அய்யா விக்கினேஸ்வரன் ஒரு முன்னாள் நீதிபதி. ஐப்பசி 2004 வரை அவர் அப்பதவியில் இருந்தார். இக்கால கட்டங்களில் மக்கள் விரோத இலங்கை அரசுகள் இலங்கை மக்களின் அடிப்படை உரிமைகளை காலில் போட்டு மிதித்தார்கள். தமிழ் மக்களின் வாழும் உரிமையே மறுக்கப்பட்டது. அவர்களின் பேச்சுரிமை மறுக்கப்பட்டு வாய் மூடி வாழ விதிக்கப்பட்டார்கள். தமிழ் மக்கள் தாம் வாழ்ந்த வீட்டில் இருந்து விரட்டப்பட்டார்கள். வயல்களும், கடற்கரைகளும் தொழிலகங்களும் இலங்கையின் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு இராணுவ முகாம்களாக்கப்பட்டன.
இவ்வளவு அநியாயங்கள் தமிழ் மக்களிற்கு எதிராக நடந்த போது அய்யா விக்கினேஸ்வரன் மறந்து கூட வாய் திறந்ததில்லை. தமிழ் மக்களை இனவெறி இலங்கை அரசுகள் இனக்கலவரங்களில் கொன்ற போது, பயங்கரவாதிகள் என்று சிறு குழந்தைகளைக் கூட துடிக்க துடிக்க கொன்ற போது நீதி வழுவா நெறி அய்யா விக்கினேஸ்வரனிற்கு அது அநியாயமாக தெரியவில்லை; அதனால் அவர் வாய் திறக்கவில்லை. கிருசாந்தி, கோணேஸ்வரி என்று எம் சகோதரிகள், எமது தாய்மார்கள் இலங்கை இராணுவக் காடையரின் கொடுமைகளால் தவித்து தம்முயிர் துறந்த போதும் அய்யா விக்கினேஸ்வரன் மெளனமாகவே இருந்தார்.
அவர் ஒரு அரச ஊழியர்; அவர் நீதிபதியாக இருக்கும் போது அரசிற்கு எதிராக பேசுவது தண்டனைக்குரிய குற்றம். அப்படி இலங்கை அரசிற்கு எதிராக பேசினால் சட்டபூர்வமாகவோ, அல்லது இலங்கை அரசின் வழக்கமான சட்டத்திற்கு புறம்பான வழிகளிலோ அவரை அழித்திருப்பார்கள் என்று சிலர் சொல்லக் கூடும். நல்லது, அப்படி என்றால் அய்யா விக்கினேஸ்வரன் அரச பதவி வகித்த போது தானும், தன் குடும்பமும் என்று சுயநலமாக வாழ்ந்தது போலவே எப்போதும் இருந்திருந்தால் இந்தக் கேள்விகளை கேட்க வேண்டிய தேவை எழுந்திருக்காது.
ஆனால் இலங்கை அரசின் நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற அடுத்த நிமிடம் அவர் பொது வாழ்க்கையில் குதிக்கிறார். அது வரை கண்ணில் படாத அநியாயங்கள் எல்லாம் திடீரென அவரின் திருநீற்றுப் பட்டைக்குள் இருக்கும் நெற்றிக்கண்ணுக்கு தெரிகிறது. பிரேமானந்தா பஜனை பாடும் நேரம் போக மற்ற நேரங்களில் ஊடகங்களில் தமிழ் மக்களின் பிரச்சனைகள் பற்றி பேசுகிறார். வட மாகாணசபையின் முதலமைச்சர் ஆனதும் அய்யா ஒரு போராளியாகவே அவதாரம் எடுத்து விட்டார். "எழுக தமிழ்" பேரணியில் அவர் சுய நிர்ணய உரிமை, சமஸ்டி ஆட்சி முறை எல்லாம் எடுத்து விட்டதும் "வருங்கால தமிழீழ ஜனாதிபதி" வாழ்க என்று முத்தவெளி, முகவெளி எங்கும் முழக்கம் எழுகிறது.
