ஜெயமோகன் என்ற இந்திய சனாதன எழுத்தாளனும் அவரின் சீடர்பிள்ளைகள் என கூறிக்கொள்ளும் சில இலங்கை எழுத்தாளர்களும், இலங்கையின் தமிழ் இலக்கிய பாரம்பரியத்தை -குறிப்பாக இடதுசாரிய இலக்கிய வரலாறை முற்றுமுழுதாக மறுத்து - இடதுசாரிய இலக்கியம் என்று ஒன்று இல்லை என்ற வகையில் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
ஜெயமோகன் மற்றும் இந்தியர்களின் நிழலில் நின்று ஈழத்து இலக்கிய பாரம்பரியத்தை- வரலாற்றை நிராகரிப்பதென்பது, அவர்களின் இலக்கிய கோட்பாட்டின் அடிப்படையில் சரியானதே. அவர்களின் கோட்பாடென்பது சைவ சனாதன – சமூகமறுப்பு சார் - தனிமனித பார்வை கொண்டது. அவர்கள், மார்க்சிச பாரம்பரியத்தை- உழைப்புக்கும் மூலதனத்துக்கும் இடையிலான முரண்பாட்டின் உற்பத்திப்பொருளாக உருவாகும் "அந்நியமாதலை" அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் இலக்கியத்தை இலக்கியம் இல்லை என மறுப்பது சரியானதே. ஒரு வலதுசாரி சனாதன எழுத்தாளார்களிடம் வேறு எதை எதிர் பார்க்க முடியும்
இங்குள்ள பிழை என்னவென்றால், இந்த வலதுசாரி சனாதன சக்திகளையும், "எல்லாவகை பாரம்பரியங்களையும்" ஈழத்து முற்போக்கு இலக்கியமென்று- கும்பலில் கோவிந்தா என தலையில் வைத்துக் கொண்டாடிவிட்டு இப்போ, அவர்கள் அங்கீகாரத்தை மறுக்கும்போது, குத்துது, குடையுது என்று கூப்பாடு போடுவதில் எந்தவொரு பிரயோசனமுமில்லை. முதலில், இந்த வலதுசாரிய - சனாதன இலக்கியவாதிகளை இலக்கிய -அரசியல் கோட்பாட்டு ரீதியில் எதிர்க்க வேண்டுமானால்- அவர்களுக்கு எதிரான மாற்று கருத்துள்ளவர்கள் இணைத்து இலக்கிய செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும். இதை விடுத்தது, அவர்கள் ஏதோ தவறு செய்து விட்டதாக கூறுவது நல்லதல்ல.
இது ஒருபக்கமிருக்க, எனக்குத் தெரிந்த அளவில் ஐரோப்பிய இலக்கியத்தளத்தில் எந்த இலக்கியவாதியும், தனக்கு எதிரான இலக்கியப் பாரம்பரியத்தை மறுத்தோ- அல்லது அப்படி ஒன்று இல்லையென்றோ விவாதம் புரிவதில்லை. காலத்துக்கு காலம் இலக்கிய பாரம்பரியங்கள் ஆதிக்கம் மாறி மாறி வந்துகொண்டே இருக்கும். அழகியல் கோட்பாடுகளும், உள்ளடக்கமும், பேசுபொருளும்- சமூகப் பொருளாதார தட்பவெட்ப நிலைக்கேற்ப இலக்கியத்தை தன் வசம் வைத்துக்கொள்ளும். .... இந்த பன்மைத்துவ இலக்கிய கண்ணோட்டம் இருக்குமானால் "எல்லா பக்கத்தாலும்" பெறுமதி வாய்ந்த இலக்கியம் உருவாக்க முடியும். மேலும், அதன் பின்னால் உருவாகிய இருப்பியல் அழகியல், பின்நவீனத்துவ விமர்சன முறைகள், பெண்ணிய இலக்கிய பாரம்பரியங்களின் அடிப்படையானது மார்க்சிஸ பாரம்பரியத்திலிருந்தே உருவானது அல்லது அதன் கிளைகளாகவே இவை வளர்ச்சியடைந்தன. இந்த வகையில், இலக்கிய கோட்பாட்டு தியரி மற்றும் அவை பற்றிய தெளிவுள்ளவர்கள் எவராலும் மார்க்சிஸ இலக்கிய பாரம்பரியத்தை மறுத்துவிட முடியாது. இது தெரியாமல், தம்பிகள் சில எல்லாம் தெரிந்தவர்கள் போல எம்மி எம்மி குதிப்பது வெறும் நகைப்புக்கே வழிவைக்கும்.
