மாலபேயில் அமைந்துள்ள தனியார் மருத்துவ கல்லூரியை மூடக்கோரியும், ஏனைய சகல தனியார் பட்டக்கடைகளை மூடும்படியும், பாடசாலைகளில் கட்டணம் அறவிடுவதனை தடை செய்யக்கோரியும், கல்விக்கு வரவு செலவு திட்டத்தில் 6% வீதத்தை ஒதுக்கி சகலருக்கும் இலவசக் கல்வியை உறுதி செய்யக்கோரியும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் மருத்துவ மாணவர் நடவடிக்கை குழுவும் இணைந்து கடந்த பல மாதங்களாக பாரிய போராட்டங்களை வடக்கு முதல் தெற்கு வரை நடாத்திய வண்ணம் உள்ளனர்.
பல பாதயாத்திரைகள், தொடர் சத்தியாககிர போராட்டங்கள், தொடர்ச்சியான மக்கள், பாடசாலை மாணவர்கள், புத்திஜீவிகளுடன் ஆன உரையாடல்கள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதன் விளைவாக சகலருக்கும் இலவசக்கல்வியை உறுதி செய்யும் இப்போராட்டம் மக்கள் மயப்பட்டுள்ளது.
இலங்கையில் இன்று பிரதான பேசு பொருளாக மாறியுள்ளது கல்வியை தனியார்மயப்படுத்த அரசு எடுத்துள்ள முடிவுக்கு எதிரான பரந்து பட்ட போராட்ட செய்திகள். தினமும் ஒரு ஊர்வலம், மறியல் போராட்டம், வைத்தியசாலைகளில் வைத்தியர்கள்- ஊழியர்கள் போராட்டம், ஆசிரியர்கள்- மாணவர்கள் போராட்டங்கள் என பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் இந்த போராட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்துள்ளன.
பொது மக்கள் இலவசமா இன்று கிடைக்கும் கல்வி மற்றும் மருத்துவத்திற்கு எதிர்காலத்தில் ஏற்பட உள்ள ஆபத்து குறித்து புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர். போராட்டங்களில் தாமாகவே இணைந்து கொள்ளும் பொது மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.