தமது ஓய்வு காலத்தில் பதவிக்காகவும், பேருக்காகவும் அரசியல் செய்யும் இவர்களை மீட்பர்கள் என்று போற்றுகிறவர்கள் மறந்து விட்டார்கள். மக்களிற்காக ஆயிரம், ஆயிரம் ஆண்களும், பெண்களும் தம் உயிரை துச்சமாக தூக்கி எறிந்து விட்டு இந்த மண்ணில் தான் மரணமடைந்தார்கள். தமது கல்வியை, தொழிலை தூக்கி எறிந்து விட்டு போராடினார்கள். தமது குடும்பத்தவரை, தம் அன்புக்குரியவர்களை மனதைக் கல்லாக்கி மறந்து விட்டு மக்களிற்காக போராடினார்கள். இவரை போராளி என்பவர்களே, இவரை விட அண்ணளவாக இருபது வருடங்கள் மூத்த ஒரு மனிதர் இவரை மாதிரியே கல்வி பெற்றிருந்த போதும் கடைசி வரை மக்களிற்காக போராடிய ஒரு மனிதனின் வாழ்வு மக்களிற்காக போராடியவர்களின் வரலாறுகளில் ஒன்றாக எம்முடன் என்றும் கலந்திருக்கிறது.
இலங்கையின் முதலாவது பல்கலைக்கழகமான சிலோன் யூனிவர்சிட்டியிலிருந்து (University of Ceylon) முதன் முதலில் 1943 ஆம் ஆண்டு மாணவர்கள் பட்டதாரிகளாக வெளிவந்தனர். அவர்களில் ஒருவர் தோழர் சண்முகதாசன். அந்த வாய்ப்பைக் கொண்டு அவர் அந்த நாட்களில் எவ்வளவோ பதவிகளை அடைந்திருக்கலாம். ஆனால் அவர் கம்யுனிசக் கட்சியின் முழு நேர ஊழியராகினார். போராட்டங்கள், தடியடிகள், சிறைவாசம் என்பது தான் அவரின் வாழ்க்கையாக இருந்தது. இன்றைக்கு தமிழ், தமிழர் என்று பேசி பதவியில் இருப்பவர்களும், அவர்களின் கட்சிகளும் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களிற்கு எதிராக, சாதிவெறியர்களுடன் சேர்ந்து இருந்த போது தோழர் சண்முகதாசனும், இலங்கை கம்யுனிஸ்ட்டுக் கட்சியும் தான் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுடன் சேர்ந்து போராடினார்கள்.
யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசின் செயற்பாட்டாளர்கள் ஆசிரியர்களாக, அரசாங்க ஊழியர்களாக இருந்த வேளையில் தான் பிரித்தானிய எகாதிபத்தியவாதிகளை எதிர்த்துப் போராடினார்கள். இலங்கை சுதந்திரம் அடைந்த பின்பு உள்ளூர் கொள்ளையர்களான இலங்கை அரசு என்னும் இனவெறியர்களை எதிர்த்துப் போராடினார்கள். கன்டி பேரின்பநாயகம், ஒரேற்றர் சுப்பிரமணியம், சபாபதி குலேந்திரன், எஸ். ஆர் கனகநாயகம், ஏ.ம் புறூடி, சீ.ஈ மதியாபரணம், எஸ். துரைராஜசிங்கம், பொனி கனகதுங்கம் என்னும் மிக நீண்ட வரிசை அது. (நன்றிகள், யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ், சாந்தசீலன் கதிர்காமர்.)
படிப்பும், பதவிகளும், வசதி படைத்த குடும்பப் பின்னணிகளும் கொண்ட அய்யா விக்கி போன்றவர்கள் அரசுகளிற்கும், அதிகாரங்களிற்கும் அஞ்சி அடிபணிந்து இருந்து விட்டு வயது வட்டுக்கு வந்த பிறகு வாய்ச்சவடால் அடிக்கும் போது ஏழ்மையே வாழ்வாக இருந்த எண்ணற்றவர்கள் அநியாயங்களிற்கு எதிராக தம் வாழ்வு முழுவதும் போராடினார்கள். அண்மையில் மறைந்த தோழர் தவராசா ஒரு கடல் தொழிலாளி. இலங்கை கம்யுனிசக் கட்சியின் போராளி. காலமாகும் காலம் வரை கடலிற்கு சென்றால் தான் அடுத்த வேளை உணவு என்பது தான் விதியாக இருந்தது. ஆனால் அவர் மறையும் நாள் வரை தன்னலம் நினையாது மக்கள் அரசியலில் இருந்தார். தீவிர செயற்பாட்டாளராக வாழ்ந்து மறைந்தார்.