அதை விடுத்து இங்கு, இலங்கையில் 60-70-80 வரையிருந்த மார்க்சிஸ -இடதுசாரிய இலக்கிய பாரம்பரியத்தை மறுத்து, அப்படி ஒன்று இல்லை என முரண்டுபிடிப்பதும், அவதூறுகளை எல்லாம் தெரிந்தவர்கள் போல அள்ளிவீசுவதும் வெறும் கற்றுக்குட்டித் தனமானதே ஒழிய, இலக்கிய அறிவுசார் முதிர்ச்சி அல்ல! புதிய விளக்குமாறு விழுந்து விழுந்து கூட்டுவது போல - அல்லது புதிதாக "ஞான ஒளியை" கண்டுகொண்டவர்கள்- கத்திக் குளறிக்கொண்டு, தாம் புதிதாக ஏதோ ஒன்றை கண்டடைந்ததாகவும்- அதுதான் ஞாலத்தில் அடிப்படை உண்மை எனவும் - வாழ்வின் எல்லாவகைப் பிரச்னைகளுக்கும் தீர்வு என்றும் புலம்புவது போலுள்ளது இந்த ஜெயமோகனின் மார்க்சிச மறுப்பு குழாத்தின் கூச்சல்கள்.
சனாதன-வலதுசாரிய இலக்கிய பாரம்பரியத்தின் ஒரு கிளை தான் "பாசிச" இலக்கியம். இந்த மக்கள்வெறுப்பு, சமூகவெறுப்பு இலக்கியம் இல்லாதொழிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல. மாறாக இந்த வகை இலக்கியங்களுக்கு மாற்றான முற்போக்கு இலக்கியம் - இலக்கிய இயக்கம் உருவாக்கப்படல் வேண்டும்.
எனக்கு தெரிந்தமட்டில் தற்போது இலங்கையில் தமிழ் இலக்கியத் தளத்தில் எந்தவித முற்போக்கு இலக்கிய அசைவியக்கமும் இல்லை. 2009 பின் வெளிவரும் பெரும்பான்மையான நூல்கள் வலதுசாரிய பார்வை கொண்ட - இனவாதப்போக்கு கொண்ட - சாதிய சனாதன படைப்புகளே.
யார் தான் மறுத்தாலும், எந்த அரசியற்போக்கு ஒரு சமூக நீரோட்டத்தை கட்டுப்படுத்துகிறதோ, அதன் வெளிப்பாடே இலக்கியமாகவும் வெளிவரும். அடிப்படையில், சாதிய சமூகமான ஈழத்தமிழர் சமூகத்தில் - மேலிருந்து கீழாக மனிதரை வகைப்படுத்தி ஒடுக்கும் சமூகத்தில் இருந்து எவ்வாறு, சமூக ஆதிக்க நீரோட்டம் முற்போக்கானதாக இருக்க முடியும்??? ஆணாதிக்க வெறியும், அது சார்ந்த பாலியல் ஒடுக்குமுறையும், சமூகத்தின் ஆதிக்க சிந்தனையாக இருக்கும் போது - எவ்வாறு சமூக, பாலியல், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான இலக்கியம் உருவாக முடியும் ????!
2009-இக்கு பின்னான காலகட்டம் சமூக-இலக்கியது தளத்தில், யார் யார் என்ன கோட்பாட்டின் அடிப்படையில் இயங்குகிறார்கள் என்பது வெட்டவெளிச்சமாக தெரியவந்து கொண்டிருக்கிறது. புலிகள் இருக்கும் வரை தம்மை புரட்சிக்காரர்களாக - கலகக்காரர்களாக- பெண்ணியவாதிகளாக- சாதி எதிரப்பாளர்களாக காட்டிக்கொண்ட பலர் இப்போ அம்பலப்பட்டு நிற்கிறார்கள். அவர்களது யாழ் சைவ சனாதன, ஆணாதிக்க, வெள்ளாளிய சிந்தனை இப்போ பல்லை இளிக்க தொடங்கி விட்டது. இவர்கள், இலங்கையில் காசு கொடுத்து தமக்கான இலக்கிய பரம்பரை ஒன்றை, இந்திய பார்ப்பனிய சனாதன இலக்கியவாத சக்திகளுடன் இணைந்து உருவாக்குகிறார்கள்.
இதை நான் ஒருவகையில் வரவேற்கிறேன். காரணம், ஏதோ ஒரு காலத்தில் இந்த ஒடுக்குமுறை சார்ந்த ஆதிக்க இலக்கியத் தளத்தை உடைக்கும் வகையில், மாற்று சக்திகள் உருவாக இது உந்துசக்தியாக இருக்கும் என்பதனாலாகும்.