பிரதமரின் தலைமையில் ஜனவரி 7ம் திகதி அம்பாந்தோட்டை மிரிஜ்ஜவல பிரதேசத்தில் நடைபெற்ற "தெற்கு அபிவிருத்தி வலயம்" திறப்பு விழாவிற்கு சமமாக நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஜனநாயகத்தை விரும்பும் இந்நாட்டின் சகல மக்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய தருணம் இது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கைக்கான சீனத் தூதுவர் இசியேங் லியானும் முன்னின்று நடத்திய இந்த விழாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வதற்கு எதிராக நீதிமன்றம் 6ம் திகதி தடை உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அந்த விழா நடைபெறும் தருணத்தில் அப்பிரதேசத்திற்குள் பிரவேசித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கப்பட்டனர். அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் பொலிஸார் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ உட்பட 26 பேரிடம் தனிப்பட்ட ரீதியில் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி அம்பாந்தோட்டை துறைமுக வளாகம், வான் பாலத்தை அண்டிய பிரதேசம், நிர்வாக இடங்களை அண்டிய பிரதேசங்கள் மற்றும் பெருந்தெருக்களில் ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊர்வலங்கள் ஆகியன 14 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தன.
ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக இவ்வாறு தடை உத்தரவு பெற்றுக் கொள்வதும் மற்றும் திட்டமிட்டு ஆர்ப்பாட்டங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்படுவதும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக உருவாகியிருக்கும் இன்றைய நிலைமையை காட்டுகின்றது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்கள் ஆட்சியில் இருக்கும்போதும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் இப்படித்தான் நடந்துக் கொண்டார்கள். ஆர்ப்பாட்டங்களை தடுப்பதற்கு நீதிமன்றத்தையும், பொலிஸையும் ஈடுபடுத்துவது போன்ற சட்ட ரீதியிலான முறைகளும் சட்டரீதியற்ற முறைகளும் கையாளப்பட்டன. அன்றைய அரசாங்கத்தின் ஜனநாயகத்திற்கு எதிரான சர்வாதிகாரத்திலிருந்து மீள்வதற்கு சமூகத்திலிருந்த எதிர்ப்பார்ப்பையும், ஜனநாய அபிலாஷைகளையும் பயன்படுத்தியே இன்றைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தது. சமூகத்தில் எரிந்து கொண்டிருக்கும் தீயை தமது அதிகாரத் தேவைக்காக முகாமைத்துவம் செய்வதற்கு அரசாங்கத்தின இன்றைய தலைவர்கள் செயற்படும்போது, ஜனநாயகம் சம்பந்தமாக அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் மீறப்படுவதும் கண்கூடாகத் தெரிகின்றது. மக்களை வருத்தும், கொள்ளைக்கார நவதாராளமய கொள்கையே முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது என்பதும், ஜனநாயகத்தை பெற்றுக் கொடுப்பது என்பது ஒருபோதும் நடக்காது என்பதும் எமது கட்சி மற்றும் பொதுவாக இடதுசாரிகளின் மதிப்பீடாக உள்ளது. என்றாலும் நாட்டில் பெரும்பான்மை மக்கள் அரசாங்க மாற்றத்துடன் ஜனநாயகத்தை வென்றெடுக்கும் விடயத்தில் நம்பிக்கை வைத்திருந்தார்கள்.
ஆனால், இன்றைய அரசாங்கமும் முந்தைய அரசாங்கத்தைப் போன்றே நவதாராளமய முதலாளித்துவ கொள்கையை விட்ட இடத்திலிருந்து முன்னெடுத்துச் செல்லத் தொடங்கியதோடு, எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மக்கள் எதிர்ப்பிற்கு காரணமாகியது. இந்த கொள்கையின் முன்பாக உழைக்கும் மக்கள் முதற்கொண்டு சமூகத்தின் கீழ் நிலைகளின் வாழ்க்கை நிலைமைகள் பாரதூரமான நெருக்கடிக்கு உட்பட்டிருக்கின்றன. அதன்படி, மக்கள் தமது இருப்பிற்காக போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு ஆளாகியுள்ளனர். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியோ அல்லது வேறு ஏதாவதொரு சக்தியோ ஆர்ப்பாட்டத்திற்கு அழைக்கும்போது இந்த நிலைமை காரணமாகத்தான் அதற்கு மக்கள் ஒத்துழைப்பு கிடைக்கின்றதேயன்றி மக்கள் அந்த தலைவர்களை அங்கீகரிப்பதனாலல்ல. இந்த நிலைமை எதிர்காலத்தில் மேலும் உக்கிரமடையக் கூடும்.
