மாலபேயில் அமைந்துள்ள தனியார் போலி மருத்துவக் கல்லூரியினை உடனடியாக மூடுமாறு கோரியும், இலவசக் கல்வி மற்றும் மருத்துவ சேவையினை உறுதிப்படுத்தவும் மக்கள் - மாணவர்களின் பொதுக்கூட்டமும், ஆர்ப்பாட்ட ஊர்வலமும இன்று நுகேகொடையில் நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில் மக்கள்- மாணவர்களுடன், இடதுசாரிய கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்கள் கலந்து கொண்டன.
பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மேற்குறித்த அமைப்புகளின் பிரதிநிதிகள் எல்லோரும் இலவச கல்வி மற்றும் மருத்துவ சேவையின உறுதிப்படுத்த ஒன்றிணைந்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைமையின் கீழ் பாரிய போராட்டத்திற்கு தயாராக எப்போதும் இருப்பதாக தெரிவித்திருந்தனர்.
கூட்டத்தில் உரையாற்றிய முன்னிலை சோசலிச கட்சியின் பிரதிநிதி ஜயாகொட அவர்கள் "மாணவர் இயக்கம் ஆனது எமக்கெல்லாம் முன்மாதிரியாக இருக்கின்றது. கல்வியை தனியார் மயமாக்கும் அரசின் திட்டத்திற்கு எதிராக மாணவர்கள், மக்கள், இடதுசாரிய கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் சமூகங்கள் எல்லாவற்றையும் ஒன்றிணைத்து, பாரிய போராட்டத்தினை முன்னெடுத்ததன் மூலம் இலவச கல்வியையும், மருத்துவ சேவையினையும் உறுதி செய்யும் ஒரு போராட்ட இயக்கமாக உருவெடுத்துள்ளது. தனியார் போலி பட்டக்கடைகளை மூடி; இலவச கல்வி, மருத்துவத்தினை உறுதி செய்வது உறுதியானது என்பதற்கு மாணவர்களுடன் இங்கு இணைந்துள்ள இந்த பெரும் கூட்டணி எமக்கு முன்னறிவிப்பு செய்துள்ளது" எனக் கூறினார்.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் லகிரு வீரசேகரா, சிறைச்சாலையில் இருந்து விடுதலையாகி, அங்கிருந்து நேரடியாக வந்து இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு பிரதான உரையை ஆற்றியிருந்தார்.