வடக்குமாகாண சபையில் ஊழல்கள் அம்பலமாகி சந்தி சிரிக்கின்றது. இதில் தமக்கான பங்கு கிடைக்காத நரிகள் எல்லாம், ஊழலுக்கு எதிராக ஊளையிடுகின்றது. வடமாகாண சபைக்குள் நடக்கும் அரசியல் குத்துவெட்டுக்கும் - அதிகார கூத்துக்கும் எதிராக, மாற்று அரசியலை முன்வைக்க முடியாத "தமிழ் இடதுசாரிகள்" காவடியெடுத்து ஆடுகின்றனர்.
தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி கிடைக்கும் அதிகாரம் என்பது, ஊழல்தான். இது புலிகள் முதல் கூட்டமைப்பு வரை புளுத்துக் கிடக்கின்றது. தமிழரசுக்கட்சி, கூட்டணி, கூட்டமைப்பு என்று… "தமிழ் தேசிய" வரலாறு எங்கும் காணமுடியும். உதாரணமாக பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களில் பரம்பரை பரம்பரையாக செய்த ஊழலே, தமிழ் தேசிய அரசியலாக தொடருகின்றது. யுத்த காலத்தில் மக்களுக்கு அரசு கொடுத்த நிவாரணங்களைக் கூட கொள்ளையிட்டு கொழுத்த பன்றிகளின் வழிவந்தவர்களே, தமிழ் மக்களின் தலைவர்கள். மாகாணசபை என்பது தனிப்பட்ட வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான ஒன்றாகவே கருதுகின்றனர். ஊழலைக் கண்டுகொள்ளக் கூடாது என்பது, பாரம்பரியமான தமிழ் தேசியவாதிகளின் கொள்கை. இதுதான் புலிக்குள்ளும் நடந்தது. தேசியத்தை முன்னிறுத்தி வியாபாரம் செய்வது முதல் ஊழல் செய்வது வரையான தங்கள் அதிகாரத்துக்கே, தியாகங்கள் முதல் அர்ப்பணிப்புகள் வரை என்பதே "தமிழ் தேசியக்" கொள்கை. "தேசியம்" என்பது மக்களை ஒடுக்கும் வர்க்கங்களுக்கே ஒழிய, ஒடுக்கப்பட்ட மக்களுக்கானதல்ல என்பதே "தமிழ் தேசிய" வரலாறு. இன்று இந்த "தமிழ் தேசிய" பரம்பரை, தங்கள் பாரம்பரியமான ஊழலை தொடர்ந்து செய்கின்றனர். அதைக் கண்டுகொள்ளக் கூடாது என்று கூறுகின்றனர். நம்பிக்கை இல்லாத தீர்மானத்துடன், "சிங்கள" அதிகார வர்க்கத்திடம் மண்டியிடுகின்றனர். எதை அதிகாரமற்றதாக கூறினரோ, எதன் மூலம் மக்களுக்கு எதையும் செய்ய முடியாது என்று கூறினரோ, அதை சுவைக்க நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டு அலைகின்றனர். ஊழலை செய்ய இன்னும் அதிக அதிகாரம் கொண்ட தேசிய "தீர்வுகளை" கோருகின்றனர். தேசியத்தைச் சொல்லி பிழைக்கும் போராட்டத்தில் தோற்றவர்கள், அதை பெறுவதற்காக தங்களை ஊழல் எதிர்ப்பு பேர்வழியாக முன்னிறுத்திக் கொண்டு பவனி வருகின்றனர்.
