ஐந்து மாதங்களின் பின் போராட்டம் பத்திரிகை மறுபடியும் வெளிவந்துள்ளது. பொருளாதார நெருக்கடிகள், வேறு பல முக்கிய அரசியல் வேலைகளினால் ஏற்பட்ட நேரமின்மை போன்ற காரணங்களால் இப்பத்திரிகையை கிரமமாக வெளிக்கொணர முடியவில்லை. பத்திரிகை வெளிவராத இந்த ஐந்து மாத காலகட்டத்தில், எமது சகோதர அமைப்புகள் பலதரப்பட்ட ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தன. அதேவேளை ஜனநாயகத்தையும், பொருளாதார சுபீட்சத்தையும் மக்களுக்கு வழங்கப் போவதாக கூறியபடி பதவிக்கு வந்த ரணில்- மைத்திரி அரசு எந்தவொரு மக்கள் நலக்கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை. மாறாக, பொருளாதார உரிமைகளும், ஜனநாயக உரிமைகளும், குடியியல் உரிமைகளும் ஆட்சியாளர்களால் மக்களுக்கு மறுக்கப்படும் நிலைமையே நிதர்சனமாக உள்ளது.
இந்நாட்டின் பொருளாதார முதுகெலும்பாகவுள்ள மலையக உழைக்கும் மக்களுக்கும், மீரியபெத்த இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் 10 பேச் ஒரு பரப்புக் காணியுடன், நவீன வசதியுடன் கூடிய வீடும் கட்டித்தருவதாக ஆட்சியாளர்களால் உறுதிவழங்கப்பட்டது. ஆனால், பல வருட இழுபறியின் பின்னும் இன்றுவரை இவ்வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மீரியபெத்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல போராட்டங்களுக்கு மத்தியில் 75 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் வீடுகள் பெற வேண்டிய பலர் உள்ளனர். அடிக்கல்லோடு இந்த மக்களை விட்டு விடலாம் என்று நினைத்த அரசியல்வாதிகள், மக்களின் போராட்டத்தின் பயனாக கட்டிய வீடுகளை அவசர அவசரமாக கடந்த ஐப்பசி 22ம் திகதி மக்களுக்கு வழங்கினார். ஆனாலும், இவ்வீடுகள் இம்மக்களுக்கு சொந்தமானதல்ல. காணிகள் -வீடுகளுக்கான "உறுதி" சட்டபூர்வமான உரிமைப்பத்திரம் எவருக்கும் வழங்கப்படவில்லை. இவ் வீடுகளையோ அல்லது காணிகளையோ எவரும் விற்கவோ, ஈடு வைக்கவோ, வாடகைக்கு விடவோ முடியாது. காரணம், இக் காணிகள் அரச காணிகளாக இருந்தபோதும் தோட்ட நிறுவனங்களின் உரிமையாகவும் சொத்தாகவுமே இருந்து வருகிறது. இது, தொடர்ந்தும் மக்களை ஏமாற்றும் அரசியற் செயற்பாடாகும்.
இதேபோலவே, பல மாதங்களாக மலையக உழைக்கும் மக்களில் 1000 ரூபாய் ஊதியத்துக்கான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஊதிய உயர்விற்கான போராட்டத்திற்கு பரந்துபட்ட வகையில் இன, மத பேதமின்றி நாடு முழுவதிலும் ஆதரவு கிடைத்தது. ஆனால், போராடிய மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதாகப் பொய் கூறும், ஆட்சியாளர்களின் அடிவருடிகளான மலையக அரசியல்வாதிகளால் போராட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சமூக ஜனநாயகத்துக்கான மலையக மக்கள் இயக்கம், முன்னிலை சோசலிசக் கட்சி, புதிய ஜனநாயக மா -லெ கட்சி, தொழிலாளர் மத்திய நிலையம் போன்ற இடதுசக்திகள் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
தற்போது ஆட்சியிலுள்ள அரசானது, எப்போதுமில்லாத வகையில் மக்களின் சொத்துக்களை - இலங்கை மக்களின் உரிமைகளை; இந்தியா, சீனா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு மலிவு விலையில் விற்றுவருகிறது. தனியார் மயமாக்கல் அதிவீச்சில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்கு எதிராக இன்று போராடும் சக்திகள் மிகவும் குறைவாகவும், வலுவற்றவையாகவுமே உள்ளன. இதில், விதிவிலக்காக உள்ளது இலங்கையின் மாணவ சக்திகளாகும். குறிப்பாக, அனைத்துப் பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் அரசின் தனியார்மயமாக்கலுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில், யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் மிலேச்சத்தனமாக படுகொலை செய்யப்பட்டனர். மாணவர்கள் படுகொலைகளுக்கு எதிராக பாரிய போராட்டத்தை முன்னெடுத்தனர். தமது போராட்டத்தை நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழக சகமாணவர்களுடன் சேர்ந்து முன்னெடுக்க முயன்றனர். அதில் வெற்றியும் கண்டனர். அனைத்துப் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்துடன் சேர்ந்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. பிக்குகளுக்கான பல்கலைக்கழக மாணவர்கள் கூட போராட்டத்தில் இணைந்திருந்தனர். இந்த ஆரம்பமானது, நீண்டகாலப் போக்கில் மாணவர்களின் உரிமைகளை மட்டுமல்ல, ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தையும் கூட வலுப்படுத்தும் எனக் கருத்துக்கள் கூறப்பட்டது. யாழ். மாணவர்களும் அதை வரவேற்றனர். ஆனால், "தமிழ் தலைமைகள்" அதை விரும்பவில்லை. விளைவு இப்போது எல்லோருக்கும் தெரியும். பொது எதிரி என்ன நினைத்தானோ அதுவே நடக்கிறது. அவசர அவசரமாக, கூட்டமைப்பின் உதவியுடன் சுவாமிநாதன் என்ற அமைச்சரும், ஜனாதிபதி மைத்திரியும் தலையிட்டதனால் மாணவர்களின் போராட்டம் தோற்கடிக்கப்பட்டது. இத்தோல்வி தற்காலிகமானது தான் என்பதை போராட்ட சக்திகள் உணர்ந்துள்ள நிலையில், "மாணவர் சக்தி மாபெரும் சக்தி" எனக் கூறப்படும் வசனம், பொய் அல்ல என நிரூபிக்கப்படும்.
தன்னை ஜனநாயக அரசாக காட்டிக்கொள்ள பிரயத்தனப்படும் ரணில் - மைத்ரி அரசானது தொடர்ந்தும், தோழர். குமார் குணரத்தினத்தை அனுராதபுரம் சிறையில் அடைத்து வைத்துள்ளது. மார்கழி 9 இல் அவர் விடுவிக்கப்படுவார் என கூறப்படும் நிலையில், அவரை நாடு கடத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக அறிகிறோம். மக்கள் போராட்டத்தின் சின்னங்களின் ஒன்றாக உருவெடுத்துள்ள தோழர். குமாரின் விடுதலைக்கான போராட்டமும், தங்கு தடையின்றி முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
போராட்டமும் போராடுதலும் மட்டுமே ஒடுக்குமுறைகளுக்கு நிரந்தரத் தீர்வைத்தரும். விடிவைத் தரும்! ஒடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட மக்களான நாம், நம் உரிமைகளை போராடி வென்றெடுப்போம்!