தமிழ்நாட்டு பாசிசக் கோமாளி எம்.ஜி.ஆர் சுயநினைவு இல்லாமல் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் இருந்தார். கோமாவில் இருந்து மீ ண்டு வந்த பிறகு தமது கட்சியான அ.தி.மு.க காரர்கள் எல்லோரும் தி.மு.க வினரை எதிர்ப்பதற்காக மடியில் கத்தி வைத்திருக்க வேண்டும் என்று திருவாய் மலர்ந்து அருளினார். அது போல அய்யா விக்கினேஸ்வரன் சுயநல கோமாவில் இருந்து முழித்து வந்து சொல்லும் அரசியலும் ஆபத்தானதாக, தமிழ் மக்களை கொன்றவர்களை நம்பச் சொல்லும் அயோக்கிய அரசியலாக இருக்கிறது.
இலங்கைத் தமிழ் மக்களை நேரில் வந்து கொன்றார்களும்; முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொலை செய்யும் வரை இனப் படுகொலையாளி மகிந்த ராஜபக்சவின் இலங்கை அரசிற்கு உதவியாகவும், உறுதுணையாக நின்றவர்களுமான இந்திய அரசை நம்பச் சொல்லுகிறார். உலக மகா அயொக்கியர்களான ஐக்கிய நாடுகள் சபையை நம்பச் சொல்லுகிறார். அமெரிக்கா என்னும் மனிதகுல விரோதியை ஒரு சிறு குழந்தை கூட நம்பாது; ஆனால் எவ்வளவு அநியாயங்கள் செய்தாலும் அவங்க ரொம்ப நல்லவங்க என்று அய்யா விக்கி சொல்கிறார்.
இப்படி இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம்; தமது கொள்ளைகளிற்காக உலகம் முழுக்க கொலை செய்யும் மலைவிழுங்கி மகாதேவன்கள் இலங்கை அரசை வழிக்கு கொண்டு வந்து தமிழ் மக்களிற்கு தீர்வு பெற்றுத் தருவார்கள் என்னும் கடைந்தெடுத்த பொய்களைத் தான் அன்றில் இருந்து இன்று வரை தமிழ்க் காங்கிரஸ் கட்சி, தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, இவர் இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்பன சொல்லிக் கொண்டிருக்கின்றன.
சம்பந்தனும், சுமத்திரனும் தமிழ் மக்களிற்கு துரோகம் செய்கிறார்கள், ஆனால் அய்யா விக்கினேஸ்வரன் ஒரு வல்ல்வர், நல்லவர் என்று தமிழ்த் தேசிய கைப்பிள்ளைகள் சொல்கிறார்கள். சம்பந்தனும், சுமந்திரனும் சொல்லும் அயோக்கிய அரசியலைத் தான் இவரும் சொல்கிறார். அவர்கள் இருக்கும் கட்சியில் தான் இவரும் இருக்கிறார். எந்தவிதமான வித்தியாசங்களும் கிடையாது. அதை விட இந்தியாவின் மதவெறி அமைப்புகளுடன் பகிரங்கமாக கூட்டு வேறு வைத்திருக்கிறார். அப்படி இருக்க எப்படி அய்யா வாழ்க என்று வாழ்த்துக்கள் எழுகின்றன?