ஊழலுக்கு எதிராக தலைமை தாங்கும் சாமிப் பயலின் நீதி தவறாத சாதிவெறி ஒழுக்ககேடு என்பது உலகறிந்தது. கடவுளின் பெயரில் மக்களை ஏமாற்றி பிழைக்கும் தொழிலை ஆதரிக்கும் இவர், அந்த தொழிலைச் செய்த பிரேமானந்தாவின் பாலியல் மற்றும் கொலைகார குற்றங்களுக்கு, நீதி தவறாத அவரின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பது, அவர் முதலமைச்சரான பின் இந்தியப் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் சான்று. சாமி வேசம் போட்ட இந்த "கூசாப் பயல்கள்" எல்லாம், ஊழல் எதிர்ப்புப் பேர்வழிகள்.
"தமிழ் தேசியத்தின்" பெயரில் இரண்டு அணிகள், தமிழ் மக்களை தொடர்ந்து மொட்டை அடிக்கும் உரிமைக்காக மோதுகின்றன. இதில் எது சரி என்று தடவிப் பார்க்கும் "தமிழ் இடதுசாரிகள்" இதில் ஒன்றை நக்கிக் காட்டுகின்றது அல்லது வெறுமனே எதிர்ப்பைக் கக்கிக் காட்டுகின்றது. இதனுடன் இந்த அரசியல் போக்கு முடிந்து போகின்றது.
மாகாணசபையும் மக்களும்
தேசியப் பிரச்சனைக்கு தீர்வாக, இந்தியாவின் கட்டைப்பஞ்சாயத்து அனுசரணையிலேயே மாகாணசபை உருவாக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொள்ள மறுத்து, 22 வருட கால யுத்தம் நடந்தது. யுத்தம் முடிந்த கையுடன், இந்த மாகாண சபை அதிகாரத்தை பெற்றுக்கொள்ள, தமிழ் பங்காளிகளுக்குள் குத்துவெட்டு போராட்டமும் ஆரம்பமானது. அதிகாரத்தை பெறுவதன் மூலம், தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக முயலும், மக்கள் விரோத நவதாராளவாதக் கும்பல்கள் அதிகாரத்துக்கு வருகின்றன.
இப்படி வந்தவர்கள் வட மாகாணசபை உறுப்பினர்கள். கிடைக்கும் நிதி மற்றும் அதிகாரம் மூலம், மக்களுக்கு செய்யக்கூடிய எதையும் செய்வதில்லை என்பது வெளிப்படையான உண்மை. நிதி திரும்பிப் போகின்றது. எங்கு எதில் ஊழல் செய்ய முடியுமோ, அவை செயற்படுத்தப்படுகின்றது. இந்த செயற்திட்டம் அவசியமானதா இல்லையா என்பது முக்கியமானதல்ல, ஊழலுக்கு உதவுவதாக இருக்க வேண்டும். அவை தான் முன்னெடுக்கப்பட்டது.
வெளிப்படையான மக்கள் சார்ந்த செயற்திட்டங்களில் ஊழல் செய்ய முடியாது என்பதால் அவை முன்னெடுக்கப்படுவதில்லை. இதுதான் வடமாகாண சபையின் குறுக்கு நெடுக்கான வெட்டுமுகம்.
இதில் தமக்கும் பங்குவேண்டும் என்று விரும்புகின்றவர்கள், ஊழல் எதிர்ப்பு கூச்சல் போடுகின்றனர். இதற்கு யாழ் வெள்ளாளிய சாதிய சிந்தனைக்கு தலைமை தாங்கும் இந்துமத சாமியார் விக்கினேஸ்வரன் தலைமை தாங்குகின்றார். தனது முதலமைச்சர் அதிகாரத்துக்கு தலை வணங்காதவர்களுக்கு எதிரான அதிகார வெறியுடன், ஊழலைக் காட்டி சகுனியாட்டத்தை நடத்துகின்றார்.
இப்படி ஊழலுக்கு ஆதரவு, எதிர் என்று "தமிழ் தேசிய" அரசியலை பிளந்து நடக்கும் அதிகாரத்துக்கான போட்டி என்பது, மீண்டும் மக்களை ஏமாற்றுவதே.
