"மீண்டும் செங்கொடியை உயர வைப்போம் !" என்ற இங்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தலைப்பு, சகோதரர் குமார் குணரத்தினத்தின், கேகாலை நீதிமன்ற உரைக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட தலைப்பாகும். குடிவரவுச்சட்டத்தை மீறிவிட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு, அவரது பிறப்பிடமான கேகாலை நீதிமன்றத்தில், பங்குனி 25.2016 அன்று நீதிமன்றில் நிறுத்தப்பட்ட போதே தோழர். குமார் அவ்வுரையை ஆற்றினார். அதில்
"நான் முன்பு கூறியது போல் எனது சொந்தங்கள், எனது தந்தை, எனது சகோதரர்கள் இந்த பூமியில் எங்கோ புதையுண்டு இருப்பது போல் எனது தோழர்கள், எனது அன்புக்குரிய மூத்த சகோதரர் ரஞ்சிதம் உள்ளடங்கலாக அவர்களின் எச்சங்கள் இந்த நாடு பூராவும் சிதறப்பட்டிருக்கின்றது. இந்த ஜனநாயக விரோத அரசானது எனது சொந்த சகோதரனை என்னிடமிருந்து பறித்துக்கொண்டது. எனது குடும்பத்தையும், எனது அரசியலுக்குரிய எனது நாட்டினையும் என்னிடமிருந்து பறித்துக் கொண்டது." எனத் தன் சிந்தனையைப் பதிவு செய்தார்.
குமார் தோழர் கைதுசெய்யப்பட்டு சில மணி நேரங்களிலேயே அவரின் விடுதலைக்காகவும், அவரின் பிறப்புரிமையான இலங்கைக் குடியுரிமைக்காகவும், முன்னிலை சோசலிசக் கட்சியாலும், சகோதர அமைப்புகளான புதிய ஜனநாயக மக்கள் முன்னணி, சமவுரிமை இயக்கம் போன்றவற்றாலும், இலங்கையிலும், சர்வதேச ரீதியிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இப்போராட்டங்களில் மிக முக்கியமானது கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் முன்னிலை சோசலிசக் கட்சித் தோழர்களால் நடத்தப்பட்ட 386 நாட்கள் தொடர்ச்சியான சத்தியாக்கிரகப் போராட்டமாகும்.
கட்சியின் அனைத்து மாவட்டக்கிளைகளும் மற்றும் மாணவர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், ஊடகவியலாளர் அமைப்புகள், புத்திசீவிகளும் சுழற்சி முறையில் சத்தியாக்கிரகத்தில் பங்குகொண்டனர்.
சத்தியாக்கிரகம் நடைபெற்ற இடம், இலங்கையில் பெரும்பாலான அனைத்து இன, மத, பிரதேச மக்களும் வந்துபோகும் பிரதேசமாகும். இதனால், இப்போராட்டம், குமார் கைது பற்றிய பாரிய பிரச்சாரம் நாடுமுழுவதும் பரவக் காரணமாகியது. அத்துடன் கட்சி பற்றியும், அதன் அரசியல் அடிப்படை பற்றியும் கூட மக்கள் தேடுவதற்கு ஏதுவாகவிருந்தது.
இதெல்லாவற்றிக்கும் மேலாக, இன ஐக்கியத்துக்கான சமிக்ஞையை வெளிப்படுத்தும் போராட்டமாக சத்தியாக்கிரகம் அமைந்தது. தோழர். குமார் இன, மத, சாதிய, பிரதேச அடையாளங் கடந்தவொரு சர்வதேசவாதியாகவிருந்த போதும், அவர் பிறப்பால் தமிழ் பாரம்பரியத்தைக் கொண்டவர். இந்நிலையில், அவரின் உரிமைகளுக்காக 386 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தியோரில் பெரும்பான்மையானவர்கள் சிங்கள மொழிபேசும் சகோதரர்களே!. இன்று நாட்டிலுள்ள இனவாத அரசியற் சூழலில், இச் சகோதரர்களின் போராட்டமானது இனவாதத்துக்கு எதிரானதாகவும், வர்க்க அரசியல் அடிப்படையிலான சகோதரத்துவத்தை முன்னிறுத்தியதாகவுமிருந்த, ஒரு வரலாற்று நிகழ்வாகும்.