இந்த நிலையில்தான் அரசாங்கம் தனது ஆட்சி அதிகாரத்தின் இரண்டாவது வருடத்தை கடக்கும் இத்தருணத்தில் அடக்குமுறை கருவிகளை வலுப்படுத்தியும், அவற்றை செயற்படுத்தியும் வருகின்றது. ஜனநாயகம் சம்பந்தமான தனது வாக்குறுதிகளை அப்பட்டமாக மீறி பழைய பாதையிலேயே பயணிப்பது உதாரணங்களின் மூலம் உறுதி செய்யப்பட்டு வருகின்றது. இலத்திரனியல் அறிமுக அட்டை சட்டமூலம் போன்ற புதிய அடக்குமுறை சட்டங்களை நிறைவேற்றுதல், கொலைகள் மற்றும் கடத்தல்கள் மற்றும் நபர்களை காணமலாக்கல் தொடர்பிலான குற்றவாளிகளை விடுதலை செய்து அவர்களுக்கு அரசாங்க தொழில் வழங்கி அடக்குமுறை இயந்திரத்திற்குள் பாதுகாப்பு உணர்வை உருவாக்குவது இவற்றில் முக்கியமானதாகும். அதேபோன்று சமீபத்தில் நடத்தப்பட்ட பல ஆர்ப்பாட்டங்களின்போது ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமையை பறித்துக் கொள்வதற்காக அரசாங்கம் நீதிமன்றத்தையும் பொலிஸையும் பயன்படுத்தியதை காண முடிந்தது. பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின், அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களின் மற்றும் லொத்தர் சீட்டு விற்பனைப் பிரதிநிதிகளின் வேலை நிறுத்தத்தின் போது பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட தொழிலாளர்களை சேவையிலிருந்து விரட்டப்போவதாக அச்சுறுத்தல் விடுத்தமை போன்றவற்றை இவ்விடத்தில் விஷேடமாக குறிப்பிட வேண்டியுள்ளது. "தெற்கு அபிவிருந்தி வலயத்தை" திறந்து வைக்கும் நிகழ்வின் போது, அதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு தடைபோடும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதும் இந்த செயற்பாட்டின் பிரதிபலன் என்ற வகையில்தான். ஆர்ப்பாட்டம் செய்வதற்கு மக்களுக்குள்ள உரிமைக்கு வேட்டு வைக்கும் கைங்கரியத்தில் அரசாங்கம் இறங்கியிருப்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. வாக்குறுதியளித்த ஜனநாயகத்திற்குப் பதிலாக அடக்குமுறை தலைவிரித்து ஆடுகின்றது.
இந்த நிலைமை மக்களின் ஜனநாயக உரிமைகள் சம்பந்தமாக பயங்கர ஆபத்து என்பதை நம்பும் முன்னிலை சோஷலிஸக் கட்சி, ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்பவர்கள் விடயத்தில் அரசியல் பேதங்களை கவனியாது ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமையை பாதுகாத்துக் கொள்ள முன்வருமாறு மக்களை கேட்டுக் கொள்கின்றது. உண்மையான ஜனநாயக உரிமைகளை பெற்றுக் கொள்வதற்காக ஆளும் வர்க்கத்தின் முகத்தை மாற்றுவதன் மூலம் மாற்றத்தை எதிர்ப்பார்ப்பது காலாவதியான தவறான செயல் என்பதை பலநூறு தடவைகள் நிரூபிக்கப்பட்டுள்ள பழைய அணுகுமுறையிலிருந்து வெளியேறுமாறு துன்பத்திற்காளாகும் மக்களிடம் வேண்டிக் கொள்கின்றோம். அதுமட்டுமல்ல, உண்மையான ஜனநாயகத்திற்காக இடதுசாரிய மாற்றீடை வலுப்படுத்துமாறும் எப்படியானதொரு அடக்குமுறைக்கும், அந்த அடக்குமுறைக்கு அடிப்படையை உருவாக்கும் கொள்ளைக்கார சமூக –பொருளாதார உபாயங்களுக்கும் எதிராக அணிதிரளுமாறும் இலங்கை மக்களுக்கு எடுத்துரைக்கின்றோம்.
அரசியல் சபை
முன்னிலை சோஷலிஸக் கட்சி