வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் தென்னே ஞானானந்த தேரர், மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் ரி.கிஷாந்த் உட்பட நால்வரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மாதம் கிழக்கு மாகாணசபைக்கு முன்பாக நடைபெற்ற முற்றுகை போராட்டத்தின் போது நீதிமன்ற கட்டளை கிழித்தெறியப்பட்டது தொடர்பிலேயே இவர்கள் நால்வரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ராஜபக்ச அரசு அதன் இறுதிக்காலத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடக்க நீதிமன்றத்தில் தடையுத்தரவுகளை பெற்று போராட்டங்களை அடக்க முற்பட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வீடுகளிற்கு இனம் தெரியாதவர்கள் மற்றும் பொலிசாரை அனுப்பி பெற்றோரை மிரட்டியது. முன்னைய அரசு போன்றே கூட்டாட்சியும் போராட்டங்களை அடக்க நீதிமன்ற ஆணைகளை பெற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளது. கூடவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகளின் வீடுகளிற்கு பொலிசாரை அனுப்பி பெற்றோரை அச்சத்திற்கு உள்ளாக்கும் செயலில் ஈடுபடுவதாக அங்கிருந்து கிடைக்கப்பெற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.