தொடர்ச்சியாக ஒரு வருடங்களுக்கு மேலாக ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதென்பது பணவசதியோ, பெரிய ஆளணியோ அல்லது அரசியல் அதிகாரமோ இல்லாத ஒரு கட்சிக்கு இலகுவானதல்ல. ஆனால், இப்போராட்டத்தில் வெற்றியடைய கட்சியின் உறுப்பினர்கள், மற்றும் தலைமைத் தோழர்கள், போராளிகளாக மாறி உழைத்தமையே காரணமாகவும். இதன் விளைவாக, இன்றுள்ள இடதுசாரிக் கட்சிகளிலேயே இளமையான கட்சியான, முன்னிலை சோசலிசக் கட்சி, அதன் அமைப்பியல் ரீதியாக வலுப்படுத்தப்பட்டுள்ளது. எந்தவித போராட்டத்தையும் முன்னெடுக்கும் மனவுறுதியைக் கட்சிக்கு வழங்கியுள்ளது.
புதிய ஜனநாயக (மா -லெ) கட்சி, ஐக்கிய சோஷலிஸக் கட்சி, நவ சமசமசமாஜ கட்சி ஈறாக பல இடதுசாரிக் குழுக்களும் இப்போராட்டத்துக்கு வலுச்சேர்த்தனர். கருத்து வித்தியாசங்களுக்கு இடையிலும், ஜனநாயகத்துக்கான இப்போராட்டத்தில் பங்குகொண்டனர். சர்வதேச ரீதியிலும், இலங்கையிலும் இடதுசாரியமானது அரசியல் அடிப்படையில் வலுவற்றதொன்றாகவே இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணிகளில் ஒன்று, இடதுசாரி அமைப்புகளுக்கு இடையிலான முரண்பாடுகளும், சச்சரவுகளும், குழுவாதமுமேயாகும். தோழர். குமாரின் உரிமைக்கான போராட்டமானது, கட்சிகளுக்கு இடையிலான குழுவாத மனநிலையை உடைத்தெறிந்துள்ளது. இடதுசாரிய சக்திகள் ஒன்றிணைந்து, மக்கள் விடுதலைக்கான பல போராட்டங்களை முன்னெடுக்க வழிவகுத்துள்ளது.
அனைவரினதும் போராட்டத்தின் விளைவாக, மார்கழி 2 ஆம் திகதி, தோழர் குமார் குணரத்தினம், தற்காலிக வதிவிட அனுமதி வழங்கப்பட்டு, குடியுரிமைக்கான விண்ணப்பம் ஏற்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்டார். போராட்டம் தற்காலிகமாக வெற்றி ஒன்றைக் கண்டுள்ளது. ஆனாலும், இறுதி வெற்றி, அவருக்கு குடியியல் உரிமை வழங்கப்படும் போதே உறுதிப்படுத்தப்படும்.
இது வெற்றியின் ஆரம்பம் மட்டுமே. இப்போராட்டத்தின் வெற்றி இத்தோடு நிறுத்தப்படுவதில் நின்றுவிட முடியாது. அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியப்படும் வரைக்கும் தொடர்ந்த போராட்டங்களை முன்னெடுக்க இந்த வெற்றி ஒரு படிக்கல்.
இப்போராட்டம் தனிப்பட்ட ஒரு குமார் குணரத்தினத்தின் உரிமைக்கான குறுகிய ஒரு போராட்டமல்ல. பிறப்புரிமையான பிரஜாவுரிமையை மறுக்கும் இலங்கை அரசின் ஜனநாயக விரோதக் கொள்கைக்கு எதிரான ஒரு பொதுப் போராட்டத்தின் ஒரு பகுதி தான் குமாருக்கான போராட்டமாகும். ஒருவன் வாழ்வு சார்ந்த போராட்டத்தினால், இன்னொரு நாட்டின் பிரஜாவுரிமையைப் பெற்றுவிடுவது என்பது ஜனநாயக விரோதமானதல்ல. அவ்வாறு இன்னொரு நாட்டின் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொள்கிற போது அதனை ஜனநாயக விரோதமாக கருதி, பிறந்த நாட்டின் பிரஜாவுரிமையை மறுக்கும் ஜனநாயக விரோத அரசியல் அமைப்பு முறைக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதி தான் தோழர் குமாருக்கான போராட்டமாகும்.
நிறைவாக, போராடுவதன் மூலம் மக்கள் ஜனநாயகத்துக்கான வெற்றிகளைக் குவிக்கலாம், போராட்ட சக்திகள், தம்மைத்தாமே வலுப்படுத்திக் கொள்ளலாம் என்ற படிப்பினைகளை, தோழர். குமாரின் குடியியல் உரிமைக்கான போராட்டத்தின் பகுதியான வெற்றி மறுபடியும் எமக்குக் கற்றுத் தந்துள்ளது. இவ்வனுபவங்களை, பல தளங்களிலும் நடத்தப்படும் மக்கள் போராட்டங்களிலும் உபயோகித்து நாம், முழுமையான வெற்றிவாகை சூட திடசங்கற்பம் பூணுவோம்! மீண்டும் செங்கொடியை உயர வைப்போம்!