நடந்த கொலைக்கு குற்றவாளியை இனங்கண்டு சட்டத்தால் தண்டிக்கலாம். சட்டம் தனிப்பட்ட குற்றவாளியை தண்டிக்குமே ஒழிய, குற்றவாளியை உருவாக்குகின்றவர்களையும் தூண்டி விடுபவர்களையும் தண்டிப்பதில்லை. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலையின் பின்னான உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படப் போவதில்லை. அவர்களை மக்களால் மட்டும் தான் தண்டிக்க முடியும். குற்றவாளிகள் மக்களுடன் அக்கம் பக்கமாக வாழ்ந்தபடி, நடந்த படுகொலையை கண்டித்துக்கொண்டு இருப்பதை இனங்கண்டு கொள்வதே அரசியல். இந்த அரசியல் தான் உண்மை நீதியுடன் கூடிய நேர்மையான மனித உணர்வும் கூட.
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான பொலிஸ் துப்பாக்கிச் சூட்டை மூடிமறைத்து, மரணத்தை விபத்தாகச் சோடித்து - "சட்டத்தையும் ஒழுங்கையும் நீதியையும்" பாதுகாப்பதாகக் கூறும் பொலிசாரின் மற்றொரு வன்முறை அம்பலமாகி இருக்கின்றது. இதை மூடிமறைக்க மாணவர்களின் மரணச் சடங்கை தாங்களே நடத்துவதாக கூறி, குடும்பத்துடன் கட்டைப் பஞ்சாயத்தையும் நடத்தியதும் வெளியாகி இருக்கின்றது. சம்பவம் நடந்த இடத்தில் வெளியான சாட்சியங்களின் அடிப்படையில் பொலிசாருக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் அணிதிரண்டிருக்கும் சூழலில், பொலிசார் நடத்திய படுகொலை தான் இது என்ற உண்மை பொலிசாரின் மூடிமறைப்பை நிர்வாணமாக்கியது.
இதன் பின் 5 பொலிசார் பதவி நீக்கப்பட்டதும், கைது செய்யப்பட்டு விளக்கமறியலிலும் வைக்கப்பட்டுள்ளனர். மருத்துவ அறிக்கையானது, துப்பாக்கிச் சூட்டை உறுதி செய்கின்றது. அதேநேரம் சட்டம் தண்டனை வழங்குவதற்கான, ஒரு பொது சூழலும் உருவாகி இருக்கின்றது.
கொலையின் பின்னான உண்மையான சூத்திரதாரிகளை மூடிமறைக்க, நடந்த கொலையை தமிழ் இனவாதிகள் தமிழர் மீதான வன்முறையாகவும், பயங்கரவாதச் சட்டத்தின் விளைவாகவும் காட்ட முனைகின்றனர். தமிழக – புலம்பெயர் தமிழ் இனவாதிகள் இந்த படுகொலை சம்பவத்தினை தமிழருக்கு எதிரானதாகக் காட்டி, போராட்டங்களை நடத்தவும் முனைகின்றனர். மறுபக்கத்தில் இப்படி துப்பாக்கிச் சூடு வடக்கில் மட்டும் நடப்பதில்லை என்று கூறுவதும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க முனைந்ததன் விளைவாக இதைக் காட்டி நியாயப்படுத்துவதும் நடக்கின்றது. காலுக்கு கீழ் சுட்டு இருக்க வேண்டும், துரத்திப் பிடித்திருக்க வேண்டும் என்று கூறுகின்ற தர்க்கங்கள் முன்வைக்கப்படுகின்றன.
கொலையைத் தூண்டிய சூத்திரதாரிகளை கண்டுகொள்ளாது இருக்க, இந்தப் படுகொலையைக் கண்டித்து பல்வேறுபட்ட அரசியல் தலைவர்கள் கருத்துக்கள் தெரிவித்து இருக்கின்றனர். "பல்கலைக்கழக மாணவர் மரணம் - இது திட்டமிட்ட கொலை!" என்கின்றனர். "கண்துடைப்பு விசாரணையின்றி துரித விசாரணை நடாத்தப்பட வேண்டும்", என்கின்றனர். "பயங்கரவாத தடைச் சட்டமே பொலீஸாரின் அத்துமீறலுக்கு காரணம்" என்று கூறுகின்றனர். "துரத்தி பிடிக்க முடியாவிட்டால் 1000 சீசீ மோட்டார் சைக்கிள் எதற்கு?" என்று தர்க்கத்தை முன்வைக்கின்றனர். "பல்கலை மாணவர்கள் மரணம், வடக்கு மக்கள் குழப்பமடைய வேண்டாம்" என்கின்றனர். "பொலிசாருக்கு தக்க தண்டனை வாங்கி கொடுக்க நாம் பாடுபடுவோம்" என்று சூளுரைக்கின்றன". "வடக்கில் அரச பயங்கரவாதம் அரங்கேறுகிறது!" என்கின்றனர்.