2009 இல் ஏற்பட்ட அரசியல் வெற்றிடம் போன்று, மீண்டும் வெளிப்படையான அரசியல் வெற்றிடம். இந்த அரசியல் வெற்றிடத்தை கைப்பற்றக் கூடிய இடத்தில் இடதுசாரிக் கட்சிகள் இல்லை. இடதுசாரிகள் என்று தங்களைக் கூறிக் கொள்கின்ற "தமிழ் இடதுசாரிய" அரசியல் இங்கும் அங்குமாக நக்கிப் பிழைக்கின்றது.
மக்களை அணிதிரட்டுவதற்கான பாதை
நவதாராளவாதமே கட்சிகளின் அரசியல் கொள்கையாகிய பின், ஊழல் - லஞ்சம் - அதிகாரத்தை தவிர வேறு எதையும் அதனிடம் எதிர்பார்க்க முடியாது. தியாகமும், அர்ப்பணிப்பும் கொண்ட 'தமிழ் தேசியத்தை" நவதாராளவாதமாக முன்னெடுக்கும் "ஊழல்" பயல்களிடம் தேடுவதும், தோண்டிப் பார்ப்பதுமா அரசியல்!?
"தமிழ் இடதுசாரியம்" இப்படித்தான் மண்டியிட்டு வேண்டுகின்றது. தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் அரசியல் வெற்றிடத்தை, தலைமை தாங்கி செல்ல வக்கற்றுக் கிடக்கின்றது. அதேநேரம் புலியை முன்னிறுத்தும் "தமிழ் தேசியமானது" இரண்டையும் நிராகரித்து (பார்க்க கூட்டமைப்பைப் புரிந்துகொள்ளாத மக்களும் மக்களைப் புரிந்துகொள்ள மறுக்கின்ற கூட்டமைப்பும் http://www.kaakam.com/?p=744) மூன்றாவது அரசியல் பாதையை முன்வைக்கின்றது. புலியை ஊழலற்ற அமைப்பாக, அதன் தியாகங்களை முன்னிறுத்தி தன்னை மாற்றாக முன்னிறுத்துகின்றது.
மறுபக்கத்தில் இனவொடுக்குமுறைக்கு எதிராக சர்வதேசிய அடிப்படையில் முன்னெடுக்க வேண்டிய இடதுசாரியத்தை, "தமிழ் இடதுசாரியம்" கொண்டிருக்கவில்லை என்பதே எதார்த்தமாக இருக்கின்றது.
இது இரண்டு அடிப்படைகளைக் கொண்டு இயங்குகின்றது.
1."புலியெதிர்ப்பு", "தேசிய எதிர்ப்பு", "தமிழ் வெறுப்பு"… மூலம் முன்னெடுக்கும் "தமிழ் இடதுசாரிய" கண்ணோட்டமானது, இனவொடுக்குமுறைக்கு எதிரான மாற்றுச் செயற்திட்டத்தை கொண்டிருப்பதில்லை.
2.சர்வதேசியத்துக்கு பதில் "தமிழ் தேசிய" ஆதரவை முன்வைக்கும் "தமிழ் இடதுசாரியமானது", இனவொடுக்குமுறைக்கு எதிரான மாற்று அரசியல் செயற்திட்டத்தைக் கொண்டிருப்பதில்லை.
மீண்டும் மீண்டும் "தமிழ்தேசிய" பாராளுமன்ற சாக்கடைக்குள் இறங்கி, கடைந்தெடுக்கின்ற பன்றித்தனத்தையே "தமிழ் இடதுசாரியம்" தொடர்ந்து செய்கின்றது.
இந்த அரசியல் பின்னணியில் ஏற்படும் அரசியல் வெற்றிடமானது, மிகத் தெளிவாகவே மக்கள் நலன் சார்ந்த அரசியலை கோருகின்றது. என்ன செய்யப்போகின்றோம் என்பதே அனைவரின் முன்னுள்ள அடிப்படைக் கேள்வி.