எட்டு வருடங்களாக நடைபெற்ற சைடம் - தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராகவும், கல்வி தனியார்மயப்படுத்தலுக்கு எதிராகவும் நடைபெற்ற போராட்டம் நேற்று (08.11.2017) இல் வெற்றியுடன் முடிவுக்கு வந்துள்ளது.
இப்போராட்டத்தில், பங்குகொண்ட பல அமைப்புகளில் ஒரு தோழமை அமைப்பு என்ற வகையில் புதிய ஜனநாயக மக்கள் முன்னணியானது இப்போராட்டத்தின் வெற்றி சார்ந்து மகிழ்ச்சி கொள்கிறது.
அதேவேளை, இப்போராட்டத்தை முன்னின்று நடத்திய அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இடதுசாரிய மாணவர் அமைப்புகள், நேரடி ஆதரவு கொடுத்த எமது சகோதர அமைப்பான முன்னிலை சோசலிசக் கட்சி, மற்றும் இடதுசாரிய அமைப்புகளுக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
எம்மைப் பொறுத்தளவில் இவ் வெற்றியானது இன, மத, பிரதேச , மற்றும் மொழி சார்ந்த பிரிவினைகள் கடந்து, இலங்கையில் வாழும் அனைத்து மக்களின் வெற்றியாகும். இவ்வருடத்தில் இது மக்கள்-இடதுசாரிய இயக்கங்கள் வென்றெடுத்த போராட்டத்தின் இரண்டாவது வெற்றியாகும். முதலாவது, சில மாதங்களுக்கு முன் புத்தூரில் மக்களும் புதிய ஜனநாயக மா- லெ கட்சியும் வென்றெடுத்த நில உரிமைக்கான- சுகாதார வாழ்வுரிமைக்கான போராட்டம். இன்று வெற்றி கண்டுள்ளது இலவசக் கல்விக்கான போராட்டத்தின் ஒரு பகுதி !!!! போராடுவதன் மூலம் மட்டுமே நாம் உரிமைகளை பெறமுடியும்-அவற்றைப் பாதுகாக்க முடியுமென்பதனை, மறுபடியும் இலங்கையின் இடதுசாரிய இயக்கம் - சோசலிச அமைப்புகள் நிரூபித்துள்ளளன.