இப்படி பலவிதமாக வெளிவரும் அறிக்கைகள், கண்டனங்கள் அனைத்தும், பொலிஸ் - சட்டம் - நீதி அடிப்படையாகக் கொண்ட இந்த சமூக பொருளாதார அமைப்பு முறையை கேள்விக்குள்ளாக்கவில்லை. இதை ஆதரிக்கின்ற அரசியலை கேள்விக்குள்ளாக்கவில்லை. ஒரே குட்டைக்குள் நின்று கடைந்தெடுக்கின்றனர். சமூக வலைத்தளங்கள் இந்த எல்லைக்குள் நின்று பிரித்து மேய்ந்து விடுகின்றனர்
யாழ் நகரில் அதிகரித்துள்ள குற்றங்களைக் கட்டுப்படுத்த, நீதிபதி இளஞ்செழியனின் முன்னெடுப்புகளை ஆதரித்தவர்களும், ஆதரித்துக் கொண்டு இருப்பவர்களும் இவர்கள் தான். இன்று நவதாராளவாதத்தை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கும் பாராளுமன்ற அரசியல்வாதிகள்- அரசியல் ரீதியாக, யாழ் நகரில் அதிகரித்துள்ள குற்றங்களைக் கட்டுப்படுத்த எதையும் செய்வதில்லை. மாறாக அரசின் சட்ட ஒழுங்குகளை அடிப்படையாகக் கொண்ட வன்முறை மூலம் முடிவுக்கு கொண்டு வரும் நவதாராளவாத அரசியல் கொள்கை தான், இந்த படுகொலைக்கு துணை போயுள்ளது. அரச பயங்கரவாத அமைப்பு மூலம் நீதிபதி இளஞ்செழியன் முன்னெடுத்த கைதுகளும், அதற்காக பொலிசாருக்கு வழங்கிய அதிகாரமும், படுகொலையாக மாறி விரிகின்றது. மக்கள் விரோத அதிகாரமே, மக்களுக்கு எதிரான குற்றத்திற்கான பிறப்பிடம்.
அரசியல் மற்றும் சமூக பொருளாதார விளைவுகள் தான் குற்றங்கள். சமூக ரீதியாக அணுக வேண்டிய விடையத்தை, சட்டம் ஒழுங்குப் பிரச்சனையாக்கி விட்ட நவதாராளவாத பாராளுமன்ற அரசியல்வாதிகள் தான், இந்த படுகொலைக்கு பின்னால் இயங்கும் சூத்திரதாரிகள். இதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும். சமூகத்தில் நடக்கும் தனிப்பட்ட குற்றவாளிகள் போல் பொலிசாருக்கு தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பதற்கு அப்பால், அரசியல் ரீதியாக தண்டனைக்குரியவர்களை இனம் காண வேண்டும.
நவதாராளவாத பாராளுமன்ற அரசியல்வாதிகளின் (மறைமுக – நேரடி) ஆதரவுடன் யாழ் உயர் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை விடுக்கும் வண்ணம் ஆற்றிய உரைகள், வழங்கிய தண்டனைகள், இறுதியில் குற்றவாளிகளைப் பிடித்து தண்டிப்பதற்காக உருவாக்கிய பொலிஸ் படை, இந்தப் படுகொலைகளைச் செய்தும், இறுதியில் அதை மூடிமறைக்க முனைந்திருக்கின்றது.
தண்டனைகள் மூலம் சமூக பாதுகாப்பு என்ற இளஞ்செழியனின் அதிகார முறைமை, மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை மட்டுமல்ல, மக்களை அடக்கியொடுக்கிவிடுகின்ற அரசின் வன்முறை உறுப்பு தான்.
பொதுமக்களின் அனுபவத்தில் பொலிஸ் என்பது என்ன? கையூட்டும் (மாமூல்) வாங்கும் அதிகார உறுப்பு. கையை நீட்டுவதற்காகவே வலிந்து குற்றங்களைக் கண்டுபிடிப்பதும், அதற்காக மக்களை படாதபாடுபடுத்துகின்ற அதிகார வர்க்கமாகும். உண்மைக் குற்றவாளிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு, குற்றங்கள் மூலம் சம்பாதிப்பவர்கள். நீதி நியாயம் கோரி பொலிஸ் நிலையம் சென்றால், மணிக்கணக்காக காக்க வைத்து அலைய வைத்து வதைக்கும் சமூகவிரோத அதிகாரக் கும்பல். பணம் உள்ளவன் என்றால், பல்லைக் காட்டி சேவகம் செய்யும் வர்க்க அமைப்பு. அரசியல்வாதிகள் என்றால் கூனிக் குறுகி கும்பிடு போட்டு காரியமாற்றும் சுயமரியாதையற்ற சதைப் பிண்டங்கள். சமூகம் சார்ந்து எந்த சமூக பொறுப்புமற்ற ஒரு கூலிப்படை.
இந்த மக்கள் விரோதப் பொலிசைக் கொண்டு சமூக விரோத குற்றங்களை ஒழிக்க வழிகாட்டும் நவதாராளவாத பாராளுமன்ற அரசியல் முதல் அதன் உறுப்பான நீதிமன்றம் வரை, இந்தப் படுகொலைக்கு பொறுப்பாளிகள். யாழ் சமூகத்தில் நடைபெறும் குற்றங்களை, சமூகம் சாராத தண்டனைகள் மூலம் தீர்வு காணுகின்ற அரசியலின் விளைவு தான் இந்த படுகொலை. சட்டம், பொலிஸ், நீதிமன்ற அதிகாரங்கள் மூலம் குற்றங்களை இல்லாதொழிக்கின்ற முறைமை என்பது, குற்றங்களின் பிறப்பிடமாகும். இந்த முறையை முன்னிறுத்தும் அரசியலும், அரசியல்வாதிகளுமே, இந்தப் படுகொலைக்குப் பின்னால் இயங்குகின்ற சூத்திரதாரிகள்.
சட்டம், பொலிஸ் நீதிமன்றம் மூலம் தீர்வு காணும் நவதாராளவாத பாராளுமன்ற அரசியல் தோற்கடிக்கப்படாத வரை, பொலிஸ் வன்முறை நாடு முழுக்க தொடரத்தான் செய்யும். இது தமிழனின் ஆட்சியாக அல்லது தமிழனாக இருந்தாலும் இதுதான் நடக்கும். இது சிங்கள, தமிழ் இன உணர்வால் நடாத்தப்படுவதில்லை. இது வன்முறையிலான சமூக பொருளாதார அமைப்பு முறையின் விளைவாகும்.