தமிழ்நாட்டில் தமிழ் மக்களை கசக்கிப் பிழிந்து சுரண்டிய வரிகளின் மூலம் பெற்ற மூலதனத்தையும், தமிழ் மக்களின் உழைப்பையும் கொண்டு எழுப்பிய கோவில்களில் தமிழ் வழிபாட்டு மொழி அல்ல. தமிழிற்கும், தமிழ் மக்களிற்கும் எந்த வித தொடர்பும் இல்லாத சமஸ்கிருதம் தான் வழிபாட்டு மொழி. கல்லையும், மண்ணையும் கடும் வியர்வை சிந்தி காவிச் சென்று கோவிலைக் கட்டிய உழைப்பாளிகளின் வழி வந்தவர்களில் சிலர் கோயிலிற்குள் போகலாம். ஆனால் அவர்கள் கட்டிய மூலஸ்தானத்திற்குள் அவர்கள் போக முடியாது. போகக் கூடாது. இன்னும் சிலருக்கோ கோயிலிற்குள்ளே கூடப் போக முடியாது. ஒடுக்கப்படும் மக்கள், பகுத்தறிவு அமைப்புக்கள், முற்போக்கு இயக்கங்களின் பெரும் போராட்டங்களின் பின்பு தான் மிக அண்மைக் காலங்களில் தான் கோயில் வழிபாட்டு உரிமை பெறப்பட்டது.
சனிக்கிழமை (08.04.2017) அன்று ஆறுமுகசாமி அவர்கள் தொண்ணூற்று நான்கு வயதில் இயற்கை எய்தி இருக்கிறார். பத்து வருடங்களிற்கு முன்பு, அதாவது அவரது எண்பது வயதுகளில் அவர் சிதம்பரம் கோவிலில் வைத்து சிதம்பரம் கோயிலில் பூசை செய்யும், சிதம்பரம் கோயில் உரிமையாளர்கள் தாமே என்று சொந்தம் கொண்டாடும் தீட்சிதர்கள் என்னும் பிராமணக் காடையர்களால் தாக்கப்பட்டார். எண்பது வயது முதியவரை, கைத்தடியின் உதவியுடன் தான் நடக்க முடிந்த அந்த மெலிந்த மனிதரை பார்ப்பனப் பயங்கரவாதிகள் ஏன் தாக்கினர்? அவர் கோயிலிற்குள் வைத்து கடவுள் இல்லை என்று சொன்னாரா? இல்லை காஞ்சிபுர மடத்துக் கேடி சங்கராச்சாரி ஜெயேந்திரன் தன்னை எதிர்த்துக் கேள்வி கேட்ட சங்கரராமனை கூலிப்படைகளை ஏவி சின்னக் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலிற்குள்ளேயே வைத்து கொலை செய்தது போல சிதம்பரம் கோயிலிற்குள் வைத்து யாரையாவது கொலை செய்தாரா?
ஆறுமுகசாமி அவர்கள் ஒரு சிவ பக்தர். மேனியில் காவி உடையும், நெற்றியில் திருநீறும், கழுத்தில் உருத்திராட்ச மாலையுமாகவே வாழ்ந்தவர். அவர் பிராமணர்களைத் துரத்தி விட்டு தான் பூசை செய்ய வேண்டும் என்று கேட்கவில்லை. சமஸ்கிருதத்தில் பூசை செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை. பிராமணர்களின் பூசை முடிந்த பின்பு சிற்றம்பல மேடையில் வைத்து தமிழ் மண்ணின் மொழியில், தமிழ் மக்களின் மொழியில், தன் மொழியாம் தமிழ் மொழியில் தேவாரங்கள், திருவாசகங்கள் பாட வேண்டும் என்பது தான் அந்தச் சிவனடியாரின் வேண்டுகோளாக இருந்தது. தான் நம்பும் கடவுளை தனது மொழியில் பாட வேண்டும் என்று கேட்டதற்காகத் தான் அவர் பார்ப்பனப் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டார்.
தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் பாடும் உரிமைக்காக அவர் நீதிமன்றம் போனார். அவருக்காகவும் பார்ப்பனர்களாலும், இந்துத்துவத்தாலும் அவமதிக்கப்படும் தமிழிற்காகவும் தமிழும், சைவமும் தமது இரு கண்கள் என்னும் தமிழ் ஆன்மீகவாதிகள் எவரதும் கண்களில் இருந்து கண்ணீர் வரவில்லை. சைவத் தமிழ் மடங்கள் என்னும் பெயரில் பெரும் சொத்துக்களை ஆண்டு அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆதீனங்கள் ஏனென்று கேட்கவில்லை. தாயைப் பழித்தவனை விட்டாலும் தமிழைப் பழித்தவனை விட மாட்டோம் என்று கட்சிகள், இயக்கங்கள் நடத்திக் கொண்டிருப்பவர்கள் தீட்சிதர்கள் தமிழைப் பழித்த போது காதுகளைப் பொத்திக் கொண்டிருந்து பாராமுகம் காட்டினர்.
மக்கள் கலை இலக்கியக் கழகம் என்னும் மதங்களை எதிர்க்கும், கடவுள்களை நம்பாத அமைப்பே சிவனடியார் ஆறுமுகசாமியிற்கு பக்க பலமாக இருந்தது. அவரது போராட்டத்தின் விளைவாக இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு தேவாரங்கள், திருவாசகங்களை பாடலாம் என்ற நீதிமன்ற தீர்ப்பு வந்தது. நீதிமன்றத்தில் வழக்கு வென்ற போதிலும் தீட்சிதர்களின் தமிழ் வெறுப்பு வெறி அடங்கவில்லை. அவர்களின் ஊளைகளிற்கு இடையே தான் அவர் சிற்றம்பல மேடையில் வைத்து தேவாரம், திருவாசகத்தைப் பாடினார். ஏழை, எளிய மக்கள் தமது உரிமைகளிற்காக போராடினால் அடித்து நொறுக்கும் தமிழ்நாட்டு காவல்துறை நாய்கள் தீட்சிதர்களைத் தடுக்காமல் வாலாட்டி சேவகம் செய்தன.
ஆறுமுகசாமி தில்லைச் சிதம்பரம் கோயிலை தமிழ்நாட்டு அரசின் அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்; தீட்சிதர்களின் அராஜகத்திலும், ஊழலிலும் இருந்து கோயிலை மீட்டு பொதுச் சொத்தாக்க வேண்டும் என்று வழக்குத் தொடுத்தார். சுப்பிரமணியசாமி, ஜெயலலிதா, தீட்சிதர்கள் என்னும் தமிழ், தமிழ்மக்கள் விரோதிகளின் கூட்டும், இந்துத்துவ இந்திய அதிகாரவர்க்கமும் சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கை தோற்கடித்தன. தீட்சிதர்கள் சிவனுடன் சேர்ந்து சிதம்பரம் வந்தவர்களாம்; எனவே அந்த உரிமைப்படி சிதம்பரம் கோயில் அவர்களது சொத்து என்று ஒரு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய கொடுமையை இந்த நூற்றாண்டிலும் கேட்டுக் கொண்டு தமிழர்களின் தலைவர்களும், தமிழ் மக்களும் மெளனமாகவே இருந்தார்கள்.
தமிழ் மொழிக்காகவும், தமிழ் மக்களின் உரிமைகளிற்காகவும் போராடிய ஒரு போராளி மறைந்து விட்டார். தமிழ் மண்ணையும், தமிழ் மக்களையும் கொள்ளையடித்தவர்கள் இறந்த போது கண்ணீர் விட்டுக் கதறிய தமிழ்ப் பொதுச்சமூகத்தில் இந்த ஏழை மனிதரின் இறப்பு குறித்து எந்த விதச் சலனமும் இல்லை. அவர் வாழ்ந்தபோது சேர்ந்து நின்று போராடிய முற்போக்கு சக்திகளே அவர் இறந்த போதும் முன்னின்று அஞ்சலி செய்கின்றன.
போய் வாரும் அய்யா!! பார்ப்பனிய பயங்கரவாதத்திற்கு அஞ்சாது, அடி பணியாது போரிட்ட போராளியே போய் வாரும்!!.