இது தான் மக்கள் விரோதிகளின் அரசியல். தமது எமாற்றுக்கள் மக்கள் முன்னிலையில் அம்பலப்படும் போது அவர்கள் முகங்களை மாற்றுவார்கள். அமெரிக்கா தனது போர்கள் மூலமும், கொள்ளைகள் மூலமும் உலக மக்களின் உச்சபட்ச வெறுப்பை தேடிக் கொண்ட போது பராக் ஒபாமாவை ஜனாதிபதியாக கொண்டு வந்தார்கள். வெள்ளையர்கள் பெரும்பான்மையாக இருக்கும் அமெரிக்காவில் ஒரு கறுப்பு மனிதனை ஜனாதிபதியாக கொண்டு வருகிறோம் என்று அவர்கள் சொன்னார்கள். நமது புலம்பெயர் கைப்பிள்ளைகள் கூட "ஒபாமாவிற்கான தமிழர்கள் அமைப்பு" என்று சங்கம் வளர்த்தார்கள். அமெரிக்காவின் வெள்ளை ஜனாதிபதிகள் செய்த அவ்வளவு அநியாயங்களையும் கறுப்பு ஜனாதிபதி அப்படியே தொடர்கிறார். கறுப்பின மக்கள் அமெரிக்க காவல் துறையினால் கேட்டுக் கேள்வி இன்றி சுடப்படுவதைக் கூட தட்டிக் கேட்க முடியாத தலையாட்டிப் பொம்மையாகத் தான் பராக் ஒபாமா இருக்கிறார்.
மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களைக் கொல்லும் போது, இலங்கை மக்களின் வளங்களை ஊழல் செய்து சூறையாடும் போது தோளோடு தோள் நின்ற இந்தியாவும், மேற்கு நாடுகளும் மகிந்தவிற்கு எதிராக மக்களின் எதிர்ப்புகள் கிளர்ந்த போது அந்த நிமிடம் வரை மகிந்தவின் அத்தனை அநியாயங்களின் போதும் உடன் நின்ற மைத்திரி சிறிசேனாவை "நல்லாட்சி" என்ற பெயரில் கொண்டு வந்தார்கள். அம்பலப்பட்டுப் போன மகிந்தாவின் பழைய முகத்திற்கு பதிலாக மைத்திரி சிறிசேனாவின் புதிய நல்லாட்சி முகம். ஆனால் மாற்றங்கள் எதுவும் இல்லாத அதே மக்கள்விரோத இலங்கை அரசு, அதே சர்வதேசக் கொள்ளையர்கள்.
அது போலத் தான் அம்பலப்பட்டுப் போன சம்பந்தன் அன்ட் கம்பனியின் இடத்திற்கு புது முகமாக அய்யா விக்கினேஸ்வரன் வந்திருக்கிறார். மேற்கு நாடுகளை நீதிமான்களாக, மீட்பர்களாக காட்டும் அதே அயோக்கிய தரகு அரசியல். காலங்காலமாக தமிழ்த் தேசியத்தை வைத்து மக்களை ஏமாற்றும் அதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர். இவ்வளவு இருந்தும் வடிவேலு "நானும் ரெளடி தான், எல்லோரும் பாருங்கோ" என்று விட்டு பொலிஸ் ஜீப்பில் ஏறுவது போல் அய்யா விக்கினேஸ்வரனும் சமஸ்டி, சுயநிர்ணயம் என்று அப்பப்ப சில மானே, தேனேக்களைப் போட்டு விட்டு "நானும் போராளி தான், பார்த்துக் கொள்ளுங்கோ" என்று இலங்கை அரசு கொடுத்த ஜீப்பில் ஏறிப் போகிறார். "மீட்பர் வாழ்க" என்று கோசம் எழுகிறது.
அய்யா மீட்பர் என்றால் போர்க்களங்களில் உடல் உறுப்புகளை இழந்து விட்டு உயிர் மட்டும் ஊசலாட தனித்திருக்கும், தவித்திருக்கும் போராளிகளை என்னவென்று அழைப்பது? வாழ்நாள் முழுவதையும் போராட்டத்திற்கு அர்ப்பணித்து விட்டு வெறுங்கையும், பசித்த வயிறுமாக வாழ்பவர்களை என்னவென்று அழைப்பது? மக்களிற்காக மரணித்தவர்களை என்னவென்று அழைப்பது?