மக்களின் மரணத்துக்கு வழிகாட்டிக் கொண்டிருந்த மூலதன அரசுகள், நோயுற்ற மக்களுக்கு மருத்துவம் குறித்து அக்கறையின்றி - சொத்துடைய வர்க்கத்தை மேலும் எப்படி கொழுக்க வைக்கலாம் என்பதில் அக்கறை கொண்டு செயற்படுகின்றது.
மருத்துவத்தை தாராளவாத தனியார் மயமாக்கி மக்களுக்கு மருத்துவத்தை வழங்க முடியாது இருக்கும் இந்த இக்கட்டான சூழலில், ஸ்பெயின் அரசு தனியார் மருத்துவமனைகளை அரசுடமையாக்கினால் தான் குறைந்தபட்ச மருத்துவத்தை வழங்கமுடியும் என்ற நிலையில் - தனியார் மருத்துவமனைகளை அரசுடமையாக்கியது. இப்படி உண்மைகள் இருக்க, ஒரு நெருக்கடியை தனியார் பொருளாதார கட்டமைப்பால் ஈடுகட்ட முடியவில்லை என்றால், அந்த முறை எதற்கு? ஏன் அதை பாதுகாக்க வேண்டும்;. மக்களின் உழைப்பில் இருந்து அரசுகள் கொள்ளையிடும் பணத்தை, எதற்காக முதலாளிகளுக்கு கொடுக்க வேண்டும்?
நாம் சிந்திக்க வேண்டிய, செயற்பட வேண்டிய அவசியத்தை வைரஸ் ஏற்படுத்தி இருக்கின்றது. அதையே இந்த நெருக்கடி மனிதன் முன் உணர்த்தி நிற்கின்றது.