கோத்தபாய இலங்கை சனாதிபதியாக பதவியேற்று 24 மணி நேரத்துக்குள்ளேயே(19.11.2019), இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சிவசுப்ரமணியம் ஜெயசங்கர், மற்றும் ஐம்பது பேர் கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளும் கொழும்புக்கு வருகை தந்தனர். சிலமணிநேரங்கள் கொழும்பில் தரித்து நின்ற இவர்கள் கோத்தபாய, அவரின் அண்ணனார் மஹிந்த உட்பட ரணில் மற்றும் சில முக்கியஸ்தர்களை சந்தித்து விட்டுச் சென்றனர்.
"மரியாதையின் நிமித்தம் அரச அதிபர் கோத்தபாயவை சந்தித்தேன். இரண்டு நாடுகளுக்குமிடையில் உள்ள பிணைப்பை இறுக்கமடையச் செய்யும் விதத்தில், நாம் அவரை இந்தியாவுக்கு, பிரதமர் மோடியுடனான சந்திப்பு ஒன்றிற்கு வருமாறும் அழைப்பு விடுத்தேன்" என அறிவித்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சிவசுப்ரமணியம் ஜெயசங்கர்.
அதேவேளை, "இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களின் தூதுவராக வருகை தந்த டாக்டர்.எஸ்.ஜெய்சங்கர் அவர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதோடு, இலங்கையின் ஜனாதிபதியாக முதலாவது வெளிநாட்டுப் பயணமாக என்னை இரு நாடுகளுக்கிடையிலான உறவையும் பலப்படுத்த, பிராந்திய பாதுகாப்பு, அமைதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி சம்பந்தமாக கலந்துரையாடுவதற்கு இந்தியாவிற்கு அழைத்திருப்பதை கௌரவமாக கருதுகின்றேன்." என அறிக்கை வெளியிட்டார் கோத்தபாய. 20.11.2019 அன்று கோத்தபாயவின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், அவர் 29 கார்த்திகை மாதம் 2019 அன்று அரசுமுறைப் பயணமாக இந்தியா செல்வார் என்று அறிவித்தனர்.
மேற்கூறிய இந்த அறிவிப்புகளுக்கு வெளியில் வேறு எந்த விடையமும், இந்தியர்களாலோ, அல்லது இலங்கை அரசாங்கத்தினாலோ வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், முதலாவது உத்தியோகபூர்வ அரசுப்பயணமாக இந்தியாவுக்கு செல்லவுள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.
அதற்கு முன்பாக தமிழ் தரப்புக்களை சந்தித்து பேச்சு நடத்த இந்தியா தீர்மானித்துள்ளது. «இந்த முறை கட்டாயம் தமிழ் மக்களுக்கு தீர்வை இந்தியா பெற்றுது தரும்» என்ற செய்தியை பரப்பி வருகின்றனர், தற்போது கோத்தா -மஹிந்த கூட்டில் இயங்கும் தமிழ் "கட்சி"களும் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களும்.
இந்தியா தீர்வோட "அந்தா வருகுது, இந்தா வருகுது" என்ற கதைகள் 83 இனக்கலவரத்தின் பின் பிரபலமானவை. ஜி.பார்த்தசாரதி, ஜெ என்.டிக்சித் போன்ற இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளின் பெயரை உச்சரிக்காத தமிழர்கள் அன்று கிடையாது. அவ்வளவு பிரபலம் அவர்கள். அக் கதைகள் 1987 இல் இந்திய அமைதிப்படை இலங்கைக்கு வந்து அழிவுகளைத் தந்து சென்றபின் முடிவுக்கு வந்தது.
அதன் பின் 2009 போர் முடிவுக்கு பிறகு வந்த காலத்தில், மறுபடியும் இந்தியா தீர்வைப் பெற்றுத் தரும் என்ற கதைகள் உலாவி வருகின்றன. 2015 இல் ரணில்-மைத்ரி கூட்டு அரசாங்கம் அமைந்த வேளையிலும் இதேபோன்றே "இந்தியாவில் இருந்து தீர்வு" இறக்குமதி செய்யப்படும் கதைகள் பலமாக உலவின. நரேந்திர மோடி "இந்தா வாரார், அந்தா வாரார். தீர்வோட வாரார்" என்ற கூக்குரல்கள் அன்று உரக்கக் கேட்டன. அந்தக் காலத்தில் ரணில்-மைத்ரியுடன் தேன்நிலவு கொண்டாடிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சில இலங்கை வாழ் - இந்திய அபிமானிகளே இந்த கூக்குரல்களுக்கு சொந்தக்காரர்கள். இவர்கள் கூக்குரலிட்டது போலவே மோடியும் 2015 பங்குனி மாதம் 13 ஆம் திகதி கொழும்புக்கு வந்தார். இலங்கை அரச தலைவர்களுடன் பேசினார். மோடி யாழ்ப்பாணம் வந்தார். "தமிழர் அரசுத் தலைவர்" விக்கினேஸ்வரனுடன் பேசினார். இந்தியா போனார். அதன் பின்னர் "தீர்வு" பற்றி எந்த சத்தமும் எத்திசையிலிருந்தும் கேட்கவில்லை.
இதற்கு முன்பு 2013இல் இங்கிலாந்து பிரதமர் யாழ்ப்பாணம் வந்த போதும் கூட இதே மாதிரிதான். இங்கிலாந்தும்- அமெரிக்காவும் மஹிந்த குடும்பத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஏற்றுவோம் என மிரட்டி, தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுத்தருவார்கள் என கதைகள் உலவின. சிவாஜிலிங்கம், குதிரை கஜேந்திரன், பொன்னம்பலம் கஜேந்திரகுமார் போன்றோரே இக் கதையின் பரப்புனர்களாக இருந்தனர். ஒன்றும் நடக்கவில்லை இன்றுவரை.
உண்மையில் இந்தியாவோ அல்லது மேற்கு ஐரோப்பிய நாடுகளே எங்கும்-எப்போதும் கூறவில்லை, தாம் இலங்கை வாழ் தமிழ்மக்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவோமென! புலிகள் இருந்த காலத்தில் மட்டும், மேற்குநாட்டுகள் தேசியப்பிரச்சனையில் தலையீடு செய்தன. அப்போதும் கூடத் தம்மை "மத்தியஸ்தர்களாகவே" கூறிக்கொண்டார்கள். தீர்வைப் பெற்றுத்தரும் இரட்சகர்களாக அல்ல.
இன்றும் இதே நிலை தொடர்கிறது. மேலே கூறியது போலவே, இப்போ- தற்போது ஆட்சியிலுள்ள மஹிந்த குடும்பத்துக்குச் கரசேவை செய்யும் "தமிழ்" கட்சிகளும், இந்திய இரசிகர்களும் நரேந்திர மோடி தீர்வைப் பெற்ருத்தருவாரென கதை பரப்புகின்றனர். இந்த நம்பிக்கைக்கு அவர்கள் கூறும் காரணங்களில் ஒன்று, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தமிழராம்! தற்போது மஹிந்த- குடும்ப அரசுக்கு நெருக்கமாகவுள்ள "தமிழர் தரப்புடனேயே" பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் கூறுகின்றனர்.
எவ்வளவு காலத்துக்குத் தான் நாம் இந்த பொய்களையும், அரசியற் புரட்டுகளையும் நம்பப் போகிறோம்! கானல்நீரான இந்த "தீர்வுக் கதைகள்" நம் தேசத்துக்கு எந்த விடிவையும் பெற்றுத்தரப்போவதில்லை. நாம் மட்டுமே ஏமாற்றப்படுவோம்.